<$BlogRSDUrl$>

Thursday, May 26, 2005

அனாமதேயப் பின்னூட்டங்கள் வலைப்பதிவில்

பிரபஞ்சத்தின் சீர்மையற்ற தனமை(Entropy) தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்பது அறிவியல் விதிகளுள் ஒன்று. இதில் விலக்காவது எதுவும் இல்லை. தமிழில் சில பத்து வலைப்பதிவுகள் இருந்தவரை பெரிய பிரச்சினை என எதுவும் இல்லை. இன்றைக்குப் பல நூறு என்ற எண்ணிக்கையைத் தொட்டவுடன், மேலே குறிப்பிட்ட அறிவியல் விதிக்கு உட்பட்டு நடக்கிறது. இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஒரு நாடு என எடுத்துக்கொண்டால் மக்கள்தொகைதான் பலம்; அதுதான் பலவீனமும்கூட. வலைப்பதிவுக்கும் இது பொருந்தும்.

கொஞ்சநாட்களாய் அனாமதேயப் பின்னூட்டங்கள் மூலம் தொந்தரவு கொடுக்கும் நபர்(கள்) வேலையைக் காட்டிக்கொண்டிருக்கிறார்(கள்). டோண்டு ஒரு பதிவு இதுபற்றி எழுதியிருக்கிறார். அவருக்கு மட்டுமல்லாமல் மேலும் பல நண்பர்களுக்கும் இதே பிரச்சினை இருந்து வருகிறது. ஒரு முறை பெயரிலியின் பதிவில் அனாமதேயமாய்த் திட்டி ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. அவர் அதை எழுதியவரின் ஐபி முகவரியைத் துப்பறிந்து எழுதியிருந்தார். கறுப்பி, துளசி, ரோசாவசந்த், காஞ்சி பிலிம்ஸ் தவிர இன்னும் பலருக்கு இந்த மாதிரியான அனுபவம் இருக்கிறது.

அனாமதேயமாய்க் கருத்தெழுவது ஒரு பிரச்சினையே இல்லை, ஆனால் அது பிறரின் மூக்கைத் தொடும் அளவுக்கு நீள்கிறது என்பதுதான் பிரச்சினை. அனாமதேயமாய் எழுதும்போது தனது கருத்தை மட்டும் சொன்னால் யார்தான் தவறாய் எடுத்துக்கொள்ளப்போகிறார்கள். தனது கருத்தைச் சொல்லும்போது அவர் அடுத்தவரின் பெயர் என்ற போர்வையில் வந்தாலோ, பின்னூட்டம் என்ற பெயரில் அருவருப்பைத் தெளித்தாலோ அது வரவேற்கத்தக்கதல்ல; கடுமையாகக் கண்டிக்கத் தக்கது. அவர் யாரென்ற உண்மை வெளியில் அனைவருக்கும் காட்டப்பட வேண்டியது மிக அவசியம். அது தமிழ் வலைப்பதிவுலகின் இடையூறுகளைக் களைவதாகும்.

ஒரு விதயம் நிகழும்போது அது பிடிக்கவில்லையென்றால், அது தவறாக இருந்தால் அது நிறுத்தப்பட வேண்டும் என்று பாதிக்கப்படுபவர் வலியுறுத்துவது மிக நியாயமான ஒன்று, அது அவரின் ஆதார உரிமை. இதற்கு ஒரு சரியான தீர்வைக் காண்பது மிக அவசியமான ஒன்று. இத்தகைய அனாமதேயப் பின்னூட்டங்கள் தமிழ் வலைப்பதிவின் நலத்திற்கு பெருந்தீங்கு செய்யக்கூடியவை- நேரடியாயும் , மறைமுகமாயும்.

உலகம் மிக வேகமாய் முன்னேறி வருகிறது. மின்வெளியில் ஒவ்வொருவரும் யாரென்று தெரியாத நபர்கள்தாம் என்பதுபோல் தெரிந்தாலும் அது உண்மையில்லை. ஒவ்வொருவரும் எந்த ஊரில் இருந்து மின்வெளியில் கலக்கிறார் என்பது ஒவ்வொரு விநாடியும் பதிவாகிக்கொண்டே இருக்கிறது. நமக்கு வரும் மின்னஞ்சல்களில் இருந்து, நம்முடன் மின்னரட்டை செய்வோர் வரைக்கும் இது பொருந்தும். ஒவ்வொருவர் இடும் பின்னூட்டத்திலும் அவரின் கருத்துக்கள் மட்டும் பதிவாவதில்லை, அத்துடன் அவர் எந்த நாட்டில், எந்த ஊரில், எந்த நேரத்தில், எந்த நிறுவனம் வழங்கும் இணைய வசதியைப் பயன்படுத்தி்ப் பதிகிறார் என்ற தகவல் ஒவ்வொரு நொடியும் துல்லியமாய்ப் பதிவாகிக்கொண்டே இருக்கிறது. இணைய வசதி வழங்கும் நிறுவனம் அவர் யாரென மிகத் துல்லியமாய் காட்டும் வசதி கொண்டது என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

மற்ற மொழிகளை விட தமிழ் வலைப்பதிவுகளுக்குப் பல சாதகமான, அருமையான அம்சங்கள் உள்ளன. அதில் முண்ணனி வகிப்பது மொத்தப் பதிவுகளின் ஒருங்கிணைப்பு என்பதே. உலகில் ஒரு மொழியின் நூற்றுக் கணக்கில் இருக்கும் மொத்த வலைப்பதிவுகளையும் முழுவதும் ஒருங்கினைக்கும் வசதி தமிழைத்தவிர வேறு மொழிக்கு இருக்குமா என்பது சந்தேகமே, பெரும்பாலும் இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். இவ்வசதி தமிழார்வமுடைய, அர்ப்பணிப்புச் சிந்தனையுடைய சிலரால் மிகத் திறம்பட நேரம், பொருள், சொந்த உழைப்பு ஆகியவை மூலம் படிப்படியாய்க் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. அனைவரும் தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சிக்கு, உதவாவிட்டாலும் அதன் வளர்ச்சிக்குத் தடையாய் எவரும் இருக்கக்கூடாது என்று கட்டாயப்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் கடமை.

அனாமதேயத் தொந்தரவுகளுக்கான தீர்வுகள், பிரச்சனையைத் தீர்ப்பதறகான யோசனைகள் நண்பர்களிடம் எதிர்பார்க்கப்படுகின்றன. எனது யோசனைகள் மற்றும் கருத்துக்கள் கொஞ்சம் பெரிதாய் இருப்பதுபோலத் தெரிவதால் அதை அடுத்த பதிவாய்ப் பதிக்கிறேன்.
| | |
Comments:
முத்துத்தம்பி,

ரொம்பச் சரி. இந்த மாதிரி அநாமதேயமா இருக்கறவங்களை எப்படியாவது இனங்காட்டணும்!

நல்ல பதிவு!!!!
 

முத்து, இலவசமாக வரும் இணைய புள்ளி விவர சுட்டிகள் அவ்வளவாக புள்ளி விவரம் தருவதில்லை. காசு கொடுத்து வாங்கு தளங்களில் மிக விரிவாக புள்ளி விவரங்களும், ஐபியை தடுப்பரண் போட்டு மூடவும் வழிகள் இருக்கின்றன. ஆனால் இதெல்லாம் ஒரளவு பாதுகாப்பு தரும். நல்ல ஒரு பாதுகாப்பு வளையம் பெற கோல்கேட்டை தான் பயன்படுத்த வேண்டும் :-)
 

நல்ல பதிவு, கருத்துக்கள் முத்து பாராட்டுக்கள்.
உங்களுக்குத்தோன்றும் சில தீர்வுகளையும் எழுதுங்கள், நண்பர்களும் சேர்ந்து மேலும் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
 

நன்றி முத்து.!
இது ஒரு பெரிய பிரச்சனைதான்.வருகிற
காலங்களில் இது மேலும் வளரக்கூடும்
என்றுதான் நினைக்கிறேன்.அய்பியை
கண்டுபிடிக்க வசதி இருப்பது போல
அய்பி தெரியாமல் இருக்கவும் நிறைய
மென்பொருட்கள் இருக்கின்றன.
எப்படியானாலும் இந்த அனாமதேயங்களை கண்டுபிடித்து தடைசெய்யவேண்டும்.சில அனாமதேய பின்னூட்டங்கள் மிக ஆபாசமாக
இருக்கின்றனவே.இது மிக மிக முக்கியம்.
 

துளசியக்கா, விஜய், மூர்த்தி, அன்பு, கரிகாலன்,
உங்களின் கருத்துக்கு நன்றிகள்.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com