<$BlogRSDUrl$>

Tuesday, March 09, 2004

தானியங்கு எழுத்துரு தேவையா.. ?

சில நாட்களுக்கு முன் வலைப்பூவில் நான் எழுதியிருந்ததைப் பற்றி வெங்கட் அவருடைய வலைப்பூவில் அவரின் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.. அவர் தவறாகப் புரிந்துகொண்டாரா அல்லது நான் சரியாகச் சொல்லவில்லையா என்று தெரியவில்லை.. நான் முதன்முதலில் வலைப்பூவுக்குத் தேவையானவை என்று சொல்ல ஆரம்பிக்கும்போதே யுனிக்கோடில் இருக்கவேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறேன். என்னுடைய வலைப்பூவும்கூட தானிறங்கி யுனிக்கோடு எழுத்தில்தான் இருக்கிறது.யுனிக்கோடின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்தே இருக்கிறார்கள். நண்பர்கள் சிலருக்கு தமிழில் வலைப்பூ அமைக்க உதவியபோதும் யுனிக்கோடில்தான் அமைத்துக்கொடுத்தேன்.

அனைவரும் யுனிகோடின் முக்கியத்துவத்தை உணர்ந்தே இருக்கிறார்கள், குறைந்த பட்சம் வலைப்பூவில் எழுதுபவர்கள் அனைவருமாவது யுனிக்கோடு எழுத்தின் முக்கியத்துவத்தை அறிந்தே இருக்கிறார்கள். யாரும் குமுதம்,விகடன் போன்ற எழுத்துருக்களையோ அல்லது அவர்கள் பெயரில் புதிதாய்த் தனித்தர எழுத்துருவையோ உருவாக்கி அதைத் தானியங்கி எழுத்துருவாகத் தன் வலைப்பூவில் இதுவரை பயன்படுத்தவில்லை. அவ்வாறு வலைப்பூவில் பயன்படுத்தும்படியாய் வலைப்பூ இதழில் நான் சொல்லவும் இல்லை. யுனிக்கோடு எழுத்துருவில் எனது பக்கம் இருந்தும் அது தானாக பக்கத்துடன் இறங்கும்படி இல்லாததால் சில நண்பர்களால் எனது வலைப்பூவைத் தெளிவாகப் பார்க்க இயலவில்லை என்று சொன்னார்கள்.எனவே யுனிகோடு எழுத்துருவைப் பக்கத்துடன் தானாக இறங்குமாறு அமைத்தபின் இப்பிரச்சனை தீர்ந்தது. நான் வலைப்பூ இதழில் சொன்னது இதைத்தான்.

யுனிக்கோடு எழுத்துக்கள் இன்னும் பெரும்பாலோர் பயன்படுத்தும் விண்டோஸ் 95,98, Me ,NT போன்றவற்றில் இன்னும் பிரச்சனைக்குரிவையாக இருந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. விண்டோஸ் 2000, XP இதில் மட்டும்தான் பிரச்சனை இன்றி இயங்குகிறது. இன்னும் ஏகப்பட்ட செயலிகள் யுனிக்கோடு தமிழ் எழுத்தில் பெயர் கொடுக்கப்பட்ட கோப்புக்களை உணரக்கூட இயலாதவைகளாக இருக்கின்றன. இவ்வளவு பிரச்சனை இருந்தும் வலைப்பூக்களில் எழுதுபவர்கள் தொலைநோக்குடன் சிந்தித்து யுனிக்கோடு எழுத்தைப் பயன்படுத்தி வருகிறோம். யுனிகோடையே பயன்படுத்துமாறு மற்றவர்களை ஊக்குவித்தும் வருகிறோம். அதற்காய் மற்றவர்கள் பயன்படுத்தும் பிற தானிறங்கி எழுத்துக்களை உடனே விட்டுவிடுமாறு சொல்வது சரியானதா..? சாத்தியமானதா..?

பெரும்பாலோர் பயன்படுத்தும் இயங்கு தளங்களில் தமிழைப் பார்க்க, படிக்க எந்தப் பிரச்சனையும் இன்றி இயங்கி வரும் அனைத்துத் தானியங்கி எழுத்துக்களையும் , வெங்கட் சொல்லியிருப்பதைப்போல் சரியான மாற்றுக்கூட இல்லாத இந்த நிலையில் மொத்தமாய் அவற்றை விட்டுவிடுவது என்பது அத்தனை சரியான ஒன்றா அல்லது பயன்தருமா என்பது இங்கே ஆழமாய்ச் சிந்திக்கவேண்டிய ஒன்று. ஒரு சின்ன உதாரணம்: ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் ஒரு தமிழ் விவாதக்குழுவில் இன்னமும் பெரும்பாலோர் பயன்படுத்துவது 98 மற்றும் Me ஆகிய இயங்குதளங்களாய் இருப்பதால் இவ்விவாதக்குழுவை திஸ்கியிலிருந்து இன்று யுனிகோடுக்கு மாற்றத்துடித்தும் இயலாமல் அவர்கள் தவித்து வருவதை நானறிவேன். இத்தனைக்கும் அவர்களில் பெரும்பாலோர் பயன்படுத்துவது அவர்களின் தனிப்பட்ட கணினி. அப்படியென்றால் சொந்தக் கணினியில்லாமல் பிறரின் கணினியை இன்று உலகெங்கும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் சாதாரணமக்களின் நிலை.. ?? தானிறங்கி எழுத்துரு என்ற ஒன்று வந்தபின்தான் பெரும்பாலோர் தமிழைக் கணினியில் பிரச்சனையில்லாமல் பார்க்கமுடிந்தது இன்னும் முடிகிறது. சரியான,பொருத்தமான மாற்று இன்றி இன்றே அத்தனை தானிறங்கி எழுத்துருக்களையும் விட்டுவிடுவது என்பது நினைத்துப் பார்க்கவே இயலாதது. சாதாரண மக்கள்வரை இப்படி அனைத்துப் பிரச்சனைகளையும் ஆழமாய் யோசிக்காமல் சொல்வதைவிட, அனைவரும் யுனிகோடு மற்றும் திஸ்கி தகுதர எழுத்தையே தானிறங்கி எழுத்தாக அனைவரும் பயன்படுத்தவேண்டும் என்று சொல்வதாவது கொஞ்சம் பொருத்தமானதாய் இருக்கும். இதன் மூலம் அனைத்துத் தமிழ் எழுத்துக்களும் இரு தரங்களுக்குள் சுருங்கிவிடும். இது நல்லதுதானே?. தானியங்கி எழுத்துரு என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உலாவிகளுக்கு மட்டுமே பொருத்தமானது என்ற காரணத்தை நினைத்துப் பெரும்பாலோர் பயன்படுத்தும் இந்நுட்பத்தை சரியான மாற்றில்லாத இன்றே அனைவரும் விட்டுவிடவேண்டும் என்று சொன்னால் அக்கருத்து கொஞ்சமும் பொருந்தாதது என்றே எண்ணத் தோன்றுகிறது.
| | |
Comments:
Dear Viji,
Making a weblog is less than a minute job. It is as easy as creating an e-mail account. Just go to www.blogger.com create a blog for yourself.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com