<$BlogRSDUrl$>

Tuesday, May 31, 2005

ஐன்ஸ்டீன் ஒரு விஞ்ஞானி இல்லை

" ஐன்ஸ்டீன் ஒரு விஞ்ஞானியா ? விஞ்ஞானிக்கு எதிர்ப்பதமாக இவரைவிட ஒருவரைக் கற்பனை செய்வது மிகக் கடினமானது. ஐன்ஸ்டீன் கொஞ்சம் நன்றாய் வயலின் வாசிக்கக்கூடியவர், வரும் 1940 ஆம் ஆண்டுகளுக்குள் ரிலேடிவிடி தத்துவம் ஒரு நகைச்சுவையாகக் கருதப்படும். கதைகளில் வரும் ஆண்டர்சன், கிரிம் மற்றும் மட் ஹட்டர் இவர்களுடன் ஐன்ஸ்டீன் ஏற்கனவே இறந்து அவர்களுக்குப் பக்கத்திலேயே புதைக்கப்பட்டுவிட்டார்..."
- George Francis Gillette, creator of the "backscrewing theory of gravity,"1929.

கதையைப் பாருங்கள். ஐன்ஸ்டீன் காலத்தில் வாழ்ந்த சகவிஞ்ஞானியின் கருத்துத்தான் இது :-).
(12) Your Comments | | | |

Monday, May 30, 2005

கொச்சி விமான நிலையம் - கூடுதல் பாதுகாப்பு

இந்தியப் புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்த தகவலின்படி கொச்சி விமான நிலையத்துக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கொச்சி விமானநிலையம் முழுவதும் மத்தியத் தொழில்பாதுகாப்புத் துறையினரின் பல அடுக்குப் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாய் UNI செய்திகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

சுட்டி 1
சுட்டி 2
(0) Your Comments | | | |

Saturday, May 28, 2005

அனாமதேயப் பிரச்சினைகள் - யோசனைகள்

தற்காத்துக் கொள்ளல் என்பது பிரச்சினையைத் தற்காலிகமாய்த் தவிர்க்க மட்டுமே உதவும். நோயின் தீவிரத்தைக் குறைத்து அதன் தொல்லையிலிருந்து அப்போதைக்கு விடுபடுவது போன்றது அது. அது சரியான தீர்வல்ல என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். நோயின் அடிவேர் கண்டறியப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்படுவது அவசியம்; அது சில சமயம் அறுவைச் சிகிச்சையாகவும் இருக்கலாம். தற்காத்தலை விட எதிர்த்தாக்குதல் சிறந்த பலனிக்கும் என்பதால் இரண்டாவதைச் சிறந்த முறையாகவே கொள்ள வேண்டும்.

தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும், அனாமதேயமாய் அசிங்கங்களயும், அபாண்டங்களையும் தெளிக்கும் அந்த நபர்(கள்) தொடர்புடைய விதயங்கள்.

(1)ஒரு தமிழராகத்தான் இருக்க வேண்டும், அல்லது குறைந்த பட்சம் தமிழ் நன்றாய் எழுதப்படிக்கக்கூடியவர் என்பதில் சந்தேகமில்லை.

(2)இதுபோல் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருப்பது மிகச் சாத்தியமானதே.

(3) வலைப்பதிவுகள் அவருக்கு மிகப் பரிச்சயம் என்பதோடு, அவர் தமிழ்வலைப்பதிவோர் பலருக்கும் அறிமுகமானவராயும் இருக்கலாம்.

(4)அவர் ஒவ்வொரு முறை பின்னூட்டமிடும்போதும் தனது அசிங்கமான சொற்களுடன் தனது ஊர், நாடு, ஐ.பி முகவரி ஆகியவற்றையும் அவருக்குத் தெரியாமல் சேர்த்தே பதிகிறார் ( மறைமுகமாய்).

(5) இதுபோல் வந்த சில பின்னூட்டங்களின்மூலம் நண்பர்கள் சிலர் துப்பறிந்து அவ்வாறு செய்தவரின்(களின்) ஐபி முகவரியை(களை) கண்டறிந்துள்ளார்கள்.

(6) இதுபோன்ற பின்னூட்டங்களை இடுபவர்களின் ஐபி முகவரிகளைக் கண்டறியத் தமிழ்மணம் உதவுவது சாத்தியமானதா என்று உறுதியாய்த் தெரியவில்லை. காசியின் கருத்து இங்கே முக்கியமானது.

(7) இலவசமாய்க் கிடைக்கும் extreme track, nedstat மற்றும் இன்ன பிறவும் இவ்விதயத்தில் உதவிகரமாய் இருக்கும். இதுபோன்றவற்றைப் பயன்படுத்துபவர்களின் கருத்தும், அவற்றில் எது சிறந்ததாய் இருக்கும் என்ற யோசனையும் வரவேற்கப்படுகிறது.

(8) இதுபோன்ற பின்னூட்டமிடுவது குற்றமென சட்டமியற்றப்பட்டிருப்பது அவ்வாறு பின்னூடமிடுபவர்களுக்குத் தெரிந்ததுதானா என்று தெரியவில்லை. ஒரு சகவலைப்பதிவாளரளின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதென்பது மிகக் கசப்பான ஒன்று, அதை நம்மில் பலரும் விரும்பவில்லை, அவரின் ஐபி முகவரியோ அல்லது அவர் யாரெனத் தெரிந்தாலோ இப்பிரச்சினையின் பெரும்பகுதி தீர்க்கப்பட்டுவிடும்.

(9) சில தளங்களில் ஒவ்வொரு முறை பின்னூட்டமிடும்போதும் முதலில் அவரின் ஐபி முகவரியும் அதையடுத்து நாம் எழுதுவதும் பதிவாகும் ( உதாரணம்: forum hub ). அதேபோல் அனைத்து வலைப்பதிவுகளிலும் செய்வது சாத்தியமானதா என்பது ஆராயப்படவேண்டும்.

(10) இதுவரை வந்த இத்தகைய பின்னூட்டங்களின் ஐபி முகவரிகளைப் பட்டியலிடுவது மிகப் பயனுள்ளதாய் இருக்கும்.

சென்ற பதிவின் தொடர்ச்சியாய் இதை எழுதியிருக்கிறேன். இன்னும் இது தொடர்பான யோசனைகள் நண்பர்களிடம் வரவேற்கப்படுகின்றன.
(3) Your Comments | | | |

Thursday, May 26, 2005

அனாமதேயப் பின்னூட்டங்கள் வலைப்பதிவில்

பிரபஞ்சத்தின் சீர்மையற்ற தனமை(Entropy) தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்பது அறிவியல் விதிகளுள் ஒன்று. இதில் விலக்காவது எதுவும் இல்லை. தமிழில் சில பத்து வலைப்பதிவுகள் இருந்தவரை பெரிய பிரச்சினை என எதுவும் இல்லை. இன்றைக்குப் பல நூறு என்ற எண்ணிக்கையைத் தொட்டவுடன், மேலே குறிப்பிட்ட அறிவியல் விதிக்கு உட்பட்டு நடக்கிறது. இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஒரு நாடு என எடுத்துக்கொண்டால் மக்கள்தொகைதான் பலம்; அதுதான் பலவீனமும்கூட. வலைப்பதிவுக்கும் இது பொருந்தும்.

கொஞ்சநாட்களாய் அனாமதேயப் பின்னூட்டங்கள் மூலம் தொந்தரவு கொடுக்கும் நபர்(கள்) வேலையைக் காட்டிக்கொண்டிருக்கிறார்(கள்). டோண்டு ஒரு பதிவு இதுபற்றி எழுதியிருக்கிறார். அவருக்கு மட்டுமல்லாமல் மேலும் பல நண்பர்களுக்கும் இதே பிரச்சினை இருந்து வருகிறது. ஒரு முறை பெயரிலியின் பதிவில் அனாமதேயமாய்த் திட்டி ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. அவர் அதை எழுதியவரின் ஐபி முகவரியைத் துப்பறிந்து எழுதியிருந்தார். கறுப்பி, துளசி, ரோசாவசந்த், காஞ்சி பிலிம்ஸ் தவிர இன்னும் பலருக்கு இந்த மாதிரியான அனுபவம் இருக்கிறது.

அனாமதேயமாய்க் கருத்தெழுவது ஒரு பிரச்சினையே இல்லை, ஆனால் அது பிறரின் மூக்கைத் தொடும் அளவுக்கு நீள்கிறது என்பதுதான் பிரச்சினை. அனாமதேயமாய் எழுதும்போது தனது கருத்தை மட்டும் சொன்னால் யார்தான் தவறாய் எடுத்துக்கொள்ளப்போகிறார்கள். தனது கருத்தைச் சொல்லும்போது அவர் அடுத்தவரின் பெயர் என்ற போர்வையில் வந்தாலோ, பின்னூட்டம் என்ற பெயரில் அருவருப்பைத் தெளித்தாலோ அது வரவேற்கத்தக்கதல்ல; கடுமையாகக் கண்டிக்கத் தக்கது. அவர் யாரென்ற உண்மை வெளியில் அனைவருக்கும் காட்டப்பட வேண்டியது மிக அவசியம். அது தமிழ் வலைப்பதிவுலகின் இடையூறுகளைக் களைவதாகும்.

ஒரு விதயம் நிகழும்போது அது பிடிக்கவில்லையென்றால், அது தவறாக இருந்தால் அது நிறுத்தப்பட வேண்டும் என்று பாதிக்கப்படுபவர் வலியுறுத்துவது மிக நியாயமான ஒன்று, அது அவரின் ஆதார உரிமை. இதற்கு ஒரு சரியான தீர்வைக் காண்பது மிக அவசியமான ஒன்று. இத்தகைய அனாமதேயப் பின்னூட்டங்கள் தமிழ் வலைப்பதிவின் நலத்திற்கு பெருந்தீங்கு செய்யக்கூடியவை- நேரடியாயும் , மறைமுகமாயும்.

உலகம் மிக வேகமாய் முன்னேறி வருகிறது. மின்வெளியில் ஒவ்வொருவரும் யாரென்று தெரியாத நபர்கள்தாம் என்பதுபோல் தெரிந்தாலும் அது உண்மையில்லை. ஒவ்வொருவரும் எந்த ஊரில் இருந்து மின்வெளியில் கலக்கிறார் என்பது ஒவ்வொரு விநாடியும் பதிவாகிக்கொண்டே இருக்கிறது. நமக்கு வரும் மின்னஞ்சல்களில் இருந்து, நம்முடன் மின்னரட்டை செய்வோர் வரைக்கும் இது பொருந்தும். ஒவ்வொருவர் இடும் பின்னூட்டத்திலும் அவரின் கருத்துக்கள் மட்டும் பதிவாவதில்லை, அத்துடன் அவர் எந்த நாட்டில், எந்த ஊரில், எந்த நேரத்தில், எந்த நிறுவனம் வழங்கும் இணைய வசதியைப் பயன்படுத்தி்ப் பதிகிறார் என்ற தகவல் ஒவ்வொரு நொடியும் துல்லியமாய்ப் பதிவாகிக்கொண்டே இருக்கிறது. இணைய வசதி வழங்கும் நிறுவனம் அவர் யாரென மிகத் துல்லியமாய் காட்டும் வசதி கொண்டது என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

மற்ற மொழிகளை விட தமிழ் வலைப்பதிவுகளுக்குப் பல சாதகமான, அருமையான அம்சங்கள் உள்ளன. அதில் முண்ணனி வகிப்பது மொத்தப் பதிவுகளின் ஒருங்கிணைப்பு என்பதே. உலகில் ஒரு மொழியின் நூற்றுக் கணக்கில் இருக்கும் மொத்த வலைப்பதிவுகளையும் முழுவதும் ஒருங்கினைக்கும் வசதி தமிழைத்தவிர வேறு மொழிக்கு இருக்குமா என்பது சந்தேகமே, பெரும்பாலும் இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். இவ்வசதி தமிழார்வமுடைய, அர்ப்பணிப்புச் சிந்தனையுடைய சிலரால் மிகத் திறம்பட நேரம், பொருள், சொந்த உழைப்பு ஆகியவை மூலம் படிப்படியாய்க் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. அனைவரும் தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சிக்கு, உதவாவிட்டாலும் அதன் வளர்ச்சிக்குத் தடையாய் எவரும் இருக்கக்கூடாது என்று கட்டாயப்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் கடமை.

அனாமதேயத் தொந்தரவுகளுக்கான தீர்வுகள், பிரச்சனையைத் தீர்ப்பதறகான யோசனைகள் நண்பர்களிடம் எதிர்பார்க்கப்படுகின்றன. எனது யோசனைகள் மற்றும் கருத்துக்கள் கொஞ்சம் பெரிதாய் இருப்பதுபோலத் தெரிவதால் அதை அடுத்த பதிவாய்ப் பதிக்கிறேன்.
(6) Your Comments | | | |

Monday, May 23, 2005

நவீன பாமர ரசிகர்கள்

தமிழர்களுக்கு என்று சில சிறப்பம்சங்கள் உண்டு. இந்தச் சிறப்பம்சங்களைத் தமிழர் என்ற சிறிய வட்டத்தைத் தாண்டிப் பிற மொழி, நாடு, இனம் ஆகியவற்றுக்கும் நீட்டிப்பது சாத்தியமானதாயும் இருக்கலாம். புகழ்பெற்ற ஒருவர் என்ன சொன்னாலும் அதற்குத் தேவைக்கதிகமான முக்கியத்துவம் கொடுப்பது, அவருக்குச் சற்றும் சம்பந்தமில்லாத துறைகளிலும் அவரின் கருத்துக்களை எதிர்பார்ப்பது எனப் பட்டியல் பெரிதாய் நீளும்.

இந்த வகையில் திரைப்பட நடிகர்களை நிஜத்திலும் கதாநாயகர்களாய், சொர்க்கத்தில் இருந்து குதித்தவர்களாய்ப் பார்க்கும் பாமர ரசிகர்களின் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல. இந்த வகைப் பாமர ரசிகர்கள் படிப்பினால் மட்டுமே தீர்மானிக்கப்படுபவரல்லர் - கல்வியறிவு குறைந்த பாமர ரசிகர்களின் எண்ணிக்கையே மிக அதிகம் என்ற போதிலும். பட்டம் பல பெற்ற படிப்பாளிகளும் கூடச் சிலசமயம் இந்தவகை ரசிகர்களாய் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

திரை தவிர்த்த பல துறைகளிலும் இந்தப் பாமரரசிகர்களின் எண்ணிக்கை குறைந்ததில்லை. ஒருவகையில் திரைசார் பாமர ரசிகர்கள் எளிதாய்ப் புரிந்துகொள்ளப்படுபவர்கள். ஆனால் இதர சில துறைகளின் இப்படிப்பட்ட ரசிகத்தன்மைகள் புரிந்துகொள்ள மிகக் கடினமானவை. இந்த வகை ரசிகர்கள் சமுதாயத்தில் மிக மேல்தட்டில் இருப்பவர்கள். ஆன்மீகத்துறையில் பாமர ரசிகர்களாய் ஏமாறுபவர்களின் தகுதிகள் அதிரவைக்கும் அளவுக்கு உயரியவை. விஞ்ஞானி, பேராசிரியர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி என ஆரம்பித்துச் சிலசமயம் நாட்டின் மிக உயரிய பதவிவரை எதுவும் விடுபட்டவையாய் இருப்பதில்லை. சமயங்களில் இது கசப்பாய் இருந்தாலும் இதுதான் யதார்த்தமாய் இருக்கிறது.

ஒரு துறையில் புகழ்பெற்ற ஒருவர் அத்துறையின் ஒரு சிறுதுளி மட்டுமே என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து அவருக்கும், முழுமையான அத்துறைக்குமுள்ள மிகப்பெரிய வித்தியாசத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்த்திக் கடைசியில் அவர்தான் அந்தத் துறை என்பதுபோல் நம்பும் அளவுக்குப் போய்விடும் ரசிகனைப் பாமர ரசிகன் என்று மட்டுமே சொல்லுவது சரியானதா என்று தெரியவில்லை.

மேற்படியான கூத்துகள் நடப்பதில் இலக்கியம், எழுத்து போன்ற துறைகள் விதிவிலக்குகளாய் இருப்பதில்லை என்பது சமீபகாலமாய் மீண்டும் நிரூபணமாகிவருகிறது. வளரும் ஒருவரை வளர்த்தெடுக்கச் சொல்லப்படும் பாராட்டுக்களுக்கும், வளர்ந்த ஒருவரின் திறமையை அங்கீகரிக்கும் புகழுரைக்கும், வளர்ந்த ஒருவரின் கருத்தைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதற்குமான வேறுபாட்டைக் காட்டும் எல்லைக் கோடுகள் மிகமிக மெல்லியவை. அவை மிக மெல்லியவை என்பதாலேயே கவனத்துடன் கையாளப்பட வேண்டியவை.

ஒரு ரசிகன், வாசகன் தன்னுடைய படைப்புக்கு ரசிகன் என்பதால் அவன் படைப்பாளிக்கு எந்த விதத்திலும் குறைந்து போய்விடுவதில்லை என்ற குறைந்த பட்ச உண்மையைக் கூடப் படைப்பாளி மறந்திருந்தாலும் இந்தப் பாமர ரசிகர்கள் அதை உணரமாட்டார்கள்.

படைப்பாளியிடம் தரமான படைப்பை மட்டுமே எதிர்பார்ப்பதில் தவறே இல்லை. தரமான அவரின் படைப்பை அங்கீகரித்துப் பாராட்டுவதிலும் தவறே இல்லை; அது அவசியமான ஒன்று. ஆனால் படைப்பாளியிடம் எதை எதையோ எதிர்பார்த்துக் கடைசியில் அவையெல்லாம் நம்மிடமிடமிருக்கிறதுபோலும் என்று படைப்பாளியை நம்பவைக்குமளவுக்குத் தள்ளுவது படைப்பாளிக்கும், அத்துறைக்கும் ஆரோக்கியமான விதயமே இல்லை. இதனால் ரசிகனுக்கு நன்மையா, தீமையா என்பது வேறு விஷயம்.
(8) Your Comments | | | |

Sunday, May 22, 2005

ஜெ - குறிவைக்கும் வெடிகுண்டுப் பெண்

தமிழகத் தேர்தல் நெருங்குகிறது. பல பரபரப்பான அறிக்கைகளை, சீரியஸான அறிக்கைகளை, நகைச்சுவையான அறிக்கைகளை, வாக்குறுதிகளை அடிக்கடி இனிமேல் கேட்க முடியும். கீழேயுள்ள அறிக்கை எந்தவகையைச் சார்ந்தது எனப் படிப்பவர்களே முடிவுசெய்துகொள்ளவும்.

எனது உயிரைப் பறிக்கும் பொறுப்பை விடுதலைப் புலிகள், தற்கொலைப் படையை சேர்ந்த ஒரு வெடிகுண்டு பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர் என்று தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த ஆண்டுக்கான ஆண்டறிக்கையை மேற்கோள் காட்டி பெட்ரோல், டீஸல், மருந்துகள் முதலிய பொருட்களை இலங்கைக்கு திருட்டுத்தனமாக கடத்துவதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழக்தை தொடர்ந்து ஒரு தளமாக பயன்படுத்தி வருகிறது என்று சில பத்திரிகைகள் பிரதானமாக தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டுள்ளன.

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பதைப் போன்று ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் சில பத்திரிகைகள் இதனைப் பெரிது படுத்தியுள்ளன. இது முற்றிலும் ஆதாரமற்றதாகும்.

தமிழக அரசு, விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக உறுதியான சமரசத்திற்கு இடமில்லாத நிலைப்பாட்டை எடுத்து வருகின்ற நிலையில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு தமிழகத்தில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கும் தீயநோக்கிலான இந்த முயற்சி எனக்கு ஆழ்ந்த கவலையையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது என்று உள்துறை அமைச்சருக்கு நான் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். முழுவதும் படிக்க தட்ஸ் தமிழ் டாட் காம்
(7) Your Comments | | | |

சொர்க்கத்திலிருந்து நல்ல செய்தி

சுப்புவும் , குப்புவும் நெருங்கிய நண்பர்கள். இருவருமே கிரிக்கெட் பைத்தியங்கள். இன்று நேற்றல்ல 50 வருடங்களாக எந்த கிரிக்கெட் போட்டியையும் பார்க்காமல் தவற விட்டதில்லை. இருவருக்கும் இப்போது வயது மிக அதிகமாகிவிட்டது. அவர்களுக்கு இப்போதுள்ள கவலையெல்லாம் சொர்க்கத்திலும் கிரிக்கெட் இருக்குமா என்பதுதான். எனவே யோசித்து ஒரு முடிவுக்கு வ்ந்தார்கள் . முதலில் யார் இறந்தாலும் சொர்க்கத்தில் கிரிக்கெட் விளையாட்டு உண்டா என்பதை மற்றவருக்குச் சொல்லிவிட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

கடைசியில் ஒருநாள், இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடி வெற்றி பெற்ற விளையாட்டைப் பார்த்துவிட்டு சுப்பு தூங்கிக்கொண்டிருக்கும்போது மாரடைப்பு வந்து சந்தோஷமாக இறந்துபோனார். இது நடந்த சில சில நாட்கள் கழிந்து குப்பு தூங்கிக்கொண்டிருக்கும்போது அவர் தலைமாட்டில் ஒரு குரல்,

" .... குப்பு ..! எழுந்திரு .. நான் சுப்பு வந்திருக்கிறேன் .."

" ஆ... என்ன ஆச்சரியம் .. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை .. "

"... சரி .. நான் உனக்கு ஒரு சந்தோஷமான விஷயமும் , வருத்தமான விஷயமும் சொல்லப்போகிறேன் , நீ எதை முதலில் கேட்க விரும்புகிறாய் ...?"

" .. அதெல்லாம் இருக்கட்டும்டா ... சொர்க்கத்தில் கிரிக்கெட் உண்டா அதை முதலில் சொல் .. "

" ... சொர்க்கத்தில் கிரிக்கெட் உண்டு ... அதுதான் நான் உனக்குச் சொல்ல வந்த சந்தோஷமான விஷயம் ... "

"... சரி இப்போது அந்த சோகமான விஷயத்தையும் சொல் .... "

" ... அது சோகமான விஷயம்தானா என்பதில் எனக்குக் கொஞ்சம் சந்தேகமுண்டு. எப்படியிருந்தாலும் அது சந்தோஷமான விஷயமா அல்லது சோகமான விஷயமா என்பதை நீதான் முடிவு செய்யவேண்டும். அந்த விஷயம் என்னவென்றால், நாளைக் காலையில் சொர்க்கத்தில் நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நீதான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ..... "
(6) Your Comments | | | |

Saturday, May 21, 2005

உள்ளாடையுடன் சதாம் ஹூசைன்

விநாயகர் படத்தை பீர் பாட்டிலில் பயன்படுத்தியது, குரானை அவமதித்தது என்று பிரச்சினைகள் கிளம்பி ஒரு கலக்குக் கலக்கிவரும் நிலையில் இப்போது புதித்தாய் இன்னொரு பூதம் கிளம்பியுள்ளது. சதாம் ஹுசைன் உள்ளாடையுடன் தனது பேண்டைத் துவைத்துக்கொண்டிருக்கும் படம் பிரிட்டன் நாளிதழில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சதாம் மிக ரகசியமான இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தப் படம் எப்படி எடுக்கப்பட்டது எனப் பலரும் வியப்புத் தெரிவிக்கின்றனர்.

பெண்டகன் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கும்போதிலும் நாளை மீண்டும் இதே போன்ற படங்களை வெளியிடப்போவதாய் அந்த நாளிதழ் அறிவித்துள்ளது.

சதாமின் போட்டோ பார்க்க
தினமலர்
கூகிள் செய்தித் தேடல்
(0) Your Comments | | | |

Thursday, May 19, 2005

சில வித்தியாசங்கள்

மின்னஞ்சலில் வந்த சுவாரசியமான படம் இது. இதில் படத்தைவிட செய்திக்கே முக்கியத்துவம் அதிகம். இரண்டும் ஒரே நாளில் ஒரே நாட்டில் பேசும் வேறுபட்ட இருவரின் பேச்சுக்கள். படத்தைப் படிக்கப் படத்தின் மீது சுட்டவும்.


(8) Your Comments | | | |

Wednesday, May 18, 2005

ஒரு உண்மைக் கதை

ஒரு ஊரில் ஒரு காகம் இருந்தது. சுற்றியுள்ள பறவைகளுடன் சேர்ந்து ஆடிப்பாடியும், சில சமயம் பாட்டி சுடும் வடையைத் திருடியும் சந்தோசமாய்ப் பொழுதைக் கழித்து வந்தது.

இப்படியே நாட்கள் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு சக்திவாய்ந்த முனிவர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது காகம். சந்தர்ப்பவசத்தால் காகத்தை முனிவருக்கு மிகப் பிடித்துவிட்டது. அந்த ஊரைவிட்டு முனிவர் போகும்முன் ஒரு மந்திரத்தைச் சொல்லிக்கொடுத்த்தார். அந்த மந்திரத்தால் காகத்தை நினைத்ததையெல்லாம் சாத்தியப்படுத்திக்கொள்ள இயலும். ஆனாலும் அந்த மந்திரம் மூன்று முறை மட்டுமே பயன்படுத்தச் சாத்தியப்படும். இதைச் சொல்லிவிட்டு முனிவர் போய்விட்டார்.

இந்த மந்திரத்தை எதற்குப் பயன்படுத்தலாம் எனக் காகம் யோசித்தது. அந்த நேரத்தில் அது நினைவுக்கு வந்தது. நமது காகத்துக்குக் குயிலைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு தாழ்வுமனப்பான்மை வரும்; அதன் இனிய குரலை அடுத்தவர் பாராட்டுவதால். குயிலின் குரல் எனக்கு வேண்டும் என்று சொல்லி மந்திரத்தைச் சொன்னது. என்ன ஆச்சரியம். அடுத்த நிமிடம் காகத்தின் குரல் குயிலின் குரலைப் போல் மாறிவிட்டது. நமது காகத்துக்கு ஒரே ஆனந்தம் , கூ...கூ.... எனக் குயிலைப்போலக் கூவி ஆனந்தப்பட்டது.

இன்னும் இருமுறை மந்திரத்தை எப்படிப் பயன்படுத்தலாம், நமக்குத் தேவையானவை என்ன என்று சிந்தித்தது. அந்த நேரத்தில் நினைவுக்கு வந்தவை எல்லாமே அழகானவைகள்தான், அவை எல்லாமே நமக்கும்கூட ரொம்பப் பிடிக்கும். கிளியின் மூக்கு, மயிலின் அழகிய இறகு இன்னும் சிலவும் அந்தப் புத்திசாலிக் காகத்திற்கு நினைவுக்கு வந்தது. ஆனால், மந்திரத்தை அதற்கு மேல் பயன்படுத்த இயலாதென்பதால் இவற்றை மட்டும் வேண்டி மந்திரத்தைச் சொன்னது. அடுத்த விநாடி அனைத்தும் காகத்துக்கு வந்துவிட்டது.

இப்போது காகத்துக்குப் பெருமை பிடிபடவில்லை. உலகிலேயே அற்புதமான, அழகான பறவை நான்தான், நான்தான் என்று திரும்பத் திரும்பப் பலமுறை தானாகவே சொல்லிக் குதூகலித்தது.

அந்த நேரத்தில் ஒரு பெண்காகம் அந்த வழியாய்ப் பறந்துபோனது. அதைக் கவர எண்ணி அழகிய குயில் குரலில் கூவியது. பெண் காகம் நமது காகத்தை விநோதமாய்ப் பார்ப்பதுபோலப் பார்த்துவிட்டுப் பறந்துவிட்டது. காகத்துக்குக் கொஞ்சம் ஏமாற்றம். இருந்தாலும் அதற்குப் பெரிதாய் வருத்தமில்லை, ஏனென்றால் காகங்களைவிடத் தான் மிக மிக அழகாய் இருப்பதாய் நினைத்துக்கொண்டதால் இப்போது சக காகங்கலின் மீது அதற்கு அந்தளவுக்கு மதிப்பு இல்லை. குயிலின் கூட்டத்துடன் சேர்ந்துவிட நினைத்து அங்கு சென்றது. அங்கு இந்தக் காகத்தைப் பார்த்தவுடன் அனைத்துக் குயில்களும் கொத்தி விரட்டிவிட்டன. கிளிகளும் கண்டுகொள்ளவில்லை. மயில்கள் இதைப் பார்த்துச் பார்த்துச் சிரித்தன.

கடைசியாய், ஒரு பெரிய உண்மை நமது காகத்துக்குப் புரிந்தது. காகம் காகமாயும், குயில் குயிலாயும் , மயில் மயிலாயும் இருப்பதுதான் பெருமை. ஆனால் என்ன செய்வது காலம்தான் கடந்துவிட்டதே.

பின்குறிப்பு: மந்திரம், மாயம் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாத உங்களில் சிலர் இந்தக் கதையைக் கற்பனை என நினைக்கலாம் . இதை உண்மை என நம்பாதவர்கள், புலம் பெயர்ந்து இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறையாய் வாழும் எந்த நாட்டினரையும் கேட்டுப் பாருங்கள். இந்த அப்பாவிக் காகம் சோகத்துடன் பறந்துசெல்வதை அவர்கள் நிச்சயம் பார்த்திருப்பார்கள்.
(16) Your Comments | | | |

Monday, May 16, 2005

நிலவு - பூமியின் எதிர்காலம்

பூமியின் பெட்ரோலியப் பொருட்கள் தீர்ந்துபோகப் போவதை விரைவிலேயே நாம் காணப்போகிறோம். யுரேனியம் போன்ற கனக்கதிரியக்கத் தனிமங்கள் குறிப்பிடத் தக்க அளவில் மனிதனின் தேவையை பூர்த்திசெய்யத் துவங்கிவிட்டன. என்றாலும் இதற்கு அடுத்த ஆற்றல்மூலத்தைக் கண்டறிய வேண்டிய நிலையில் உலகம் இருக்கிறது.

தற்போதைக்கு அணுக்கரு இணைவு மனிதனுக்கு நம்பிக்கை நடசத்திரமாக விளங்குகிறது, இது தொடர்பான ஆய்வுகள் மிகவும் ஆரம்பநிலையில் இருந்தபோதிலும். ஹீலியம்-3 அணுக்கரு இணைவில் எரிபொருளாக இருக்கிறது. ஹீலியம் சக்திமூலமாக மட்டுமன்றி, இன்றைக்கு அறிவியல் ஆய்வுகள், தொழில்நுட்பம் எனப்பலவற்றிலும் இன்றியமையாததாய் உள்ளது.

ஹீலியம்-3 யில் இருந்து கிடைக்கும் ஆற்றலின் அளவு மிக அதிகம். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இது ஆபத்தில்லாதது. யுரேனியம் போன்ற கதிரியக்கத் தனிமங்களை எரிபொருளாய்ப் பயன்படுத்தும்போது உருவாகும் கதிரியக்க ஆபத்துக்கள் இதில் இல்லை. மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கும் கதிரியக்க உதிரிப்பொருட்கள் இதில் உருவாவதில்லை. இதன் மூலம் யுரேனிய, புளுடோனிய உலைக் கழிவுகளிடமிருந்து மனிதனுக்கு விடுதலை கிடைக்கும்.

ஹீலியம்-3 ன் மதிப்பு மிக அதிகம். உதாரணமாய், அமெரிக்கா நூற்றுக்கணக்கான F-16 ரக விமானங்களை விற்பதைவிட ஒரு டன் ஹீலியத்தை விற்பதன் மூலம் அதிகப் பணம் ஈட்டமுடியும். 25 டன் ஹீலியம்-3 ஐக் கொண்டு அமெரிக்காவின் ஒரு வருட முழுமைக்குமான ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள இயலுமென்றால் அதன் மகிமையைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

ஆனால் இன்றைக்குப் பூமியில் கிடைக்கும் ஹீலியம்-3 யின் அளவு மிகச் சொற்பமே. நமக்குப் பக்கத்துக் கோளான நிலவில் இருக்கும் ஹீலியத்தின் அளவு மிக மிக அதிகம். நிலவில் இருக்கும் ஹீலியத்தின் அளவு பூமியின் ஆற்றல் தேவையைப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பூர்த்தி செய்துகொள்ளப் போதுமானது.

ஒரு விண்வெளி ஓடத்தால் ஒரே தடவையில் கிட்டத்தட்ட 25 டன் ஹீலியத்தை பூமிக்குக் கொண்டுவர இயலும். பூமியின் தேவை ஆண்டுக்கு 100 டன் ஹீலியத்துக்குமேல் இருக்கும். அமெரிக்க டாலர்களில் சொன்னால் 25 டன் ஹீலியம் இந்தியாவின் ஒரு ஆண்டு மொத்த பட்ஜெட் பணத்தைவிடவும் அதிகமானது. இதுவரை கவிஞர்கள் மட்டுமே காதலித்துக்கொண்டிருந்த நிலவைத் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நாடுகள் காதலிக்க ஆரம்பித்திருப்பது ஏன் என இப்போது நமக்குத் தெளிவாய்ப் புரியும்.

அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் நிலவினைக் கவனிக்கத் தொடங்கி இருக்கின்றன. இந்தியா 2008 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலவுக்கு செயற்கைக் கோள் அனுப்ப உள்ளது. சீனா இயந்திர மனிதனை அனுப்ப யோசித்து வருகிறது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய அமெரிக்கா புதிய நோக்கத்துடன் நிலவை ஆராய முனைந்துவருகிறது.
(0) Your Comments | | | |

இடைத்தேர்தல் வெற்றிகள்

கடைசியாய்க் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றுவிட்டது. மாயவரத்தான் சொல்லியிருப்பவை ( சிலது ஏற்கனவே நடந்துவிட்டது ) ஏதும் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழ்நாட்டில் தேர்தலின் முடிவு எப்படி இருக்குமெனக் கணிப்பது மிகக் கடினமான காரியம் என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக வாக்குப்பதிவின் சதவீதம் அதிகமாக இருந்தால் திமுக கூட்டணிதான் வெற்றி வெறும் என்பது சில அறிவுஜீவிகளின் கணிப்பு. ஏனென்றால் வாக்குப் பதிவு குறைவாய் இருந்தால் அதில் பாமரமக்களின் பங்கு மிக அதிகமாக இருக்கும், பொதுவாக பாமர மக்களுக்கு அதிமுக பிடிக்கும் அல்லது திமுக அவ்வளவாய்ப் பிடிக்காது அல்லது கொஞ்சம் புத்திசாலி மக்களின் தீர்வு திமுக- வாகத்தான் இருக்கும், (ஆனால் அவர்கள் வாக்களிப்பதில்தான் ஆர்வம் காட்டுவதில்லை, ஓ .. அதனால்தான்தான் இவர்கள் புத்திசாலி மக்களா ? :-) ). இப்படியாக பல கருத்தேற்றங்கள் நெடுநாளாகப் பேசப்பட்டுவந்தன. இந்த தியரிகளும் பொய்யாகி இருக்கின்றன. வாக்குப் பதிவு குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகமாய் இருந்தும் அதிமுகதான் வெற்றி பெற்றிருக்கிறது( ஒரு வேளை புத்திசாலி மக்கள் அவ்விரு தொகுதிகளிலும் இல்லையோ :-) ). தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் அதிகமாய் இருந்ததால் தேர்தல் அமைதியாய் நடந்தது. வன்முறையோ , முறைகேடா சொல்லும்படியாய் நடந்ததாயும் தெரியவில்லை.

ஒரு பிரபல நடிகரின் ஒரு சினிமா ஓடுமா ஓடாதா என்று ஆருடம் சொல்வதைவிடவும் கடினமாகியிருக்கிறது தேர்தல் கணிப்பு. இரு கட்சிகளும் ஆளுக்கு ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருந்தால் இன்னும் சுவாரசியமாய் இருந்திருக்கும் :-).

எது எப்படியோ, திமுக கூட்டணி ஆட்டம் காணப்போவதற்கான நிகழ்தகவு அதிகமாகியிருக்கிறது. அது தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததா என்பதுதான் தெரியவில்லை.
(4) Your Comments | | | |

அணுசக்தி - பூமியின் எதிர்காலம்

பூமியின் எதிர்காலம் என்னவாய் இருக்கும் இன்னும் சில பத்தாண்டுகள் கழித்து ?. நவீன உலகில் மனிதன் வாழ்வை நடத்தத் தேவையான சக்திமூலங்களின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் அதற்குத் தகுந்தபடி ஆற்றல் மூலங்களின் அளவு அதிகரிக்கவில்லை; குறைந்துகொண்டெ வருகிறது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை மனிதனின் ஆற்றல்மூலங்களாய்த் தாவர எரிபொருள்கள், கனிம எண்ணெய்கள், விலங்குக் கழிவுகள் என மிகக் கொஞ்சமாகவே இருந்துவந்தது. பெட்ரோலியம் மற்றும் எரிவாயுக்கள் முக்கிய இடத்தைப் பிடித்தது. இன்றுவரை அவை முக்கிய இடத்திலேயே இருந்து வருகின்றன. சில பத்தாண்டுகளில் அது முழுவதும் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோலியப் பொருட்களுக்கு அடுத்தபடியாய் மனிதனுக்கு நம்பிக்கை நட்சத்திரமாய்த் தெரிந்தவை அணுக்கருக்கள். அணுக்களைப் பிளப்பதன் மூலம் ஏராளமான ஆற்றம் வெளியாகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டபின் பல நாடுகள் அவ்வாய்வில் இறங்கின. இன்றைக்கு தொழில்நுட்பத்தில் வளர்ந்த பல நாடுகள் அணுக்கருக்களைப் பிளப்பதின் மூலம் ஆற்றலைப் பெற்று வருகின்றன. மனிதனின் குறுக்குமூளை அதை அணுகுண்டுக்கும் பயன்படுத்திவருகிறது. அணுக்கருவைப் பிளப்பதின் மூலம் வரும் ஆற்றலின் அளவு அதே அளவான சாதாரணஎரிபொருளில் இருந்து கிடைப்பதைவிட கோடி மடங்கு அதிகம் என்பதே பல நாடுகள் இதில் இறங்கக் காரணம். கோடி மடங்கு என்பதன் பிரம்மாண்டம் கொஞ்சம் ஆழமாய்ச் சிந்தித்தால்தான் உணரப்படும். இன்றைக்குப் பூமியில் இருக்கும் கதிரியக்கத் தனிமங்கள் பெட்ரோல் தீர்ந்தபின்னரும்கூட தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு வரும். மேலும் பிரீடர் தொழில்நுட்பம் அதை மிக நீண்ட காலத்துக்கு நீட்டிக்கும்.

அணுவைப் பிளப்பது எளிதல்ல. அதில் ஏராளமான தொழில்நுட்பச் சிக்கல்கள் உள்ளன. முதலாவதாய், எந்த அணுவையும் பிளப்பது கருத்தியல்படி சாத்தியம் என்றாலும் மிகக்கனமான யுரேனியம், புளுடோனியம் போன்றவற்றின் சில ஐசோடோப்புக்களைப் பிளப்பதுதான் இப்போது நடந்துவருகிறது. ஆனால் கதிரியக்கத் தனிமங்களின் இயற்கையில் மிகக்குறைவாய்க் கிடைக்கும் ஐசோடோப்புகள் மட்டுமே பிளக்க ஏதுவானவை. உண்மையில் ஒரு தனிமத்தின் எல்லா ஐசோடோப்புகளும் கலந்தே பூமியில் கிடைக்கிறன. எனவே பயன்படுத்தும் முன்னர் ஐசோடோப்புகளைச் செறிவூட்டுவது இன்றியமையாதது. ஆற்றலைப் பெறும் நோக்கத்தில் செறிவூட்டப்படும் கதிரியக்கத் தனிமங்களின், உதாரணமாக, யுரேனியத்தின் செறிவூட்ட சதவீதம் மிகக்குறைவானதே. அதை மிக அதிகமான சதவீதத்தில் செறிவூட்டினால்தான் அணுகுண்டுக்குப் பயன்படும். இப்போது சில நாடுகள் பயன்படுத்தும் பிரீடர் தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தைத் திரும்பத் திரும்பப் பல முறை பயன்படுத்த இயலும்.

தற்போது இந்தியா,பிரான்சு போன்ற நாடுகள் பிரீடர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திவருகின்றன. எழுபதுகளில் இந்தியா பிரீடர் தொழில்நுட்பத்திற்கான பயணத்தைத் தொடங்கியது. அக்காலத்தில் பிரீடர் தொழில்நுட்பத்தில் முன்ன்ணியில் இருந்த பிராசுடன் சோதனை பிரீடர் வினைகலன் தயாரிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் அந்த வினைகலனில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் செறிவூட்டப்பட்ட யுரேனியம்தான். இந்தியா செய்த முதல் "புத்தர் புன்னகைக்கிறார்" அணுச்சோதனைக்குப் பின்னர் பிரான்சு தனது ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத் தர மறுத்துவிட்டது. பல ஆண்டு ஆய்வுகளுக்குப் பின்னர் இந்தியா உள்நாட்டுத் தயாரிப்பாய் யுரேனியம்-புளூடோனியம் கார்பைடு எரிபொருள் மூலம் செயல்படும் பிரீடர் ரியாக்டரையும் தயாரித்தது.

இவ்வாறு யுரேனியத்தைச் செறிவூட்டாமல் ஆற்றலைப் பெறும் உயர் தொழில்நுட்பம் கொண்டுள்ள நாடுகளுக்கு இன்னொரு பிரச்சினை என்னவென்றால் இம்முறையின் சில பயன்பாடுகளுக்குக் "கனநீர்"(D2O) தேவைப்படுகிறது.

எந்த முறையில் அணுவைப் பிளந்தாலும் அதில் வெளியாகும் கதிரியக்க உதிரிப்பொருட்கள், கழிவுகள் ஆகியவை அணுப்பிளப்பு முறையின் மிகமுக்கியப் பிரச்சினையாக இருக்கின்றன. இதற்கு மாற்று உண்டா ?. நிச்சயம் உண்டு. அணுக்கரு இணைவு இதற்கு ஒரு சரியாக மாற்றாகவே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் இம்முறையைவிடவும் அது அதிகப் பயன்தரக்கூடியது.
(2) Your Comments | | | |

Sunday, May 15, 2005

My Wife is 18

பதினெட்டு வயதுப் பெண்ணை 30 வயது ஆண் திருமணம் செய்வதில் இவ்வளவு சிக்கல் இருக்கிறதா?. கொஞ்ச நாளைக்கு முன்னர் இந்தச் சீனப்படத்தைப் பார்த்தேன். தலைப்பு விவகாரமாய் தெரிந்தால் நான் பொறுப்பில்லை :-) . இது உண்மையிலேயே ரசிக்கும்படியான படம். நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய உள்ளன.

உளவியலில் ஆய்வுசெய்து கொண்டிருக்கும் மாணவனுக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள்.( சீனாவில் கூட நம்ம ஊரு மாதிரிதானா .. ? ) அந்த 18 வயது சுட்டிப் பெண்ணைப் பையனின் பாட்டி உட்பட வீட்டில் அனைவருக்கும் பிடித்துவிடுகிறது. ஆனால் திருமணம் செய்வதில் 30 வயதான அந்தப் பையனுக்கோ அல்லது இன்னொரு ஊரில் தங்கிப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கோ விருப்பமே இல்லை . பெற்றோர்களுக்குத் தெரியாமல் ஒரு வருடம் மட்டும் ஒப்பந்தம் செய்துகொண்டு சேர்ந்து வாழ்வதாய் நடிக்கிறார்கள்.

"..நீ ஏன் வேறு எங்கும் தங்க வேண்டும் என்னுடைய வீட்டிலேயே தங்கிக்கொள். அங்கு கொடுக்கும் வாடகையை எனக்குக் கொடுத்துவிடு .. " என்று பேயிங் கெஸ்டாக அப்பெண் கணவனைத் தன்னுடன் தங்கச் சம்மதிக்க வைக்கிறாள். வேலை தேடிக் கொண்டிருக்கும் அந்தப் பையனுக்கு வேலை கிடைக்கிறது, அதுவும் எதிர்பாராதவிதத்தில் அந்தப் பெண் படிக்கும் பள்ளிக்கே ஆசிரியராக வருகிறான்.

பள்ளியில் யாருக்கும் அவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்பது தெரியக் கூடாது என்று கவனமாக இருக்கிறான் கதாநயகன். ஆனால் இடையிடையே அந்தப் பெண் பள்ளியில் கதாநாகன் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது செய்யும் குறும்புகள் , அதை மற்றவர்களுக்குத் தெரியாமல் சமாளிக்கத் திணரும் கதாநாயகனின் நிலை ரசிக்கும்படியாக இருக்கிறது ( உண்மையில் ஆண்களின் நிலையும் இப்படித்தானோ :-) ).

ஒருமுறை கதாநாயகியுடன் பள்ளியில் படிக்கும் தோழி திடீரென்று வீட்டுக்கு வந்துவிட டாய்லெட்டின் இருக்கும் அந்தப் பையனை பாதியில் அவசரஅவசரமாக பால்கனிக்குள் ஒளித்துவைக்கும் இடத்தில் நமக்குக் குபீரென வரும் சிரிப்பை அடக்குவது கஷ்டம்.

இதற்கிடையே அதே பள்ளியில் படிக்கும் டீன் ஏஜ் பையன்கள் இருவர் அந்தப் பெண்ணையே சுற்றி சுற்றி வருகிறார்கள். அதை வேண்டுமென்றே கதாநாயகனிடம் தெரியும்படி காட்டி தன் அழகைப் பற்றி அலட்டிக்கொள்வார் ( பெண்கள் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரிதானோ ). , அந்தப் பெண் உண்மையிலேயே அழகாய்த்தான் தெரிகிறார். அவர்களில் ஒரு பையன் தன்னை விடாமல் சுற்றிச் சுற்றி வந்து தொந்தரவு செய்து ஒரு கட்டத்தில் என்னைக் காதலிக்கவில்லையென்றால் கடலில் விழுந்துவிடுவேன் என்று என்று தடுப்புச் சுவரில் நின்று சொல்லும்போது அந்தப் பெண் எரிச்சலில் வேகமாய்ப் பின்னால் எட்டி உதைத்துக் கடலில் தள்ளுவது செந்தில்-கவுண்டமணியை நினைவுபடுத்துகிறது. இதைப் பார்த்துக் கதாநாயகன் பதற, அந்த பெண் அலட்சியமாய்ச் சொல்வார் "..அவனை விடு... அவனுக்கு நீச்சல் தெரியும் , அவனே மேலே வந்துவிடுவான்..". சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் தொப்பலாய் ந்னைந்துகொண்டே மேலே ஏறிவருவான். வந்ததும் அவன் சொல்லும் வார்த்தை "..நீ என்னைக் கடலில் தள்ளினாலும் உன்னைத்தான் காதலிக்கிறேன்..". இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அந்த 18 வயதுப் பையன் அவளை 16 வருஷமாய்க் காதலிப்பதாய்ச் சொல்வான்.

அந்தப் பெண் இன்னொரு டீன் ஏஜ் பையனிடம் ஈர்க்கப்பட அவனைச் சந்திக்க வைக்க கதாநாயன் உதவி செய்கிறான். ஆனால் அந்த டீன் ஏஜ் பையனை இந்தப் பெண்னிற்கு சில நாளில் பிடிக்காமல் போகிறது, அல்லது பக்குவமான கதாநாயகனைப் பிடித்துவிடுகிறது.

அதே பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியை கதாநாயகனைக் காதலிப்பது தெரிந்து, கதாநாயகி அதற்கு டீச்சருக்கு உதவுகிறாள். அப்பள்ளியில் ஆசிரியராக இருக்கும் கதாநாயகன் டீச்சரைக் காதலிப்பதாக பள்ளியெங்கும் ஒரே கிசுகிசுப்பு. கதை இப்படியே நகர்ந்து கொண்டிருக்கும்போது, கதாநாயகனும் , கதாநாயகியும் அவர்களறியாமல் மனதளவிலும் உடலளவிலும் ஈர்க்கப்படுகிறார்கள்.

ஆனாலும் கதாநாயகி அந்த டீச்சரையே சேர்த்துவைக்க முயற்சி செய்கிறார், கடைசியில் இருவரும் ஏற்கனவே இருவரும் திருமணமானவர்கள் எனப் பள்ளியில் தெரிய வந்து டீச்சர் கோபத்துடன் கதாநாயகனைத் திட்டிவிட்டுச் சென்றுவிடுகிறார். இன்னும் சில சுற்றல்களுக்குப் பின்னர் கதாநாயகனும், கதாநாயகியும் இணைவதுடன் படம் இனிதே முடிகிறது.
(30) Your Comments | | | |

Saturday, May 14, 2005

இணைய இதழ்கள் - சிலரின் இளக்காரம்

நிலாவின் வலைப்பதிவில் இணைய இதழ்களைச் சிலர் இளக்காரமாய்ப் பேசுவது பற்றி எழுதியிருந்தார். அங்கு எழுத ஆரம்பித்துக் கொஞ்சம் பெரிதாய்ப் போனதால் அதைத் தனிப்பதிவாகவே இங்கே பதிந்துவிட்டேன்.

அச்சு இதழ்களின் ராஜ்யத்தில் ஏற்கனவே கொஞ்சம் பிரபலம் அடைந்த எழுத்தாளர்கள் மட்டுமே பிரகாசிக்க முடியும் அல்லது பிரகாசிக்கும் வாய்ப்பிருக்கும் சிலரால் மட்டுமே அதில் எழுதமுடியும். அச்சு இதழ்களுக்கு மாற்றாய் இன்றைக்கு இணைய இதழ்கள் மாறிக்கொண்டு வருகின்றன. அனைத்துப் படைப்பாளிகளுக்கும் வாய்ப்புக் கொடுத்து நிறைய எழுத்தாளர்களை உருவாக்குவது இணைய இதழ்களால் மட்டுமே முடியும். அச்சு இதழ்களாலும் முடியுமென்றாலும் அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. 20 வருஷத்துக்கு முன்னால் இணைய இதழ்கள் வந்திருந்தால் இன்றைக்கு ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் தமிழில் இருந்திருப்பர், குறைந்தபட்சம் தரமானவற்றை வாசிக்கும் மக்களின் எண்ணிக்கையாவது அதிகமாய் இருந்திருக்கும்.

தமிழில் வலைப்பூக்கள் வந்த கொஞ்சநாளில் எழுத ஆரம்பித்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் பெருகியது/பெருகிக்கொண்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை. இந்த ஆயிரக்கணக்கான பேர்களில் தொடர்ந்து பயிற்சிக்கும் சில நூறுபேர்களாவது திறமையான எழுத்தாளர்களாய் வருவதற்கான வாய்ப்பை கொஞ்ச நாளிலே நாம் காணமுடியும்.

இணைய இதழ்கள், வலைப்பதிவுகள் பற்றி இளக்காரமாய்ச் சொல்லப்படும் வார்த்தைகள் இணையஇதழ்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிடுமோ என்ற உள்மன அச்சத்தின் விளைவாய் வந்தவையாயும் இருக்கலாம். புதிதாய் ஏதாவதொன்று வரும்போது அதை இளக்காரமாய் மட்டம்தட்டிப் பேச முயல்வது சகஜம்தான். பிரகாசிக்கும் எழுத்தாளர்கள் சிலர் வலைப்பதிவுகளையே கூட இவ்வாறு இளக்காரமாய்ப் பேச முனைகிறார்கள். எது நிஜமென்று, குறைகளை மட்டுமே பூதக்கண்ணாடி கொண்டு தேடாமல் தொலைநோக்கில் சிந்திக்கும் எவராலும் உணரமுடியும். எழுத்து, இதழ்கள் எனப் பொதுவாழ்வில் அனைவரின் கருத்துக்களையும் சீரியஸாய் எடுத்தால் யாராலும் எதுவும் செய்ய இயலாது. உண்மை என்ன என்பது இணைய இதழ்களைப் பொருத்தவரை மிகத்தெளிவு. இப்போதுதான் தொடங்கியிருக்கும் விதயம் இது என்பதால் குறைகளும், இளக்காரமாய்ப் பேசுபவர்களும் கொஞ்சம் அதிகமாகவே இருப்பார்கள். அதிலுள்ள உண்மையை இணைய இதழ்களை நடத்துபவர்களும், எழுதுபவர்களும், அதை அக்கறையுடன் படிப்பவர்களும் அறிவார்கள்.

இணைய இதழ்களும், வலைப்பதிவுகளும் முக்கியமான பலவற்றைச் சத்தமில்லாமல் செய்துவருகின்றன. படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைப்பது அதில் முக்கியமான ஒன்று. வாசகனின் கருத்தை படைப்பாளியை எளிதாய் எட்டச் செய்வது இன்னொன்று. இன்னும் பல நேரங்களில் வாசகர்கள் சக எழுத்தாளர்களாய் இருக்கிறார்கள் என்பது இதன் சிறப்பம்சம். இவற்றால் எழுத்தாளர்களுக்கு சில அசௌரியங்கள் கட்டாயம் இருக்கும், அதனால் சிலருக்கு இதுபிடிக்காமலும் போகலாம். எழுத்துலகில் தனிமனித வழிபாட்டைக் கிள்ளித் தூர எறியப்போவது இணைய இதழ்களும், வலைப்பதிவுகளும் என்பது ஆழமாய்ச் சிந்திக்கும் எவருக்கும் புரியும். சிலர் இவற்றைத் தவிர்க்கமுயல இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம். ஆக, இத்தகைய நடைமுறைச் சிக்கல்களும், வசதிக்குறைவுகளும் எழுத்தாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் மட்டுமே; இவற்றால் தமிழுக்கும், இலக்கியத்துக்கும் மிகப் பெரிய நன்மைகள்தாம் நிகழப்போகின்றன.
(23) Your Comments | | | |

சத்யராஜும், சந்திரமுகியும்

சந்திரமுகி அலை இன்னும் ஓய்ந்தபாடில்லை. ரஜினியின் வழக்கமான பாணி படமாக இது இல்லையென்றாலும் வசூல் படையப்பாவைவிட மிஞ்சிவிட்டதாம். இதே போன்ற படங்கள் ஜெராக்ஸ் காப்பி போல தொடர்ந்து தமிழ் சினிமாவில் வருவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை. சரி, போகட்டும்.

சத்யராஜ் நடிக்கும் இங்கிலீஷ்காரன் படத்தில் சந்திரமுகியாக சில காட்சிகளில் சத்யராஜ் நடிக்கிறாராம். அமெரிக்க டாக்டர் யார் தெரியுமா? வடிவேலுதான்.

Image hosted by Photobucket.com

சினிசவுத் .காம் படத்தைப் பாருங்கள். சந்திரமுகி வேஷம் ஜோதிகாவைவிட சத்யராஜுக்கு கச்சிதமாய்ப் பொருந்துகிறது :-).
(1) Your Comments | | | |

தாஜ்மகால் - இந்துக்கோவிலா ???

தாஜ்மகால் கி.பி.1600-ஆம் ஆண்டுவாக்கில் மொகலாய மன்னர் ஷாஜஹானால் கட்டப்பட்டது எனப் பள்ளிப் புத்தகங்களில் படித்திருக்கிறோம். தாஜ்மகாலைக் கட்டியது யார் என்பது குறித்து இன்னொரு கருத்தும் சொல்லப்படுகிறது. இதன்படி 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட "தேஜோமகாலய" என்ற சிவன் கோயில் தாஜ்மகாலாக உருமாறியிருக்கிறது என்றும், இதைக் கட்டியவர் ஜெய் சிங் என்ற மன்னர் எனவும் கருதப்படுகிறது. இந்தக் கருத்தை நம்புவோர்கள் அவுரங்கசீப்பின் மடல், கார்பன்-13 வயது கணிக்கும்முறை எனப் பல ஆதாரங்களை முன்னிறுத்துகிறார்கள்.

ஏற்கனவே அயோத்தியில் ஒரு பிரச்சினை கொழுந்துவிட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது ஆக்ரா வேறா? :-( .

ஆர்வமுடையவர்களுக்காக

பிபிசி
அவுரங்க சீப்பின் கடிதம்
சுட்டி - 3
சுட்டி - 4
சுட்டி - 5
சுட்டி - 6
சுட்டி - 7
(9) Your Comments | | | |

Friday, May 13, 2005

மெல்லிய இதயம் உடையோர்க்கு அல்ல

"ஆரஞ்சுப் பொருள்" எனக் குறீயீட்டுப் பெயர் சூட்டப்பட்ட ஆபத்தான வேதி்ப்பொருள் பற்றி சுந்தரவடிவேலு் மற்றும் பெயரிலி் எழுதியிருக்கிறார்கள். இப்பொருளின் பெயர் பார்ப்பதற்கு அழகாய் இருந்தாலும் அது ஏற்படுத்திய தாக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இது வியட்நாம் போரில் காடுகளை அழிக்கப்பயன்படுத்தப்பட்டதாய்ச் சொன்னாலும் இந்த வேதியியலாயுதத்தை உபயோகித்த அமெரிக்காவுக்கு அதையும் தாண்டி இருக்கும் அபாயம் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

"ஆரஞ்சுப் பொருள்" என்பது மண்ணெண்ணெய் அல்லது டீசலில் கரைக்கப்பட்ட 2,4-D(2,4dichlorophenoxy acetic acid) மற்றும் 2, 4, 5-T(2,4,5-trichlorophenoxy acetic acid) -ன் பாதிப்பாதிக் கலவைதான் இது. இதில் மாசாகக் கலந்திருக்கும் டையாக்ஸின் அதன் அபாயத்தை இன்னும் அதிகமாக்குகிறது.

இன்றுவரை இவ்வேதிப்பொருள் வியட்நாம் மக்களைத் தலைமுறை தலைமுறையாய்ப் பாதித்துவருகிறது. இதன் பாதிப்புக்குள்ளான பச்சிளங்குழந்தைகள் மற்றும் இளையோரின் சில புகைப்படங்கள் இங்கே காணக்கிடைக்கின்றன. மென்மையான மனம் படைத்தோர், மற்றும் குழந்தைகள் பார்க்க இப்படங்கள் உகந்ததன அல்ல.

புகைப்படங்கள் - 1
புகைப்படங்கள் - 2
புகைப்படங்கள் - 3
(14) Your Comments | | | |

Monday, May 09, 2005

எம்ம்ம்ம்ம்மாம் பெருசு இது...

பல சமயங்களில் உண்மையான பிரம்மாண்டத்தை நாம் தவற விட்டுவிடுகிறோம். வேகம், உயரம், திறன், மதிப்பு என அனைத்திலுமே இது நடக்கிறது. காரணம் வேறொன்றுமில்லை, நமது எல்லைகளும், பார்வையின் வரையறைகளும் மிகவும் சின்னது. ஆறடி உள்ள ஒருவர் ஐந்தடி உள்ள ஒருவரை பார்க்கும்போது அவர் உணரும் உயர வேறுபாடு 3 மீட்டர் உயரமுடைய ஒரு கம்பத்தினைப் பார்க்கும்போது அதேஅளவில் உணரப்படுவதில்லை.

உதாரணமாய், சமீபத்தில் ஏவப்பட்ட PSLV6 விண்கலன் செலுத்து வாகன ராக்கெட்டின் நீளத்தை மீட்டரில் பார்த்தால் அதன் உண்மையான வடிவம் தெரிவதில்லை. கீழேயுள்ள படம் ஒன்றும் புதிதல்ல.

Image hosted by Photobucket.com

ஆனால். அதன் உண்மையான பிரம்மாண்டத்தை காண விரும்புபவர்கள் இப்படத்தைக் கிளிக் செய்து அடியில் நிற்கும் மனிதர்களைப் பாருங்கள்.
(0) Your Comments | | | |

எம்ஜிஆரின் கடைசி உயில்


சுவாரசியமாய் அவ்வப்போது சிலவிஷயங்கள் கூகிளில் தென்படுவதுண்டு. சமீபத்தில் நான் பார்த்தது இந்த உயில்.

...நான் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி ஆறாம் ஆண்டு ஏப்ரம் மாதம் 28 ஆம் தேதி என் சொத்துக்கள் விஷயமாக உயில் பத்திரம் 1986ம் வருடம் 12 வது பத்திரமாக எழுதி கையொப்பமிட்டு ரிஜிஸ்டர் செய்து இருக்கிறேன். மேற்கண்ட 28.4.1986ல் உயில் பத்திரத்தை சுயநினைவோடு மனப்பூர்வமாக இந்த உயில் மூலம் ரத்து செய்துவிட்டேன்......................

....எனக்குக் குழந்தைகள் கிடையாது. என்னுடைய ஒரேவழிமுறை என் மனைவி திருமதி வி.என்.ஜானகிதான். அவளைத் தவிர வேறு யாரும் இல்லை. என் காலத்திற்குப் பிறகு என் சொத்துக்கள் விஷ்யமாக எந்தவிதமான வழக்குகள் தகராறுகள் ஏற்படாமல் இருக்கவும் இந்த உயில் சாசனத்தின் மூலம் ..................

மேலும் படிக்க

(2) Your Comments | | | |

Sunday, May 08, 2005

அணுஆய்வில் புதுஉயரம் தொடப்பட்டிருக்கிறது


இந்தியா உள்நாட்டில் வடிவமைத்த மீக்கடத்தும் சைக்ளோட்ரான் கருவி வேலைகள் உயர்நிலையை அடைந்துள்ளன. இந்த வகை சைக்ளோட்ரான்கள் மிக உயர்நிலை அணுஆய்விற்கு இன்றியமையாதவை. இத்தகைய சைக்ளோட்ரான்கள் உலகில் மொத்தம் ஏழு மட்டுமே உள்ளன. அவற்றில் 3 அமெரிக்காவிலும், கனடா, இத்தாலி மற்றும் நெதர்லாந்தில் தலா ஒன்றும் உள்ளன.

இன்னும் இரு ஆண்டுகளில் இக்கருவி செயல்படத் துவங்கும். ஆசியாவில் முதன்முதலாய் இந்த வகை சைக்ளோட்ரானை வைத்திருக்கும் நாடாய் இந்தியா இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மேற்கத்திய நாடுகள் மட்டுமே இதனைக் கொண்டிருந்தன. K500 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இக்கருவியின் மீக்கடத்துச் சுருள்கள் உட்பட பெரும்பான்மையானவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என்பது இதன் சிறப்பம்சம்.

சர்வதேச அணுஇயற்பியல் கழகம் இக்கருவியைத் தங்கள் கூட்டாய்விற்குப் பயன்படுத்திக்கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளது. அணுக்கரு ஆய்வுகள் தவிர காந்த அதிர்வுப் படமாக்கி (MRI), சக்தி சேமிப்பான்கள் மற்றும் கிரையோஜெனிக் துறை ஆய்வுகள் பலவற்றுக்கும் இக்கருவி பயனுள்ளதாய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்பானவை

Breaking news in Science Daily
Times of India
Washington Times
(0) Your Comments | | | |

Thursday, May 05, 2005

நாட்டுப் பற்று

எங்கேயோ படித்த முகத்தில் அறையும் பொன்மொழி இது. சொன்னவர் பெயர் எனக்குச் சரியாய் நினைவில்லை (பெர்நாட்ஷா ?? ) " தேச பக்தி என்பது வேறொன்றுமில்லை, ஒரு நாட்டில் பிறந்துவிட்டோம் என்பதற்காய் கண்ணைமூடிக்கொண்டு அதை ஆதரிப்பதன் பெயர்தான் அது" இதைப் படித்தவுடன் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அதிலுள்ள உண்மையை மறுப்பதற்கில்லை. ஆனால் இதைத்தவிர இன்னும் நிறைய பொறுப்பான விஷயம் தேசபக்தியில் இருக்கிறது.

குடும்பத்தினர் மீது வைத்திருக்கும் பாசத்தையும், குடும்பத்தினர் வைத்திருக்கும் அன்பையும் மேலே சொன்னபடி ஒரே வரியில் கடுமையாய்ச் சொல்லிவிடலாம். ஆனால் உண்மையில் அதில் அதைதாண்டி ஆழமான உண்மையும், சமூகப் பொறுப்பும் இருக்கிறது என்பது கண்கூடு. தனக்குச் சொந்தமான பொருளை தாம் கவனமாய்ப், பத்திரமாய் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதிலிருந்து அது ஆரம்பிக்கிறது.
(5) Your Comments | | | |

Wednesday, May 04, 2005

இந்தியா - இரட்டைக் குடியுரிமை - ஸ்மார்ட் கார்டு


தற்போது 16 நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினருக்கு அமலில் உள்ள இரட்டைக் குடியுரிமை, எல்லா நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினருக்கும் நீட்டிக்கப்படுகிறது. விரைவில் இவர்களுக்கு வசதியாக "ஸ்மார்ட் கார்டு' முறையையும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

உலகின் பல நாடுகளிலும் இந்தியர்கள், பன்னெடுங்காலமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் எல்லாரும் தாங்கள் இருக்கும் நாட்டில், குடியுரிமை பெற்று உள்ளனர். அவர்களுக்கு இந்தியா வந்து செல்வதென்றால் விசா பெறுவது போன்ற நடைமுறைகள் உள்ளன. இந்தியாவில் சொத்து வாங்குவது போன்ற விஷயங்களிலும் சிக்கல் இருந்து வந்தது.

தங்களுக்கு இரட்டை குடியுரிமை தந்து விட்டால், பல பிரச்னைகள் தீரும் என்று அவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர். கடந்த 2002ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், முதன்முதலாக இரட்டை குடியுரிமை முறையை கொண்டு வந்தார்மேலும் வாசிக்க....
(0) Your Comments | | | |

ஒன்பது Vs தமிழர்கள், தமிழ் - குழப்பங்கள்


ஒன்பதில் நீண்டகாலமாய்க் குழப்பம் இருந்து வருகிறது. இப்போது அடிக்கடி எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய பேச்சுக் கேட்கிறது. மிகவும் வித்தியாசமாய் இருந்த எழுத்துக்கள் சில பத்தாண்டுகளுக்கு முன்பே திருத்தம் செய்யப்பட்டுவிட்டன. இன்னும் எளிமையாகத் திருத்தம் செய்ய முயற்சி நடைபெற்று வருகின்றது.

எண்களுக்குப் பெயர் சூட்டியதில் தமிழில் குழப்பம் இருக்கிறது. குழப்பம் எல்லா எண்களுக்கும் அல்ல, ஆனால் ஒன்பதின் வகைக்கு ( 9, 90, 900,....) இப்பிரச்சினை உண்டு.

பத்து - 1 X 10
இருபது - 2 X 10 ( இரு+பத்து)
.....
.....
எழுபது - 7 X 10 (ஏழு+பத்து)
எண்பது - 8 X 10 (எட்டு+பத்து)
ஒன்பது - 9 X 10=90 (???? + பத்து)

ஆனால், நாம் ஒன்பது என்பதை 8 க்கு அடுத்த எண்ணாக வைத்திருக்கிறோம்.

இதையடுத்து நூறுகளுக்கு வருவோம்.

நூறு - 1 X 100
இருநூறு - 2 X 100 (இரு+நூறு)
....
.....
எழுநூறு - (ஏழு+நூறு)
எண்ணூறு - (எட்டு+நூறு)
தொன்னூறு - 9X100=900 (???+நூறு)

நாம் தொன்னூறு என்று சொல்வது 900 இப்படித்தானே இருந்திருக்க வேண்டும், தொன்னூறு-90 ஆக ஆனதெப்படியோ ?.

அடுத்ததாய் ஆயிரத்திலும் இக்குழப்பம் தொடர்கிறது.

ஆயிரம்
இரண்டாயிரம்
....
.....
எட்டாயிரம்
தொள்ளாயிரம் (9000)

ஆனால் நாம் இன்று தொள்ளாயிரம் என்று சொல்வது 900 ( தொன்னூறை?? ).

இந்தக் குழப்பம் எப்படி வந்திருக்கலாம் என்பதற்கு குறைந்தது இருசந்தேகங்களைக் காரணங்களாய் வைக்கலாம்.

1. 9 க்கு உண்மையில் வேறு ஏதோ பெயர் இருந்து ( ஒட்டு?? அல்லது தொட்டு?? போல ) இடையில் காணாமல் போயிருக்கலாம்.

2. பூச்சியம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே தமிழில் எண்ணும் எழுத்தும் சிறப்பாக இருந்தது என்பதைக் கருத்தில் கொண்டு, 9 என்பதை பத்துக்கு ஒன்று குறைவானது என்ற பொருளில் ஒன்+பத்து என்று அழைத்திருக்கலாம். பத்து மணிக்கு ஒரு நிமிஷம் இருக்கு என்று நாம் இன்றும் சொல்வதில்லையா அதுபோலத்தான். 90, 900 ஆகியவற்றுக்கும் இதே போன்ற பொருளில் பெயர் வைக்கப்பட்டிருக்கலாம் என்பது ஒரு யூகம்.
(11) Your Comments | | | |

சிந்து நாகரிகத்துக்கு முந்தையவை


தமிழக அரசின் தொல்லியல் துறை மேற்கொண்டு அகழ்வாராய்ச்சியில், 5,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மண் பாண்டங்கள் ஏராளமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

தமிழக அரசின் தொல்லியல் துறையைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் மோதூர் பகுதியில் முகாமிட்டு அகழ்வாராய்ச்சி செய்து வருகின்றனர். இப்பகுதியில் 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் வாழ்ந்துள்ளதற்கு ஆதாரம் உள்ளது என்று கூறிய தொல்லியில் துறையின் சிறப்பு ஆணையர் டி.எஸ். ஸ்ரீதர், அங்குள்ள மலைப் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ததில் 365 விதவிதமான மண் பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், இவை யாவும் கி.மு. 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றும் கூறினார்.

கோட்டை மேடு என்ற பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ததில் பல்வேறு அளவுகளில் உள்ள பானைகள் மற்றும் மண் பாத்திரங்களும், புதைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட தாழிகளும் கிட்டியுள்ளன. இவைகள் அனைத்தும் புதிய கற்காலம் என்றழைக்கப்படும் கி.மு. 8,000 முதல் 5,500 ஆண்டுகளுக்கு இடையிலானவை மேலும் வாசிக்க
(7) Your Comments | | | |

Tuesday, May 03, 2005

ஜெயகாந்தனும் நாகரீகமற்ற மேடைப்பேச்சும்


உலகம் ஒரு மனிதனை மதிப்பிடுவது மாறிக்கொண்டே இருப்பது சாத்தியமானதே. தனது சொல் தன்பிரபலத்தன்மையை வைத்து எடைபோடப்படலாம், ஆனால் அது நிரந்தரமானது அல்ல; தனது சொல்லைவைத்தும் தன்னை உலகத்தினர் எடைபோடுவார்கள் என்பதை எவ்வளவு பெரிய பிரபலமும் சற்றும் மறந்துவிடக்கூடாது. ஏனென்றால் இவ்வாறு போடப்படும் எடை மிக நிலையானது. காலம் கடந்து நிற்கும் நூல்களும், அதை எழுதியவர்களின் புகழும் இந்த வகையைச் சேர்ந்தது.

சிகரங்களைத் தொட்டவர்கள் நாவடக்கத்தை கணமும் விட்டுவிடலாகாது. தான் உதிர்க்கும் சில சொற்கள்கூட தன்மீது உலகம் வைத்திருக்கும் மதிப்பின் ஆணிவேரை அசைத்துவிடக்கூடும்.

ஜெயகாந்தன் கடைசியாய் எழுதிய புத்தகம் அவர் முந்தைய புத்தகங்களின் மூலம் சம்பாதித்த மதிப்பைக் குலைத்துவிட்டதாய்ப் பலர் கவலை கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவரோ இன்னும் அதே பாதையில் மிக வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறார் என்றே அவரின் சமீபத்திய மேடைப்பேச்சுச் சொல்கிறது.
(7) Your Comments | | | |

Monday, May 02, 2005

ஐஸ்வர்யாராய் தமிழ்நாட்டு மருமகளா?


ஐஸ்வர்யாராய் திருமணம் முடிக்கப்போகிறார். அவர் நடிகர் விவேக் ஓபராயின் கரம்பிடிக்கப்போகிறாராம். இப்போது புதிதாய் ஒரு தகவல் வெளியாகிவுள்ளது. விவேக் ஓபராயின் அம்மா தமிழ்நாட்டைச் சேர்ந்தவராம்.

கொசுறுச் செய்தி: நடிகர் சத்யராஜின் தூரத்து உறவினர்தான் விவேக் ஓபராய்.
(3) Your Comments | | | |

Sunday, May 01, 2005

பொருளாதார வல்லரசுகள் - Top 10


கடந்த சில ஆண்டுகளாகவே ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலை ஆசிய நாடுகளை ஒப்பிடும்போது இறங்குமுகமாகவே இருந்துவருகிறது. பழங்காலத்திலிருந்தே பொருளாதாரத்தில் முன்னணியில் இருந்து வந்த ஆசிய நாடுகள் சில நூற்றாண்டுகளாய்ப் பல காரணங்களால் கொஞ்சம் பின் தங்கி இருந்துவந்தன. வரும் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாகவே இருக்கும் என்பதற்கான வலுவான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன என்பது உலகெங்குமுள்ள பொருளாதார, அரசியல் நோக்கர்களின் கருத்து.

கீழேயுள்ள பட்டியலில் காண்பது நாடுகளின் மொத்த உற்பத்தி gross domestic product (GDP) அமெரிக்க டாலர்களில் ( 2004 நிலவரம், CIA World Fact Book ).

சில ஆண்டுகளுக்கு முன்புவரை நான்காம் இடத்தில் இருந்த ஜெர்மனி ( ஒரு காலத்தில் இரண்டாமிடத்தில் இருந்தது) ஐந்தாமிடத்துக்குத் தள்ளப்பட்டு நான்காமிடத்தை இந்தியா பிடித்திருக்கிறது.

பூமியின் மொத்த உற்பத்தி 55.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்.

பூமி - $ 55,500,000,000,000

1. அமெரிக்கா - $ 11,750,000,000,000
2. சீனா - $ 7,262,000,000,000
3. ஜப்பான் - $ 3,745,000,000,000
4. இந்தியா - $ 3,319,000,000,000
5. ஜெர்மனி - $ 2,362,000,000,000
6. இங்கிலாந்து - $ 1,782,000,000,000
7. பிரான்ஸ் - $ 1,737,000,000,000
8. இத்தாலி - $ 1,609,000,000,000
9. பிரேசில் - $ 1,492,000,000,000
10. ரஷ்யா - $ 1,408,000,000,000
(5) Your Comments | | | |

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com