<$BlogRSDUrl$>

Thursday, January 29, 2004

தேடுங்கள் கிடைக்கும் .. ! (3) - கூகிள்

தேடுபொறி பற்றிய நம் தேடலை முதலில் கூகிளில் இருந்து ஆரம்பிக்கலாம். இணையத்தில் தேடல் என்றாலே நினைவுக்கு முதலில் வருவது கூகிள்தானே ... கூகிள் என்ற பெயர் வைத்ததற்கே ஒரு காரணம் உண்டு.. கணிதத்தில் Googol என்பது ஒரு மிகப்பெரிய எண். ஒன்று போட்டு அதற்குப் பின்னால் நூறு பூச்சியம் போடுங்கள் என்ன எண் வரும்.. ? அந்த எண்ணுக்குப் பெயர்தான் Googol.. இதுவரை ஒரு Googol அளவுக்கு இந்தப் பிரபஞ்சத்தில் எதுவுமே இல்லை .. பிரபஞ்சத்தின் அத்தனை துகளகளையும் எண்ணினால் கூட Googol-ல் லட்சம் கோடியில் ஒரு பங்குகூட தேறாது..அவ்வளவு பெரிய எண் இது. ஆக கூகிளின் லட்சியம் எவ்வளவு பெரியது என்று நினைத்துப் பாருங்கள்..

நாள்தோறும் கூகிள் தேடு எந்திரம் 20 கோடி முறைக்கும் மேலாக பயன்படுத்தப்படுகிறது.. கிட்டத்தட்ட நூறு கோடிக்கும் மேலான இணையப் பக்கங்களைப் பற்றிய தகவல்களை வைத்திருக்கிறது.கூகிளைப் பயன்படுத்துபவர் வடதுருவத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளராய் இருக்கலாம்.. அமெரிக்காவில் இருக்கும் மருத்துவராய் இருக்கலாம் .. நம்மூரில் பள்ளியில் படிக்கும் சிறுவர்களாகவோ, புதிதாய் ஒரு கார் வாங்க யோசித்துக்கொண்டிருக்கும் அம்மணியாகவோ, ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவோ அல்லது யாராகவும் இருக்கலாம். இவ்வளவு ஏன் கூகிள் பற்றிய தகவல்களையேகூட நான் கூகிளில் தேடித்தானே எடுத்தேன்..?



கூகிளின் கதை மிக சுவாரசியமானது.. கூகிள் ஒன்றும் பெரிய நிறுவனத்தால் தொடங்கப்படவில்லை .. அதைத்தொடங்கிய இருவரும் 25 வயதுக்கும் குறைவான இரு பல்கலைக்கழக மாணவர்கள் .லேரி பேஜ் மற்றும் செர்கே பிரின் .இருவரும் முதன் முதலில் 1995 ஆம் வருடம் ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிக்கும்போது சந்தித்துக்கொண்டார்கள். அப்போது லேரிக்கு 24 வயது, செர்கேவுக்கு 23 வயது. அவர்கள் இருவரும் எதைப் பற்றி உரையாடினாலும் இருவரின் கருத்தும் மிக வித்தியாசமாய்,தனித்துவமானதாய் இருந்தது.. அடிக்கடி இருவரும் பெருந்திரளான தகவல் வெள்ளத்திலிருந்து தேவையானதை எப்படி எடுப்பது என்று விவாதித்தார்கள்.. இதுவே பின்னாளில் உலகின் தலைசிறந்த தேடுபொறி உருவாக அடிகோலியது ....
(1) Your Comments | | | |

Wednesday, January 28, 2004

தேடுங்கள் கிடைக்கும் .. ! (2)

"...இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையற்ற பேரறிவுக்களஞ்சியம் உன்னிடத்திலேயே உள்ளது .. உன்னிடம் தேடிப்பார், அது உனக்குக் கிடைக்கும்.." என்று சொன்னார் விவேகானந்தர். இதைப் பற்றி இச்சிற்றறிவுக்குக்கு எட்டவில்லை. ஆனால் உலகின் அறிவுக் களஞ்சியம் இணையத்தில் குவிந்து வருகின்றது என்பது மட்டும் யாரும் மறுக்கமுடியாத உண்மை .. தினந்தோறும் ஆயிரக்கணக்கில் புதுபுதுப் பக்கங்கள் உருவாக்கப்படுகின்றன.. எத்தனையோ தகவல்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டுத் தேடுவதுபோல இந்த இணையக் கடலில் நமக்குத் தேவையானதை எப்படித் தேடுவது..? நமக்குத் தேவையானதை மட்டும் எப்படிப் பெறுவது..? என்ற குழப்பம் இல்லாமல் இல்லை .. இன்று நமக்குத் தேடித்தர பல தேடு பொறிகள் வந்துவிட்டன .. தேடு இயந்திரம் எவ்வளவுதான் திறமைமிக்கதாய் இருந்தாலும் மனிதனுக்கு அதை எப்படித் திறம்படப் பயன்படுத்துவது என்று தெரிந்தால்தானே அது முழுமையாய்ப் பயன்படும் .. ?.. ஆக தேடு எந்திரங்களில் எப்படித் தேடுவது, தேடு எந்திரங்களை எப்படி முழுமையாய்ப் பயன்படுத்துவது என்று சுருக்கமாய்த் தெரிந்துகொள்வதே இத்தொடரின் நோக்கம் ..

" ஏய் ... எனக்குத் தெரியாததை என்ன புதிதாய்ச் சொல்லிவிடப் போகிறாய்.." என்று நீங்கள் சொல்வது எனக்கும் புரிகிறது .. இருந்தாலும் நான் விடப் போவதில்லை...
(0) Your Comments | | | |

Tuesday, January 27, 2004

தேடுங்கள் கிடைக்கும் .. ! (1)

தேடல் என்பது ஒரு மனிதனை மனிதனாய் வாழச்செய்வது .. மனிதர்கள் இன்று இவ்வளவு தூரம் முன்னேறி சந்திரனிலும் , செவ்வாயிலும் கால்வைக்க அவனுள்ளிருந்த தேடலே முக்கியக் காரணம். இல்லை ....அவன் உழைப்புத்தான் முக்கிய முதல் காரணம் என்றும் சிலர் கூறலாம் .. உழைப்பு மட்டும் காரணம் என்றால் மனிதனை விட பல்லாயிரம் ஆண்டுகளாய் உறங்காமல் உழைக்கும் உயிர்கள் என்ன பெரிய முன்னேற்றம் கண்டுவிட்டன.. ?எறும்புகளை எடுத்துக்கொண்டால் மனிதனின் வயதை விட சில ஆயிரம் ஆண்டுகள் மூத்தவை .. அன்றிலிருந்து இன்னும் உழைத்துக் கொண்டிருக்கின்றன ... காரணம் எறும்புகளும், பிறவும் தேடியவை உணவும் , துணையும்தான் ..... மனிதன் மட்டுமே தேடலின் எல்லையை விரிவாக்கிக்கொண்டான் .. அதன் விளைவாய் அன்றிலிருந்து அவனுக்கு அவனாகவே தகுந்த மாதிரிச் சட்டங்களை வைத்துக்கொண்டான் .. மனிதனைக் கொன்றால் கொலை ... மிருகத்தைக் கொன்றால் வேடிக்கையான வேட்டை .. மனிதனின் மாமிசம் நரமாமிசம் அதைத்´தின்றால் பாவம் .. மிருகத்தைத் தின்னலாம் .. அது நாம் தின்பதற்காகவே படைக்கப்பட்டுள்ளது என ... இப்படியாக .. அவனுக்கு வசதியாக , பாதுகாப்பாக எத்தனையோ எழுதப்பட்ட , எழுதப்படாத சட்டங்கள் என்று மனித உரிமைச் சட்டம் வரை கொண்டு வந்துவிட்டான் .. பாவம் மிருகங்கள் உரிமை , சட்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் இன்னும் தேடிக்கொண்டே இருக்கின்றன உணவையும் , துணையையும் மட்டுமே ....

அடடே .. ! தேடல் திசை மாறி விட்டது ... நான் கூகிள் போன்ற தேடுபொறிகள் பற்றி எழுதநினைத்து எங்கோ போய்விட்டேன் ...
இங்கு வேறு நள்ளிரவாகப் போகிறது ... சரி நாளைக்குப் பார்த்துகொள்ளவேண்டியதுதான் ..
(0) Your Comments | | | |

Sunday, January 25, 2004

எழுத்துருப் பிரச்சனை ...

இரண்டு நாட்களாக ஏதாவது எழுதவேண்டும் என்று நினைக்கிறேன் .. ஆனால் முடியவில்லை .. இந்த வலைப்பூவை சரியாகப் பார்க்க இயலவில்லை , எழுத்துரு சிலருக்குச் சரியாகத் தெரியவில்லை என்று நண்பர்கள் சிலர் சொன்னார்கள் .. மீனாவும் கூட ஒரு தடவை எனது பக்கத்தில் எழுத்துரு சரியாகத் தெரியவில்லை என்று சொல்லியிருந்தார் .. எனவே நேற்றும் அதற்கு முந்திய நாட்களும் லதா , மற்றும் தேனீ யுனிகோடு எழுத்தில் தானியங்கி எழுத்துரு செய்து இணைத்துப் பார்த்தேன் ... லதா தானியங்கி எழுத்துருவைப உருவாக்கிப் பயன்படுத்தியபோது தமிழ் எழுத்துக்கள் நன்றாக வந்தன .. ஆனால் ஆங்கில எழுத்துக்கள் மட்டும் பெட்டி பெட்டியாகத் தெரிந்தது ... சில தடவை மீண்டும் முயற்சி செய்து பார்த்தேன் .. திரும்ப திரும்ப அப்படியே வந்தது .. எனவே தேனீ தானியங்கி எழுத்துருக்கு மாற்றிவிட்டேன் .. இப்போது அனைவருக்கும் எந்தப் பிரச்சனையுமில்லாமல் தெரியுமென்று நினைக்கிறேன் ..
(0) Your Comments | | | |

Friday, January 23, 2004

யுனிகோடும் ..... சில பிரச்சனைகளும் ...

இந்த கம்ப்யூட்டரைப் பத்தி சில சமயம் ஒன்னுமே புரியறது இல்லை .. ரொம்ப நாளா என்னோட விண்டோஸ் எக்ஸ்பி புரபசனல் எடிசனில் ஒரு பிரச்சனை இருந்து வந்தது .. என்னால் யுனிகோடு எழுத்துக்களைப் படிக்க , எழுத முடிந்தது ..
ஆனால் கோப்பின் பெயரை தமிழில் கொடுக்க இயலவில்லை ..

பொதுவாக யுனிகோடில் ஆங்கிலத்தில் செய்யும் அனைத்துச் செயல்களையும் தமிழிலிலேயே செய்ய இயலும் ..

எனக்கு இது ஏன் தேவைப் பட்டது என்றால் தமிழ்த் சினிமாப் பாடல்களின் தலைப்பை ஆங்கிலத்தில் வாசித்துத் தேடக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது .. மேலும் தமிழ் மொசில்லா யுனிகோடு எழுத்துரு சரியாகத் தெரியவில்லை.. நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன் .. முடியவில்லை.. பலரிடம் கேட்டும் பார்த்தேன்.. கடைசியில் நேற்றுத்தான் ஒரு வலைப்பூவில் ஒரு வழி சொல்லியிருந்தார் ஒருவர் ..

உங்களுக்கு யுனிகோடில் ஏதாவது பிரச்சனை இருந்தால் control panel -->Regional and launguage --> indic and complex scripts இதை டிக் செய்யுங்கள் .. அது விண்டோஸ் எக்ஸ்பி சிடியைக் கேட்கும் .. அதைப் போட்டு குறிப்பிட்ட போல்டரைத் திறந்துகொடுத்தால் தேவையான கோப்பை அதுவே எடுத்துகொள்ளும் .. இது முடிந்ததும் கணினியை ஒரு தடவை மூடித் திறந்தால் எல்லாப் பிரச்சனையும் சரியாகிவிடும் என்று எழுதியிருந்தார்.. அவர் அந்த வலைப்பூவில் எழுதிய ஒரே ஒரு கட்டுரை அது மட்டும்தான் என்று நினைக்கிறேன்... அதன் பின்னர் அவர் எழுதவே இல்லை ..

சரி அவர் சொன்னபடி நாமும் முயற்சி செய்து பார்க்கலாமே என்று நினைத்து சிடியைத் தேடினால் அது என்னிடம் இல்லை .. எனக்குக் கிடைத்தது எக்ஸ்பி ஹோம் எடிசனின் சிடி .. அதுவும் ஜெர்மன் பதிப்பு வேறு .. இது பயன்படாது என்று நினைத்துக்கொண்டே முயற்சி செய்தேன் .. ஆனால் என்ன ஆச்சரியம் .. எல்லாப் பிரச்சனையும் சரியாகிவிட்டது. முதல் வேலையாக இளையராஜா , ஜேசுதாஸ் , பி.சுசீலா அனைவரின் பாடல்களையும் தமிழில் பெயர் கொடுத்துவிட்டேன் .. இப்போது பாடல்களைத் தேர்வு செய்ய மிக எளிதாக இருக்கிறது.. பக்கத்து மாநில இந்திய நண்பர்கள் என்னுடைய கம்ப்யூட்டடரைப் பார்த்தால் ஒரு நிமிடம் திகைத்துப் போய் விடுகிறார்கள்.. உண்மையில் அவர்களை அவ்வாறு திகைக்க வைப்பதில் எனக்கு ஒரு சின்ன சந்தோஷம் ....

இப்போது என்னுடைய கம்ப்யூட்டர் எவ்வளவு அழகா இருக்குதுன்னு கீழேயுள்ள படத்தை கிளிக் செய்து நீங்களே பாருங்களேன் ....

Click to enlarge



எனது நண்பர் ஒருவர் விண்டோஸ் 2000 வைத்திருக்கிறார் .. அவருக்கும் இதே பிரச்சினை .. அவருக்கும் இதேபோல் விண்டோஸ் 2000 சிடியைப் போட்டு செய்யலாம் என்று முன்பு சொன்னவரே control panel --->regional options ---> indic launguages இதை டிக் செய்தால் சரியாகும் என்று சொல்லியொருந்தார் .. அவருக்கு லதா எழுத்துருவைத் தேடி கணினியில் இறக்கி நிறுவியவுடன் எல்லாம் சரியாகிவிட்டது ... விண்டோஸ் 2000 சிடியே தேவைப்படவில்லை ..

(0) Your Comments | | | |

Monday, January 19, 2004

மாமிசத் தாவரங்கள் மனிதனைக் கொன்று தின்னுமா ... ?

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் ஒரு காட்டின் வழியே நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். திடீரென பக்கத்திலிருந்த மரத்தின் கிளைகள் உங்களை நோக்கி நீளுகிறது. நீங்கள் சுதாரித்து விலகுவதற்குள் உங்களின் ஒரு கையைச் சுற்றிப் பிடித்துக் கொள்கிறது. இன்னொரு கையால் அதை விடுவிக்க நினைக்கிறீர்கள். ஆனால் பலனில்லை. காலம் கடந்துவிட்டது. உங்களின் இன்னொரு கையையும், இடுப்பையும் சுற்றிவளைத்துவிடுகிறது. அதன் கிளைகள் உங்களை மொத்தமாக ஆக்கிரமித்துவிடுகிறது. நினைப்பதற்கே கொஞ்சம் அச்சமாக இல்லை..? இதுபோன்ற சம்பவங்களை நீங்கள் கதைகளில் படித்திருக்கலாம். உண்மையில் இதுபோன்ற நிகழ்ச்சி சாத்தியமா..? இதில் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது ..!

மாமிசத்தை உண்ணும் தாவரங்கள் நிறையவே இருக்கின்றன. மிகப் பிரபலமான உதாரணம் நெபந்தஸ் என்ற தாவரம். தாவரங்கள் என்பவை விலங்குகள் உண்பதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கின்றன என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோமே. எப்படி சில தாவரங்கள் நான்-வெஜிடேரியனாக மாறிவிடுகின்றன. சிங்கம் , புலி போல இத்தாவரங்கள் சுத்தமான அசைவப் பிரியர்களா இவை... ? இதற்குப் பதில் என்னவென்றால் இல்லை என்பதுதான். பிறகு ஏன் இவை மாமிசம் சாப்பிடுகின்றன..? நமக்குப் போரடித்தால் வாரத்தில் ஒரு தடவை ஞாயிற்றுக் கிழமை சிக்கன் 65 சாப்பிடுகிறோமே அது போலவா..?

பூச்சி இரையாகப் போகுது

உண்மையில் மற்ற தாவரங்களைப் போலவே இத்தாவரங்களுக்கும் பச்சையம் உண்டு. இவை வாழ நீர் , சூரிய ஒளி , காற்று அவசியம். ஆனால் இவை தவிர சில முக்கியத் தனிமங்களும் இவற்றுக்குத் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் அத்தனிமங்கள் இவை வளரும் நிலத்தில் இருப்பதில்லை. அல்லது மிகக்குறைந்த அளவில் இருக்கும். எனவே இந்த நைட்ரஜன் போன்ற தனிமங்களுக்காகத்தான் பூச்சி போன்ற சிறிய விலங்குகளைத் தின்றுவிடுகின்றன.

சமீபத்தில் நெதர்லாந்து போயிருந்தபோது இந்த நெபந்தஸ் தாவரம் ஒன்றைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சின்ன பூச்சட்டியில் முழுத்தாவரத்தையும் விற்பனைக்காகத் தொங்கவிட்டிருந்தார்கள். இத்தாவரம் பூச்சிகளைக் கவர அதற்கே உரிய ஒரு வாசனையைப் பரப்பும். இந்த வாசனையை நுகர்ந்து பூவுக்குள் பூச்சி நுழைந்தவுடன் தாவரம் தயாராக வைத்திருக்கும் மூடியைக்கொண்டு அப்பூவை மூடிவிடும். அப்புறமென்ன உள்ளே போன பூச்சியின் கதி அதோ கதிதான்.

ஆனால் நாம் பொங்கலுக்குக் கரும்பைக் கடித்து, அரைத்து தின்பதுபோல பூச்சியைத் தின்ன அத்தாவரத்துக்குப் பற்கள் இல்லை. ஆனால் மற்ற படி நாம் உணவைச் ஜீரணிப்பதுபோலத்தான் அதுவும் ஜீரணிக்கிறது. பூச்சியைப் பிடித்ததும் அந்தப் பூ ஒரு சின்ன வயிறு போலவே செயல்பட ஆரம்பிக்கிறது. மெதுவாக ஒரு திரவத்தைச் சுரக்கிறது. அந்தத் திரவம் பூச்சியின் முழு உடலையும் கரைத்த பின்னர் அதிலுள்ள , கனிமங்களை உறிஞ்சி எடுத்துக்கொள்கிறது. சரி, இது சின்னப் பூச்சிகளுடன் நிறுத்திக்கொள்கிறதா ? இல்லை, சிறிய தவளைகள், சில சமயம் எலிகள் கூட இத்தாவரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மனிதனைத் தின்னுமளவுக்கு தாவரங்கள் இல்லை என்பதே உண்மை. இவ்வகைத்தாவரங்கள் மனிதனைக்கூடத் தின்னும் என்ற வதந்தி பரவக் காரணம். பல மீட்டர் வரை வளரும் அமர்போபாலஸ் டைட்டானியம் போன்ற அசைவத்தாவரங்களாக இருக்கலாம். இவை வளர்ந்தவுடன் பூச்சிகளை ஈர்க்க நம்மால் சகிக்கமுடியாத துர்நாற்ற்த்தைப் பரப்பும், கிட்டத்தட்ட அந்த நாற்றம் ஒரு மனிதன் அந்த பூவுக்குள் இறந்து,அழுகிக்கிடப்பதைப் போல் இருக்குமாம். இது போல் நிறையத் தாவரங்கள் இருக்கின்றன. இதனால் இத்தகைய கட்டுக்கதைகள் பரவியிருக்கலாம்.

துர்நாற்றம் வீசும் பூச்சித்திண்ணித் தாவரம்


உண்மையில் ஒருவர் சொன்னது போல, அசைவத்தாவரங்களால் மனிதனுக்கு ஆபத்து என்பதை விட மனிதனால் அசைவத்தாவரங்களுக்கு ஆபத்து என்பதே பொருத்தமாக இருக்கும். இவற்றின் பிரபலத்தன்மையே அவற்றுக்கு ஆபத்தாகிவிட்டது. இதைக் கண்டவுடன் வேரோடு பிடுங்கி , விற்றுவிடுகின்றனர். இதனால் இப்போது இத்தாவரங்கள் அருகி வருகின்றன.
(0) Your Comments | | | |

Thursday, January 15, 2004

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ... !

(0) Your Comments | | | |

Wednesday, January 14, 2004

டச்சுக்காரர்கள் .... நெதர்லாந்து ...ஆம்ஸ்டர்டாம் ...


ஜெர்மனியில் நான் இருக்குமிடத்தில் இருந்து ஆம்ஸ்டர்டாம் மிகவும் பக்கம்.. 4 மணி நேரம் பஸ்ஸில் பயணம் செய்தால் ஆம்ஸ்டர்டாமை அடைந்துவிடலாம் ... இன்னும் ஒரு பெரிய வசதி என்னவென்றால் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உள்ளவர்கள் யூனியனில் உள்ள பிற ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும்போது விசா எதுவும் தனியாக எடுக்கத் தேவையில்லை ...

Click to enlarge


நம்மூரிலும் இதுபோல் வந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது .. இந்த முறை சார்க் மாநாட்டில் இநதிய நிதியமைச்சர் சார்க் நாடுகள் அனைத்துக்கும் பொதுவான நாணயமுறையைக் கொண்டுவருவது பற்றிப் பேசியிருக்கிறார் ..பாகிஸ்தான் இதை ஆதரிக்குமென்று தோன்றவில்லை .. வளைகுடா நாடு ஒன்றின் நிருபர் சார்க் நாடு அனைத்துக்கும் ஒரே நாணய முறை கொண்டுவந்தால் இந்தியாதான் அதிகமாய் ஆதிக்கம் செலுத்தும் .. எனவே இதை சரிக்கட்ட சீனாவையும் , ஈரானையும் சேர்க்கவேண்டும் என்று கூறியவுடன் கடுப்பான யஷ்வந்த் சின்கா சிரித்துக்கொண்டே சொன்னாராம்.. " ... ம்... செய்யலாம்.. கூடவே அமெரிக்காவையும் சேர்த்துக்கொள்ளலாம் .. அதுதான் சூப்பர் பவராயிற்றே ... "

சரி .. நம்முடைய கதைக்கு வருவோம் ... என்ன பேசிக்கொண்டிருந்தோம் ...? .. ஐரோப்பிய நாடுகளுக்குள் பயணம் தனியாக விசா தேவையில்லை ... ஒரு சுவையான நிகழ்ச்சி .. இங்கே இருக்கும் என்னுடைய மகாராஷ்டிர நண்பர் ஒருவர் சென்றமுறை நெதர்லாந்து சென்றபோது பாஸ்போர்ட்டையே மறந்து எடுத்துக்கொள்ளாமல் சென்று நெதர்லாந்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்துவிட்டார்.. என்ன நகைச்சுவை என்றால் அவர் திரும்பவும் ஜெர்மனிக்குத் திரும்பிய பிறகுதான் அவருக்கு பாஸ்போர்ட் நினைவே வந்திருக்கிறது ... உலகம் நிறையத்தான் மாறி வருகிறது ... சீக்கிரம் கணியன் பூங்குன்றனாரின் " யாதும் ஊரே யாவரும் கேளிர்... " கூற்று உண்மையாகிவிடும் என்றே தோன்றுகிறது ..

Click to enlarge


சரி.. நம் பயணத்தைத் தொடர்வோம் .. அன்று சனிக்கிழமை .. காலை 6 மணிக்கு பஸ்ஸில் கிளம்பினோம் .. கிளம்பியபோது மகாராஷ்டிர நண்பரின் நினைவு வரவே என்னுடைய பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டுவிட்டேனா என்று ஒருமுறை சரிபார்த்துக்கொண்டேன் ....


நான்கு மணி நேரத்தில் நெதர்லாந்தை அடைந்துவிட்டோம் .. அதற்கு முன்னரே ஆங்கேங்கே தெரிந்த சில ஆங்கிலப் பெயர்ப்பலகைகள் ஜெர்மனியை விட்டு வெளியே இருக்கிறோம் என்பதைக் காட்டிவிட்டது ... ஜெர்மனியில்தான் பொதுவாக ஆங்கிலப்பலகைகளையே காணமுடியாதே ... பார்க்குமிடமெல்லாம் எங்கும் ஜெர்மன் ... எதிலும் ஜெர்மன்தான் ... ! .. புகைப்படம் எடுக்க நான் காமெராவைக் கொண்டுவரவில்லை .. உடன்வந்த என்னுடைய நண்பர் சுரேஷ் தன்னுடைய டிஜிட்டல் கேமாரவைக் கொண்டுவந்திருந்தார் .. இங்கு திரும்பிய பின்னர் மறக்காமல் அவரிடமிருந்து அனைத்துப் புகைப் படங்களையும் என்னுடைய கணினியில் ஒரு காப்பி எடுத்துக்கொண்டுவிட்டேன் ..... இங்கே காண்பவை எல்லாம் அந்தப் புகைப்படங்கள்தாம்

(0) Your Comments | | | |

Monday, January 12, 2004

டச்சுக்காரர்கள் .... ஆம்ஸ்டர்டாம்...

நேற்று நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் போயிருந்தோம் நண்பர்களுடன் .
சுவாரசியமாக இருந்தது. அதைப் பற்றி நிறைய எழுதவேண்டும் என்று நினைக்கிறேன் .. சமயம் வாய்க்கவில்லை .. எப்படியும் இந்த வாரம் எழுதி அனைவரையும் ஒரு வழி பண்ணிவிடவேண்டியதுதான் ...
(0) Your Comments | | | |

Tuesday, January 06, 2004

பெரும் அறிவியலாளர் ஆட்டோவான் கிரிக்

இரு வாரங்களுக்கு முன்னர் ஜெர்மனியின் கிழக்குப் பகுதியிலுள்ள மெக்டபர்க் என்ற நகருக்குச் சென்றிருந்தேன் ... அங்குள்ள நண்பர்களுடன் ஊரைச் சுற்றினோம் ... கடைசியாக ஒரு சிலையைக் காட்டினர் நண்பர்கள் ...





அந்தச் சிலையின் கீழே பக்கவாட்டுப்பகுதியில் பல குதிரைகள் இரு அரைக்கோள வடிமுள்ள கிண்ணங்களை பிரிக்க இழுப்பதைப் போல் செதுக்கப்பட்டிருந்தது .. அதை எங்கோ பார்த்த ஞாபகமாய் இருக்க அச்சிலை யாருடையது என்று கேட்டேன் ... அவர் சொன்ன தகவல்கள் சுவாரசியமாக இருந்தது ... நாங்கள் பார்த்த சிலை ஆட்டோ வான் கிரிக் என்ற அறிவியலாளரின் சிலை ... அவர் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் ... உண்மையில் அவர் ஒரு பொறியியலாளர்.. அதுவும் ராணுவத்துக்கு தேவையான கருவிகளைச் செய்வதற்காகப் பணி புரிந்தவர் ...







அவர் சொல்ல ஆரம்பித்தவுடன் எனக்கு முழுவதும் நினைவுக்கு வந்ததுவிட்டது .. பள்ளி அறிவியல் புத்தகத்தில் படித்திருக்கிறேன் ... அவரின் திறமையால்,உழைப்பால் பதினாறாம் நூற்றாண்டில் பல கருவிகளைக் கண்டறிந்தவர்..... பின்னர் அவரின் கடைசிக் காலத்தில் மெக்டொபர்க் நகரின் மேயராகவே ஆகிவிட்டார் ..


முதன் முதலில் வளி மண்டலத்தின் அழுத்தத்தின் திறன் எவ்வளவு அதிகமானது என்பதைப் பெருந்திரளாய்க் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் கண்கூடாகச் செய்துகாட்டினார் ....

அவர் செய்தது இதுதான்...இரு அரைக்கோள வடிவக் கிண்ணங்களை ஒன்றுடன் ஒன்று பொருத்திப் பின்னர் அந்தக் கிண்ணங்களுக்கு இடையேயுள்ள காற்றை வெளியேற்றினார் ... இப்போது அந்தக் கிண்ணங்களுக்கு இடையில் இருப்பது வெற்றிடம் ... அந்த வெற்றிடத்தை நிரப்ப சுற்றியுள்ள காற்று அந்தக் கோளங்களை அனைத்துப் புறங்களிலிருந்தும் அழுத்தும் .... அந்த அழுத்தத்தின் காரணமாய் அதை பிரிப்பது அவ்வளவு எளிதான வேலையில்லை ... பல குதிரைகளை இரண்டு புறமும் கட்டி இழுக்க முயற்சித்தும் அக்கோளங்களைப் பிரிக்க முடியவில்லை ... அதன் பின்னர்தான் அனைவருக்கும் வளிமண்டலத்தில் அழுத்தம் எத்தனை சக்தி வாய்ந்தது என்று தெரிந்தது ...







நண்பர்களிடம் சொன்னேன் ... ஒரு காலத்தில் இதைப் பள்ளி அறிவியல் புத்தகத்தில் படித்தபோது அந்த இடத்தை நேரடியாகப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை . அதற்கு சிரித்துக்கொண்டே அந்த நண்பர் சொன்னார்.. நீங்களாவது அந்த இடத்தைத்தான் பார்க்கிறீர்கள்.. நான் விரையில் இந்தச் சிலைக்குக் கீழேயே பட்டம் வாங்கப் போகிறேன், இதை நான் என்று எதிர்பார்த்தேன் என்றார் .. கொஞ்சம் விசாரித்தபோதுதான் தெரிந்தது ...

இன்றும் அவரின் நினைவைப் போற்றும் விதமாய் பல செயல்கள் அங்கு நடைபெற்று வருகின்றன .. உதாரணமாக ... ஒவ்வொரு வருடமும் மெக்டொபர்க் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முடித்து பி.ஹெச்.டி பட்டம் பெருபவர்கள் அனைவரும் அந்த மெக்டொபர்க் நகரின் வீதி வழியாக அலங்கார வண்டியில் கொண்டு வரப்பட்டு மேலே நாம் காணும் அவரின் சிலையில் முன்னால்தான் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது .
(0) Your Comments | | | |

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com