Thursday, March 03, 2005
எருமைச் சாணம் மருந்தாகுமா ?
நாம் சில சமயங்களிலாவது எதையும் ஆராய்ச்சி மனப்பான்மையுடன் அணுகுவது ஏகப்பட்ட மூடப்பழக்கவழக்கங்களைத் தவிர்க்கும். வெங்கட் நேற்று பசு மூத்திரம்Vsபிஜேபி பற்றிய செய்தியை மேற்கோள் காட்டி எழுதியிருந்தார்.
முற்காலத்தில் பல விஷயங்களை முன்னோர்கள் ஆழ்ந்த அர்த்தத்துடன் கடைப்பிடித்துள்ளனர். அதன் உள்ளர்த்தம் மக்களுக்குக் புரியாததால்/தெரிவிக்கப்படாததால் பிற்காலத்தில் பெரும்பாலான அத்தகைய வழக்கங்கள் ஏகப்பட்ட மூடப்பழக்கவழக்கங்களுக்கு வித்திட்டுவிட்டன. சிலர் அவற்றை அடுத்தவர்களை ஏமாற்றவும், பணம் சம்பாதிக்கவும் பயன்படுத்திக் கொண்டனர். இதுவிஷயத்தில் மக்களின் அறியாமை நமக்குத் தெரியாத ஒன்றல்லவே.
பசு மாட்டின் மூத்திரத்தில் கிருமி நாசினித்தன்மை இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. இன்றும் வீடுகளைக் கழுவிவிட்ட பின்னர் கொஞ்சம் அதை தெளிக்கும் பழக்கம் கிராமங்கள் இருந்து வருகிறது. அதை ஏன் செய்கிறோமென்று அவர்களுக்கு முழுவதும் தெரியாமல் இருந்தாலும் அதில் ஒரு உள்ளர்த்தம் இருக்கிறது. ஆனால் இன்று அறிவியல் ஏகப்பட்ட அருமையான கிருமி நாசினிகளைக் கொடுத்தபின்னும் ஆயிரமாண்டு பழமையான அந்தக் கிருமிநாசினியையே நாம் பயன்படுத்த வேண்டுமா என்பதுதான் கேள்வி :-).
முற்றிய மஞ்சட்காமாலைக்கு எருமை மாட்டின் சாணச்சாறு+எருமைத்தயிர் அருமையான மருந்தாக இருந்ததை நான் பல முறை கண்கூடாய்ப் பார்த்திருக்கிறேன். அதுவும் சில நாட்களிலே அற்புத குணம் தெரியும். அன்று மட்டுமல்ல இன்றும் எனக்கு அது எப்படி எனப் புரியவில்லை. சாதரணமாக முற்றிய மஞ்சட்காமாலை எதற்கும் அடங்காத நோய், மிக ஆபத்தானதும்கூட. ஆங்கில மருத்துவத்தில் அந்தளவுக்குச் சிறப்பான மருந்துகள் இதற்குக் குறைவே. கீழாநெல்லி மூலிகையைத் தொடர்ந்து பல வாரம் குடித்தால் மஞ்சள்காமாலை குணமாவது தெரியவரும் என்பது நாம் பலரும் அறிந்த உண்மை. ஆனால் சில நாட்களிலேயே எருமைச்சாணம் + எருமைத்தயிர் குணமாக்குறதே அது எப்படி என்றுதான் புரியவில்லை.
அர்த்தம் புரியாமல் செய்யும் பல செயல்கள் ஏகப்பட்ட மூடப்பழக்க வழக்கங்களுக்கு இட்டுச் செல்லும் என்பது நமக்குத் தெரியாத விஷயமல்ல. ஆயிரக்கணக்கான வருடங்களாய் இதுதானே நடந்துவருகிறது. இப்படி மஞ்சட்காமாலை குணமாவதைக் காரணமாக்கி யாராவது எருமைச் சாணத்தைச் சர்வரோக சஞ்சீவியாக(!) விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கும் சாத்தியம் அதிகமாகவே உண்டு.
காளானில் இருந்த பெனிசிலின் வெளியே எடுக்கப்பட்டு ஆராயப்பட்டதுபோல, இந்த பசு , எருமைக் கழிவுகள் அறிவியல் பூர்வமாக ஆழமாக ஆராயப்பட்டால் நிறைய விஷ்யங்கள் தெரியவரும் என்பது உறுதி, மேலும் அது நிறைய கேலிக்கூத்துக்களையும் தவிர்க்கும்.
Comments:
Post a Comment