<$BlogRSDUrl$>

Wednesday, May 18, 2005

ஒரு உண்மைக் கதை

ஒரு ஊரில் ஒரு காகம் இருந்தது. சுற்றியுள்ள பறவைகளுடன் சேர்ந்து ஆடிப்பாடியும், சில சமயம் பாட்டி சுடும் வடையைத் திருடியும் சந்தோசமாய்ப் பொழுதைக் கழித்து வந்தது.

இப்படியே நாட்கள் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு சக்திவாய்ந்த முனிவர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது காகம். சந்தர்ப்பவசத்தால் காகத்தை முனிவருக்கு மிகப் பிடித்துவிட்டது. அந்த ஊரைவிட்டு முனிவர் போகும்முன் ஒரு மந்திரத்தைச் சொல்லிக்கொடுத்த்தார். அந்த மந்திரத்தால் காகத்தை நினைத்ததையெல்லாம் சாத்தியப்படுத்திக்கொள்ள இயலும். ஆனாலும் அந்த மந்திரம் மூன்று முறை மட்டுமே பயன்படுத்தச் சாத்தியப்படும். இதைச் சொல்லிவிட்டு முனிவர் போய்விட்டார்.

இந்த மந்திரத்தை எதற்குப் பயன்படுத்தலாம் எனக் காகம் யோசித்தது. அந்த நேரத்தில் அது நினைவுக்கு வந்தது. நமது காகத்துக்குக் குயிலைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு தாழ்வுமனப்பான்மை வரும்; அதன் இனிய குரலை அடுத்தவர் பாராட்டுவதால். குயிலின் குரல் எனக்கு வேண்டும் என்று சொல்லி மந்திரத்தைச் சொன்னது. என்ன ஆச்சரியம். அடுத்த நிமிடம் காகத்தின் குரல் குயிலின் குரலைப் போல் மாறிவிட்டது. நமது காகத்துக்கு ஒரே ஆனந்தம் , கூ...கூ.... எனக் குயிலைப்போலக் கூவி ஆனந்தப்பட்டது.

இன்னும் இருமுறை மந்திரத்தை எப்படிப் பயன்படுத்தலாம், நமக்குத் தேவையானவை என்ன என்று சிந்தித்தது. அந்த நேரத்தில் நினைவுக்கு வந்தவை எல்லாமே அழகானவைகள்தான், அவை எல்லாமே நமக்கும்கூட ரொம்பப் பிடிக்கும். கிளியின் மூக்கு, மயிலின் அழகிய இறகு இன்னும் சிலவும் அந்தப் புத்திசாலிக் காகத்திற்கு நினைவுக்கு வந்தது. ஆனால், மந்திரத்தை அதற்கு மேல் பயன்படுத்த இயலாதென்பதால் இவற்றை மட்டும் வேண்டி மந்திரத்தைச் சொன்னது. அடுத்த விநாடி அனைத்தும் காகத்துக்கு வந்துவிட்டது.

இப்போது காகத்துக்குப் பெருமை பிடிபடவில்லை. உலகிலேயே அற்புதமான, அழகான பறவை நான்தான், நான்தான் என்று திரும்பத் திரும்பப் பலமுறை தானாகவே சொல்லிக் குதூகலித்தது.

அந்த நேரத்தில் ஒரு பெண்காகம் அந்த வழியாய்ப் பறந்துபோனது. அதைக் கவர எண்ணி அழகிய குயில் குரலில் கூவியது. பெண் காகம் நமது காகத்தை விநோதமாய்ப் பார்ப்பதுபோலப் பார்த்துவிட்டுப் பறந்துவிட்டது. காகத்துக்குக் கொஞ்சம் ஏமாற்றம். இருந்தாலும் அதற்குப் பெரிதாய் வருத்தமில்லை, ஏனென்றால் காகங்களைவிடத் தான் மிக மிக அழகாய் இருப்பதாய் நினைத்துக்கொண்டதால் இப்போது சக காகங்கலின் மீது அதற்கு அந்தளவுக்கு மதிப்பு இல்லை. குயிலின் கூட்டத்துடன் சேர்ந்துவிட நினைத்து அங்கு சென்றது. அங்கு இந்தக் காகத்தைப் பார்த்தவுடன் அனைத்துக் குயில்களும் கொத்தி விரட்டிவிட்டன. கிளிகளும் கண்டுகொள்ளவில்லை. மயில்கள் இதைப் பார்த்துச் பார்த்துச் சிரித்தன.

கடைசியாய், ஒரு பெரிய உண்மை நமது காகத்துக்குப் புரிந்தது. காகம் காகமாயும், குயில் குயிலாயும் , மயில் மயிலாயும் இருப்பதுதான் பெருமை. ஆனால் என்ன செய்வது காலம்தான் கடந்துவிட்டதே.

பின்குறிப்பு: மந்திரம், மாயம் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாத உங்களில் சிலர் இந்தக் கதையைக் கற்பனை என நினைக்கலாம் . இதை உண்மை என நம்பாதவர்கள், புலம் பெயர்ந்து இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறையாய் வாழும் எந்த நாட்டினரையும் கேட்டுப் பாருங்கள். இந்த அப்பாவிக் காகம் சோகத்துடன் பறந்துசெல்வதை அவர்கள் நிச்சயம் பார்த்திருப்பார்கள்.
| | |
Comments:
kalakkiteenga.
 

ஆதிரை,
நன்றி. உண்மையில் கதையின் கரு சின்ன வயசில் கேள்விப்பட்டது, கொஞ்சம் சொந்தச் சரக்கை மசாலாவாகச் சேர்த்துவிட்டது மட்டும்தான் நான் :-).
 

For old story, new interpretation, This is perfectly opt, if we think in deep.
 

முத்து
நல்ல படிப்பினையான கதை.
 

முத்து,

இன அடையாளங்களை இழப்பது, எவ்வளவு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அழகாக சொன்னதற்கு பாராட்டுக்கள்

குமரேஸ்
 

கலக்கிட்டே முத்து. புது காக்கா, புது அர்த்தம்... பிரமாதம்...
 

//"அடையாளங்களை இழப்பது, எவ்வளவு பின்விளைவுகளை ஏற்படுத்தும்"
//

இடம், மொழி, நிறம் மட்டும் சார்ந்த அடையாளங்களுக்குப் பின்னும்
சிறிது ஆழமாக நோக்கினால்

"மனிதம்" என்ற அடையாளங்களை நாம் எவ்வளவு தொலைத்திருக்கிறோம் என்பதனைப் பார்க்கலாம். அதற்கு இந்தக் கதை ஒரு எடுத்துக்காட்டாகக் கையாழலாம்


சாரா
 

நன்றிகள் போஸ்கோ, சந்திரவதனா, குமரேஸ்.
 

///புது காக்கா, புது அர்த்தம்... பிரமாதம்...///
விஜய்,
:-) :-) :-)
 

///"மனிதம்" என்ற அடையாளங்களை நாம் எவ்வளவு தொலைத்திருக்கிறோம் என்பதனைப் பார்க்கலாம்.///
சாரா,
நன்றி. இது கொஞ்சம் ஆழமாய்ச் சிந்திக்கப்பட வேண்டிய விஷயம்தான்.

மனிதர்களை பலவாறாய் வகைப்படுத்த இயலும - அனைவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்லாத மனிதர்கள் என்றாலும். ஒரே வயதுடையவர், ஒரே நாட்டினைச் சார்ந்தவர், ஒரே மொழியைப் பேசுபவர், ஒரே கட்சியைச் சார்ந்தவர், ஒரே மதத்தைச் சார்ந்தவர், ..... இப்படி எண்ணற்ற பிரிவுகளின் கீழ் வகைப்படுத்த இயலும். நாம் இதை விரும்புகிறோமா இல்லையா என்பது வேறு விஷயம் ஆனால் இது தவிர்க்க இயலாதது -குறைந்த பட்சம் இன்றைய உலகில். இதிலே மொழி, கலாச்சாரம் ஆகியவை மனிதனின் தன்மைகளை, கொள்கைகளை மிகவும் அதிகமாய்த் தீர்மானிக்கும் சக்திகொண்டவை. தன்னுடைய சுயத்தை இழந்தவர் அடையும் துன்பங்களை அவ்வாறு இழந்தவர்கள்தாம் முழுவதும் உண்ர இயலும்.

இங்கே ஒரு பொன்மொழி நினைவுக்கு வருகிறது, "... போக்குவரத்தின் நடுவிலேயே நிற்பது மிக ஆபத்தானது, அவ்வாறு நின்றால் இரு புறமும் செல்லும் வாகனங்களும் தாக்கிச் சாய்க்கும்.." .
 

தம்பி முத்து,

ஆழமான கருத்து!!! இந்தச் சின்னக் கதையிலே இருக்கு!

அடையாளத்தைத் தொலைக்கவே வெளியே போனமோன்னு இருக்குப்பா வாழ்க்கை!

என்றும் அன்புடன்,
அக்கா
 

Muthu sir,
Please tell me how write in tamil in blogs like you
 

அக்கா,
உங்கள் கருத்துக்கு நன்றி.
 

ennar,
தமிழில் எழுதுவது மிக எளிது. தமிழில் எழுத
எ-கலப்பை,சுரதாவின் பொங்குதமிழ்( http://suratha.com/reader.htm ),முரசு ஆகியவற்றில் ஏதாவதொன்றைப் பயன்படுத்தலாம். ஏதாவது சந்தேகம் இருந்தால் இங்கும் பாருங்கள். http://www.ezilnila.com/uni_win98.htm
 

பரமசிவம் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது, கருடா சவுக்கியமா?
இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சவுக்கியமே கருடன் சொன்னது.
அதில் அர்த்தம் உள்ளது.
 

நன்றி ஜீவா.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com