<$BlogRSDUrl$>

Sunday, March 28, 2004

போறவங்களுக்கு வழி ..

காமராஜர் பற்றி பத்ரி எழுதியிருந்தார். அதைப் படித்தவுடன் காமராஜர் பற்றிக் கேள்விப்பட்ட ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. காமாரஜர் தேர்தல் சமயத்தில் கூட இன்றைய அரசியல்வாதிகள் சொல்வதைப்போல இந்தத் தொகுதியை துபாய் ஆக்குவேன் , அந்தத் தொகுதியை சிங்கப்பூராக்குவேன் என்று சொன்னதில்லை. மக்கள் அவர்கள் ஊருக்குச் சில வசதிகள் செய்துகொடுக்கச் சொல்லிக் கேட்கும்போதுகூட "பார்க்கலாம்.... முயற்சிக்கிறேன்.." என்பதே அவரது பதிலாய் இருக்குமாம்.

அடிக்கடி மக்களைச் சந்திக்க சுற்றுப்பயணம் செல்வது அவரது வழக்கம் ... ஒரு முறை ஒரு ஊருக்குச் சென்றபோது அவ்வூர் மக்களில் ஒருவர்,

" அய்யா .... எங்கள் ஊரில் சுடுகாட்டுக்கு வழி சரியில்லை, நீங்கள்தான் நல்ல சாலை அமைத்துத் தரவேண்டும் ... " என்றார்.

காமராஜர் சொன்ன பதில்,

" அண்ணே ... நான் இருக்கறவங்களுக்கு வழி தேடுறேன்... நீங்க போறவங்களுக்கு வழி கேக்குறீங்களே ... ... சரி.. பார்க்கலாம் "

காமராஜரின் இப்பதிலைக் கேட்டவுடன் பக்கத்தில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனராம்.
(0) Your Comments | | | |

Saturday, March 27, 2004

ஒரு பிளாஷ்பேக் - எமதர்மன் ராஜ்யத்தில் உய்யலாலா ..

எம தர்மராஜன் சபையில் ஒரு பிக்பாக்கெட் திருடன் விசாரிக்கப்படும் காட்சி இது. கையில் பெரிய தடியுடன் உடலில் பச்சைக்கலர் பாசக்கயிறைச் சுற்றிக்கொண்டு நிற்பவர்தான் எமதர்மராஜன். டைகட்டி தொப்பி போட்டு நிற்பவர் விசாரிக்கப்படும் பிக்பாக்கெட் திருடன். இரு புறமும் அவரைப் பிடித்துக்கொண்டு நிற்பவர்கள் எம கிங்கரர்கள். மெய்யெலாம் நீறு பூசி , சட்டையில்லாமல் , வேட்டியைத் தார்ப்பாய்ச்சுக் கட்டி கையில் ஏடும் , கூலிங் கிளாசும் வைத்து நிற்பது அனைவருக்கும் பாவபுண்ணியக் கணக்கு வைக்கும் சித்திர குப்தன், அது நான்தான்.

எமதர்மன் ராஜ்யத்தில் உய்யலாலா..!


எமன் கையில் தடி இருக்குமா .. ? சித்திர குப்தன் நூல்போட்டு, கையில் கூலிங் கிளாஸ் வைத்திருப்பாரா ..? கிங்கரர்கள் கைலிகட்டி இருப்பார்களா ..? என்று யாரும் ஐயப்பட வேண்டாம். நகைச்சுவை உணர்வுடன் ஸ்கூல் ஹெட் மாஸ்டர் மற்றும் மற்ற ஆசிரிய , ஆசிரியைகள் எங்களுக்குப் போட்டுவிட்ட வேடங்கள் இவை. நான் நான்காம் ஆம் வகுப்பு படிக்கும்போது பள்ளி நாடகத்தில் எடுத்த புகைப்படம்.
(0) Your Comments | | | |

Friday, March 26, 2004

பென்சிலால் பெரிய கட்டிடத்தை அளங்கள் ...!

உயரத்தை அளங்கள்கல்லூரியில் முதல் வருட மாணவர்களிடம் ராகிங் செய்ய ஒரு தீக்குச்சியைக் கொடுத்து விளையாட்டு மைதானத்தை அளக்கச் சொல்லிக் கலாட்டா செய்வதைக் கேள்விப்பட்டிருப்போம்.. இப்படி மைதானத்தை அளக்கக் கொஞ்ச நேரமாகும் ஆனாலும் செய்யக்கூடியதுதான். இதேபோல் ஒரு பெரிய கட்டிடத்தைச் சின்னப் பென்சிலால் அளக்க முடியுமா... ?

"... கண்ணுக்குப் பக்கத்தில் வைத்துப்பார்த்தால் ஒரு சிறிய கல்லும் மலையாகத் தெரியும்...
தூரத்தில் இருந்து பார்த்தான் ஒரு பெரிய மலையும் சிறிய கல்லாய்த் தெரியும் .. "
இது ஒரு எங்கேயோ கேட்ட பொன்மொழி . இது இந்த இடத்தில் பொருந்துமா என்று நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.

சிறுவயதில் பள்ளியில் படித்தபோது இதுபோல் பென்சிலால் கட்டிட உயரத்தை அளக்க முயன்றதுண்டு ... இந்த வழி சொந்தமா யோசிச்சுக் கண்டுபிடிச்சது இல்லைங்கோ .. அப்ப ஒரு புத்தகத்துல(கலைக்கதிர்?) படிச்சது .. அப்ப முயற்சி செஞ்சு பார்த்தப்ப கொஞ்சம் சரியாவே இருந்தது ..

அது இந்த வழிதான்... முதலில் ஒரு பென்சிலை எடுத்துக்கொள்ளுங்கள் .. அதை முகத்துக்கு அருகில் இரு கண்களுக்கு இடையில் கட்டிடத்துக்கு முன்னால் பிடியுங்கள் .. இப்போது அந்தக் கட்டிடத்தின் உயரம் அளவுக்கு அல்லது அதைவிட உயரமாக அந்தப் பென்சில் இருப்பதுபோல் தோன்றும் .. தோராயமாக ஒரு மீட்டர் உயரம் அந்தக் கட்டிடத்தில் எவ்வளவு தூரம் இருக்கும் என்பதை முதலிலேயே கவனித்து வைத்துக்கொள்ள வேண்டும் ... (துல்லியமாக வேண்டுமென்றால் கட்டிடத்தில் சரியாக ஒரு மீட்டர் உயரத்தை முதலிலேயே கட்டிடத்தில் ஒரு கோடு போட்டு குறித்தும் வைத்துக்கொள்ளலாம் ... )

இப்போது நாம் செய்யவேண்டியது ... அந்த ஒரு மீட்டர் உயரம் கண்களுக்கு இடையில் பிடித்துக்கொண்டிருக்கும் பென்சிலில் எவ்வளவு தூரம் வருகிறது, மேலும் முழுக்கட்டிடம் பென்சிலில் எத்தனை செண்டி மீட்டராகத் தோற்றமளிக்கிறது என்று பார்த்துப் பெருக்கிக்கொண்டால் அந்தக் கட்டிடத்தின் உயரம் தெரிந்துவிடும் ....

உதாரணமாக ஒரு மீட்டர் உயரம் 1 செண்டிமீட்டராகத் தோற்றமளித்து முழுக்கட்டிடம் 20 செண்டி மீட்டராகத் தோன்றினால் அக்கட்டிடத்தின் உயரம் 20 மீட்டர் .... சரியா வருதான்னு செய்ஞ்சு பார்த்தவங்க யாராவது சொல்லுங்க .....!
(0) Your Comments | | | |

Thursday, March 25, 2004

நோபல் பரிசைப் பாருங்க .... !!!

பதக்கத்தின் ஒரு பக்கம் படத்தில் இருப்பதுதான் நோபல் பரிசு.. அதாவது நோபல் பரிசினை வெல்லும் சாதனையாளர்களுக்குக் கொடுக்கப்படும் பதக்கம்...

இப்பதக்கத்தின் ஒரு பக்கம் இருப்பது இப்பரிசை உருவாக்கிய, வெடிமருந்து கண்டுபிடித்த ஆல்பிரட் நோபல் என்ற விஞ்ஞானி.. இப்பக்கத்தில் அவர் பிறந்த வருடமும் , மறைந்த வருடமும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது.

அதன் மறுபக்கத்தில் இயற்கைத் தேவதையும் .அதற்கு ஆடைபோர்த்தும் விஞ்ஞானியும் இரு உருவங்களாய்ச் சித்தரிக்கப்பட்டுள்ளனர் .. இப்பக்கத்தில் " Inventas vitam juvat excoluisse per artes " என்ற இலத்தீன் மொழி வாசகம் உள்ளது. இவ்வாக்கியத்தைத் தமிழில் மொழிபெயர்த்தால் " அறிவியல் வாழ்க்கையை மேம்படுத்துகிறது , கலை அதை அழகுபடுத்துகிறது " என்பதுபோல வரும் ..

பதக்கத்தின் மறு பக்கம்அருகிலுள்ள "REG. ACAD. SCIENT. SUEC." என்ற வாசகம் ராயல் சுவீடிஸ் அகாடமி ஆ·ப் சயின்ஸஸ் என்பதின் சுருக்கத்தைக் குறிக்கிறது .அப்பக்கத்தின் கீழ் பகுதியில் பரிசு அறிஞரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது ..

இன்னும் துல்லியமாய்ச் சொன்னால் நாம் பார்க்கும் இந்தப் பதக்கம் லினஸ் பாலிங் என்ற வேதியியல் அறிஞருக்கு 1954-ல் கொடுக்கப்பட்ட பதக்கம்.. இவரே 1962 - ல் அமைதிக்கான நோபல் பரிசையும் வென்று பகிர்ந்தளிக்கப்படாத இரு நோபல் பரிசுகளைப் பெற்ற ஒரே நபர் என்ற பெருமையையும் பெற்றிருப்பவர். மூலக்கூறுகளில் அணுக்கள் எவ்வாறு இணைந்திருக்கின்றன என்று லினஸ் பாலிங் ஆராய்ந்தமைக்காக அவருக்கு இப்பரிசு அளிக்கப்பட்டது...

இவ்வாண்டு இயற்பியல் மற்றும் வேதியியலுக்குக் கொடுக்கப்படும் பதக்கங்களும் இதே மாதிரியில்தான் இருக்கும் ஆனால் இவ்வருடம் பரிசு பெரும் அந்தந்த அறிஞரின் பெயர் பொறிக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும். மேலும் இப்பதக்கத்துடன் இன்றைய மதிப்புப்படி அவர்களுக்கு 1.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் ( நம்மூர் பணத்துக்குத் தோராயமாய் 6 கோடி ரூபாய் ) பரிசாக வழங்கப்படுகிறது ..
(0) Your Comments | | | |

Wednesday, March 24, 2004

நீ காயப்பட்டால் எனக்கு வலிக்கிறது.. !

மூளைசமீபத்தில் சயின்ஸ் என்ற பிரபலமான விஞ்ஞான இதழில் வெளிவந்த சுவாரசிய விஷயம் இது. நாம் பலதடவை "... நீ காயம்பட்டால் எனக்கு வலிக்கிறது..." , " ..உனது வலியை நானும் உணர்கிறேன்.." என்பது போன்ற டயலாக்குகளை சினிமாமாவில் கேட்டிருக்கிறோம் .. இது மேலோட்டமாய்ப் பார்ப்பதற்கு "...தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமா..? " என்ற பழமொழியை ஞாபகப் படுத்தலாம். ஆனால் ஒருவருக்கு வலிப்பதை இன்னொருவர் உணரக்கூடிய சாத்தியம் உள்ளது என்று விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள். லண்டனில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. மனமொத்து வாழும் 16 தம்பதியரைத் தெர்ந்தெடுத்து தம்பதியரில் ஆண் அல்லது பெண்ணுக்கு மின்சார அதிர்ச்சி கொடுத்து மற்றவரின் மூளையை எம்.ஆர்.ஐ (மேக்னடிக் ரெஸனன்ஸ் இமேஜிங்) மூலம் ஆராய்ந்தபின் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

இன்னும் இது பற்றிக் கொஞ்சம் விளக்கமாய்ச் சொல்வதென்றால் அவர்கள் செய்த சோதனை இதுதான். முதலில் தம்பதியர் இருவரில் ஒருவருக்கு கையில் ஒரு வினாடி மின்சார அதிர்ச்சி கொடுத்து அதன் விளைவாய் மூளையில் நிகழும் மாற்றங்களை எம்.ஆர்.ஐ மூலம் கவனத்துடன் பதிவு செய்திருக்கிறார்கள். மின் அதிர்ச்சி கொடுக்கும்போது மூளையின் எப்பகுதி அதிகமாகத் தூண்டப்படுகிறது, பாதிக்கப்படுகிறது என்பதைக் கவனித்திருக்கிறார்கள். பின்னர் அவரது துணையை அழைத்து அதேபோல் ஒரு வினாடி மின் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள், இந்த முறை தனது துணைக்கு மின் அதிர்ச்சி கொடுக்கும்போது அவரால் துணையின் முகத்தை மட்டும் பார்க்கமுடியும்படி செய்திருகிறார்கள், ஆனால் துணைக்கு மின்சார அதிர்ச்சி கொடுக்கப்படுகிறதா இல்லையா, என்பதைத் அதிர்ச்சி கொடுக்கும் கருவியின் இண்டிகேட்டர் மூலம் பார்த்துத் தெரிந்துகொள்ள இயலாது. ஆனாலும்கூட அவருக்கு மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டால் எப்பகுதிகள் மூளையில் தூண்டப்படுமோ அதேபகுதிகள் துணைக்கு மின் அதிர்ச்சி கொடுக்கும்போதும் தூண்டப்பட்டது. மேலும் இந்த விளைவு மிக மனமொத்து இருக்கும் தம்பதியரிடையே வலிமையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
(0) Your Comments | | | |

Tuesday, March 23, 2004

செயற்கைக் கோள் உதவி - சைக்கிள் திருட்டுத்தை தடுக்க ...!

சைக்கிள்நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் ஒரு அழகிய நகரம். இது சுற்றுலாவுக்கு மிகப் பிரபலமான நகரம். இங்கு எண்ணற்ற கால்வாய்கள் உள்ளன என்று சொல்வதை விட கால்வாய்களுக்குள்தான் அந்த நகரமே உள்ளது என்றும் சொல்லலாம். ஒரு நகரத்தைப் படகில் சென்று சுற்றிப்பார்க்க வேண்டும் என்று யாருக்காவது ஆசையிருந்தால் ஆம்ஸ்டர்டாம் போய்ப்பார்க்கலாம்.

அங்கு மக்களின் முக்கியமான போக்குவரத்துச் சாதனம் சைக்கிள்தான். நெதர்லாந்து நாட்டின் மக்கள் தொகையை விட அங்குள்ள சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகம். ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 80,000 லிருந்து 1,50,000 சைக்கிள்கள் உள்ளன. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் மொத்த சைக்கிள்களில் பத்து சதவீதம் ஒவ்வொரு வருடமும் திருட்டுப் போய்விடுகிறது. சைக்கிள் காணாமல்போவது என்பது அங்கு மிகச் சாதாரணமான விஷயம். இந்த சைக்கிள் திருட்டைக் கட்டுப்படுத்த அங்குள்ள போலீஸ் திணறி வருகிறது. சைக்கிளிளைத் திருடுபவர்களில் 40 சதவீதம் பேர் அதையே தொழிலாய்க் கொண்டவர்கள். 30 சதவீதம் பேர் போதைக்கு அடிமையானவர்கள். மீதமுள்ள சதவீதத்தினர் திருடும்படியான கட்டாயத்துக்கு உட்படுத்தப்படும் இளைஞர்கள். தனது சைக்கிள் காணாமல் போனவுடன் வீட்டுக்குப் போவதற்காக அங்கு இருக்கும் ஏதாவது சைக்கிளைச் சுட்டுக்கொண்டு போகும் நபர்கள். சைக்கிள் திருட்டிலிருந்து தப்பிப்பது எப்படி என்று கவுன்சிலிங் கூட இங்கு பிரபலம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

நெதர்லாந்துப் போலீஸ் கடைசியாக சாட்டிலைட் தொழில்நுட்பத்தை சைக்கிள் திருட்டைத் தடுக்கப் பயன்படுத்தும் முடிவிற்கு வந்திருக்கிறார்கள். GPS டிரான்ஸ்மிட்டர்கள் பொருத்தப்பட்ட சைக்கிள்களை முக்கியமான இடத்தில் வைத்து யார் திருடுகிறார்கள் என்று பொறி வைத்துப் பிடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். இந்த குளோபல் பொஸிஸனிங் சிஸ்டம் (GPS) என்ற நுட்பம் காணாமல் போகும் விமானம் , கப்பல் ஆகியவற்றைக் கண்டுபிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் இதைச் சைக்கிளுக்குப் பயன்படுத்தும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால் சைக்கிள் திருட்டு எந்த அளவுக்கு இருக்கிறது என்று நாம் கற்பனை செய்துகொள்ள வேண்டியதுதான்.
(0) Your Comments | | | |

Monday, March 22, 2004

இசையால் வசமாகா ..... !

கிராண்ட் பியானோகடந்த சனிக்கிழமை உடன் ஆய்வு செய்யும் ஜெர்மன் நண்பரொருவர் அவரது வீட்டுக்கு அழைத்திருந்தார். நண்பருக்கு இசையில் மிக்க ஆர்வம் உண்டு. அதுவும் குறிப்பாய் பியானோ இசையில் மிக விருப்பம். அவரது 10 வயதிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட 20 வருடமாக பியானோ சாதகம் செய்து வருகிறார். அவர் அடிக்கடி சொல்லுவார் "....நாங்கள் ஒன்றும் பணக்காரக் குடும்பம் அல்ல, ஒரு சாதாரண நடுத்தர ஜெர்மானியக் குடும்பம்...." நானும் அவரிடம் இதேபோல் சில முறை சொல்லியிருக்கிறேன், ".. நாங்களும் ஒன்றும் பெரிய பணக்காரக் குடும்பமல்ல, எங்களுடையது நடுத்தர இந்தியக் குடும்பம்..." இரு வேறு நாட்டில் "நடுத்தரக் குடும்பம்" என்று ஒரே பெயரில் சொன்னாலும் கூட , எந்த அளவுக்கு ஒப்பிட முடியாதபடி இருக்கிறது என்று விரைவிலேயே தெரிந்துவிட்டது.

"..இறைவன் இசை வடிவானவன்.." , " நாதமே இறைவனின் தொடக்கம் .." "...இசையே அனைத்தும்...", "இசையால் கல்லும் உருகும் .." இப்படிப் பலவாறாய்ச் சின்ன வயது முதல் கேட்டு வந்ததால் இசையில் என்னதான் இருக்கிறதென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ரொம்ப நாளாய் எனக்கு இருந்து வந்தது. ஆனால் கற்கச் சரியான வாய்ப்புத்தான் கிடைக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் "ஆர்க்கிட் ஆராய்ச்சி நிறுவனத்தில்" வேலை பார்த்தபோது பழம் நழுவி... இல்லை .. இசை நழுவி என் மீது விழுந்தது.

"...வெஸ்டர்ன் மியூசிக் படிக்கிறீங்களா அல்லது கர்நாடக சங்கீதம் படிக்கிறீங்களா..? " என்று எனது மாஸ்டர் திரு. சிவலிங்கம் கேட்ட போது கர்நாடக இசை என்று சொன்னேன். கர்நாடக இசையில் வயலின்,வாய்ப்பாட்டு,புல்லாங்குழல்,கிடார் இவற்றில் என்ன படிக்க விரும்புகிறீர்கள்..? என்று எனது மாஸ்டர் திரும்பவும் கேட்டபோதுதான் அடடே .. கர்நாடக சங்கீதத்தில் இத்தனை வகை இருக்கிறது என்பதே நினைவுக்கு வந்தது. குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் வாசிப்பதுபோல் நான் வாசித்தால் எப்படி இருக்கும் என்று மனதில் கற்பனையில் நினைத்துப் பார்த்தேன். வயலின் கற்றுக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து, மாஸ்டரிடம் அதைச் சொல்ல நினைப்பதற்கு முன்னால் அவரிடம் ஒரு புது வயலின் விலையைக் கேட்டேன் , அவர் சொன்னார் ஒரு நாலாயிரத்தில் இருந்து ஐந்தாயிரத்துக்குள் வாங்கலாம் என்றார். அன்று அது அவ்வளவு பெரிய தொகையாக இல்லைதான் இருந்தாலும் விலையைக் கேட்டவுடன் வயலின் மீது எனக்கு ஆர்வம் குறைந்துவிட்டது. எதைக் கற்றுக்கொள்ளவும் கண்டிப்பாய் அந்த இசைக் கருவியைச் சொந்தமாய் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று வேறு கராராய் மாஸ்டர் சொல்லிவிட்டார். எதுவும் வாங்காமல் சிந்து பைரவி சிவகுமார் மாதிரி வாய்ப்பாட்டில் பெரிய ஆளாய் ஆகிவிடலாமா என்று மனதில் யோசித்தபோது, வாய்ப்பாட்டு அடிப்படையைக் கற்றுக்கொள்ளவே 2 வருடம் வரை ஆகுமென்று கேள்விப்பட்டவுடன் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். புல்லாங்குழல் விலை 80 ரூபாயாய் இருந்ததால் அதன் மீது எனக்குத் திடீர் ஆர்வம் ஏற்பட்டது. இப்படிப் பல கணக்குகளைப் போட்டுப்பார்த்துவிட்டு மாஸ்டரிடம் "... கண்ணபிரான் இசைக்கும் புல்லாங்குழலில் எனக்கு ரொம்ப நாளாய்(?) விருப்பம் என்று பதில் சொன்னேன். என்னுடைய இசை(?) அனுபவங்களை இன்னொரு நாள் விரிவாய் எழுதலாமென்று இருக்கிறேன்.

இப்போது இவற்றையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் விஷயம் இதுதான். ஜெர்மன் நணபருக்கு அவரின் பெற்றோர் புதிதாய் ஒரு கிராண்ட் பியானோ வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள், அதை அவர் வீட்டுக்குப் போயிருந்தபோது காட்டினார். நாமும் இதுபோல் வாங்கி நம் வெஸ்டர்ன் மியூசிக் ஞானத்தையும்(?) பெருக்கிக்கொள்வோமா என்ற எண்ணம் மனதில் மெலிதாய் வர, அதன் விலையைப் பற்றி விசாரித்தபோது சாதாரணமாய்ச் சொன்னார் அது 75,000 யூரோதானாம். அதாவது நம்ம ஊர் பணத்துக்கு 40 லடசம் ரூபாய்க்கும் கொஞ்சம் அதிகம். அதன் விலையைக் கேட்டவுடன் கொஞ்சமல்ல , ரொம்ப அதிகமாக அதிர்ச்சி ஆகி எனது " பழைய பிளாஷ் பேக் " மனதில் ஓடி மறைந்தது. நாளைக்குத் திடீரென ஒரு அதியம் நடந்து பில்கேட்ஸை விடப் பெரிய பணக்கார ஆளாய் ஆனாலும் அவரைப் போல் 40 லட்சம் ரூபாய்க்கு கிராண்ட் பியானோ வாங்குவேனா என்று நினைத்துப் பார்த்தால் மாட்டேன் என்றுதான் தோன்றுகிறது. ஏனோ இந்த நேரத்தில் சம்பந்தமில்லாமல் ஒரு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது.
(0) Your Comments | | | |

Tuesday, March 16, 2004

சி(க)லைகள் பலவிதம் ....!

பிரிட்னி ஸ்பியர்ஸ்விதவிதமான பொருட்களில் பொம்மை செய்வதைப் பார்த்திருக்கிறோம். களிமண், மரம் , மெழுகு ,பிளாஸ்டிக்கில் ஆரம்பித்து சாக்பீஸ் வரை. ஆனால் கனடாவில் ஜாஸன் குரொனொவால்ட் என்பவர் மேலேயுள்ள எந்தப் பொருளையும் பயன்படுத்தாமல் வித்தியாசமான பொருளால் உருவம் செய்கிறார். மேலும் எல்லாருடைய உருவத்தையும் அவர் செய்வதில்லை.. மிகப் பிரபலமான பிரிட்னி ஸ்பியர்ஸ் ,ஜெனிபர் லோகஸ், பமீலா ஆண்டர்ஸன் மாதிரி ஆட்களின் பொம்மைகளைச் செய்கிறார். இவர்களின் உருவங்களை உருவாக்க இவர் தேர்ந்தெடுத்த வித்தியாசமான பொருள் எது தெரியுமா.. ? நன்றாக மென்ற சூயிங்கம்...!

சமீபத்தில் உருவாக்கிய பிரிட்டினி ஸ்பியர்ஸின் உருவம் செய்ய அவருக்குக் கிட்டத்தட்ட 200 மென்ற சூயிங்கம் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்காக அடுத்தவர்கள் மென்று கீழே துப்பிய சூயிங்கத்தையோ அல்லது தியேட்டரில் சீட்டில் ஒட்டியிருக்கும் சூயிங்கத்தையோ அவர் பயன்படுத்துவதில்லை. அவ்வளவு சூயிங்கத்தையும் தானே கஷ்டப்பட்டு மெல்லவும் அவர் விரும்பவில்லை. உருவம் செய்வதற்காகவென்றே அவரின் நண்பர்கள் மென்று தரும் சூயிங்கத்தை மட்டுமே இதற்கெனப் பயன்படுத்துகிறார். இப்படி சூயிங்கத்தை மென்று கொடுத்தே ஏகப்பட்ட நபர்கள் அவருக்கு நண்பர்களாகிவிட்டார்களாம். சூயிங்கத்தை உருவம் செய்யத் தேர்ந்தெடுத்ததற்கு அவர் கூறும் காரணத்தைப் பாருங்கள்..

" ....உருவம் செய்ய வித்தியாசமாக வேறு பொருளைத் தேர்ந்தெடுக்க நினைத்தபோதுதான் இந்த எண்ணம் எனக்கு உதித்தது. இப்போது சாதாரணமாய் உருவம் செய்யப் பயன்படுத்தப்படும் மற்ற பொருட்களைவிட சூயிங்கம் மிக மலிவானது. மேலும், பிரிட்டினி ஸ்பியர்ஸ் போன்ற ஒரு நபரின் உருவம் செய்ய, அனைவரும் ரசித்து மெல்லும் சூயிங்கத்தை விடப் பொருத்தமான வேறு பொருளைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை..."
(0) Your Comments | | | |

Saturday, March 13, 2004

குடித்துவிட்டு வண்டி ஓட்டலாமா... ?

ஜெர்மனியில் நான் இருக்கும் ஊருக்குப் பக்கத்து ஊரில் நடந்தது இது. நூற்றுக்கணக்கான பேர் வண்டியில் இருக்கும்போது குடித்துவிட்டு வண்டி ஓட்டலாமா..? இப்படி செய்வது மகாத் தப்பில்லையா.. ? குடிச்சிட்டு ஓட்டியிருக்கார் அப்படின்னு உறுதியானதால் ஓட்டுனவரை நம்ம ஊரு மதிப்புல 75,000 ரூபாய் அபராதம் கட்டச்சொல்லியிருக்காங்க. எந்த வண்டி டிரைவர் அப்படின்னு நினைக்கிறீங்களா... ? அது தரையில ஓடுற வண்டி இல்லைங்க.. வானத்துல போகும் வண்டி. போன புதன்கிழமை வடக்கு ஆப்பிரிக்க நாடு ஒன்றின் விமானத்தில் இது நடந்திருக்கிறது.

நடந்தது இதுதான். மொராக்கோவில் இருந்து டுசல்டார்ஃப் விமான நிலையத்தில் ஒரு விமானம் இறங்கியதும் , அதில் இருந்த பயணிகள் கிட்டத்தட்ட 150 பேர் போலீஸிடம் புகார் செய்திருக்கிறார்கள் ".....விமானி கொஞ்சமும் பொறுப்பில்லாமல் விமானத்தை ஓட்டினார்.. அத்தனை பேரும் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டிருந்தோம்..." என்று ஒரே குரலில் சொல்லியிருக்கிறார்கள். நம்ம ஊருப்பக்கம் வாயை ஊதிக்காட்டச்சொல்லுவதுபோல இந்த ஜெர்மனி போலீஸ் சோதனை பண்ணிப்பார்த்திருக்காங்க போலத் தெரியுது.. விமானி குடித்திருக்கிறார் என்ற விஷயம் அப்பத்தான் தெரிஞ்சிருக்கு ...உடனே 1500 யூரோ அபராதம் கட்டச் சொல்லியிருக்காங்க. சில நாட்களாய் இங்க எங்க பார்த்தாலும் இதே பேச்சா இருக்குது. ஆனாலும் எந்த விமான நிறுவனம் என்று குறிப்பிட்டுத் தெளிவாய்ச் சொல்ல போலீஸார் மறுத்துவிட்டனர்.
(0) Your Comments | | | |

Thursday, March 11, 2004

சோதிடமென்னும் அற்புத அறிவியல்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

சமயங்களையும், முன்னோர்கள் கண்டுரைத்த அரிய, பயனுள்ள நெறிகளையும் எந்த தயக்கமும் இன்றி மூடநம்பிக்கைகள்,பிற்போக்கானவை என்று கூறுபவர் சிலர், அதன் மூலம் தாங்கள் பகுத்தறிவுவாதிகள், பேரறிஞர்கள், முற்போக்கானவர்கள் என்று பெருமைகொண்டு தங்களைத்தாமே ஏமாற்றிக் கொள்பவர்கள் பலர். இவர்களைக்கண்டு இந்த மாயக்கவர்ச்சியால் மயங்கி நிற்பவர் பலப்பலர். ஆனால் இவ்வுலகில் இதுவொன்றும் புதிதல்ல!.

இருளும்-பகலும், உண்மையும்-பொய்மையும், வெற்றியும்-தோல்வியும், தீயோரும்-நல்லோரும், மேடும்-பள்ளமும் .... ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒரு உண்மையை நம்புவோரும்-நம்பாதோரும் கூட அவ்வாறே. இவை இன்று நேற்றல்ல, பல கோடி ஆண்டுகளாக இருந்து வருபவை. சோதிடத்தை நம்பாதவர்களின் கருத்துக்கு எதிர்வாதம் செய்வதோ அல்லது சோதிடத்தை நியாயப்படுத்துவதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல.மாறாக சோதிடமென்பது என்ன என்றும் , அதன் அடிப்படைகளை ஏதோ நம்மால் இயன்றவரை புரிந்துகொள்ள முயற்சிப்பதுமே இக்கட்டுரையின் நோக்கம்.

தேவைகள் கண்டுபிடிப்புக்களின் தாய் என்பர்.மனிதனுக்கு அவன் தோன்றியதிலிருந்து இன்றுவரை எத்தனையோ தேவைகள், அதனால் உருவானதே இத்தனைக் கண்டுபிடிப்புக்கள், கலைகள். மனிதனின் எதிர்காலத்தை அறிய வேண்டுமென்ற ஆவலால் உருவானதே இந்த சோதிடமென்ற ஒரு அற்புத அறிவியல். ஆம் இது உண்மையென்பதை , அதன் அடிப்படையை உணர்ந்தோர் அறிவர். இக்கட்டுரையில் சோதிடம் என்று குறிப்பிடுவது மனிதன் பிறந்தவுடன் அவன் பிறக்கும்போது இருக்கும் கிரகங்களின் நிலையைக் கொண்டு கணிக்கப்படும் சோதிட சாஸ்திரத்தைப்பற்றியதை மட்டுமே!.தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு மனிதனுக்கும் தன் எதிர்காலம் பற்றி முன்பே அறிந்துகொள்ள ஆசையும்,ஆர்வமும் உண்டு. இதனடிப்படையில் உருவானதே சோதிடம். ஒருவனின் ஜாதகம் எவ்வாறு எழுதப்படுகிறது என்றும், கோள்களின் நிலை எவ்வாறு கணிக்கப்பட்டது என்றும் அறிந்தவர்கள் வியப்புக் கொள்வது நியாயமானதே. ஏனென்றால் இவையெல்லாம் எழுதப்பட்டது கணினி யுகமான இக்காலத்தில் அல்ல மாறாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது. இன்று பழைய பஞ்சாங்கம் என்று கேலியாகச் சொல்லும் அவைகள் இன்றும் கூட சூரிய, சந்திர கிரகணங்கள் முதல் கோள்களில் நிலையைத் துல்லியமாய்ச் சொல்கிறதே , எப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இக்கணிக்கும் கலையை உருவாக்கினார்கள் என்று பகுத்தறிவுவாதிகள் என்று இன்று சொல்லிக்கொள்பவர்கள் சிந்திப்பதில்லை. இன்னொன்றை முதலிலேயே கூறிக்கொள்ள விழைகிறேன், நான் முறையாய்ச் சோதிடம் கற்றவன் அல்லன். உண்மையில் எனக்கும் சோதிடத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை; சோதிடம் என்றால் என்னவென்றும் அது எவ்வாறு கணிக்கப்படுகிறது என்று அறிவியல் பூர்வமாய்ச் சில புத்தகங்களைப் படித்ததைத் தவிர.

( வளரும் ... )
(0) Your Comments | | | |

Tuesday, March 09, 2004

தானியங்கு எழுத்துரு தேவையா.. ?

சில நாட்களுக்கு முன் வலைப்பூவில் நான் எழுதியிருந்ததைப் பற்றி வெங்கட் அவருடைய வலைப்பூவில் அவரின் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.. அவர் தவறாகப் புரிந்துகொண்டாரா அல்லது நான் சரியாகச் சொல்லவில்லையா என்று தெரியவில்லை.. நான் முதன்முதலில் வலைப்பூவுக்குத் தேவையானவை என்று சொல்ல ஆரம்பிக்கும்போதே யுனிக்கோடில் இருக்கவேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறேன். என்னுடைய வலைப்பூவும்கூட தானிறங்கி யுனிக்கோடு எழுத்தில்தான் இருக்கிறது.யுனிக்கோடின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்தே இருக்கிறார்கள். நண்பர்கள் சிலருக்கு தமிழில் வலைப்பூ அமைக்க உதவியபோதும் யுனிக்கோடில்தான் அமைத்துக்கொடுத்தேன்.

அனைவரும் யுனிகோடின் முக்கியத்துவத்தை உணர்ந்தே இருக்கிறார்கள், குறைந்த பட்சம் வலைப்பூவில் எழுதுபவர்கள் அனைவருமாவது யுனிக்கோடு எழுத்தின் முக்கியத்துவத்தை அறிந்தே இருக்கிறார்கள். யாரும் குமுதம்,விகடன் போன்ற எழுத்துருக்களையோ அல்லது அவர்கள் பெயரில் புதிதாய்த் தனித்தர எழுத்துருவையோ உருவாக்கி அதைத் தானியங்கி எழுத்துருவாகத் தன் வலைப்பூவில் இதுவரை பயன்படுத்தவில்லை. அவ்வாறு வலைப்பூவில் பயன்படுத்தும்படியாய் வலைப்பூ இதழில் நான் சொல்லவும் இல்லை. யுனிக்கோடு எழுத்துருவில் எனது பக்கம் இருந்தும் அது தானாக பக்கத்துடன் இறங்கும்படி இல்லாததால் சில நண்பர்களால் எனது வலைப்பூவைத் தெளிவாகப் பார்க்க இயலவில்லை என்று சொன்னார்கள்.எனவே யுனிகோடு எழுத்துருவைப் பக்கத்துடன் தானாக இறங்குமாறு அமைத்தபின் இப்பிரச்சனை தீர்ந்தது. நான் வலைப்பூ இதழில் சொன்னது இதைத்தான்.

யுனிக்கோடு எழுத்துக்கள் இன்னும் பெரும்பாலோர் பயன்படுத்தும் விண்டோஸ் 95,98, Me ,NT போன்றவற்றில் இன்னும் பிரச்சனைக்குரிவையாக இருந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. விண்டோஸ் 2000, XP இதில் மட்டும்தான் பிரச்சனை இன்றி இயங்குகிறது. இன்னும் ஏகப்பட்ட செயலிகள் யுனிக்கோடு தமிழ் எழுத்தில் பெயர் கொடுக்கப்பட்ட கோப்புக்களை உணரக்கூட இயலாதவைகளாக இருக்கின்றன. இவ்வளவு பிரச்சனை இருந்தும் வலைப்பூக்களில் எழுதுபவர்கள் தொலைநோக்குடன் சிந்தித்து யுனிக்கோடு எழுத்தைப் பயன்படுத்தி வருகிறோம். யுனிகோடையே பயன்படுத்துமாறு மற்றவர்களை ஊக்குவித்தும் வருகிறோம். அதற்காய் மற்றவர்கள் பயன்படுத்தும் பிற தானிறங்கி எழுத்துக்களை உடனே விட்டுவிடுமாறு சொல்வது சரியானதா..? சாத்தியமானதா..?

பெரும்பாலோர் பயன்படுத்தும் இயங்கு தளங்களில் தமிழைப் பார்க்க, படிக்க எந்தப் பிரச்சனையும் இன்றி இயங்கி வரும் அனைத்துத் தானியங்கி எழுத்துக்களையும் , வெங்கட் சொல்லியிருப்பதைப்போல் சரியான மாற்றுக்கூட இல்லாத இந்த நிலையில் மொத்தமாய் அவற்றை விட்டுவிடுவது என்பது அத்தனை சரியான ஒன்றா அல்லது பயன்தருமா என்பது இங்கே ஆழமாய்ச் சிந்திக்கவேண்டிய ஒன்று. ஒரு சின்ன உதாரணம்: ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் ஒரு தமிழ் விவாதக்குழுவில் இன்னமும் பெரும்பாலோர் பயன்படுத்துவது 98 மற்றும் Me ஆகிய இயங்குதளங்களாய் இருப்பதால் இவ்விவாதக்குழுவை திஸ்கியிலிருந்து இன்று யுனிகோடுக்கு மாற்றத்துடித்தும் இயலாமல் அவர்கள் தவித்து வருவதை நானறிவேன். இத்தனைக்கும் அவர்களில் பெரும்பாலோர் பயன்படுத்துவது அவர்களின் தனிப்பட்ட கணினி. அப்படியென்றால் சொந்தக் கணினியில்லாமல் பிறரின் கணினியை இன்று உலகெங்கும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் சாதாரணமக்களின் நிலை.. ?? தானிறங்கி எழுத்துரு என்ற ஒன்று வந்தபின்தான் பெரும்பாலோர் தமிழைக் கணினியில் பிரச்சனையில்லாமல் பார்க்கமுடிந்தது இன்னும் முடிகிறது. சரியான,பொருத்தமான மாற்று இன்றி இன்றே அத்தனை தானிறங்கி எழுத்துருக்களையும் விட்டுவிடுவது என்பது நினைத்துப் பார்க்கவே இயலாதது. சாதாரண மக்கள்வரை இப்படி அனைத்துப் பிரச்சனைகளையும் ஆழமாய் யோசிக்காமல் சொல்வதைவிட, அனைவரும் யுனிகோடு மற்றும் திஸ்கி தகுதர எழுத்தையே தானிறங்கி எழுத்தாக அனைவரும் பயன்படுத்தவேண்டும் என்று சொல்வதாவது கொஞ்சம் பொருத்தமானதாய் இருக்கும். இதன் மூலம் அனைத்துத் தமிழ் எழுத்துக்களும் இரு தரங்களுக்குள் சுருங்கிவிடும். இது நல்லதுதானே?. தானியங்கி எழுத்துரு என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உலாவிகளுக்கு மட்டுமே பொருத்தமானது என்ற காரணத்தை நினைத்துப் பெரும்பாலோர் பயன்படுத்தும் இந்நுட்பத்தை சரியான மாற்றில்லாத இன்றே அனைவரும் விட்டுவிடவேண்டும் என்று சொன்னால் அக்கருத்து கொஞ்சமும் பொருந்தாதது என்றே எண்ணத் தோன்றுகிறது.
(2) Your Comments | | | |

Friday, March 05, 2004

தலைப்பில்லை ...

கடந்த இரு வாரமாக வலைப்பூ இதழில் ஆசிரியராய் இருப்பதால் இங்கு அவ்வளவாய் எழுதமுடியவில்லை .. அங்கும் நான் பெரிதாய் எதுவும் எழுதவில்லை என்பது வேறு விஷயம் . நான் திருக்குறள் பற்றி ஏதோ நினைத்ததைச் சொல்லப் போய் ஒருவர் என்னைத் "திருக்குறளில் முதல் எதிரி" என்றே சொல்லிவிட்டார் . நாளையுடன் எனது வலைப்பூ - ஆசிரியர் பணி இனிதே நிறைவடைகிறது. இங்கும் , அங்கும் நிறைய எழுதவேண்டும் என்று நினைத்தாலும் நேரம் ஒத்துழைக்காததால் அவ்வளவாய் முடியவில்லை .. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் நிறைய ஆங்கில வலைப்பூக்களுக்கு அவ்வப்போது விசிட் அடித்துப் பார்க்கிறேன். நண்பர்கள் சிலர் புதிதாய் ஆங்கிலத்தில் வலைப்பூ துவங்கபோவதாய் சொல்லியிருக்கிறார்கள்.. இன்னும் சில நண்பர்கள் தமிழில் இந்த வாரம் ஆரம்பித்திருக்கிறார்கள் ... விரைவில் அவர்கள் தமிழ் வலைப்பூக்கள் பட்டியலில் இணைந்துவிடுவார்கள் .. 2004 இறுதிக்குள் பல நூறு பூக்கள் தமிழில் பூத்துவிடும் என்பதே பலரின் கணிப்பு .. கணிப்பு மெய்யாகட்டும்.

( இப்பதிவினைப் பதித்தவுடன் track back பற்றி பாலாஜி இங்கே comments பகுதியில் சொல்லியிருந்தார் .. மேலும் என்னுடைய back blog இலவசமாய் பயன்படுத்துவதால் 5 கருத்துக்களுக்கு மேல் பதிவு செய்யமுடிவதில்லை .. எனவே ஒன்றுக்கு இரண்டாய் இருக்கட்டுமே என நினைத்து ஒரு ஹேலோஸ்கேன் கருத்துப் பெட்டியையும் , டிராக் பேக்கையும் சேர்த்துவிட்டிருக்கிறேன் .. நன்றி பாலாஜி .. )
(0) Your Comments | | | |

Wednesday, March 03, 2004

பனிவிழும் மலர்வனம் .. !

சில நாட்களுக்கு முன் இங்கு (ஜெர்மனியில்) நிறைய பனி பெய்தது .. எதற்கும் இருக்கட்டும் என என்னுடைய கையடக்க டிஜிடல் கேமராவில் ஒரு நூறு படத்தை கிளிக்கி வைத்தேன் .. அதில் ஒன்றுதான் இது ...

(0) Your Comments | | | |

Monday, March 01, 2004

திரும்பிப் பார்க்கிறேன் ...

கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது .. ஆறு மாதத்துக்கு முன்னால் எனக்கு வலைப்பூ என்று ஒன்று இருந்ததே தெரியாது .. முதன்முதலில் வலைப்பூ பற்றித் தெரிந்துகொண்டது திசைகள் இதழைப் பார்த்தா அல்லது வலைப்பூச் சஞ்சிகையைப் பார்த்தா என்பது நினைவில்லை ... ஆனால் அறிமுகப்படுத்தியது நம் கூகிள் அம்மன்தான் .. ஒரு முறை யுனிகோடு தமிழில் தட்டச்சு செய்து கூகிளில் எதையோ தேடினேன் .. அப்போதுதான் எனக்குத் தெரிந்தது வலைப்பதிவு என்ற ஒன்று இருப்பதைப் பற்றியே .. இன்று பெரும்பாலோனோர் ஆங்கில வலைப்பூக்களைப் பார்த்துவிட்டுத் தமிழுக்கு வந்தவர்கள் .. எனக்கு தமிழ் வலைப்பூக்கள் மூலமாகத்தான் ஆங்கில வலைப்பூக்களே அறிமுகமானது ... ஆனால் வலைப்பூவுக்கு வருவதற்கு முன்னரே சில வலைப்பக்கங்களை உருவாக்கி வைத்திருந்தேன் .. முதலில் ஆங்கிலத்தில் வலைப்பக்கங்கள் உருவாக்கிய பின்னர் தமிழில் அதுபோல் அமைக்க எண்ணி கஷ்டப்பட்டு ஒரு வழியாய் செய்துகொண்டிருந்தபோதுதான் வலைப்பூ பற்றித் தெரிந்தது .. இங்கு வந்தபின்னர் வலைப்பக்கத்தில் புதிதாய் ஏதாவது செய்வது மிகக் குறைந்துவிட்டது ...

இன்னொரு விஷயம்... ஒரு வருடத்துக்கு முன்னர் நான் கேள்விப்பட்டிருந்த, எனக்குத் தெரிந்த ஒரே ஒரு செய்தி என்னவென்றால் யாகூ ஜியோசிடியில் இலவசமாக நமக்கு ஒரு இணையப் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளமுடியும் என்பதுதான்... ஆனால் எப்படிச் செய்வது என்று தெரியாது .. ஆனால் அப்போதும்கூட யாகூவில் இரு குழுக்களை உருவாக்கி நடத்திவந்தேன்... ஒரு வழியாய் எப்படியோ முட்டி மோதி ஒரு பக்கத்தை உருவாக்கி, கிடைத்த நேரத்தில் முக்கால்வாசி அதற்கே செலவழித்து மனம் திருப்தியடையும்வரை வலைப்பக்கத்தை அழகுபடுத்தினேன் ...இங்கே வலைப்பூவுக்கு வந்த பிறகுதான் தெரிந்தது. வலைப்பக்கம் உருவாகுவதுபோல் கடினமானதில்லை .. இது மிக எளிது என்று.

முதன் முதலில் மிக எளிதாய் பிளாக்ஸ்பாட் கொடுத்திருந்த ஒரு டெம்ப்ளேட் .. பின்னர் யாராவது புதிதாய் அவர்கள் வலைப்பூவில் செய்திருந்தால் நாமும் அதுபோலச் செய்தாலென்ன என்று கொஞ்சம் அதுபோல மாற்ற ஆரம்பித்தேன்.. முழுதாய்த் தானியங்கி எழுத்தில் என் வலைப்பூ இயங்க ஆரம்பித்தே ஒரு மாதத்துக்கு முன்னர்தான். எங்கோ ஆங்கில வலைப்பூவில் பார்த்த அரட்டை பெட்டி ஒன்றையும் நண்பர்கள் யார் வேண்டுமானாலும் அரட்டை அடிப்பதற்காய்ச் சேர்த்துவிட்டேன் .. . இப்போது கடைசியாய் வலைப்பூவைப் படிக்கும்போது இசையைக்(?) கேட்டுக்கொண்டே படிக்க ஒரு டேப்ரிக்கார்டரைச் சேர்த்துவிட்டிருக்கிறேன்... இந்தத் தற்போதைய டேப்ரிக்கார்டரைப் பாரதியார் பாடலைப் பாடும் டேப்ரிக்கார்டராய் மாற்றினால் என்னவென்று இப்போது யோசித்துவருகிறேன்..
எப்படியோ .. இப்போது நான் புரிந்துகொண்டது இரு விஷயங்கள் ..

1. நான் கொஞ்சமாவது HTML, Java... etc படித்திருந்தால் இன்னும் பயனுள்ளதாய் இருந்திருக்கும் ..

2. HTML , Java ... போன்ற சமாச்சாரங்கள் கொஞ்சமும் தெரியாத என்னைப் போன்றவர்கள்கூட இன்று தமிழிலேலே எளிதாய் வலைப்பக்கத்தை உருவாக்க முடியும் .. வலைப்பூ ஆரம்பிக்க நினைத்தால் அது மிக எளிது .. கிட்டத்தட்ட நண்பன் ஒருவனுக்கு மின்னஞ்சல் அனுப்புவதுபோலவே, வலைப்பதிவதும் மிக மிக எளிதானது .
(0) Your Comments | | | |

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com