<$BlogRSDUrl$>

Monday, May 16, 2005

நிலவு - பூமியின் எதிர்காலம்

பூமியின் பெட்ரோலியப் பொருட்கள் தீர்ந்துபோகப் போவதை விரைவிலேயே நாம் காணப்போகிறோம். யுரேனியம் போன்ற கனக்கதிரியக்கத் தனிமங்கள் குறிப்பிடத் தக்க அளவில் மனிதனின் தேவையை பூர்த்திசெய்யத் துவங்கிவிட்டன. என்றாலும் இதற்கு அடுத்த ஆற்றல்மூலத்தைக் கண்டறிய வேண்டிய நிலையில் உலகம் இருக்கிறது.

தற்போதைக்கு அணுக்கரு இணைவு மனிதனுக்கு நம்பிக்கை நடசத்திரமாக விளங்குகிறது, இது தொடர்பான ஆய்வுகள் மிகவும் ஆரம்பநிலையில் இருந்தபோதிலும். ஹீலியம்-3 அணுக்கரு இணைவில் எரிபொருளாக இருக்கிறது. ஹீலியம் சக்திமூலமாக மட்டுமன்றி, இன்றைக்கு அறிவியல் ஆய்வுகள், தொழில்நுட்பம் எனப்பலவற்றிலும் இன்றியமையாததாய் உள்ளது.

ஹீலியம்-3 யில் இருந்து கிடைக்கும் ஆற்றலின் அளவு மிக அதிகம். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இது ஆபத்தில்லாதது. யுரேனியம் போன்ற கதிரியக்கத் தனிமங்களை எரிபொருளாய்ப் பயன்படுத்தும்போது உருவாகும் கதிரியக்க ஆபத்துக்கள் இதில் இல்லை. மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கும் கதிரியக்க உதிரிப்பொருட்கள் இதில் உருவாவதில்லை. இதன் மூலம் யுரேனிய, புளுடோனிய உலைக் கழிவுகளிடமிருந்து மனிதனுக்கு விடுதலை கிடைக்கும்.

ஹீலியம்-3 ன் மதிப்பு மிக அதிகம். உதாரணமாய், அமெரிக்கா நூற்றுக்கணக்கான F-16 ரக விமானங்களை விற்பதைவிட ஒரு டன் ஹீலியத்தை விற்பதன் மூலம் அதிகப் பணம் ஈட்டமுடியும். 25 டன் ஹீலியம்-3 ஐக் கொண்டு அமெரிக்காவின் ஒரு வருட முழுமைக்குமான ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள இயலுமென்றால் அதன் மகிமையைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

ஆனால் இன்றைக்குப் பூமியில் கிடைக்கும் ஹீலியம்-3 யின் அளவு மிகச் சொற்பமே. நமக்குப் பக்கத்துக் கோளான நிலவில் இருக்கும் ஹீலியத்தின் அளவு மிக மிக அதிகம். நிலவில் இருக்கும் ஹீலியத்தின் அளவு பூமியின் ஆற்றல் தேவையைப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பூர்த்தி செய்துகொள்ளப் போதுமானது.

ஒரு விண்வெளி ஓடத்தால் ஒரே தடவையில் கிட்டத்தட்ட 25 டன் ஹீலியத்தை பூமிக்குக் கொண்டுவர இயலும். பூமியின் தேவை ஆண்டுக்கு 100 டன் ஹீலியத்துக்குமேல் இருக்கும். அமெரிக்க டாலர்களில் சொன்னால் 25 டன் ஹீலியம் இந்தியாவின் ஒரு ஆண்டு மொத்த பட்ஜெட் பணத்தைவிடவும் அதிகமானது. இதுவரை கவிஞர்கள் மட்டுமே காதலித்துக்கொண்டிருந்த நிலவைத் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நாடுகள் காதலிக்க ஆரம்பித்திருப்பது ஏன் என இப்போது நமக்குத் தெளிவாய்ப் புரியும்.

அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் நிலவினைக் கவனிக்கத் தொடங்கி இருக்கின்றன. இந்தியா 2008 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலவுக்கு செயற்கைக் கோள் அனுப்ப உள்ளது. சீனா இயந்திர மனிதனை அனுப்ப யோசித்து வருகிறது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய அமெரிக்கா புதிய நோக்கத்துடன் நிலவை ஆராய முனைந்துவருகிறது.
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com