<$BlogRSDUrl$>

Monday, May 31, 2004

வெப்பமான கோடைக்காலம் ...


சென்ற 2003 ஆம் வருடக் கோடைக்காலம் கடந்த ஐந்து நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் மிக வெப்பமான கோடையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்த கோடை ஐரோப்பாவையும் விட்டுவைக்கவில்லை. ஐரோப்பாவை அதைவிட அதிகமாகப் பாதித்தபடியால் கிட்டத்தட்ட 17,000 பேருக்கு மேல் ஐரோப்பாவில் மட்டும் பலியானார்கள். ஐரோப்பாவில் குளிருக்குத் தயாராக இருக்கும் மக்கள் வெப்பத்துக்கு அந்தளவுக்கு ஆயத்தமாய் இருப்பதில்லை. இங்கு மின் விசிறிகளைப் பார்ப்பதே மிக அபூர்வம். போதாதற்கு கட்டிடங்களின் சன்னல்கள் பெரும்பாலும் மூடப்பட்டே இருப்பதால் வெப்பத்தின் உக்கிரத்தை இன்னும் அதிகப்படுத்திவிடுகின்றன. எனவேதான் கோடையின் உக்கிரமாய் இருக்கும் சில நாட்கள் கூட இங்குள்ள மக்களைப் பாடாய்ப்படுத்திவிடுகிறது. ஜெர்மனியை எடுத்துக் கொண்டால் மின்விசிறிகளைப் பயன்படுத்தியவர்கள் கொஞ்சம்தான். இவர்களில் சிலர் "சீலிங் பேனைப்" பார்த்ததே இல்லை. இந்த நேரத்தில் ஒரு ஜெர்மன் நண்பர் குடையைப் பற்றி என்னிடம் சந்தேகம் கேட்டது சம்பந்தமே இல்லாமல் நினைவுக்கு வருகிறது.

ஐரோப்பா கோடைக்காலத்தில் எனக்குப் பிடித்த விஷயம் மிக நீண்ட பகல்தான். இரவு 11 மணிக்கு ஆனபிறகும் கூட வெளிச்சமாய் இருக்கும். சில சமயம் சூரியன் மறைவதே இரவு 10 மணிக்கு மேல்தான். மதியம் சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டிவிட்டு நன்றாய்த் தூங்கி இரவு எட்டு மணிக்கு எழுந்தால் பெரிய குழப்பமே வந்துவிடும்- இது காலை எட்டு மணியோ என்று. இங்கு வந்த புதிதில் இரவு ஏழு மணியை அடுத்த நாள் காலைதான் என்று நினைத்து பல்துலக்கி குளித்துவிட்டு ரெடியான நண்பர் ஒருவரை எனக்குத் தெரியும்.

இந்த வருடக்கோடை எப்படி இருக்குமென்று தெரியவில்லை என்று சொன்ன இங்கிருக்கும் நண்பரிடம், "...போன வருடம் மாதிரியே அதிக வெப்பமாய் இருக்குமென்று நினைக்கிறேன்.." என்று சொன்னேன்.
பதிலுக்கு அவர்,.".. ஒரு வேளை உங்கள் வாக்குப் பலித்தால் உங்களைச் சும்மா விடமாட்டேன்.." எனச் செல்லமாய் மிரட்டியிருக்கிறார்.
(0) Your Comments | | | |

Sunday, May 30, 2004

தமிழ் - செம்மொழி அந்தஸ்து அவசியமா ... ?


இந்திய அரசால் தமிழ் செம்மொழி என அறிவிக்கப்படவுள்ளது. பல்லாண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கவேண்டிய விஷயம் இது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேல் தாமதமாய் நடந்தாலும் இது அனைவரும் கொண்டாட வேண்டிய விஷயம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

தமிழ் செம்மொழி என அறிவிக்கப்படுவதால் என்ன பெரிய நன்மை.. ? , இது அவ்வளவு முக்கியமான விஷயமா..? என்ற தொனியில் தமிழ் நன்றாய் அறிந்த நண்பர்களே கேட்கும்போது மனதில் ஏற்படும் தாங்க இயலா அதிர்ச்சியை, ஆற்றாமையைத் தவிர்க்க இயலவில்லை. தமிழைச் செம்மொழி என அதிகாரப்பூர்வமாய் அறிவிப்பது என்பது நம்மூர் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் கவுரவ டாக்டர் பட்டம்போலவோ என்று பலர் நினைப்பது ஏக்கம் தரும் சோகமான விஷயம்.

உலகில் செம்மொழி என அதிகாரப்பூர்வமாய் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் கிரீக், லத்தீன், ஹீப்ரு, சீனம், சமஸ்கிருதம், பாரசீகம் ஆகிய மொழிகள் மட்டுமே. எனவே இந்த மொழிகளில் உலக அளவில் பல பல்கலைக்கழகங்களில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பணம் செலவழிக்கப்பட்டு மொழியியல் ஆய்வுகள் நடந்துவருகின்றன. செம்மொழி என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சமஸ்கிருத மொழி ஆய்வுகளுக்காய் ஆண்டுதோரும் பல கோடி ரூபாய் இந்திய அரசால் செலவழிக்கப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதானே..? இந்தியா தவிர மேற்கத்திய நாடுகளிலும், பிற நாடுகளிலும் சமஸ்கிருதம் உள்ளிட்ட அனைத்துச் செம்மொழி ஆய்வுகளுக்காகவும் ஆண்டுதோறும் பல மில்லியன் டாலர் பண உதவியுடன் ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. தமிழ் செம்மொழியாக உலகெங்கிலும் உள்ள மொழியியல் அறிஞர்களால் அறியப்பட்டிருந்தாலும், தமிழ் மொழி ஆய்வுகள் பல்லாண்டுகளாய்ப் பல்வேறு நாடுகளில் உள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவந்தாலும், தமிழ் செம்மொழி என அதிகாரப்பூர்வமாய் அறிவிக்கப்படாமல் இருந்தது ஒரு பெரிய குறையாகவே இருந்து வந்தது.

செம்மொழி என ஒரு மொழி அழைக்கப்பட அதற்கு இருக்கவேண்டிய தன்மைகளான தனித்து இயங்கும் தன்மை, பழமை, பல மொழிகளின் தாய், இலக்கிய, இலக்கண வளம் என அனைத்துத் தகுதிகளும் தமிழுக்கு இருந்தாலும் பல்லாண்டுகளாய்க் கவனிக்கப்படாமலேயே இருந்துவந்தது. தமிழ் செம்மொழியாய் அறிவிக்கப்பட இருப்பதால் இனி வரும் ஆண்டுகளில் சமஸ்கிருதத்துக்குச் செய்யப்பட்டு வருவதைப்போலத் தமிழ் வளர்ச்சிக்காகவும் பெரும் அளவில் மத்திய அரசால் பணம் ஒதுக்கீடு செய்யப்படும். இப்போது இருப்பதை விட அதிக அளவில் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், மேற்கத்திய நாடுகளிலும் தமிழ்த்துறைகள் புதிதாய்த் துவங்கப்பட இது வழிவகுக்கும்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர். ஜார்ஜ் எல். ஹர்ட் ஆதங்கத்துடன் சில வருடங்களுக்கு முன்பு சொல்லியிருந்தததை முடிந்தவரை தமிழாக்கியிருக்கிறேன்,


" ...... தமிழைச் செம்மொழி என அதிகாரப்பூர்வமாய் இன்னும் அங்கீகரிக்காதது அரசியல் காரணங்களாலேயே என நம்புகிறேன். தமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட்டால் பிற இந்திய மொழிகளும் செம்மொழி அங்கீகாரம் கோரும் என்ற பயமும் இதற்குக் காரணம்.ஆனால் இது ஒரு தேவையில்லாத அச்சம். இந்திய மொழிகளின் இலக்கிய வளத்தையும், செழுமையையும் நான் நன்றாகவே அறிந்திருக்கிறேன். உலகின் சிறந்த மொழிகளின் பட்டியலில் அவைகளும் பங்கு வகிப்பதை அறிவேன். ஆனாலும் தமிழையும், சமஸ்கிருதத்தையும் தவிர ஏனைய இந்திய மொழிகள் செம்மொழி அல்ல, ஐரோப்பாவில் கிரீக் செம்மொழி என அறிவிக்கப்பட்டதால் ஜெர்மன், பிரெஞ்சு , ஆங்கிலம் போன்ற பிற மொழிகள் செம்மொழி அந்தஸ்து கோரும் நிலை ஏற்படவில்லை, அவைகளால் அவ்வாறு கோரவும் இயலாது...

............... தமிழ் செம்மொழி என்று கூறுவதற்காய்க் கட்டுரை எழுதவேண்டிய நிலை ஏற்பட்டது எனக்கு வினோதமாக இருக்கிறது. இந்தியா ஒரு பெரிய, சிறப்புமிக்க நாடு என்றும், இந்துமதம் உலகின் சிறந்த, பெரிய மதங்களுள் ஒன்று என்றும் நிறுவுவதற்குக் கட்டுரை எழுத அவசியமில்லை அதைப்போலவே, தமிழ் செம்மொழி என நிரூபிக்கக் கட்டுரை எழுத அவசியமே இல்லை... "

தமிழ் செம்மொழிதான் என இப்படி அயல்நாட்டவர் சான்றிதழ் வழங்கும் நிலை ஏற்பட்டதை என்னவென்று சொல்வது.. ? :(

ஆர்வமுடையவர்களுக்காக

1. பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹர்ட்
2. விக்கி பீடியா
3. பிரிட்டாணியா
(0) Your Comments | | | |

Saturday, May 29, 2004

டை கட்டிய டாக்டரா .. ? உஷார் .. !


ஆபத்தான விஷக்கிருமிகள் தாக்கி நோய் வந்தால் மருத்துவரிடம் போகலாம். மருத்துவரே விஷக்கிருமிகளை வைத்திருத்தால் யாரிடம் போவது.. ? ( இதைத் தங்கப் பதக்கம் சிவாஜி ஸ்டைலில் வாசிக்கவும்). சில நாட்களுக்கு முன்னால் அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரியவந்த விஷயம் கொஞ்சம் யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது. நம்மூரில் பெரும்பாலான டாக்டர்கள் கழுத்தில் டை கட்டிக்கொண்டு வைத்தியம் பார்ப்பதாய்த் தெரியவில்லை. எனவே இந்த விஷயத்தில் நம்மூரில் யாரும் அந்தளவுக்குப் பயப்படவேண்டியதில்லை. விஷயத்தைச் சொல்லவே இல்லையோ .... விஷயம் இதுதான், மருத்துவர்கள் கட்டியிருக்கும் டையில் வழக்கமாய் இருக்கும் கிருமிகளின் அளவைவிட பலமடங்கு அதிகமாய் இருப்பதாய்த் தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் வேலையில் பார்க்கும் செக்யூரிட்டி நபர்களின் டையுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட எட்டு மடங்கு அளவு கிருமிகள் அதிகமாய் இருக்கிறதாம். இதனால் சில நாடுகளின் மருத்துக் கழகங்கள் மருத்துவர்கள் பணியில் இருக்கும்போது டை கட்டுவதைத் தடை செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.நோயாளிகளை மருத்துவர்கள் நெருங்கிச் சோதனை செய்யும்போது டை அவர்களை உரசுவதும் , நோயாளிகளைச் சோதனை செய்தபின் கையை டையில் தடவுவதும் இதற்குக் காரணம் என அறியப்பட்டுள்ளது.
(0) Your Comments | | | |

Friday, May 21, 2004

கன்னத்தில் "பளார்" வாங்கிய அதிபர் ...



முகத்தில் அறைந்தால் போல பேசினார் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம்.. கடந்த வாரம் ஜெர்மனி அதிபர் ஷ்ரோடரை ஒருவர் முகத்தில் உண்மையிலேயே அறைந்து விட்டார். ஜெர்மனியில் அதிபரைச் சந்திப்பது என்பது, தற்போதைய தமிழக முதல்வரைச் சந்திப்பதுடன் ஒப்பிட்டால் அவ்வளவு கடினமான காரியமே அல்ல.. அதிபரைச் சந்திக்க அந்தளவுக்குக் கெடுபிடிகள் ஏதுமில்லை. அதனால்தான் ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக்கூட்டத்தில் அதிபர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இது நடந்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் அதிபர் ஷ்ரோடர், அவரது கட்சியில் புதிதாய்ச் சேர்ந்த நபர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார், அப்போது அருகில் நின்று கொண்டிருந்த அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு நபரே அதிபரின் இடது கன்னம் சிவக்கும்படி " பளார்" என ஒரு அறை விட்டார். அருகிலிருந்த அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க , அதிபரின் பாதுகாப்புப் படைவீரர்கள் அந்த நபரைப் பாய்ந்து பிடித்தனர். கைது செய்யப் பட்ட அந்த நபர் போலீஸ் விசாரணையில் "பளார்" விட்டதற்கான காரணம் எதையும் தெரிவிக்கவில்லை. அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் , வழக்குத் தொடரப்பட்டு விடுவிக்கப்படிருக்கிறார். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை வரை அவருக்கு விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

மக்கள் ஒன்றும் இதை அவ்வளவு பெரிதாய் எடுத்துக் கொண்டதைப் போலத் தெரியவில்லை. ஜெர்மனியில் ஒரு அமைச்சர் இப்படி சொல்லியிருக்கிறார்..

"..... என்னதான் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இதுபோல் நடப்பதைத் தடுக்க முடிவதில்லை.. இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்னால் என் மீதும் "பெயிண்ட் குண்டு " வீசப்பட்டு எனது காதில் காயம் ஏற்பட்டது... "

"பெயிண்ட் குண்டு" என்றவுடன் ஏதோ ஆபத்தான பெரிய குண்டு என நினைத்துவிட வேண்டாம், ஒரு மெல்லிய பாலித்தீன் பையில் பெயிண்ட்டை நிரப்பி வீசுவதுதான் பெயிண்ட் குண்டு. அவர் மீது அன்று வீசப்பட்டது சிவப்பு நிறப் பெயிண்ட்.
(0) Your Comments | | | |

Tuesday, May 18, 2004

மைக்ரோசாப்ட் Vs வெங்காயம்


வெங்காயம்(onion) மிகப் பிரபலமான ஒன்று. நாம் சாப்பிடும் வெங்காயத்தை நான் சொல்லவில்லை. இது ஒரு செய்திப் பத்திரிக்கை, மற்ற செய்திப் பத்திரிக்கைகளுக்கும் இதற்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு, சாதாரணமாய் எல்லாப் பத்திரிக்கைகளும் நடந்த(?) செய்திகளை அப்படியே(!) வெளியிட்டால் "வெங்காயம்" மட்டும் கற்பனையாகச் செய்திகளை வெளியிடும். இந்தக் கற்பனைச் செய்திகளின் நோக்கம் புரளியைக் கிளப்புவது அல்ல, வயிறு குலுங்கச் சிரிக்கவைப்பது மட்டுமே. நம் நண்பர்கள் பலருக்கு இந்த வெங்காயத்தைப் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். இதில் வந்த பல கற்பனைச் செய்திகள் மிகப் பிரபலமடைந்து உண்மையான செய்தியாக இருக்குமோ என்ற அளவுக்குச் சந்தேகத்தைக் கிளப்பியதுண்டு.

அதில் ஒன்று மைக்ரோசாப்ட் ஒரு நூதன காப்புரிமை பெற்றதாய் வந்த செய்தி. இந்தக் கற்பனைச் செய்தி கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்னர் ஆனியன் இதழில் வந்து மிகப் பிரபலமடைந்து அனைவராலும் பேசப்பட்டது. இங்கே என் நண்பரொருவர் சில மாதங்களுக்கு முன்னால் என்னிடம் அதே செய்தியைக் கூறி இது உண்மைதான் எனப் பிடிவாதமாய்ச் சொன்னார். அது ஒன்றும் நீங்கள் நினைக்கும் அளவுக்கு நூதனமான காப்புரிமை அல்ல. பூச்சியம் , ஒன்று ஆகிய எண்களுக்கு மைக்ரோசாப்ட் காப்புரிமை(!) பெற்றிருக்கிறது என்பதுதான் அந்த நகைச்சுவைச் செய்தி. அமெரிக்கா செய்யும் காப்புரிமைகளைப் பார்க்கும்போது சில வருடங்களில் இது உண்மையாகவே நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, என்றாலும் அவர்கள் எழுதியிருந்த விதத்தைப் படித்தவுடன் என்னால் சிரிப்பை அடக்கவே இயவில்லை, அதுவும் பில்கேட்ஸ் இந்தக் காப்புரிமை பெற்றபின் பத்திரிக்கைக்குக் கொடுத்த பேட்டி என ஒன்றை எழுதியிருந்தார்களே மிக அசத்தல்.

" ..... இதை ஒரு கூட்டுமுயற்சியாய்ச் சிந்திக்க வேண்டும். மின்னிலக்க முறையில் எப்படி ஒன்றும் , பூச்சியமும் இருக்கிறதோ அதேபோல் உலகின் தனிச்சிறப்பு வாய்ந்த, மிகப் பெரிய , பணக்கார நிறுவனமான மைக்ரோசாப்ட் எண் ஒன்றைப் போன்றது , எங்கள் நிறுவனம் உருவாக்கும் மென்பொருட்களைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான நுகர்வோர்களே நீங்கள்தான் அந்தப் பூச்சியம்... கம்ப்யூட்டர் உலகத்தில் புரட்சியை ஏற்படுத்த நாம் இருவரும் சேர்ந்து செயல்படவேண்டும்."
(0) Your Comments | | | |

Friday, May 14, 2004

யாகூவும் களத்தில் இறங்குகிறது ... !


மின்னஞ்சல் வசதியைப் பயன்படுத்திவரும் அனைவருக்கும் மற்றுமொரு நற்செய்தி.. யாகூ தற்போது வழங்கி வரும் இலவச மின்னஞ்சல் சேவையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. தற்போது அளித்து வரும் 6 MB மின்னஞ்சல் சேவையை 100 MB அளவுள்ளதாய் மாற்ற முடிவுசெய்துள்ளதாய்த் தெரிகிறது. ஒரு வருடத்துக்கு 50 டாலர் செலுத்தி இப்போது சேவையைப் பயன்படுத்திவரும் பயனாளர்கள் எத்தனை மெகாபைட் வேண்டுமானாலும் உபயோகிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஜிமெயில் 1 ஜிகாபைட் அளவுள்ள மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நம் நண்பர்கள் பலரும் இப்போது ஜிமெயில்தான் பயன்படுத்துகிறார்கள்.என்றாலும் ஜிமெயில் இன்னும் அனைவரும் பயன்படுத்தும்படி பொதுவாக்கப்படவில்லை.அவ்வாறு வரும்போது அதற்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதனால் ஏற்படும் போட்டியைச் சமாளிக்கவே யாகூ இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாய்த் தெரிகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த மாற்றம் நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. போகிற போக்கைப் பார்த்தால் இன்னும் சிலவருடத்தில் மெகாபைட்டில் எந்த மின்னஞ்சலும் இருக்காதோ .:)
(2) Your Comments | | | |

Thursday, May 13, 2004

வர்ணஜாலம்


பொதுவாய் ஒரு வேதிப்பொருளை ஒரு திரவத்தில் கரைத்தால் அந்தப் பொருளின் நிறம்தான் அந்தக் கரைசலுக்குக் கிடைக்கும். தண்ணீரில் செம்மண்ணைப் போட்டுக் கலக்கினால் கிடைப்பது சங்க இலக்கியப்புகழ் சிவப்பு நிறச் செம்புலப்பெயல்நீர். இதற்குக் காரணம் அதிலுள்ள இரும்புத்தாது என்பது வேறு விஷயம். தண்ணீர் ஆவியானால் அந்தச் செம்மண்ணைத் திரும்பவும் பெறமுடியும். இதேபோல் சமையல் உப்பைத் தண்ணீரில் கரைத்தால் நிறமற்ற கரைசல் கிடைக்கும், கரைசலை ஆவியாக்கினால் திரும்பவும் அந்த உப்பே நமக்குக் கிடைக்கும், உப்பளங்களில் நடக்கும் விவசாயம் இதுதானே. இதேபோல் நீல நிற காப்பர் சல்பேட் படிகத்தைத் தண்ணீரில் கரைத்தால் அழகிய நீல நிறக் கரைசல் கிடைக்கும், பிறவற்றைப் போலவே கரைசலை ஆவியாக்கினால் திரும்பவும் காப்பர் சல்பேட் படிகத்தை திரும்பப் பெறலாம்.





"ஃபிரிடினோ பீனோலேட்" என்ற குடும்பத்தைச் சேர்ந்த வேதிப்பொருட்கள் மேற்கண்ட சாதாரண நிகழ்வுக்கு விதிவிலக்காய் இருக்கிறன. இவை நாம் கரைக்கும் திரவத்தின் தன்மையைப் பொருத்துக் கரைசலின் நிறத்தை மாற்றிக் காட்டும். பொதுவாய் இக்கரைசலின் வண்ணம் பளிச்சென மனதைக் கவரும் நிறமாகப் இருக்கும். எல்லாம் சரி, இந்த நிகழ்வு எதற்குப் பயன்படப்போகிறது ? என்றால் இதைப் பல நோக்கங்களுக்காய்ப் பயன்படுத்த இயலும். உதாரணத்துக்குச் சொன்னால், திரவத்தின் அடிப்படைப் பண்பான "போலாரிட்டி" என்பதைத் தீர்மானிக்கவும் , இதற்காய் ஒரு தோராயமான அளவுகோலை உருவாக்கவும் இக்குறிப்பிட்ட வேதிப்பொருளைப் பயன்படுத்தலாம்.

"போலாரிட்டி" என்றால் என்ன என்பதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல ஆரம்பித்தால் முழுவதும் வேதியியல் சம்பந்தமாய் இருக்குமென்பதால் கொஞ்சம் எளிதாய் மேலோட்டமாய்ச் சொல்ல முயற்சிக்கிறேன். போலாரிட்டி என்பது கிட்டத்தட்ட மின்தன்மை போல என வைத்துக்கொள்ளலாம். போலாரிட்டி அதிகமான வேதிப்பொருட்கள் போலாரிட்டி அதிகமான திரவத்தில் மட்டும்தான் கரையும். உதாரணமாய் நாம் பயன்படுத்தும் சமையல் உப்பு போலாரிட்டி அதிகமான வேதிப்பொருள், எனவே இது போலாரிட்டி அதிகமாக உள்ள தண்ணீர் போன்ற திரவங்களில் மட்டும்தான் கரையும். மண்ணெண்ணையின் போலாரிட்டி மிகக் குறைவு எனவே மண்ணெண்ணையில் சமையல் உப்பு கொஞ்சம்கூடக் கரையாது. நண்பர்கள் யாராவது சிறுவயதில் மண்ணெண்ணையில் உப்பைக் கரைத்துப் பார்த்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. பள்ளியில் படிக்கும்போது மண்ணெண்ணையில் உப்பைக் கரைத்துப் பார்த்து திட்டு வாங்கிய அனுபவம் எனக்கு உண்டு. சொல்ல மறந்துவிட்டேன்.. அன்று எனக்கும் அது கொஞ்சம் கூடக் கரையவேயில்லை. தண்ணீரும், மண்ணெண்ணெயும் ஒன்றோடொன்று கலப்பதில்லை, இதற்குக் காரணமும் இந்தப் போலாரிட்டிதான்.

நமது விஷயத்துக்கு வருவோம். போனவாரம் மேலே குறிப்பிட்ட "பீனோலேட்" வகை வேதிப்பொருளை வேறு ஒரு ஆய்வுக்காய்த் தயாரித்தேன். ஒரு ஆசையில் அதைப் பல திரவங்களில் கரைத்துப் பார்த்தபோது, எதிர்பார்த்ததுபோலவே அழகான பல நிறங்களில் கரைசல்கள் கிடைத்தன. நண்பர்களுக்குக் காட்டலாமே என ஒரு போட்டோவும் எடுத்துவைத்தேன். அதுதான் நீங்கள் இங்கு பார்ப்பது. தங்க நிறத்தில் மஞ்சளாய்த் தெரிவது குறிப்பிட்ட வேதிப்பொருளைத் தண்ணீரில் கரைத்த கரைசல். மற்ற திரவங்களில் ஒன்றைத் தவிர ஏனையவை அனைவருக்கும் அவ்வளவு பரிச்சயமானவை அல்ல, இடமிருந்து வலமாக, கரைக்கப் பயன்படுத்தப்பட்ட திரவங்கள் டெட்ராஹைட்ரோபியூரான் , டைமெத்தில் ஃபார்மமைட் , தண்ணீர் , எத்தில் ஆல்கஹால் ( அட அதாங்க, எல்லோருக்கும் நல்லாத் தெரிஞ்ச நம்ம தண்ணி ;) )
(0) Your Comments | | | |

Tuesday, May 11, 2004

பிளாக் ஸ்பாட்டில் சில மாற்றங்கள் ...


பிளாக் ஸ்பாட் நிறுவனம் வலைப்பதிவில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறது. இனிமேல் யாரும் பின்னூட்டத்துக்காக வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. பிளாக் ஸ்பாட் தரும் பின்னூட்ட வசதியைப் பயன்படுத்த விரும்புபவர்கள் "செட்டிங்" பகுதிக்குச் சென்று comments என்ற பகுதியில் சிறுமாற்றம் செய்ய வெண்டும். கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் நண்பர் ஜான் போஸ்கோ இதைச் சொன்னார். சோதித்துப் பார்க்கலாம் என்பதற்காய் இப்பதிவினைச் செய்கிறேன். மேலும் பிளாக் ஸ்பாட்டில் இன்னும் நிறைய மாற்றங்களைக் காணமுடிகிறது. இதற்கு முந்தி இருந்ததை விட இப்போது செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் கொஞ்சம் நன்றாகவே இருப்பதாய்த் தெரிகிறது.. இதில் எதுவும் புதுப் பிரச்சனை வருமா எனப் போகப்போகத்தான் தெரியும்.
(3) Your Comments | | | |

Saturday, May 08, 2004

சோதிடம் என்னும் அற்புத அறிவியல் - 2


பகுதி - 1

சோதிடம் என்பது முழுவதும் மூடநம்பிக்கை.. பிற்போக்கானது என்று கூறுவது மிக எளிதானது. இதைக் கூற எவருக்கும் முழு உரிமை உண்டு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் இதைக் கூறுவதற்கு முன்னர் அவருக்குச் சோதிடத்தின் அடிப்படைகள் , தன்மைகள், ஆகியவற்றைப் பற்றி அறிவுப் பூர்வமான பரிச்சயம் இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தைப் பற்றிய முடிவையும் எடுப்பதற்கு முன்னால் எந்தப் பக்கமும் சாயாத தராசு முள்ளின் நடுநிலைத் தன்மை அவ்விஷயத்தைப் பற்றி மனதுக்கு இருக்கவேண்டும். அதன் குணாதிசயங்கள், அதைப் பற்றிய உங்களின் சொந்த அனுபவங்கள், அந்தச் சொந்த அனுபவங்களின் உண்மையான பின்புலம், இவற்றுடன் எதையும் ஆய்வு நோக்கில் சீர்தூக்கிப் பார்க்கும் தன்மை இவையனைத்தும் இருப்பின் ஒருவர் சோதிடம் என்பது முற்றிலும் மூடநம்பிக்கை, ஏமாற்றுப் புரட்டு என்று கூறவே மாட்டார்.

சோதிடம் புரட்டு என்ற முடிவை ஒருவர் தன்னுடைய நம்பிக்கையின் காரணமாகவோ, மெரினா பீச்சில் கையில் குச்சியுடன் குறி பார்க்கும் பெண்ணிடம் ஒரு தடவை பேசியதை வைத்தோ, தெருவில் போகும் கிளிஜோசியக்காரரிடம் சிறு வயதில் சோதிடம் பார்த்ததை வைத்தோ, தொலைக்காட்சியில் இப்போது அடிக்கடி வரும் பெயர் ராசி, அதிர்ஷ்டக்கல் என விதவிதப் பெயர்களில் அடுக்கடுக்காய் வரும் நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்த்தோ, சுயலாபத்துக்காய்ப் பித்தலாட்டம் செய்யும் ஏமாற்றுப் பேர்வழிகளைப் பார்த்தோ, கிரிக்கெட்டில் இன்று இந்தியா ஜெயிக்குமா என்று ஒரு அறிவுஜீவி சோதிடம் சொன்னதைப் பற்றியோ நினைத்து ஒருவர் எடுப்பாரானால் அது எத்தகைய தவறான முடிவு என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை.

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

என்று வள்ளுவர் சொன்ன சொல் இங்கே நினைவு கூறத்தக்கது. அதற்காய் சோதிடம் என்பது ஒரு முழுமையான இயல், அனைத்தும் சரியே என்று சொல்ல வரவில்லை. முழுமையான துறை என்பதாய் உலகில் இதுவரை எதுவும் இல்லை. இன்றைய அறிவியலை எடுத்துக் கொண்டால் அதன் வளர்ச்சி தொடர்ந்ததாய், நீண்ட நெடுங்காலமாய் இருந்து வந்திருக்கிறது, அறிவியலை இன்னும் ஆயிரக் கணக்காணோர் வளர்த்துவருகிறார்கள். ஆனால் இன்றைய அறிவியலில் வளர்ச்சி, அதற்காய் செய்யப்படும் முயற்சிகளின் அளவு ஆகியவற்றை சோதிடத்துடன் ஒப்பிட்டால் சோதிடம் என்பது சில நிமிடங்களுக்கு முன்னர் பிறந்த குழந்தை. அதன் வளர்ச்சி என்பது சொல்லிக்கொடும்படியாய் எதுவுமே இல்லை. சோதிடத்தை அனைவரும் பயன்படுத்த மட்டுமே விரும்புகிறார்கள், சோதிடத்தின் வரம்புகள், அதன் குறைகள் ஆகியவற்றை மறைக்க விரும்புவோர், குறையை மட்டுமே காட்டிக் கேலி செய்து "அறிவு ஜீவி" என்பதாய்த் தங்களைக் காட்டிக் கொள்வோர், அதைத் தங்கள் சொந்த லாபத்துக்காய்ப் பயன்படுத்த விரும்புவோர் இவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் சோதிடத்தை வளர்க்க, அதன் எல்லைகளை நீட்டிக்க ஆய்வுப் பூர்வமாய்ச் சிந்திப்பவர்களின் எண்ணிக்கை பல நூற்றாண்டுகளாய் மிகக் கொஞ்சமாகவே இருந்திருக்கிறது.

இந்த நிலையில், சோதிடத்தைப் பல்கலைக்கழகப் பாடங்களில் ஒன்றாக பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகரித்தது சரியே எனச் சில நாட்களுக்கு முன்னால் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது சோதிடத்தைப் பற்றி ஆய்வுப் பூர்மாய்ச் சிந்திப்பவர்கள் இன்றும் கொஞ்சப் பேர் இருக்கவே செய்கிறார்கள் என்ற நம்பிக்கையை மனதில் எழுப்புகிறது.
(1) Your Comments | | | |

Saturday, May 01, 2004

ஜி-மெயில் - உங்கள் நண்பருக்கும் ....


இதை நேற்று ஜான் போஸ்கோ சொன்னார்.. புதிதாய் ஜி-மெயில் கணக்குத் துவங்கியிருக்கும் நண்பர்கள் மேலும் இரு ஜி-மெயில் கணக்குத் துவங்க இயலும் அல்லது அவர்கள் நண்பர்களுக்கு உருவாக்கித் தர இயலும். இதை முயற்சி செய்ய விரும்பும் ஜி-மெயிலாளர்கள் (!) அவர்கள் மின்னஞ்சல் கணக்கில் முதலில் நுழையவும் அங்கே invite friend என்ற என்ற இணைப்பதைத் தட்டினால் நண்பரின் பெயரையும் , மின்னஞ்சல் முகவரியையும் கேட்கும் அவற்றைக் கொடுத்தால் உங்கள் நண்பருக்கு ஜி-மெயில் அனுப்பும் மின்னஞ்சலில் புதிதாய்க் கணக்குத் துவங்க ஒரு இணைப்பு இருக்கும். அவரால் ஒரு கணக்குத் துவங்க இயலும். இவ்வாறு மொத்தம் நீங்கள் இருவரைச் சிபாரிசு செய்ய இயலும்.

இதைப் பயன்படுத்தி நான் இன்னொரு ஜிமெயில் கணக்கு உருவாக்கியிருக்கிறேன். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.. !
(2) Your Comments | | | |

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com