<$BlogRSDUrl$>

Tuesday, March 23, 2004

செயற்கைக் கோள் உதவி - சைக்கிள் திருட்டுத்தை தடுக்க ...!

சைக்கிள்நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் ஒரு அழகிய நகரம். இது சுற்றுலாவுக்கு மிகப் பிரபலமான நகரம். இங்கு எண்ணற்ற கால்வாய்கள் உள்ளன என்று சொல்வதை விட கால்வாய்களுக்குள்தான் அந்த நகரமே உள்ளது என்றும் சொல்லலாம். ஒரு நகரத்தைப் படகில் சென்று சுற்றிப்பார்க்க வேண்டும் என்று யாருக்காவது ஆசையிருந்தால் ஆம்ஸ்டர்டாம் போய்ப்பார்க்கலாம்.

அங்கு மக்களின் முக்கியமான போக்குவரத்துச் சாதனம் சைக்கிள்தான். நெதர்லாந்து நாட்டின் மக்கள் தொகையை விட அங்குள்ள சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகம். ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 80,000 லிருந்து 1,50,000 சைக்கிள்கள் உள்ளன. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் மொத்த சைக்கிள்களில் பத்து சதவீதம் ஒவ்வொரு வருடமும் திருட்டுப் போய்விடுகிறது. சைக்கிள் காணாமல்போவது என்பது அங்கு மிகச் சாதாரணமான விஷயம். இந்த சைக்கிள் திருட்டைக் கட்டுப்படுத்த அங்குள்ள போலீஸ் திணறி வருகிறது. சைக்கிளிளைத் திருடுபவர்களில் 40 சதவீதம் பேர் அதையே தொழிலாய்க் கொண்டவர்கள். 30 சதவீதம் பேர் போதைக்கு அடிமையானவர்கள். மீதமுள்ள சதவீதத்தினர் திருடும்படியான கட்டாயத்துக்கு உட்படுத்தப்படும் இளைஞர்கள். தனது சைக்கிள் காணாமல் போனவுடன் வீட்டுக்குப் போவதற்காக அங்கு இருக்கும் ஏதாவது சைக்கிளைச் சுட்டுக்கொண்டு போகும் நபர்கள். சைக்கிள் திருட்டிலிருந்து தப்பிப்பது எப்படி என்று கவுன்சிலிங் கூட இங்கு பிரபலம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

நெதர்லாந்துப் போலீஸ் கடைசியாக சாட்டிலைட் தொழில்நுட்பத்தை சைக்கிள் திருட்டைத் தடுக்கப் பயன்படுத்தும் முடிவிற்கு வந்திருக்கிறார்கள். GPS டிரான்ஸ்மிட்டர்கள் பொருத்தப்பட்ட சைக்கிள்களை முக்கியமான இடத்தில் வைத்து யார் திருடுகிறார்கள் என்று பொறி வைத்துப் பிடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். இந்த குளோபல் பொஸிஸனிங் சிஸ்டம் (GPS) என்ற நுட்பம் காணாமல் போகும் விமானம் , கப்பல் ஆகியவற்றைக் கண்டுபிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் இதைச் சைக்கிளுக்குப் பயன்படுத்தும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால் சைக்கிள் திருட்டு எந்த அளவுக்கு இருக்கிறது என்று நாம் கற்பனை செய்துகொள்ள வேண்டியதுதான்.
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com