Thursday, March 24, 2005
பூப்பறிக்கும் கோடரிகள்
ஒரு பண்பட்ட, வளர்ந்த இனத்தின் குணங்களில் முதன்மையானது எது தெரியுமா ?. எண்ணத்தைச், சிந்தனையைப் பண்பட்ட முறையில், அளவான வார்த்தைகளால் வெளிப்படுத்துதல் என்பதுதான். வளர்ந்த இனமென்று நீங்கள் கருதும் எந்த இனத்தையும் கொஞ்சம் இங்கு நினைத்துப் பார்க்கலாம்.
தனது சிந்தனையைச் சமுதாயத்தால் வரையறுக்கப்பட்ட விதத்தில், அதே நேரத்தில் தான் சொல்ல வந்ததின் பொருளைச் சிறிதும் சிதைக்காமல், எதிரியின் மனதிலும் தாக்கம் உண்டாக்கும் விதத்தில் (தாக்கும் விதத்தில் அல்ல, அது மிக எளிது) பேசும் வல்லமை வாய்க்கப்பட்டவர்களின் வெற்றிகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவை. அவர் ஒரு பண்பட்ட இனத்தின் அடையாளம், பிரதிநிதி.
வெளிப்படுத்துதல் என்பது ஒரு கலை. அதிலும் எண்ணங்களைப் பிறருக்குத் தெளிவாக வெளிப்படுத்தும் திறன் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. தனது எண்ணத்தைக் கவிதையாகவோ, கட்டுரையாகவோ, கதையாகவோ, திரைப்படமாகவோ சமைக்கும் திறமை நம்மில் எத்தனை பேருக்கு உண்டு ?. நமது சிந்தனைகளையும், உணர்வுகளையும் எழுத்தில் அழகாகக் காட்டும் வல்லமை பெற்றவர்கள் பாக்கியசாலிகள். இந்த வெளிப்படுத்தலில் கல்வி மிக முக்கியப்பங்கு வகிக்கிறது. படிக்காத ஒருவரின் பேச்சுக்கும், படித்த ஒருவரின் பேச்சுக்கும் உள்ள வித்தியாசத்தை மிக எளிதாய் யாரும் உணரமுடியும். ஏட்டுக்கல்வி கல்லாத சிலரும்கூட அருமையாகத் தனது எண்ணத்தை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருப்பது அரிதாய் நிகழ்கிறது.
ஐரோப்பியர்களையும், துணைக்கண்ட மக்களையும் ஒப்பிடும்போது சொல்லப்படுவது, ".... துணைக்கண்ட மக்கள் கலாச்சாரத்தில் பல உயரங்களைத் தொட்டவர்கள், ஆனால் பழக்கவழக்கத்தில்(manners) இன்னும் அதலபாதாளத்தில் இருப்பவர்கள்.." இது உண்மைதான் என்ற நம்பிக்கை எனக்கும் உண்டு. நம்மில் எத்தனைபேர் இதை ஒத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பேசும் சொற்கள் பழக்கவழக்கத்தில் முதலிடம் வகிக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.
எதிரில் நிற்பவருக்கு ஆத்திரம் உண்டாக்கும் விதத்திலும், தனது சினத்தை வெளிப்படுத்துவது மட்டுமே நோக்கமாகக் கொண்டும் உதிர்க்கப்படும் சொற்கள் மிகக்குறைந்த தரமுடையவை. அதைப் பேசியவரே கொஞ்ச நேரத்தில் அதற்காய் அருவருப்படையலாம். இவ்வாறு பேசுவதன் பயனைப் பார்த்தால் அப்படி எதுவுமே இல்லை, தனது தினவினைத் தீர்க்க சுவரில் உரசிக்கொள்ளும் விலங்கின் செயலுடன் இதை ஓரளவு ஒப்பிட்டுப்பார்க்க இயலும். அச்சொற்களால் நமது தினவு சிறிது தீரும் வாய்ப்பினையும், அடுத்தவர் காயப்படும் வாய்ப்பையும் மட்டும் மறுப்பதற்கில்லை. ஆனால் நாம் சொல்ல வந்ததன் கருத்து அடுத்தவருக்கு உணரப்படாததைவிட, அதன் எதிர்மறைக் கருத்தினை அவர் எடுத்துக்கொள்ளும் நிலைக்கு அவரை நாம் தள்ளும் வாய்ப்பே மிக அதிகம். இதுதானா நாம் வேண்டுவது ?. கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்று பொய்யாமொழிப் புலவன் சொன்னதும் இதனால்தானே?.
தமது வலைப்பூக்களின் மூலம் தனது குரலை ஒலிக்கச் செய்யும் அனைவரும் ஏட்டுக்கல்வியைப் போதுமான அளவு பெற்றிருப்பவர்கள். அவர்கள் ஏட்டுக்கல்வியுடன் மட்டும் நின்றுவிடக்கூடாது என்ற அக்கறை நம் அனைவருக்கும் உண்டு. நமது தமிழர்கள் என்னதான் கலாச்சாரம், பண்பாடு என்று பெருமை பேசிக்கொண்டாலும் சொற்களை வெளியிடுவதில் எவ்வளவு தூரம் பண்பட்டிருக்கிறார்கள் என்று இன்னும் தெரியவில்லை. முதலில் சொன்னதுபோல் ஒரு பண்பட்ட இனமாய் நாம் மாறவேண்டும் என்பதுதான் நம் அனைவரின் அவா.
Comments:
எதிர்பார்ப்பும், வருத்தமும் நியாமானதே.
நல்ல பதிவு.
தேர்ந்தெடுக்கப்பட்ட செற்கள் என்னை சிலிர்க்க வைக்கின்றன.
நல்ல பதிவு.
தேர்ந்தெடுக்கப்பட்ட செற்கள் என்னை சிலிர்க்க வைக்கின்றன.
///ஒரு பண்பட்ட, வளர்ந்த இனத்தின் குணங்களில் முதன்மையானது எது தெரியுமா ?. எண்ணத்தைச், சிந்தனையைப் பண்பட்ட முறையில், அளவான வார்த்தைகளால் வெளிப்படுத்துதல் என்பதுதான்.///
mika chariyaka sonnerkal.
oru eluththalanukkum athuve azhaku.
mika chariyaka sonnerkal.
oru eluththalanukkum athuve azhaku.
நமது எண்ணங்கள் சொற்களாக வடிவம் பெறுகின்றன.
நமது சொற்கள் நமது செயல்களாக வடிவம் பெறுகின்றன,
நமது செயல்கள் நமது நடத்தைகளாகின்றன.
தனி மனிதர்களின் குழுவடிவமே சமூகம், எனவே நமது சமூகம் பண்பட்டதாக வேண்டுமெனில் நம் ஒவ்வொருவரின் எண்ணதில் மாற்றம் வரவேண்டும். அதற்கு கல்வியின் பங்கு முக்கியமாகிறது. நம்மை பண்பட்டவர்களாக்க அறிவியலை கற்க நாம் முக்கியத்துவம் கொடுப்பது போலவே ஆத்திசூடி, திருகுறள், இன்னாநாற்பது போன்ற வாழ்க்கை கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும், ஆனால் பள்ளிகளில் ஏனோ இன்று இதற்கெல்லாம் அத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை......
நமது சொற்கள் நமது செயல்களாக வடிவம் பெறுகின்றன,
நமது செயல்கள் நமது நடத்தைகளாகின்றன.
தனி மனிதர்களின் குழுவடிவமே சமூகம், எனவே நமது சமூகம் பண்பட்டதாக வேண்டுமெனில் நம் ஒவ்வொருவரின் எண்ணதில் மாற்றம் வரவேண்டும். அதற்கு கல்வியின் பங்கு முக்கியமாகிறது. நம்மை பண்பட்டவர்களாக்க அறிவியலை கற்க நாம் முக்கியத்துவம் கொடுப்பது போலவே ஆத்திசூடி, திருகுறள், இன்னாநாற்பது போன்ற வாழ்க்கை கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும், ஆனால் பள்ளிகளில் ஏனோ இன்று இதற்கெல்லாம் அத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை......
நீண்ட நாடகளாய் என்னில் உறுத்திக் கொண்டு இருந்த சில உணர்வுகளுக்கு, அழுத்தமான, ஆழமான விதத்தில் விடை கிடைத்தது போலவும், உண்மையிலேயே பலர் இதனைக் கருத்தில் கொள்ளத்தக்கதாகவும் உள்ளது முத்து!!! மிக மிக நல்ல பதிவு
Post a Comment