Tuesday, March 29, 2005
ராமானுஜனின் நோட்டுப் புத்தகங்கள்
உலகில் எத்தனையோ மனிதர்கள் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள். ஆனால் தான் இவ்வுலகில் இருந்ததற்கான அடையாளத்தை அழுத்தமாகப் பதித்துச் செல்வோர் கொஞ்சப் பேர்தான். அவர்களில் சிலர் அடுத்தவர் எட்டமுடியா அடையாளம் பதித்தவுடன், வந்த வேலையை முடித்துவிட்டேன், போய்வருகிறேன் என்று சொல்லிவிட்டு கொஞ்ச வயதிலேயே உலகைவிட்டுப் போய்விடுகிறார்கள். ஆனால் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் இவ்வுலகிற்கு நீங்குவதே இல்லை. இருந்த கொஞ்ச காலத்தில் செய்ததே இவ்வளவென்றால் நீண்ட ஆயுள் அவர்களுக்கிருந்தால் என்னவாகியிருக்கும் என்ற பிரமிப்பு அப்பெருமக்களைக் கொஞ்சம் அறிந்த அனைவருக்கும் இருக்கும்.
மேற்கூறிய வகையான அரிதான பெருமக்கள் உலகின் பல நாடுகளிலும் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் அதற்காக மட்டுமே இவ்வுலகில் பிறந்திருக்க வெண்டும் என்று யாராவது நினைத்தால் அது தவறல்ல. விவேகானந்தர், பாரதி, ராமானுஜன், அலக்ஸாணடர் என்று அற்ப வயதில் இறப்பதிற்கு முன்னால் உலகைத் தாக்கத்துக்கு உள்ளாக்கியவர்களின் பட்டியல் மிகப் பெரியதானதல்ல, ஆனால் அவர்களால் ஏற்பட்ட தாக்கங்கள் மிகப் பெரிது.
சரி. சொல்லவந்ததைச் சொல்லிவிடுகிறேன். ராமானுஜன் என்ற அந்த மேதை அந்தக் கால பி.யூ.சி படிப்பைக்கூட முடியாதவர். வாழந்த கொஞ்ச காலத்தின் பெரும்பகுதியையும் உடல்நலக்குறைவிலும், வறுமையிலும் கழித்தபோது கிட்டத்தட்ட தனது 16 வயதிலிருந்து 27 வயது வரை தனது நோட்டில் எழுதிவைத்த கணிதத்தேற்றங்களும், கண்டுபிடிப்புக்களும் ஏராளம். இன்றைக்கு உலகெங்கும் உள்ள கணித அறிஞர்கள் அவர் எழுதிய நோட்டுப் புத்தகத்தில் உள்ள கணிதப்புதிர்களைப் புரிந்துகொள்ள முயன்றுவருகிறார்கள். சமீபத்தில் அவரின் இன்னொரு கணக்கு சிலநாட்களுக்கு முன்னால் புரிந்துகொள்ளப்பட்டதாய் வெங்கட் தனது வலைப்பதிவில் எழுதியிருந்தார்.
உலகின் எந்தப் பல்கலைக்கழகத்தின் நூலகத்திலும் ராமானுஜத்தின் நோட்டுப்புத்தகத்தின் பிரதியைக் காணமுடியும். மும்மையில் உள்ள டாடா அடிப்படை அறிவியல் ஆய்வு மையம் பல ஆண்டுகளுக்கு முன்னால் அந்த நோட்டுப்புத்தகத்தினை எந்த மாற்றமும் செய்யாமல் கிட்டத்தட்ட ஜெராக்ஸ் காப்பி போல புத்தகமாய் வெளியிட்டது. அந்தப் புத்தகம் சில திருத்தங்களுடன் அச்சுவடிவில் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தாலும் வெளியிடப்பட்டது.
அது மின்னூலாக இங்கிலாந்தின் சுசெக்ஸ் பல்கலைக்கழக இணையத்தளத்தில் கிடைக்கிறது, இம்மின்னூல் பற்றிய தகவலை முத்தமிழ்மன்ற யாகூ குழுவில் பார்த்தபோது ராமானுஜன் பற்றிக் கொஞ்சம் எழுதவேண்டுமெனத் தோன்றியது.
ராமானுஜனின் நோட்டுப் புத்தகம் 1
ராமானுஜனின் நோட்டுப் புத்தகம் 2
Comments:
சுட்டிகளுக்கு நன்றி முத்து, நேரம் கிடக்கும்போது படிக்க வேண்டும்.
ராமனுஜத்தைப் பற்றி தெரிந்திருந்தால் போதாது, அவர் கணக்குகளில் சிலவற்றையாவது கற்றுகொண்டு, ராமனுஜத்தைப்பற்றி தெரியாத அயலாரிடம், அந்த கணக்குகள் மூலமாக அவரை அறிமுகம் செய்ய வேண்டும்.
Post a Comment
ராமனுஜத்தைப் பற்றி தெரிந்திருந்தால் போதாது, அவர் கணக்குகளில் சிலவற்றையாவது கற்றுகொண்டு, ராமனுஜத்தைப்பற்றி தெரியாத அயலாரிடம், அந்த கணக்குகள் மூலமாக அவரை அறிமுகம் செய்ய வேண்டும்.