<$BlogRSDUrl$>

Monday, May 16, 2005

அணுசக்தி - பூமியின் எதிர்காலம்

பூமியின் எதிர்காலம் என்னவாய் இருக்கும் இன்னும் சில பத்தாண்டுகள் கழித்து ?. நவீன உலகில் மனிதன் வாழ்வை நடத்தத் தேவையான சக்திமூலங்களின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் அதற்குத் தகுந்தபடி ஆற்றல் மூலங்களின் அளவு அதிகரிக்கவில்லை; குறைந்துகொண்டெ வருகிறது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை மனிதனின் ஆற்றல்மூலங்களாய்த் தாவர எரிபொருள்கள், கனிம எண்ணெய்கள், விலங்குக் கழிவுகள் என மிகக் கொஞ்சமாகவே இருந்துவந்தது. பெட்ரோலியம் மற்றும் எரிவாயுக்கள் முக்கிய இடத்தைப் பிடித்தது. இன்றுவரை அவை முக்கிய இடத்திலேயே இருந்து வருகின்றன. சில பத்தாண்டுகளில் அது முழுவதும் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோலியப் பொருட்களுக்கு அடுத்தபடியாய் மனிதனுக்கு நம்பிக்கை நட்சத்திரமாய்த் தெரிந்தவை அணுக்கருக்கள். அணுக்களைப் பிளப்பதன் மூலம் ஏராளமான ஆற்றம் வெளியாகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டபின் பல நாடுகள் அவ்வாய்வில் இறங்கின. இன்றைக்கு தொழில்நுட்பத்தில் வளர்ந்த பல நாடுகள் அணுக்கருக்களைப் பிளப்பதின் மூலம் ஆற்றலைப் பெற்று வருகின்றன. மனிதனின் குறுக்குமூளை அதை அணுகுண்டுக்கும் பயன்படுத்திவருகிறது. அணுக்கருவைப் பிளப்பதின் மூலம் வரும் ஆற்றலின் அளவு அதே அளவான சாதாரணஎரிபொருளில் இருந்து கிடைப்பதைவிட கோடி மடங்கு அதிகம் என்பதே பல நாடுகள் இதில் இறங்கக் காரணம். கோடி மடங்கு என்பதன் பிரம்மாண்டம் கொஞ்சம் ஆழமாய்ச் சிந்தித்தால்தான் உணரப்படும். இன்றைக்குப் பூமியில் இருக்கும் கதிரியக்கத் தனிமங்கள் பெட்ரோல் தீர்ந்தபின்னரும்கூட தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு வரும். மேலும் பிரீடர் தொழில்நுட்பம் அதை மிக நீண்ட காலத்துக்கு நீட்டிக்கும்.

அணுவைப் பிளப்பது எளிதல்ல. அதில் ஏராளமான தொழில்நுட்பச் சிக்கல்கள் உள்ளன. முதலாவதாய், எந்த அணுவையும் பிளப்பது கருத்தியல்படி சாத்தியம் என்றாலும் மிகக்கனமான யுரேனியம், புளுடோனியம் போன்றவற்றின் சில ஐசோடோப்புக்களைப் பிளப்பதுதான் இப்போது நடந்துவருகிறது. ஆனால் கதிரியக்கத் தனிமங்களின் இயற்கையில் மிகக்குறைவாய்க் கிடைக்கும் ஐசோடோப்புகள் மட்டுமே பிளக்க ஏதுவானவை. உண்மையில் ஒரு தனிமத்தின் எல்லா ஐசோடோப்புகளும் கலந்தே பூமியில் கிடைக்கிறன. எனவே பயன்படுத்தும் முன்னர் ஐசோடோப்புகளைச் செறிவூட்டுவது இன்றியமையாதது. ஆற்றலைப் பெறும் நோக்கத்தில் செறிவூட்டப்படும் கதிரியக்கத் தனிமங்களின், உதாரணமாக, யுரேனியத்தின் செறிவூட்ட சதவீதம் மிகக்குறைவானதே. அதை மிக அதிகமான சதவீதத்தில் செறிவூட்டினால்தான் அணுகுண்டுக்குப் பயன்படும். இப்போது சில நாடுகள் பயன்படுத்தும் பிரீடர் தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தைத் திரும்பத் திரும்பப் பல முறை பயன்படுத்த இயலும்.

தற்போது இந்தியா,பிரான்சு போன்ற நாடுகள் பிரீடர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திவருகின்றன. எழுபதுகளில் இந்தியா பிரீடர் தொழில்நுட்பத்திற்கான பயணத்தைத் தொடங்கியது. அக்காலத்தில் பிரீடர் தொழில்நுட்பத்தில் முன்ன்ணியில் இருந்த பிராசுடன் சோதனை பிரீடர் வினைகலன் தயாரிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் அந்த வினைகலனில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் செறிவூட்டப்பட்ட யுரேனியம்தான். இந்தியா செய்த முதல் "புத்தர் புன்னகைக்கிறார்" அணுச்சோதனைக்குப் பின்னர் பிரான்சு தனது ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத் தர மறுத்துவிட்டது. பல ஆண்டு ஆய்வுகளுக்குப் பின்னர் இந்தியா உள்நாட்டுத் தயாரிப்பாய் யுரேனியம்-புளூடோனியம் கார்பைடு எரிபொருள் மூலம் செயல்படும் பிரீடர் ரியாக்டரையும் தயாரித்தது.

இவ்வாறு யுரேனியத்தைச் செறிவூட்டாமல் ஆற்றலைப் பெறும் உயர் தொழில்நுட்பம் கொண்டுள்ள நாடுகளுக்கு இன்னொரு பிரச்சினை என்னவென்றால் இம்முறையின் சில பயன்பாடுகளுக்குக் "கனநீர்"(D2O) தேவைப்படுகிறது.

எந்த முறையில் அணுவைப் பிளந்தாலும் அதில் வெளியாகும் கதிரியக்க உதிரிப்பொருட்கள், கழிவுகள் ஆகியவை அணுப்பிளப்பு முறையின் மிகமுக்கியப் பிரச்சினையாக இருக்கின்றன. இதற்கு மாற்று உண்டா ?. நிச்சயம் உண்டு. அணுக்கரு இணைவு இதற்கு ஒரு சரியாக மாற்றாகவே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் இம்முறையைவிடவும் அது அதிகப் பயன்தரக்கூடியது.
| | |
Comments:
தமிழில் விஞ்ஞானக் கட்டுரைகள் அரிதானவை. மேலும் பல கட்டுரைகள் எழுத வாழ்த்துக்கள்.
 

வெள்ளையன்,
உங்கள் கருத்துக்கு நன்றி.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com