Thursday, March 31, 2005
எயிட்ஸ் - உயிரியலாயுதமாக உருவாக்கப்பட்டதா ??
எயிட்ஸ் நோய் பரிணாம மாற்றத்தால் வந்ததல்ல, அது உயிரியலாயுதமாக உருவாக்கப்பட்டதே என்ற சந்தேகத்தைப் பலருக்கும் ஏற்படுத்தியது டாக்டர்.லியோனார்ட் ஹொரவிட்ஸின் நூல். இது மிகவும் அதிர்ச்சி தரும் விஷயம் என்றால் மிகையாகாது. பலர் அவரின் கருத்தைப் பலமாக ஆமோதிப்பதும், சிலர் அதில் சந்தேகம் தெரிவிப்பதுமாய் இருந்துவந்தது. அவர் அந்தப்புத்தகத்தை எழுதியது தொன்னூறுகளில் மத்தியில்-கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னால்.
டாக்டர்.லீ என்பவரும் இதற்கான ஆதாரங்களுடன் சில ஆண்டுகளுக்கு முன்னால் புத்தகம் எழுதினார். இந்த இரு புத்தகத்தின் சில பகுதிகள் மற்றும் புத்தகத்தைப் படித்த வாசகர்களின் கருத்துக்கள் ஆகியவற்றையும் இணையத்தில் பார்க்கமுடியும். தமிழில் இதே போன்ற ஒரு சிறுபுத்தகம் வந்திருப்பதாய் தட்ஸ்தமிழ் டாட் காமில் வந்திருக்கிறது.
அமைதிக்காய் நோபல் பரிசு பெற்ற ஆப்பிரிக்கப் பெண்மணி மாத்தாய் எய்ட்ஸ் குறித்துக் கூறியுள்ள கருத்தும் சிந்திக்க வேண்டியதே.
ஆர்வமுடையவர்களுக்காக
தட்ஸ்தமிழ் டாட் காம்
டாக்டர். லியோனார்ட் ஹொரவிட்ஸ்
டாக்டர். லீ
நோபலாரேட். மாத்தாய்
Tuesday, March 29, 2005
ராமானுஜனின் நோட்டுப் புத்தகங்கள்
உலகில் எத்தனையோ மனிதர்கள் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள். ஆனால் தான் இவ்வுலகில் இருந்ததற்கான அடையாளத்தை அழுத்தமாகப் பதித்துச் செல்வோர் கொஞ்சப் பேர்தான். அவர்களில் சிலர் அடுத்தவர் எட்டமுடியா அடையாளம் பதித்தவுடன், வந்த வேலையை முடித்துவிட்டேன், போய்வருகிறேன் என்று சொல்லிவிட்டு கொஞ்ச வயதிலேயே உலகைவிட்டுப் போய்விடுகிறார்கள். ஆனால் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் இவ்வுலகிற்கு நீங்குவதே இல்லை. இருந்த கொஞ்ச காலத்தில் செய்ததே இவ்வளவென்றால் நீண்ட ஆயுள் அவர்களுக்கிருந்தால் என்னவாகியிருக்கும் என்ற பிரமிப்பு அப்பெருமக்களைக் கொஞ்சம் அறிந்த அனைவருக்கும் இருக்கும்.
மேற்கூறிய வகையான அரிதான பெருமக்கள் உலகின் பல நாடுகளிலும் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் அதற்காக மட்டுமே இவ்வுலகில் பிறந்திருக்க வெண்டும் என்று யாராவது நினைத்தால் அது தவறல்ல. விவேகானந்தர், பாரதி, ராமானுஜன், அலக்ஸாணடர் என்று அற்ப வயதில் இறப்பதிற்கு முன்னால் உலகைத் தாக்கத்துக்கு உள்ளாக்கியவர்களின் பட்டியல் மிகப் பெரியதானதல்ல, ஆனால் அவர்களால் ஏற்பட்ட தாக்கங்கள் மிகப் பெரிது.
சரி. சொல்லவந்ததைச் சொல்லிவிடுகிறேன். ராமானுஜன் என்ற அந்த மேதை அந்தக் கால பி.யூ.சி படிப்பைக்கூட முடியாதவர். வாழந்த கொஞ்ச காலத்தின் பெரும்பகுதியையும் உடல்நலக்குறைவிலும், வறுமையிலும் கழித்தபோது கிட்டத்தட்ட தனது 16 வயதிலிருந்து 27 வயது வரை தனது நோட்டில் எழுதிவைத்த கணிதத்தேற்றங்களும், கண்டுபிடிப்புக்களும் ஏராளம். இன்றைக்கு உலகெங்கும் உள்ள கணித அறிஞர்கள் அவர் எழுதிய நோட்டுப் புத்தகத்தில் உள்ள கணிதப்புதிர்களைப் புரிந்துகொள்ள முயன்றுவருகிறார்கள். சமீபத்தில் அவரின் இன்னொரு கணக்கு சிலநாட்களுக்கு முன்னால் புரிந்துகொள்ளப்பட்டதாய் வெங்கட் தனது வலைப்பதிவில் எழுதியிருந்தார்.
உலகின் எந்தப் பல்கலைக்கழகத்தின் நூலகத்திலும் ராமானுஜத்தின் நோட்டுப்புத்தகத்தின் பிரதியைக் காணமுடியும். மும்மையில் உள்ள டாடா அடிப்படை அறிவியல் ஆய்வு மையம் பல ஆண்டுகளுக்கு முன்னால் அந்த நோட்டுப்புத்தகத்தினை எந்த மாற்றமும் செய்யாமல் கிட்டத்தட்ட ஜெராக்ஸ் காப்பி போல புத்தகமாய் வெளியிட்டது. அந்தப் புத்தகம் சில திருத்தங்களுடன் அச்சுவடிவில் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தாலும் வெளியிடப்பட்டது.
அது மின்னூலாக இங்கிலாந்தின் சுசெக்ஸ் பல்கலைக்கழக இணையத்தளத்தில் கிடைக்கிறது, இம்மின்னூல் பற்றிய தகவலை முத்தமிழ்மன்ற யாகூ குழுவில் பார்த்தபோது ராமானுஜன் பற்றிக் கொஞ்சம் எழுதவேண்டுமெனத் தோன்றியது.
ராமானுஜனின் நோட்டுப் புத்தகம் 1
ராமானுஜனின் நோட்டுப் புத்தகம் 2
Monday, March 28, 2005
சிறிய சுனாமி ஏற்பட்டது
சுமத்திரா தீவுக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.5 ரிக்டர் அளவாக இருந்ததாக பஸிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கோகஸ் தீவில் சிறிய அளவிலான சுனாமி உருவானதாகவும், ஆனால் பெரிய அளவிலான சுனாமியோ அல்லது பேரழிவு ஏற்படுத்தும் சுனாமியோ இதுவரை உணரப்படவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
பஸிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தின் சமீபத்திய அறிக்கைகளை இங்கே காணலாம்.
சமீபத்திய அறிக்கை
அதற்கு முந்தையது
மீண்டும் சுனாமி ?? - 8.2 ரிக்டார் நிலநடுக்கம்
இந்தோனேசியா சுமத்ராவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 8.2 ரிக்டர் அளவுகோல் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் சுமத்திராதீவுக்கு அருகில் ஏற்பட்டுள்ளது. பொதுவாக இந்த அளவு அதிபயங்கர நிலடுக்கம் கடலுக்குள் இதுபோல் ஏற்பட்டால் பேரழிவு ஏற்படுத்தும் சுனாமிப் பேரலைகளை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவின் காயம் ஆறும்முன் இன்னொரு சுனாமி வந்துவிடுமோ என மக்கள அனைவரும் அஞ்சிகொண்டிருக்கின்றனர்.
சுனாமிப் பேரழிவு தொடர்பான நிலப்படம் கீழே (பழையது).

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தெளிவான தகவலகள் இன்னும் கிடைக்கவில்லை. இந்தியா, இலங்கை போன்ற அணடை நாடுகளில் மிக விரைவான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
மேலதிகத் தகவல்களுக்கு:
http://www.sabcnews.com/world/asia1pacific/0,2172,100863,00.html
http://www.kfdx.com/news/default.asp?mode=shownews&id=8130
http://abcnews.go.com/International/wireStory?id=619670
Sunday, March 27, 2005
ஷாக் அடிக்கும் மின்சாரம் - உங்கள் உடலில்
பார்வையில் இருந்து மின்சாரம் பாய்வதும், உடலைத் தொட்டதும் மின்சாரம் பாய்வதும் கவிதையில் பார்த்திருக்கிறோம். இதுநடைமுறையில் சாத்தியமானதா?. ஆம். இது முழுவது நடக்கக்கூடியதே.
ஒவ்வொருவரின் உடலிலும் நிலைமின்சாரம்(Static Electricity) உண்டு. பல நேரங்களில் அது மிகக்குறைந்த அளவாய் இருப்பதால் உணர இயலுவதில்லை. குறைந்த படசம் 500 ஓல்டுக்கு மேல் இந்த நிலைமின்சாரம் தேங்கியிருந்தால் அதைத் தெளிவாக உணர முடியும். ஐநூறு ஓல்ட் என்றவுடன் புருவத்தை உயர்த்த வேண்டாம். நம் உடலில் சில சமயங்களில் 20,000 volt-க்குமேல்கூட நிலைமின்சாரம் தேங்குவது சாத்தியமானதுதான். இந்த அளவுக்கு மின்சாரம் உடலில் தேங்கும்போது நீங்கள் உடலிலிருந்து தீப்பொறி பறப்பதையே காண இயலும்.
சிலநாட்களுக்கு முன்னர் எனது நண்பர் ஒருவர் தனது டி-சர்டை வேகமாகக் கழற்றினால் தீப்பொறி பறப்பதாய்க் கூறினார். இதுவும் குறிப்பிட்ட ஒரு டிசர்டுக்கு மட்டும்தான் இது நடக்கிறதாம். இது முழுக்கவும் நிலைமின்சாரத்தால் நிகழ்வதுதான்.
கார் கதவைத் திறக்கக் கையை நீட்டும்போது ஷாக் அடித்த அனுபவமோ அல்லது விரல்களில் இருந்து தீப்பொறி பறந்த அனுபவமோ யாருக்காவது உண்டா ?. இது கடுங்குளிர் சமயத்தில் நடக்கூடியது. மிகக்காய்ந்த, மிகக்குளிரான தட்பவெப்பம் உள்ள நாளில் ஷூவைத் தரைவிரிப்பில் வேகமாகத் தேய்க்கும்போது உடலில் பல்லாயிரக்கணக்கான வோல்ட் நிலைமின்சாரம் தேங்குகிறது. பொதுவாக நம்மூரில் இது நடப்பதற்கான சாத்தியம் மிகக்குறைவு. ஏனென்றால் அந்தளவுக்குக் காய்ந்த(dry weather), குளிரான தட்பவெப்பம் பொதுவாய் இருப்பதில்லை.
பட்டாசுத் தொழிற்சாலைகள் பற்றிய பரிச்சயம் உள்ளவர்களுக்கு இது தெரிந்திருக்கும். இதுபோன்ற நிலைமின்சாரத்தால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில விதிகள் உள்ளன. பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிமருந்தினைத் தொட்டுவேலை செய்பவர்கள் வெளியே அங்குச் சுவரில் பதிக்கப்பட்டிருக்கும் உலோகத்தகட்டில் தனது கைகளைத் தேய்த்துவிட்டு நுழைவார்கள்.
நமது உடை நிலைமின்சாரத்தைத் தேக்கிக்கொள்வதில் முன்னிலை வகிக்கிறது. கீழே சில வகை உடைகள் நம் உடலில் தேக்கும் நிலைமின்சாரத்தின் உச்சஅளவு.
பருத்தி - 7,000 வோல்ட்ஸ்
கம்பளி - 9,000 வோல்ட்ஸ்
நைலான் - 21,000 வோல்ட்ஸ் - இந்த நேரத்தில் நாம் நிஜமாகவே இரும்புக்கை மாயாவிதான் ;-)
எனது இன்னொரு நண்பர் ஒரு குறிப்பிட்ட ஷூவை அணிந்திருக்கும் நாட்களில் எதையாவது எடுக்கக்கையை நீட்டும்போது "ஷாக்" அடிக்கும் திகில் அனுபவத்தை அடிக்கடிப் பெற்றார். காரணம் அந்த ஷூ செய்யப்பட்டிருந்த செயற்கைப் பாலிமரின் கைங்கர்யம்தான்.
நண்பர்களே, உங்களில் யாருக்காவது இதுபோன்ற நிலைமின்னதிர்ச்சி அனுபவம் உண்டா ?.
Saturday, March 26, 2005
எங்குதான் இல்லை ?
நம்மூரில் பிக்பாக்கெட், திருட்டு போன்றவை குறித்து அடிக்கடி குறைப்பட்டுக்கொள்வது உண்டு. விகிதங்கள் கூடலாம் அல்லது குறையலாம் ஆனால் அனைத்தும் எங்கும் உண்டு. சில வாரங்களுக்கு முன் பிரான்சுக்கு போனபோது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத்தலத்தில் பார்த்த எச்சரிக்கைத் தட்டி கீழே.

பின்குறிப்பு:
இது அடுத்த நாட்டிலும் திருட்டு இருக்கிறது என்று உள்ளூர சந்தோஷப்பட்டுப் பதிந்தது இல்லை :-) .
Thursday, March 24, 2005
பல் விளக்க பிரஷ் வேண்டாம் ??
பல் விளக்கப் பற்பசையோ, பிரஷோ தேவையில்லையாம். இவ்வளவு ஏன் ?, தண்ணீர்கூடத் தேவையில்லையாம். கேட்கவே மிகவும் வித்தியாசமாய் இருக்கிறது. டூத் பிரஷ் தயாரிக்கும் நிறுவனமொன்று இந்தப் புதுவிதத் தொழில்நுட்பத்தை(?) அறிமுகப்படுத்தியுள்ளது. நாம் செய்யவேண்டியதெல்லாம் கிட்டத்தட்ட பிளாஸ்திரி உறைபோலிருக்கும் அந்தப் பொருளை நம் ஒரு விரலில் மாட்டி பல்லை விளக்கிவிட்டுத் தூக்கியெறியவேண்டியதுதான். ஒரு முறை பயன்படுத்தும் facial tissue paper மாதிரிதான் போலிருக்கிறது. இது விமானப் பயணத்தில் இருப்பவர்கள், பல் விளக்கச் சாதகமான சூழ்நிலையோ அல்லது நேரமோ இல்லாதவர்களுக்கு மிக உதவியாய் இருக்குமாம்.
நண்பரின் ஆங்கில வலைக்குறிப்பில் பார்த்தது இது, அவர் இதை உபயோகிக்கஆரம்பித்துவிட்டாரா என்று தெரியவில்லை,கேட்கவேண்டும் :-).
பூப்பறிக்கும் கோடரிகள்
ஒரு பண்பட்ட, வளர்ந்த இனத்தின் குணங்களில் முதன்மையானது எது தெரியுமா ?. எண்ணத்தைச், சிந்தனையைப் பண்பட்ட முறையில், அளவான வார்த்தைகளால் வெளிப்படுத்துதல் என்பதுதான். வளர்ந்த இனமென்று நீங்கள் கருதும் எந்த இனத்தையும் கொஞ்சம் இங்கு நினைத்துப் பார்க்கலாம்.
தனது சிந்தனையைச் சமுதாயத்தால் வரையறுக்கப்பட்ட விதத்தில், அதே நேரத்தில் தான் சொல்ல வந்ததின் பொருளைச் சிறிதும் சிதைக்காமல், எதிரியின் மனதிலும் தாக்கம் உண்டாக்கும் விதத்தில் (தாக்கும் விதத்தில் அல்ல, அது மிக எளிது) பேசும் வல்லமை வாய்க்கப்பட்டவர்களின் வெற்றிகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவை. அவர் ஒரு பண்பட்ட இனத்தின் அடையாளம், பிரதிநிதி.
வெளிப்படுத்துதல் என்பது ஒரு கலை. அதிலும் எண்ணங்களைப் பிறருக்குத் தெளிவாக வெளிப்படுத்தும் திறன் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. தனது எண்ணத்தைக் கவிதையாகவோ, கட்டுரையாகவோ, கதையாகவோ, திரைப்படமாகவோ சமைக்கும் திறமை நம்மில் எத்தனை பேருக்கு உண்டு ?. நமது சிந்தனைகளையும், உணர்வுகளையும் எழுத்தில் அழகாகக் காட்டும் வல்லமை பெற்றவர்கள் பாக்கியசாலிகள். இந்த வெளிப்படுத்தலில் கல்வி மிக முக்கியப்பங்கு வகிக்கிறது. படிக்காத ஒருவரின் பேச்சுக்கும், படித்த ஒருவரின் பேச்சுக்கும் உள்ள வித்தியாசத்தை மிக எளிதாய் யாரும் உணரமுடியும். ஏட்டுக்கல்வி கல்லாத சிலரும்கூட அருமையாகத் தனது எண்ணத்தை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருப்பது அரிதாய் நிகழ்கிறது.
ஐரோப்பியர்களையும், துணைக்கண்ட மக்களையும் ஒப்பிடும்போது சொல்லப்படுவது, ".... துணைக்கண்ட மக்கள் கலாச்சாரத்தில் பல உயரங்களைத் தொட்டவர்கள், ஆனால் பழக்கவழக்கத்தில்(manners) இன்னும் அதலபாதாளத்தில் இருப்பவர்கள்.." இது உண்மைதான் என்ற நம்பிக்கை எனக்கும் உண்டு. நம்மில் எத்தனைபேர் இதை ஒத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பேசும் சொற்கள் பழக்கவழக்கத்தில் முதலிடம் வகிக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.
எதிரில் நிற்பவருக்கு ஆத்திரம் உண்டாக்கும் விதத்திலும், தனது சினத்தை வெளிப்படுத்துவது மட்டுமே நோக்கமாகக் கொண்டும் உதிர்க்கப்படும் சொற்கள் மிகக்குறைந்த தரமுடையவை. அதைப் பேசியவரே கொஞ்ச நேரத்தில் அதற்காய் அருவருப்படையலாம். இவ்வாறு பேசுவதன் பயனைப் பார்த்தால் அப்படி எதுவுமே இல்லை, தனது தினவினைத் தீர்க்க சுவரில் உரசிக்கொள்ளும் விலங்கின் செயலுடன் இதை ஓரளவு ஒப்பிட்டுப்பார்க்க இயலும். அச்சொற்களால் நமது தினவு சிறிது தீரும் வாய்ப்பினையும், அடுத்தவர் காயப்படும் வாய்ப்பையும் மட்டும் மறுப்பதற்கில்லை. ஆனால் நாம் சொல்ல வந்ததன் கருத்து அடுத்தவருக்கு உணரப்படாததைவிட, அதன் எதிர்மறைக் கருத்தினை அவர் எடுத்துக்கொள்ளும் நிலைக்கு அவரை நாம் தள்ளும் வாய்ப்பே மிக அதிகம். இதுதானா நாம் வேண்டுவது ?. கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்று பொய்யாமொழிப் புலவன் சொன்னதும் இதனால்தானே?.
தமது வலைப்பூக்களின் மூலம் தனது குரலை ஒலிக்கச் செய்யும் அனைவரும் ஏட்டுக்கல்வியைப் போதுமான அளவு பெற்றிருப்பவர்கள். அவர்கள் ஏட்டுக்கல்வியுடன் மட்டும் நின்றுவிடக்கூடாது என்ற அக்கறை நம் அனைவருக்கும் உண்டு. நமது தமிழர்கள் என்னதான் கலாச்சாரம், பண்பாடு என்று பெருமை பேசிக்கொண்டாலும் சொற்களை வெளியிடுவதில் எவ்வளவு தூரம் பண்பட்டிருக்கிறார்கள் என்று இன்னும் தெரியவில்லை. முதலில் சொன்னதுபோல் ஒரு பண்பட்ட இனமாய் நாம் மாறவேண்டும் என்பதுதான் நம் அனைவரின் அவா.
Tuesday, March 22, 2005
Male Chauvinism X பெண்ணியம்
ஞானபீடப் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் பேட்டி தினமணியில் வெளியாகியிருந்தது. அதில் நான்/என்னைக் கவர்ந்த ஒரு பகுதி.
........
பெண்ணியம் பற்றி.. ?
பெண் விடுதலை என்ற சொற்றொடர்தான் எனக்குப் பரிச்சயம். பெண்ணியம்- எனக்குப் புரியாத சொல். அதைப் புரிந்துகொள்ளவும் விரும்பவில்லை.
விடுதலை எல்லோருக்கும் பொதுவானது. பெண்களுக்குச் சில சிறப்பான விடுதலை வேண்டும். அதெல்லாம் எனக்குப் புரிகிறது. ஆனால் "ஈயம்' என்று வந்தால்... எனக்கு அதில் இடமில்லை. ஏனெனில் நான் பெண்ணாக இருந்தால்தான் பெண்ணியம் பேசவேண்டும். Male Chauvinism என்ற ஒரு சொல் இருக்கிறது. அதற்கு எதிர்ப்பதம்தான் பெண்ணியம்.
மோசமான ஆண்களோடு போட்டியிட்டு, தானும் மோசமாகும் பெண்களை எப்படி முன்னுதாரணமாகக் கொள்வது?
ஜெயகாந்தன் தினமணி பேட்டி
Sunday, March 20, 2005
மாயப்பெட்டி - நம்புங்கள் இது நிஜம்
.... மாயப்பெட்டியில் எழுதினால் அதை உலகிலுள்ள அனைவரும் படிக்க இயலும். அதேபோல் அப்பெட்டியில் உலகில் யார் எழுதியதையும் படிக்க இயலும். ஒருவர் அடுத்தவருக்குக் கடிதம் எழுதினால் அது சேர சில நொடிகளே ஆகும், அவர் எத்தனை ஆயிரம் மைல் தூரமிருந்தாலும், எதிர்வீட்டில் இருந்தாலும் ஒரே நேரம்தான் ஆகும். அந்த அற்புதப்பெட்டியின் உதவியால் எல்லாநாடுகளின் மக்களும் தத்தம் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வார்கள். வேலைவெட்டி இல்லாதவர்கள் ஊர்வம்பும் பேசிக்கொள்வார்கள்.
கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும்போது அவை பிடிக்காவிட்டால் நிறையக் கூத்துக்கள் நடக்கும். உணர்ச்சிவசப்படும் சிலர் படித்திருந்தாலும் கூச்சப்படாமல் அசிங்கமாகத் திட்டிக்கொள்வார்கள்.
ஒருவரின் உருவத்தைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல அழகாய் அப்பெட்டி கணநேரத்தில் வரையும். பிரபலமான பாடகர்களின் பாடலை நாம் நினைத்த நேரத்தில் அழகாகப் பாடும், எந்தச் சலிப்பும் இல்லாமல் திரும்பத் திரும்பக்கூடப் பாடும். ஆனால் பக்கத்துவீடுகளில் இருப்பவர்கள் சலிப்படைவார்கள், சில நேரம் கொதிப்படைவார்கள்.
நாடக நடிகர்கள் அந்த பெட்டியில் வந்து நடிப்பார்கள். பல சமயம் அது சின்னக்குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்றதாய் இராது. வயது வந்த காளையரும், கன்னியரும் திருட்டுத்தனமாய் அப்பெட்டியில் பலவற்றை ரசிப்பர். இன்னும் எத்தனையோ எத்தனையோ பயன்பாடுகள் மாயப்பெட்டியில் இருக்கும். அத்தனையும் சொல்ல எனக்குத் திறமையில்லை. அதைப் புரிந்தகொள்ள உங்களுக்கும் அறிவு போதாது.
எத்தனையோ பேரின் காதலுக்கு அது தூதுபோகும். சந்தர்ப்பம் வாய்த்தால் நைஸாக வேட்டும் வைக்கும்.
அந்தப் பெட்டியைச் சில நாள் பார்க்கவில்லையென்றால் சிலருக்குப் பைத்தியமே பிடித்துவிடும். எனக்கும்தான். சிலர் வேலைக்குச் செல்லும்போதுகூட அந்தப் பெட்டியை மடித்து கையுடன் எடுத்துச் செல்வார்கள்.
அந்தப் பெட்டி பயங்கரமான புத்திசாலியாக இருக்கும். ஆனால் மக்கள்தான் சரியான சோம்பேறிகளாகிவிடுவார்கள். ஒன்றில் இரண்டு போகுமா எனக்கேட்டால் அதைக்கூட அப்பெட்டியிடம்கேட்டுத்தான் சொல்வார்கள். சிரிக்காதீர்கள், இது சத்தியம்.
நமது இன்பத்தமிழிலேயே அந்த அற்புதப்பெட்டியில் கவிதை எழுதுவார்கள், சிலர் காவியங்கள்கூட எழுதுவார்கள். தனது கடிதத்தை எந்த நாட்டுக்கு அனுப்பினாலும் அதற்குச் செலவே ஆகாது. இதனால் பலர் ஹாஸ்யங்களையும், கன்னியரின் சித்திரங்களையும், நணபர்களின் ரஸமான கடிதங்களையும்-குப்பைகளையும் தெரிந்த நண்பர்கள் அனைவருக்கும் அனுப்புவதையே தன் வாழ்நாளின் கொள்கையாகக் கொண்டிருப்பார்கள்.
இன்னும் சிலர் அப்பெட்டியுடன் அரட்டையடிப்பதிலும், விளையாடுவதிலும் தன் வாழ்நாளின் முக்கால் பாகத்தைக் கழிப்பர்.
நமது திருக்குறள், சங்கநூல்கள் என ஆரம்பித்து எல்லாமும் அந்தப் பெட்டியில் இருக்கும். ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அந்தப் புத்தகங்களுயும்கூட உலகின் ஒரு மூலையில் இருந்து அடுத்த மூலைக்கு நொடியில் அனுப்ப இயலும். அனுப்பிய புத்தகம் வாங்கியவரிடம் இருக்கும், அதே நேரம் அப்படியே அனுப்பியவரிடமும் இருக்கும். ஆயிரம்முறை கொடுத்தாலும், கோடிமுறை கொடுத்தாலும் அந்தப் புத்தகம் திரும்பவும் அப்படியே இருக்கும்.
ஏன் என்னைப் பைத்தியக்காரனைப் போலப் பார்க்கிறீர்கள்?. நீங்கள் நம்பாவிட்டாலும் உங்கள் பேரனோ அல்லது பேரனின் பேரனோ மாயப்பெட்டியைப் பார்க்கத்தான் போகிறார்கள். இந்த ஒவ்வொரு எழுத்தையும் அவர்கள் ஒரேநேரத்தில் பலநாடுகளில் இருந்து படிக்கிறார்கள். ஆம். இந்த நொடியில் முடித்துவிட்டுப் புன்னகைக்கிறார்கள்.
Saturday, March 19, 2005
எப்படி வந்தாங்க.. ?
நமது வீட்டுக்கு விருந்தாளி ஒருவர் எதிர்பாராமல் வந்து இன்பஅதிர்ச்சி கொடுத்தால், எப்படி வீட்டைக் கண்டுபிடித்தார் என்று நமக்கு யோசிக்கத்தோன்றுமல்லவா ?, அதே போல் பல தடவை யோசித்திருக்கிறேன். இப்போதெல்லாம் அனைத்துத் தமிழ் வலைப்பதிவுகளுக்கும் ஏகப்பட்ட பயனர்கள், இந்த எண்ணிக்கை தொடர்ந்து பெருகிக்கொண்டே வருகிறது என்பது சந்தோஷப்படவேண்டிய விஷயம். தமிழ்மணத்தின் வழியாய் தமிழ் வலைப்பதிவுகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை மற்ற எதையும்விட அதிகம் என்பதை சொல்லவே தேவையில்லை. தமிழ் மணம் ஆரம்பித்தபின் வலைப்பதிவுகளைப் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துவிட்டது என்பது கண்கூடு. மதியின் tamil blog list நிறையச் செயல்பாடுகளை தொடங்கிவைத்தது/அதிகரித்தது என்பதையும் சொல்லத்தேவையில்லை.
எனது இந்த வலைப்பதிவுக்கு வருபவர்கள் பலர் Muthu என கூகிள் -ல் தேடி வருகிறார்கள். muthu என கூகிள் -ல் தேடினால் வரும் 70,000 + சொச்சம் தேடுதல் முடிவுகளில் எனது வலைப்பதிவு பெரும்பாலும் முதல் மூன்றுக்குள்ளேயே வந்துவிடுகிறது. யாஹூ - விலும்கூட கிட்டத்தட்ட இப்படித்தான். எனது பதிவுக்குமட்டுமல்ல பலரின் பதிவுக்கும் இப்படித்தான் கூகிளின் மூலம் தேடி வருகிறார்கள். இதே நிலை நீடித்தால் கூகிளில் யார் என்ன தேடினாலும் ஒரு தமிழ் வலைப்பதிவாவது தலைகாட்டும் என்பது என் யூகம். கொஞ்ச நாளைக்கு முன்னர் இப்படித் தேடிவந்த நமது பாஷைக்குப் பரிச்சயமே இல்லாத ஒருவர் "by the way, from which nation you are ? " என்று குழப்பத்துடன் கேட்டிருந்தார் :-) .
இது தவிர தமிழ்ச்சொற்கள் மூலமாகக் கூகிளில் தேடி நமது பதிவுகளுக்கு வருபவர்களும் உண்டு. தமிழின் பயன்பாடு தேடுஎந்திரங்களின் அதிகரித்திருப்பது உற்சாகமூட்டும் விஷயம்.
கீழேயுள்ளது தேடுஎந்திரம் மூலம் எப்படி இங்கு வந்தார்கள் என்று காட்டும் சின்ன பட்டியலின் ஒரு பகுதி.
431 55.25% muthu
119 15.25% tamil
25 3.20% blog
18 2.30% font
15 1.92% weblogs
15 1.92% blogger
12 1.53% rss
8 1.02% blogspot
7 0.89% feed
6 0.76% muthukmuthu
6 0.76% problem
6 0.76% google
5 0.64% web
5 0.64% tanjavur
4 0.51% symbian
4 0.51% pdf
4 0.51% temple
4 0.51% unicode
4 0.51% tamilblog
3 0.38% launguage
3 0.38% website
3 0.38% how
3 0.38% xml
3 0.38% spot
3 0.38% muthukmuthublogspotcom
2 0.25% link
2 0.25% weblog
2 0.25% for
2 0.25% siteblogspotcom
2 0.25% powered
2 0.25% haloscancom
2 0.25% comments
2 0.25% name
2 0.25% last
2 0.25% news
2 0.25% free
2 0.25% regional
2 0.25% site
1 0.12% tamilblogs
1 0.12% muthu_
1 0.12% stories
1 0.12% wwwtamilblogsblogspotcom
1 0.12% relatedkurallahtripodcomradiolive3html
1 0.12% monday
1 0.12% muth
1 0.12% homepage
1 0.12% view
1 0.12% googol
1 0.12% relatedwwwthamizmanamcomtamilblogsiframe_printphpsortstartdate
1 0.12% pages
1 0.12% unicodetamiljava
1 0.12% muthukmuthuyahoocom
1 0.12% httpmuthukmuthublogspotcom
1 0.12% viewing
1 0.12% option
1 0.12% linkwwwtamiloviamcom
1 0.12% rssxml
1 0.12% linkspajxtioxrujthoughtsintamilblogspotcom
1 0.12% fonts
1 0.12% curryleave
1 0.12% ramas
1 0.12% chandravathanaa
1 0.12% karthikramas
1 0.12% curry
1 0.12% feeds
1 0.12% what
1 0.12% university
1 0.12% member
1 0.12% jpg
1 0.12% join
1 0.12% launguages
1 0.12% vitam
1 0.12% juvat
1 0.12% inventas
12 Mar, Sat, 08:37:55 Google: Muthu
12 Mar, Sat, 17:00:28 Google: மொழிகளில்
14 Mar, Mon, 14:49:55 Google: muthu
14 Mar, Mon, 16:36:10 Google: tamil blogspot
15 Mar, Tue, 09:26:53 Google: சக்தி சக்தி கவிதை
15 Mar, Tue, 19:48:01 Google: தமிழ்
16 Mar, Wed, 09:17:43 Google: muthu
16 Mar, Wed, 15:02:10 Google: MUTHU
16 Mar, Wed, 16:33:26 Google: Muthu
16 Mar, Wed, 18:27:02 Google: Muthu
17 Mar, Thu, 09:15:23 Google: muthu
17 Mar, Thu, 10:51:15 Google: இந்தி
17 Mar, Thu, 10:59:57 Google: இந்தி
17 Mar, Thu, 13:07:41 Google: muthu
17 Mar, Thu, 17:12:58 Google: muthu
17 Mar, Thu, 23:15:59 Yahoo: tamil blog
18 Mar, Fri, 06:24:56 Google: scientific journals impact factor 2004
18 Mar, Fri, 19:23:13 Google: muthu
19 Mar, Sat, 06:58:45 Google: Indian journals Impact factor 2005
19 Mar, Sat, 15:03:04 Yahoo: tamil
Thursday, March 17, 2005
மணமகள் தேவை
கீழேயுள்ள படத்தில் புன்னகையுடன் பெருமிதமாக நிற்கும் நபருக்குப் பொருத்தமான பெண் தேவை. பிரான்ஸிலுள்ள கோல்டன் ஹெட் உயிரியல் காட்சிச்சாலையில் பெரிய உத்தியோகத்திலுள்ள இவருக்குக் கலைமான் இனப்பெண் தேவை. எம்மதமும் சம்மதம். உட்பிரிவுகள, கல்வித்தகுதி தடையில்லை :-) .

ரிலீஸாகும் IT திரைப்படங்கள்
வலைப்பதிவில் இருக்கும் IT மக்கள் திரைக்காவியங்களைப் படைக்க இருப்பதாய் சில நம்பத்தகாத தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடங்கவிருப்பதாய்த் தகவல் கசிந்திருக்கும் இருக்கும் சில படங்களின் பட்டியல் கீழே.
* என் சிஸ்டம்தான் எனக்கு மட்டும்தான்
* அவள் ஒரு புராக்ராம்
* லாகின் பண்ணாமல் உள்ளே வா
* தொட்டதெல்லாம் டாலர் ஆகும்
* இவன்தாண்டா புராக்ராமர் (தெலுங்கு டப்பிங்)
* ஆத்தா நான் ஜாவா சர்டிபிகேட் வாங்கிட்டேன்
* சின்ன மவுஸ் பெரிய மவுஸ்
* வைஷ்ணவி MCA (அதிரடிப் படம், விஜயசாந்தி)
* மெயில் அனுப்ப நேரமில்லை
* பேசிக்கில் இருந்து ஜாவா வரை
* மேனேஜரா இருந்தா எனக்கென்ன ? (தெலுங்கு டப்பிங்)
* எங்களுக்கும் ஆஃபர் வரும் (நகைச்சுவை)
* இண்டர்நெட்டே சரணம் (பக்திச் சித்திரம்)
* ஆயிரம் டாலர் வாங்கிய அபூர்வ பெஞ்ச் பீரியட்
* 10 + 10 = 100 ( Binary )
* உலகம் சுற்றும் அனலிஸ்ட்
* மவுஸ் மகேசன்
* மனதில் லாஜிக் வேண்டும்
* தேடி வந்த கன்ஸல்டண்ட்
Wednesday, March 16, 2005
மிலனோ - ஓவியம்
கொஞ்ச நாளுக்கு முன்னர் மிலனோ(இத்தாலி) போனபோது சீன ஓவியர் ஒருவர் படம் வரைந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். என்னை வரைய எவ்வளவு காசு ஆகும் என்றதற்கு 20 யூரோ கேட்டார். ஒரு வழியாய்ப் பேரம் பேசி (பேரம் இல்லாமல் எதையும் வாங்கினால் நம் கொள்கை என்னாவது ? ) முடித்தபோது கடைசியில் 12 யூரோவுக்கு சம்மதித்தார். அவர் வரைந்த படம் சந்தேகமில்லாமல் நானேதான். ஆனால் என்ன, படத்தில் எனது நாலு வயதைக் குறைத்துவிட்டார். ஐந்து வருடத்துக்கு முன்னால் கல்லூரியில் படித்தபோது எப்படி இருந்தேனோ அப்படியே வரைந்துவிட்டார். எனக்குக் கொஞ்சம் ஆச்சரியம்தான்(சந்தோசம்தான் :-) ). இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து அவரிடம் இதுபோல் வரைந்தால் இன்றுள்ளதுபோல வரைவாரோ ? :-). ஆனாலும் பத்து நிமிடத்தில் எப்படியெல்லாம் வரைகிறார் என்று நினைத்துபோது ஆச்சரியம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.


திருட்டு வீடியோ - ஜாக்கிரதை
நடிகைகளுக்குத் தெரியாமல் அவர்களை வீடியோ எடுப்பது போன்றவைகள் சில நட்சத்திர ஓட்டல்களில் நடந்தது என்று ஏகப்பட்ட பரபரப்பாயிருந்தது கொஞ்ச காலத்துக்கு முன்னர். திருட்டுத்தனமாய் புதுத்திரைப்படங்களை விசிடி எடுப்பது மிகப்பிரபலம்.
இன்று தினமலரில் வந்த செய்தி எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டது. கேட்பதற்கு ஏதோ சுக்கிரன் படத்தின் காட்சி போல இருக்கிறது. அமைச்சர்களை அதுவும் மத்திய அமைச்சர்களின் லீலைகளை ஆபத்தான கோலத்தில் வீடியோ எடுத்திருப்பதாய் செய்தி வெளிவந்திருக்கிறது. என்னத்த சொல்றது ? கடவுளே.. கடவுளே.
Tuesday, March 15, 2005
டவுன் பஸ் - குதூகலம்
தமிழ் அறிவியல் இதழ் பற்றி சென்ற பதிவிலே எழுதியிருந்தேன், அதற்கு TCD என்பவர் மறுமொழிந்திருந்திருந்தார். அந்த மறுமொழியில் நாட்டின் அறிவியல் வளர்ச்சியில் அக்கறை கொண்ட ஒரு விஞ்ஞானியின் சிந்தனைத்துளி இருந்தது, அதில் கவலையும், ஆதங்கமும் அப்பட்டமாகவே இருந்தது. இதுபோல் சில சமயம் பதிவுகளைவிட அதற்கு வரும் மறுமொழிகள் சிறப்பானவைகளாக இருந்துவிடுவதுண்டு.
டவுன் பஸ் வராத கிராமத்தில் ரொம்ப நாளுக்கு அப்புறம் அங்கு ஒரு சாதாரண தனியார் பஸ் ஓட ஆரம்பிக்கும்போது அந்த ஊரில் உள்ள சிறுவர்களின் குதூகலத்தை யாராவது கண்ணால் கண்டதுண்டா ?. அதை இதுவரை பார்த்திராதவர்கள் முந்தைய பதிவைப் பார்க்கவும். பல ஊர்களில், கிராமங்களில் ரயில் ஓடுவதும், சில ஊர்களில் மின்சார ரயில் ஓடுவதும், சில நாடுகளில் உலகத்திலேயே அதிவேகம் கொண்ட ரயில்கள் ஓடுவதும் குதூகலிக்கும் இச்சிறுவர்களில் சிலருக்குத் தெரியாததல்ல. அவர்களின் ஊரிலும் என்றாவது உலகிலேயே வேகமான ரயில் ஓடும் என்று அவர்களில் யாரும் நம்பவில்லை. ஒருவேளை அது தேவையில்லாமலும் இருக்கலாம்.
ஒரு மொழியானது கலாச்சார ரீதியாகவோ, மக்களின் நேரடி வாழ்விலோ, பயன்பாட்டு ரீதியிலோ தனிமைப்படுவது என்பது அம்மொழிக்கு எதிர்காலத்தில் காத்திருக்கும் அபாயங்களின் அறிகுறி. உலகில் எத்தனையோ மொழிகள், உச்சாணிக்கொம்பில் இருந்த மொழிகள் எல்லாம் காணாமல் போய், மியூசியத்தில் பாதுகாக்கப்படும் மொழிகளாக மாறியதின் காரணம் என்ன ?. முதலாவது காரணம், மக்களின் அன்றைய தேவைகளை, அல்லது சாதாரண/முக்கிய மனிதர்களைத் தவற விட்டதுதான். துணைக்கண்டத்திலும் செம்மாந்து நின்ற வளமான சமஸ்கிருதம்,பாலி போன்ற மொழிகள் மறைந்ததின் காரணமும் இதுதான். கிரீக், லத்தீன் போன்ற பழம் தின்று கொட்டை போட்ட மொழிகள் காணாமல் போனதும் இதனால்தான்.
இன்றைய நிலையில் எந்த மொழியும், இணையம்/கம்ப்யூட்டர், சினிமா ஆகியவற்றைத் தவறவிடுவது என்பது அம்மொழிக்கு எதிர்காலத்தில் காத்திருக்கும் பெரிய குழிகளின் அறிகுறி. இன்றைய துணைக்கண்ட மொழிகள் பலவற்றுக்கு அந்த அறிகுறிகள் ஏற்கனவே தோன்ற ஆரம்பித்துவிட்டன. தமிழார்வமுடைய பெருமக்களின் சிந்தனையால் இதிலிருந்து தமிழ் தப்பித்து இருக்கிறது. ஆனால் தமிழில் அறிவியல் ஆய்விதழ் இல்லாமல் இருப்பது அத்தகைய அச்சத்திற்கு உரியதா என்று தெரியவில்லை.
உலக அறிவியலில் தமிழில் வரும் அறிவியல் இதழின் தாக்க விகிதம் (impact factor) எப்படி இருக்கும் என்று விளக்கத்தேவையில்லை. இது தமிழுக்கு மட்டுமல்ல, ஆங்கிலம் தவிர்த்த எந்த மொழியில் வரும் அறிவியல் இதழின் தாக்க விகிதமும் அதிகமாக இருக்கப்போவதில்லை. முன்னணி இதழ்களில் ஒன்றான angewandte chemi - யின் ஜெர்மன் பதிப்பே தள்ளாடிக்கொண்டிருக்கிறது. அப்பதிப்பை மூடிவிடலாமா என்று அவர்கள் யோசிப்பதாய்க் கேள்வி. இத்தனைக்கும் அந்த இதழின் international edition வேதியியலில் தாக்கவிகிதத்தில் முதலிடத்தில் அசையாமல் இருக்கும் இதழ். இன்னும் சில பிரச்சினைகள் உள்ளன. ரஷ்ய மொழியில் வெளிவந்த ஏகப்பட்ட சிறந்த ஆய்வுமுடிவுகள் உலகத்தின் மற்ற மொழியோரின் பார்வைக்கும் இன்னும் வராமலேயே இருக்கின்றனவாம். இவையெல்லாம் தெரிந்த கதைதான்.
நான் சொல்ல வந்தது தமிழில் ஒரு அறிவியல் இதழ் வருவது தமிழுக்கு நல்லது. அறிவியல் ஆய்விதழென்று கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தமிழில் ஒன்றுகூட இல்லையென்றால் அது நல்லாவா இருக்கிறது? :-). அதன் அறிவியற்தாக்கம் பற்றி இப்போது அவ்வளவு கவலைப்படத் தேவையில்லை. ஆனால் நாட்டிலிருந்து ஆங்கிலத்தில் வெளியாகும் அறிவியல் இதழ்களின் impact factor - ஐ அப்படி விட்டுவிட முடியாது. அவை ஏன் இன்னும் இன்றைய நிலையிலேயே இருக்கிறன என்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது. அதைப் பற்றி எழுதினால் பல பதிவுகள் எழுதவேண்டி வரும். ஆனால் அதை எழுதும் தகுதி,வயது எனக்கு இருக்கிறதா என்ற சந்தேகம் வருவதால் அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.
Friday, March 11, 2005
வருகிறது - Scientific Journal - தமிழில்
உலகில் நடக்கும் அனைத்து ஆராய்ச்சிகளின்(சில ரகசிய ஆராய்ச்சிகள் தவிர) முடிவுகளும், ஆய்வுக்கட்டுரைகளாக அந்தத்துறைகளின் அல்லது பொதுவான அறிவியல் ஆய்விதழ்களில் குறிப்பிட்ட கால இடைவெளில் மாதம் தோறுமோ, வாரம் தோறுமோ வந்துகொண்டிருக்கின்றன என்பது நாம் அறிந்ததே. இத்தகைய அறிவியல் ஆய்விதழ்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ரஷ்யன், ஜெர்மன், ஜப்பானீஷ்,சைனீஷ் போன்ற சில மொழிகளிலும் புகழ்பெற்ற அறிவியல் ஆய்விதழ்கள் உண்டு.
இதுபோல் போல் பல நாடுகளிலிருந்தும் அறிவியல் ஆய்விதழ்கள் வெளிவருகின்றன. இந்தியாவில் இருந்து வரும் கரண்ட் சயின்ஸ், இந்திய அறிவியல் அகாடமி வெளியீடுகள் ஆகியவைகளும் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. இதில் கரண்ட் சயின்ஸ் இதழின் அனைத்து வெளியீடுகளும் (கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு) இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. இதுபோன்ற ஆய்விதழ்களின் விலை பெரும்பாலும் யானைவிலை, குதிரை விலை இருக்கும், ஒவ்வொரு பல்கலைக்கழகமும் இதுபோன்ற ஆய்விதழ்களைத் தங்கள் நூலகத்துக்காக வாங்கச் செலவழிக்கும்தொகை மிக அதிகம். இதுபற்றிச் சொல்ல ஆரம்பித்தால் தனியாகப் பல பதிவுகள் எழுதவேண்டிவரும்.
இதுபோன்ற அறிவியல் ஆய்விதழ் ஒன்று தமிழில் தொடங்கப்பட உள்ளது. திருச்சி பாரதிதாசன் பலகலைக்கழகம் துவங்க இருக்கும் இந்த அறிவியல் ஆய்விதழ் கணிதம், இயற்பியல்,வேதியல், உயிரியல், கணினி அறிவியல் என அனைத்தையும் உள்ளடக்கியதாய் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது (கரண்ட் சயின்ஸின் உள்ளடக்கம் அப்படியே நினைவுக்கு வருகிறது). இந்தத் தமிழ் அறிவியல் ஆய்விதழுக்கு ஆய்வாளர்கள் தங்கள் ஆராய்ச்சி முடிவுகளைத் தமிழில் எழுதி அனுப்பலாம். ஆய்வுக்கட்டுரைகள் தவிர மூலஆய்வுத்தொகுப்புரைகள் (Reviews), புத்தக மதிப்புரைகள், ஆய்வுக்குறுமடல்கள்(letters and communications), அறிவியல் செய்தித்திரட்டுகள், வல்லுநர் கருத்துக்கள் என அனைத்தையும் தமிழில் அனுப்பலாம். இது பற்றிய மேலதிகத்தகவல்கள் இங்கே காணக்கிடைக்கிறது.
இந்த முயற்சி தமிழின் வளர்ச்சிக்கு ஒரு தூண்டுகோலாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அழிவின் விளிம்பில் சில பொக்கிஷங்கள்
இது வரை எத்தனையோ இலக்கியச் செல்வங்களை இழந்திருக்கிறோம். தமிழிசை நூல்கள், ஐம்பெருங்காப்பியங்களில் சில, இலக்கண நூல்கள் எனப் பட்டியல் மிகப்பெரிதாய் நீளும். உ.வே.சா போன்ற பெருமக்களின் முயற்சியால் சில கருத்துப்பெட்டகங்கள் காப்பாற்றப்பட்டன. எத்தனையோ செல்வங்கள் காலவெள்ளத்தில் இதுபோல் காப்பாற்றுவார் இல்லாமல் சுவடற்றுப் போயிருக்கின்றன. இலக்கியங்கள் மட்டுமல்ல, வரலாற்றுச் சின்னங்கள் பலவும் காணாமல் போயிருக்கின்றன, போய்க்கொண்டிருக்கிறது. சிதைந்துகொண்டிருக்கும் ஒரு வரலாற்றுச் செல்வம் பற்றிய கவலையும்,அக்கறையும் தொனிக்கும் ஒரு கட்டுரை வரலாறு டாட் காம் இம்மாத இதழில் கவனத்தைக் கவர்ந்தது. முடிந்தால் நாமும் இதற்கு ஏதாவது செய்யலாம்.
Tuesday, March 08, 2005
தமிழ் வாசிக்கும் இலவச மென்பொருள்
ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளவற்றை நாம் வாசிக்கப் பல மென்பொருட்கள் இருக்கின்றன. உதாரணமாக அடோபி PDF Reader-ன் சமீபத்திய வெளியீடுகள் PDF கோப்புகளை நாம் கேட்கும்படி வாசிக்கும். மைக்ரோசாப்ட் ரீடர் மென்பொருளும் இதுபோன்ற செயல்பாட்டுக்கு உதவுகிறது. MS reader கோப்புக்களாக ஆயிரக்கணக்கான ஆங்கில மின்னூல்கள் வர்ஜினியா பலகலைக்கழக மின்னிலக்கநூலகத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன என்பதை கொஞ்ச நாட்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன்.
தமிழில் எழுதப்பட்டுள்ளவற்றை வாசிக்க இதுபோன்ற வாசிப்பிகள் இல்லாமல் இருந்தது. குறள் சாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள தற்போதைய குறள் மென்பொருள் தொகுப்பில் உள்ள கவிதை செயலி தமிழை வாசிக்கிறது. இந்தக் "கவிதை செயலி" மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற ஒரு செயலி. தமிழ் வாசிப்பி என்பது இன்னும் ஆரம்ப நிலையில் இருக்கிறது. யுனிகோடில் எழுதப்பட்டுள்ளவற்றை அதனால் வாசிக்க இயலவில்லை. ஆனால் TSCII -யில் எழுதப்பட்டுள்ளவற்றை மழலை மொழியில் வாசிப்பதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. விரும்புபவர்கள் இந்த இலவசச் செயலியை முயற்சித்துப் பார்க்கலாம்.
சந்திரமுகி - டிரெய்லர்
நேற்று ஒருவர் இந்த டிரெய்லரை அனுப்பி இருந்தார். மிக ஆவலுடன் பலரும் எதிர்பார்த்திருந்த படம் இது என்பதால் எனக்கும் ஆவல் கூடிவிட்டது. உடனே ஓட்டமாய் ஓடிப்போய் பார்த்தேன். டிரெய்லர் நான் எதிர்பார்த்தவிதத்தில் இல்லை. நேற்றுப்பூராவும் ஒரே நறநற. இதை அனுப்பிய நபரை தேடிக்கொண்டிருக்கிறேன். அவர் கிடைத்தால் உங்களுக்கும் தகவல் சொல்கிறேன், வந்து அவருக்கு உங்கள் சன்மானத்தைத் தவறாமல் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொகிறேன :-).
ஓ .. சுட்டியைத் தர மற்ந்துவிட்டேனோ.. ? இங்கிருந்து இந்த டிரெய்லரை இப்போதுவரை பார்க்க முடிகிறது. இது தொடர்ந்து இயங்குமா என்று தெரியவில்லை. பிளாஸ் படங்களை எப்படி சேமிப்பது என்று தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Thursday, March 03, 2005
எருமைச் சாணம் மருந்தாகுமா ?
நாம் சில சமயங்களிலாவது எதையும் ஆராய்ச்சி மனப்பான்மையுடன் அணுகுவது ஏகப்பட்ட மூடப்பழக்கவழக்கங்களைத் தவிர்க்கும். வெங்கட் நேற்று பசு மூத்திரம்Vsபிஜேபி பற்றிய செய்தியை மேற்கோள் காட்டி எழுதியிருந்தார்.
முற்காலத்தில் பல விஷயங்களை முன்னோர்கள் ஆழ்ந்த அர்த்தத்துடன் கடைப்பிடித்துள்ளனர். அதன் உள்ளர்த்தம் மக்களுக்குக் புரியாததால்/தெரிவிக்கப்படாததால் பிற்காலத்தில் பெரும்பாலான அத்தகைய வழக்கங்கள் ஏகப்பட்ட மூடப்பழக்கவழக்கங்களுக்கு வித்திட்டுவிட்டன. சிலர் அவற்றை அடுத்தவர்களை ஏமாற்றவும், பணம் சம்பாதிக்கவும் பயன்படுத்திக் கொண்டனர். இதுவிஷயத்தில் மக்களின் அறியாமை நமக்குத் தெரியாத ஒன்றல்லவே.
பசு மாட்டின் மூத்திரத்தில் கிருமி நாசினித்தன்மை இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. இன்றும் வீடுகளைக் கழுவிவிட்ட பின்னர் கொஞ்சம் அதை தெளிக்கும் பழக்கம் கிராமங்கள் இருந்து வருகிறது. அதை ஏன் செய்கிறோமென்று அவர்களுக்கு முழுவதும் தெரியாமல் இருந்தாலும் அதில் ஒரு உள்ளர்த்தம் இருக்கிறது. ஆனால் இன்று அறிவியல் ஏகப்பட்ட அருமையான கிருமி நாசினிகளைக் கொடுத்தபின்னும் ஆயிரமாண்டு பழமையான அந்தக் கிருமிநாசினியையே நாம் பயன்படுத்த வேண்டுமா என்பதுதான் கேள்வி :-).
முற்றிய மஞ்சட்காமாலைக்கு எருமை மாட்டின் சாணச்சாறு+எருமைத்தயிர் அருமையான மருந்தாக இருந்ததை நான் பல முறை கண்கூடாய்ப் பார்த்திருக்கிறேன். அதுவும் சில நாட்களிலே அற்புத குணம் தெரியும். அன்று மட்டுமல்ல இன்றும் எனக்கு அது எப்படி எனப் புரியவில்லை. சாதரணமாக முற்றிய மஞ்சட்காமாலை எதற்கும் அடங்காத நோய், மிக ஆபத்தானதும்கூட. ஆங்கில மருத்துவத்தில் அந்தளவுக்குச் சிறப்பான மருந்துகள் இதற்குக் குறைவே. கீழாநெல்லி மூலிகையைத் தொடர்ந்து பல வாரம் குடித்தால் மஞ்சள்காமாலை குணமாவது தெரியவரும் என்பது நாம் பலரும் அறிந்த உண்மை. ஆனால் சில நாட்களிலேயே எருமைச்சாணம் + எருமைத்தயிர் குணமாக்குறதே அது எப்படி என்றுதான் புரியவில்லை.
அர்த்தம் புரியாமல் செய்யும் பல செயல்கள் ஏகப்பட்ட மூடப்பழக்க வழக்கங்களுக்கு இட்டுச் செல்லும் என்பது நமக்குத் தெரியாத விஷயமல்ல. ஆயிரக்கணக்கான வருடங்களாய் இதுதானே நடந்துவருகிறது. இப்படி மஞ்சட்காமாலை குணமாவதைக் காரணமாக்கி யாராவது எருமைச் சாணத்தைச் சர்வரோக சஞ்சீவியாக(!) விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கும் சாத்தியம் அதிகமாகவே உண்டு.
காளானில் இருந்த பெனிசிலின் வெளியே எடுக்கப்பட்டு ஆராயப்பட்டதுபோல, இந்த பசு , எருமைக் கழிவுகள் அறிவியல் பூர்வமாக ஆழமாக ஆராயப்பட்டால் நிறைய விஷ்யங்கள் தெரியவரும் என்பது உறுதி, மேலும் அது நிறைய கேலிக்கூத்துக்களையும் தவிர்க்கும்.
Wednesday, March 02, 2005
உங்கள் தலைமுடி ஒரிஜினலா ?
கொஞ்சம் நீளமான தலைமுடி உள்ள பெண்களைப் பார்க்கும்போது முடியின் உண்மைத்தன்மை பற்றிய சந்தேகம் லேசாக வருவதுண்டு. சில நேரம் ஒட்டு வைத்து கூந்தல் நீளத்தைப் பெண்கள் கூட்டிக்கொள்வதுமுண்டு. ஆண்கள் பெரும்பாலும் தற்போது நீளமான தலைமுடி வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. தலையில் கொஞ்சம் கொஞ்சமாக முடி குறைந்து வழுக்கை விழுந்துவிட்ட பின்னர் சிலர் டோப்பா வைத்துக் கொள்வதுண்டு. ஆனாலும் அவர்களின் முடியைப் பார்த்து யாரும் பெரும்பாலும் சந்தேகப்படுவதில்லை.
முடி தலையில் தாராளமாகவே இருப்பதால் எனக்கு டோப்பா வைக்கும் அளவுக்கு நிலைமை இப்போது இல்லை :-). எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து ஹேர்ஸ்டைலை மாற்றியதே இல்லை. சாதாரண கிராப்தான். ஆனாலும் புதிதாய்ப் பார்க்கும் சிலர் என்னுடைய தலையைச் சந்தேகத்துடன் நோக்குவதன் அர்த்தம் புரியவே இல்லை.
கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது ஒருவர் என் தலையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். முதலில் நான் அதைக் கவனிக்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து அருகில்வந்து ஜெர்மனில் ஆரம்பித்தார்.
".... மன்னிக்க வேண்டும் ... "
"... ம்ம் .. சொல்லுங்கள்..", இது நான்.
"... உங்கள் தலைமுடி ஒரிஜினலா ..? "
எனக்கு குபீரென வ்ந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, "... ஆமாம் , ஏன் கேட்கிறீர்கள் .. ? "
"... ஒன்றுமில்லை, மிகவும் சீராக இருப்பதாய்த் தெரிகிறது , அதனால்தான் கேட்டேன்...." , என்றவர் அத்துடன் நில்லாமல் எனது தலைமுடியைத் தொட்டுப்பார்த்து உறுதிசெய்துகொண்டார். கஷ்டகாலம். வேறென்ன சொல்ல. :-).
Tuesday, March 01, 2005
டென்னிஸில் கோல் போட்டு ஜெயித்த சானியா
இன்று பார்த்த சுவையான விஷயம் இது. பலரும் இந்த செய்தியைக் கேட்டிருந்தாலும் அவ்வளவு உன்னிப்பாக் எல்லாரும் கவனித்திருப்பார்களா என்று தெரியவில்லை. இன்றைய தினமலரில் வந்த செய்தியில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பல கோல் வித்தியாசத்தில் ரஷ்ய வீராங்கனையை வென்றுள்ளதாய் செய்தி வந்துள்ளதாம்.
டென்னிசில் கோல் போட்டு ஜெயித்த கதையை ஒரு கலந்துரையாடல் களத்தில் நண்பர் ஒருவர் எழுதியிருந்தார். சானியாவின் ரசிகர்கள் சுடடிப் பார்க்கவும். :~)