<$BlogRSDUrl$>

Wednesday, February 25, 2004

மெகா சைஸ் வைரப்படிகம் ..!

Picture courtesy: Astro Society சமீபத்தில் அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைக்கழத்தின் விஞ்ஞானிகள் ராட்சத சைஸ் (இன்னும் சொல்லப்போனால் அதைவிட பெரிசு) படிகம் ஒன்று இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள் .. கிட்டத்தட்ட அதன் பண்புகள் வைரத்தைப்போலவே இருக்கிறது என்றும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள் .. உடனே அது எத்தனை காரட் என்று கேட்கவேண்டாம் ஏனென்றால் அதனைக் காரட்டில் சொல்வது கொஞ்சம்(?) கஷ்டமான காரியம் .. எத்தனை கிலோ மீட்டர் நீளம் என்று வேண்டுமானால் சொல்லலாம் ... கிட்டத்தட்ட அந்த படிகத்தோட அளவு நம் நிலாவின் அளவு இருக்குமாம் .. கற்பனை செய்து பார்த்தால் தலையே சுற்றுகிறது .. எந்த ஊரிலுள்ள வைரச்சுரங்கத்தில் இது கிடைத்தது என்று யாரும் யோசிக்குமுன் சொல்லிவிடுகிறேன் .. அது பூமியிலேயே இல்லை .. மேலும் அதில் சிறு பகுதியைக் கூட பூமிக்குக் கொண்டு வருவதும் சாத்தியம் இல்லை .. பிரபஞ்சத்தில் "வெள்ளை நிறக்குள்ளர்" என்று சொல்லப்படக்கூடிய இறந்து கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரத்தின் மையப்பகுதியில் இருக்கிறது இந்தப் படிகம்...

அசல் வைரம் முழுக்க முழுக்கக் கார்பன் என்ற தனிமத்தால் ஆனது..உண்மையான வைரத்தை எரித்தால் சாம்பல்கூட எஞ்சாது ..... நிலக்கரிக்கும் வைரத்துக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை .. இரண்டுமே கார்பன்தான்.. கரிக்கு மிக அதிக அளவில் அழுத்தம் கொடுக்கும்போது அதன் படிக அமைப்பு மாறி வைரமாக மாறிவிடுகிறது.. இப்போது கண்டுபிடிக்கப்பட்ட படிகம் கிட்டத்தட்ட சம அளவில் கார்பனும் , ஆக்ஸிஜனும் சேர்ந்து உருவானதாக யூகிக்கிறார்கள் .. நட்சத்திரத்தின் மையப்பகுதியில் இருக்கும் அழுத்தத்தில் கோடியில் சிறு பகுதிகூட வைரத்தை உருவாக்குவதற்குப் போதுமானது .. எனவேதான் இத்தனை பெரிய படிகம் ஒன்று அதில் உருவாகி இருக்கிறது .. மேலும் கார்பனும், ஆக்ஸிஜனும் சேர்ந்திருந்தாலும் இந்தப் படிகத்தின் பண்புகள் வைரம் போலவே இருப்பதாய் முடிவு செய்திருக்கிறார்கள் ... இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற வெள்ளைக்குள்ளர்களின் ஈர்ப்புசக்கதி மிக மிக அதிகமாக இருக்கும் .. அதனால் பூமியில் 50 கிலோ இருக்கும் ஒருவர்( 50 கிலோ தாஜ்மகால் ?) அங்கு போனால் சில நூறு டன்கள் எடை கொண்டவராய் இருப்பார் .. மேலே படத்தில் இருப்பதும் ஒரு வகை வெள்ளைக்குள்ளர் நடசத்திரம்தான்..

ஒரு சிறு கற்பனை .. மேலே சொன்ன படிகத்தில் சில(?) கிலோமீட்டர் நமக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்... ? சலவைக்கல் என்னங்க .. பெரிய சலவைக்கல் .. வைரக்கல்லிலேயே நாம் பல தாஜ்மகால் கட்டலாம் ....
(0) Your Comments | | | |

Sunday, February 22, 2004

வலைப்பூக்களும் , அது பற்றிய சில எண்ணங்களும்.. !

வெங்கட் அவர் வலைப்பூவில் எழுதியிருந்த மூன்றாம் வலை பற்றி இவ்வார வலைப்பூவில் ஐகாரஸ் பிரகாஷ் எழுதியிருந்தார் .. வளரும் நிலையிருக்கும் வலைப்பூத் தமிழுக்கு இது ஒரு தேவையான, அவசியமான கருத்துப்பரிமாற்றம் என்றே தோன்றுகிறது .. பிரகாசும், வெங்கட்டும் பல நல்ல கருத்துக்களைச் சொல்லியிருந்தார்கள் .. சாதாரணமாக டைரியில் எழுதுவதுபோல அன்றாட நிகழ்வுகளை வலைப்பூவில் எழுதுவதை ஒருவர் தவிர்க்கவேண்டும் என்று வெங்கட் சொல்லியிருந்தார். இங்கு அவர் கூறுவதிலிருந்து மாறுபட நினைக்கிறேன் .. ஒரு வலைப்பூவின் அல்லது வலைப்பதிவின் வீச்சு அங்கே இருந்து ஆரம்பிப்பதில் எந்தத் தவறுமில்லையே ..? இன்னும் சொல்லப்போனால் இது குறைந்த பட்சம் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரையும் வலைப்பூ துவங்கத் தூண்டும் என்பதுபோல் எண்ணத் தோன்றுகிறது ..

பொதுநலச் சிந்தனைகளையும் , கருத்துக்குவியல்களையும் , தத்துவமுத்துக்களையும்தான் அனைவருமே எழுதவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது ... அவரவரால் இயன்றதை அவரவர் எழுதலாம் .. வலைப்பதிவின் எழுத்துக்கு ஒரு எல்லையை , வரம்பை அறிவுஜீவிகளின் நிலையிருந்து நிர்ணயிப்பது என்பது அதுவும் குறிப்பாக, தவழும் அல்லது தளிர் நடையிட்டுக்கொண்டிருக்கும் தமிழ் வலைப்பதிவுகளுக்கு நிர்ணயிப்பது அந்தளவுக்குச் பயனுடையதாய் இருக்குமா என்று தெரியவில்லை ... ஆனால் வலைப்பூவின் தரத்துக்குத் தகுந்தவாறு , அலைவரிசை ஒத்த வாசகர்கள் கிடைப்பர் எனபதிலும் , தரமும் , பொருளும் அதிகமுள்ள வலைப்பூக்கள் பெரும்பாலோரால் விரும்பப்படும் என்பதிலும் சந்தேகமில்லை ...

தமிழ் வலைப்பூவின் இன்றைய தேவை அது சாதாரண மக்களுக்கு படிக்க ,படைக்க எட்டவேண்டும் .. மின்னஞ்சல் முகவரி வைத்திருக்கும் ஒவ்வொருவரும் வலைப்பதிவினைப் படிக்க மற்றும் தானும் ஒரு பதிவு ஆரம்பிக்க முயலவேண்டும். இந்தத் திசையில் இன்று அனைவரும் தம்மால் இயன்ற சிறு துரும்பை எடுத்துப் போடவேண்டும். அவரவர் நண்பர்களை இத்திசையில் முடிந்தளவு ஊக்குவிக்க வேண்டும் .. இணையத்தைப் பயன்படுத்தும் பள்ளி, கல்லூரி மாணவர்களில் இருந்து அனைவரும் வலைப்பூ படிக்க , பதிக்க உதவவேண்டும் ..

இப்படிச் சொல்வதால் அனைவரும் அவரவர் தட்பவெப்பத்தையும் , இன்று புதிதாய்ச் சமைத்த ஒரு ஐட்டத்தின் சுவையையும் மட்டும்தான் எழுதவேண்டும் என்று சொல்லவதாய் நினைக்கவேண்டாம்.. ஆனால் அவற்றை எழுதுவதிலும் தவறில்லை என்பதுதான் என் பணிவான கருத்து.. சாதத்திலிருந்து சாம்பார் ,மோர்வத்தல், தோசை , வடை என்று அத்தனையையும் நம் தமிழ் மக்கள் வலைப்பூவில் எழுத ஆரம்பித்தால் அதுவும்கூட நிச்சயம் தமிழுக்கும் , தமிழ் வலைப்பதிவுக்கும் பயனளிக்கும் என்றே தோன்றுகிறது .. இன்னும் சொல்லப்போனால் இவை சில பயனற்ற விவாதங்களை விட அனைத்து மக்களுக்கும் நேரடியாய்ப் பயனளிக்கக்கூடியது என்பதில் சந்தேகமில்லை ...ஒரு வேளை அவ்வாறு யாராவது சமையலுக்காக என்று தனியாய் ஒரு வலைப்பூ ஆரம்பித்தால் முதல் ஆளாய் அவ்வலைப்பூவின் முகவரியை நான் என்னுடைய கணினியில் குறித்து வைத்துக் கொள்ளுவேன் .. இன்று நண்பர்களுக்கோ , எனக்கோ , அல்லது நாளை வரப்போகும் எனது மனைவிக்கோ இக்குறிப்புகள் சமைக்க உதவலாம்தானே ..?


சமையலில் இருந்து கணினித் தொழில்நுட்பம், கருத்துக்குவியல்கள் , உலக நடப்புக்கள் , கவிதைகள் , கட்டுரைகள் என்று அனைத்துமே வலைப்பதிவில் வரட்டுமே .. பாரதி சொன்னதுபோல் சந்தி தெருப்பெருக்கும் சாத்திரத்தில் இருந்து , எட்டுத்திக்கும் உள்ள கலைச்செல்வங்கள் வரை அனைத்தையும் தமிழில் கொண்டுவந்து குவிக்க வலைப்பூக்கள் பேருதவி புரியப்போகின்றன என்று சொன்னால் அது மிகையாகது ...

என் பால்ய நண்பனொருவன் அவன் ஊரிலிருக்கும் தட்பவெப்பத்தையும் , பக்கத்துவீட்டுக்காரர்களைப் பற்றியும் , அவன் நண்பர்களைப் பற்றியும் எழுதிக் கொண்டிருந்தால் அவை அவனுக்குச் சம்பந்தமே ஒருவருக்கு அத்தனை சுவாரசியமாக இல்லாமல் இருக்கலாம் ..ஆனால் அவற்றில் பல எனக்குப் பரிச்சயமானவைகளாக இருப்பதால் அவற்றில் எனக்கும் , என் போன்ற அவனின் பிற நண்பர்களுக்கும் மிகச் சுவாரசியமானவைகளாக இருப்பதில் வியப்பென்ன .. ? அவன் அதனை உலகில் உள்ள அனைவரையும் நினைத்துப் பதிக்கவில்லை .. ஒரு டைரியைப் போல பின்னால் அவன் படித்துப்பார்க்க ஒரு பதிவாக இருக்குமே என்று நினைத்திருக்கலாம் .. அல்லது என் போன்ற சில நண்பர்களை நினைத்து எங்களுக்காகப் பதித்திருக்கலாம் .. ஆனால் அவனின் பதிவுகள் அனைத்துமே இந்தச் சின்ன வட்டத்துடனேயே நின்று விடுவது என்பது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை ..

ஒரு அறிவியல் வல்லுனர் இன்று புதிதாய் வந்த கண்டுபிடிப்புக்களையும் , அதன் சாதக பாதகங்களையும் விளக்கி எழுதலாம் .. அவரே இலக்கியத்திலும் நல்ல பரிச்சயமிக்கவரானால் அது பற்றியும் எழுதலாம் .. பள்ளிக்கூடத்தில் படிக்கும் சிறுவன் தன் பதிவில் அவன் இன்று பார்த்ததை , நடந்ததை எழுதலாம் .. ஒரு சமூக சிந்தனையாளர் தன்னுடைய சிந்தனைகளை எழுதலாம் .. மனிதனின் எண்ணத்துக்கும் ,எழுத்துக்கும், படைப்புக்கும் எல்லையேது .. ? இங்கே நாம் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும் .. எந்த ஒரு வாசகரின் , வலைப்பதிவாளரின் எல்லை அல்லது தேவை என்பது மேலே சொன்ன எவற்றுடனும் நின்று விடுவதில்லை..

வலைப்பூக்களிலிருந்து தேவையான தகவல்களை தேடியெடுப்பது பற்றிச் சொல்லும்போது சில சமயம் என்னுடைய பதிவில் இருக்கும் எந்த வார்த்தையையும் கூகிளில் வெட்டி, ஒட்டித் தேடினால் ஆச்சரியப்படும்வகையில் சரியாக என் வலைப்பூவை கூகிள் தேடிக்கொடுக்கிறது .. சில சமயம் அவ்வாறு தருவதில்லை .. சில சமயம் தேடியெடுத்தல் கொஞ்சம் கடினமான செயலாக இப்போது தெரியலாம் .. காசி அண்ணனின் ரவா தோசைப் பதிவைக் கூகிளில் தேடிப்பார்த்துக் களைத்துப்போய் , வீட்டில் பேச்சு வாங்கியதை நண்பர் சுரதா சோகத்துடன் இங்கு ஒரு முறை சொல்லியிருந்தார் ..

நாம் நினைத்ததைத் தேடும்போது சில சமயம் இதுபோல் நடக்கத்தான் செய்கிறது .. ஆனால் இது நிரந்தரமான பிரச்சனை என்று சொல்வதற்கில்லையே .. ? பத்து வருஷத்துக்கு முன்னால் இணையத்தேடல் இன்று போல் இவ்வளவு எளிதானதா.. ? இவ்வளவு ஏன்.. ? தமிழில் ஒரு வலைப்பக்கத்தைப் பார்ப்பது என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எவ்வளவு அரிதாய் இருந்தது .. இன்று கூகிள் தமிழிலியே வந்துவிட்டது .. நண்பர் சுரதாவும்கூட திஸ்கியிலேயே தமிழைத் தேட கூகிள் தேடுபொறி வடிவமைத்திருக்கிறார் .. ஆக இன்றைக்குக் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் நாளை இவ்வலைப்பூக்களில் உள்ளவற்றைத் தேடியெடுப்பது என்பது அவ்வளவு பெரிய செயலாய் இராது என்றே எண்ணத் தோன்றுகிறது ..
(0) Your Comments | | | |

Wednesday, February 18, 2004

என்ன நடக்குது ... ? ஒண்ணுமே புரியலையே ..

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டெம்ப்ளேட்டில் நுழைந்து பார்த்துவிட்டு ஒரு முறை வலைப்பூவை ஒருமுறை பப்ளிஷ் செய்தேன் .. அவ்வளவுதான் .. வலைப்பூவின் ஓரத்தில் தமிழ் எழுத்தே அங்கு தெரியவில்லை .. அங்குள்ள அனைத்துச் சுட்டிகளும் கேள்விக்குறிகளாக மாறிவிட்டன.. முதன் முதலில் இதுபோல் எனக்குப் பிரச்சினைகள் இருந்துவந்தது ... திரும்பவும் இன்று இது நடந்துவிட்டது .. மீண்டும் அனைத்துச் சுட்டிகளையும் ஒவ்வொன்றாய் டெம்ப்ளேட்டில் தட்டச்சு செய்ய வேண்டியதாகிவிட்டது ... ஏன் இப்படி நடக்கிறது .. இதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்று யாராவது சொன்னால் உபயோகமாக இருக்கும் ...
(0) Your Comments | | | |

Monday, February 16, 2004

தேடுங்கள் கிடைக்கும் .. (6) கூகிள்

நாலைந்து நாட்களாக வலைப்பூவில் எதுவும் எழுதமுடியவில்லை .. இன்று கூகிள் பற்றித் தெரிந்த கொஞ்சத்தை எழுதித் தொடரை முடித்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன் ...

சில சமயங்களில் நாம் ஒரு விஷயத்தைத் தேடுவோம் .. அந்த பக்கத்தின் விபரத்தைக் கூகிள் மூலம் கண்டு பிடித்தபிறகுதான் தெரியும் .. இப்போது அந்த இணையப்பக்கமே வேலைசெய்வதில்லை என்று. இந்தப் பிரச்சனைக்கு கூகிளின் Cached Links என்ற வசதி மிகப்பயனுள்ளதாய் இருக்கிறது .. அதாவது கூகிள் ஒரு பக்கத்தை வரிசைப்படுத்திவைக்கும்போதே அந்தப் பக்கம் எப்படி இருக்கும் என்பதை கிட்டத்தட்ட புகைப்படம்போல அப்படியே நினைவில் சேமித்துவைத்துக்கொள்ளும் .. இந்தச் சேமிக்கப்பட்ட பக்கங்களை உண்மையான பக்கம் வேலை செய்யவில்லையென்றாலும் நம்மால் பார்க்க இயலும் ...

ஒரு அவசரத்துக்குக் கால்குலேட்டர் வேண்டுமென்றால் அதற்கும் கூகிளைப் பயன்படுத்தலாம் .. உதாரணமாய் 2+2 என கூகிளில் அடித்துத் தேடிப்பாருங்கள் தெரியும் ..

கூகிளின் செய்திச் சேவை ( Google News )மிகப் பிரபலமானது ... உலகிலுள்ள முக்கிய இணைய செய்தித்தளங்களில் வரும் முக்கிய நிகழ்ச்சிகளை உடனுக்குடன் , எந்தச் செய்தித்தளத்துக்கும் போகாமல் எளிதாய்ப் படிக்கலாம்.

தேவையான படங்களை மட்டும் கூகிளின் படத்தேடல் மூலம் தேடமுடியும் ...

வெறும் எண்களைக் கொண்டு நமக்குத் தேவையான விபரங்களைத் தேடலாம்.. உதாராணமாக காப்புரிமைகள்( patents) வாகன எண்கள் போன்றவைகள் பற்றித் தேடமுடியும்...

ஒரு வார்த்தையின் உச்சரிப்பு (spelling) சரியாகத் தெரியவில்லை என்றால் அதற்கும் கூகிள் உதவும் .. ஒரு வார்த்தையைத் தவறாக எழுத்துப்பிழையுடன் தட்டச்சு செய்து தேடுனால் " நீங்கள் இதைத்தான் தேடுகிறிர்களா..?" அதுவாகவே கேட்கும் ..

பயண விபரங்கள் , விமானச் சேவைகள் போன்றவைகளையும் அருமையாகத் தேடிக்கொடுக்கும் .. ஒரு விமான நிலையத்தின் சர்வதேச சுருக்கம்( Airport Code ) தெரிந்தால் இன்னும் எளிதாய்ச் செய்யலாம் ... உதாரணமாய் சென்னை விமான நிலையத்தின் சர்வதேச சுருக்கம் MAA எனவே கூகிளில் maa airport என்று தேடினால் சென்னை விமான நிலையம் பற்றிய விபரமும் கிடைக்கும்.

கூகிள் தரும் மிக முக்கியமான சேவை மொழிபெயர்ப்புச்சேவை உலகின் பல முக்கிய மொழிகளை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துத் தரும் ... இன்னும் தமிழுக்கு இந்த வசதி வரவில்லை .. விரைவில் வருமென்ரு நம்புவோம் . ஜெர்மன் , பிரஞ்சு , போர்ச்சுக்கீஸ் , இத்தாலியன் மற்றும் ஸ்பானிஷ் போன்ற மொழிகளுக்கு இந்த வசதி தற்போது உண்டு .. மேலும் நாம் விரும்பும் ஒரு இணையப்பக்கம் வேறு மொழியில் இருந்தால் அப்பக்கத்தை அப்படியே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துத் தரும் வசதியும் உண்டு .. இணைய முகவரியைக் கொடுத்ததும்(URL) மிகச் சாதரணமாயகச் சில ஜெர்மன் இணையப்பக்கங்களை அழகாய் ஆங்கிலத்துக்கு மாற்றித்தந்த கூகிளைப் பார்த்து முதன் முதலில் நான் பிரமித்துப் போனது நிஜம்...

தமிழில் அழகாய் கூகிளைப் பார்க்கமுடியும் .. யுனிகோடு தமிழில் தட்டச்சு செய்து தேடமுடியும் ...

அப்புறம் ஒன்றே ஒன்றைச் சொல்லி முடித்துவிடுகிறேன் .. நான் அடிக்கடி பயன்படுத்துவது .. அது கூகிள் டூல் பார் .. இது ஒரு சிறிய புரோகிராம். இதனை இறக்கினால் நமது இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் இணைந்துகொள்ளும்.. இதில் பல வசதிகல் உள்ளன.. கூகிள் பக்கத்துக்குச் செல்லாமல் நேரடியாக கூகிள் பாரில் தட்டச்சு செய்து தேடுவது முதல் பாப் -விண்டோக்களை தடுப்பதுவரை பல வசதிகள் உள்ளன. விரும்புவோர் முயற்சித்துப் பார்க்கலாம் ..

கூகிள் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது என்பது போல் நான் நிறைய பிரஸ்தாபம் செய்து உங்களைப் போரடித்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.. இத்துடன் கூகிள் பற்றி முடித்துவிடுகிறேன் .. போனபகுதியிலேயே நண்பர் பிரபு " இன்னும் இது முடியலையா..? " என்று கேட்டுவிட்டார். இனிமேலும் தொடர்ந்து நிறையப் பேரின் பொறுமையைச் சோதிக்கவிரும்பவில்லை ... ஆனால் நிம்மதிப் பெருமூச்சு விடாதீர்கள்.. விரைவில் யாகூ பற்றி எழுதலாமா என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன் ...
(0) Your Comments | | | |

Wednesday, February 11, 2004

தேடுங்கள் கிடைக்கும் .. (5) கூகிள்

நாம் தேடுவதற்குக் கொடுக்கும் வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் .. ஒரு சின்ன விஷயம் என்னவென்றால் நாம் கொடுக்கும் வார்த்தைகள் இருக்கும் அத்துணை பக்கங்களையும் கொண்டு வந்து குவித்துவிடும் ... அதிலிருந்து தேடி எடுப்பது சிக்கலாகிவிடும் .. எனவே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகளைக் கொடுத்துத் தேடலாம் ..

உதாரணமாக நீங்கள் தஞ்சாவூர் கோயிலைப் பற்றித் தேடவேண்டுமென்றால் tanjavur temple என்று சொற்களை தட்டச்சு செய்து தேடுவதைவிட tanjavur + temple என்று தட்டச்சு செய்து தேடுவது நலம் ... இன்னும் சில சொற்களையும் சேர்த்து இதேபோல் கூட்டல் குறியுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம். இன்னும் துல்லியமாகக் கொடுக்க வேண்டுமானால் "tanjavur temple" என்று மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கலாம் .. இப்படித் தேடினால் இந்த இரு வார்த்தைகளும் சேர்ந்து வரும் பக்கங்களை மட்டுமே கொடுக்கும் .. tanjavur என்று ஒரு இடத்திலும் temple என்று இன்னொரு இடத்திலும் வரும் பக்கங்களை விட்டுவிடும் .. இது நல்லதுதானே ..? இதிலும் வரும் முடிவுகள் நிறைய இருந்தால் அந்த முடிவுகளுக்குள் மட்டுமே நம் தேடலைச் சுருக்கிக்கொள்ளலாம் ... "search within results " என்ற இணைப்பை அழுத்தி இன்னும் சில சொற்களைக் கொடுத்து முதலில் கிடைத்த முடிவுகளிக்குள் மட்டும் நம் தேடுதலைச் சீர்மைப்படுத்திக்கொள்ளலாம் ..

நாம் ஒரு குறிப்பிட்ட பக்கத்தை மட்டும் தேடினால் போதும் .. மொத்த இணையத்திலும் தேடவேண்டாம் என்று நினைத்தால் அதற்கு site:இணைய முகவரி என்று தேடலாம் .. இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் site: என்ற சொல்லுக்கும் நாம் கொடுக்கும் இணைய முகவரிக்கும் இடையுல் எந்த இடைவெளியும் இருக்கக்கூடாது ..

ஒரு குறிப்பிட்ட இணையப் பக்கத்தை தன்னுடைய இணையப் பக்கத்தில் இணைப்புக்கொடுத்திருக்கிறார்களா என்று பார்க்கவேண்டுமென்றால் அதற்கும் வழி இருக்கிறது. உதாரணமாய் link:http://tamilblogs.blogspot.com என்று தேடினால் யார் யார் இந்த வலைப்பக்கத்தின் முகவரியைத் தங்களின் பக்கத்தில் இனணப்பாகக் கொடுத்திருக்கிறார்கள் என்று ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் பார்த்துச் சொல்லிவிடும் ..

ஒரு குறிப்பிட்ட சொல்லின் வரையறை(Definition) வேண்டுமென்றால் define:தேடவேண்டியசொல் என்று கொடுத்துத் தேடலாம் .. இந்த வசதி மிகப்பலருக்குப் பயனளிக்கக்கூடியது .. குறிப்பாய் மாணவர்களுக்கும் , ஒரு துறையில் புதிதாய் கற்க நுழைபவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம் ...

ஒரு குறிப்பிட்ட சொல்லைக்கொண்டு குறிப்பிட கோப்பு வகைகளில் மட்டும் தேட filetype:ஏதாவதுகோப்புவகை என்று கொடுத்துத் தேடலாம் .. உதாரணமாய் tamil என்ற சொல்லை PDF கோப்புகளில் மட்டும் தேட விரும்பினால் tamil filetype:PDF என்று தேடலாம் ..

ஒரு பொருளின் விலையைப் பற்றித் தெரிந்துகொள்ள அல்லது அப்பொருளின் விற்பனை தொடர்பாய் அறிய கூகிள் தரும் http://froogle.google.com என்ற வசதியைப் பயன்படுத்தலாம் ..

இத்தனை கோடிப் பக்கத்தில் மொத்தமாய்த் தேடி முடிவுகளை ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் தராதே குலுக்கல் முறையில் லாட்டரிச் சீட்டுபோல(?) ஏதாவது ஒரு முடிவைத் தா .. என்னுடைய அதிர்ஷ்டத்துக்கு நான் தேடியதே எனக்குக் கிடைக்கும் என்று கூகிளிடம் சொல்லி i feel lucky என்ற இணைப்பை தட்டினால் உங்களின் அதிர்ஷ்டத்துக்கு நீங்கள் தேடியதே உங்களுக்குச் சரியாகக் கிடைக்கலாம் ..

அமெரிக்காவில் இருப்பவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களின் தொலைபேசி எண்ணைத் தெரிந்துகொள்ளவும் கூகிளைப் பயன்படுத்தலாம்.. அதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு வழியைப் பயன்படுத்தலாம் ..

first name (or first initial), last name, city (state is optional)
first name (or first initial), last name, state
first name (or first initial), last name, area code
first name (or first initial), last name, zip code
phone number, including area code
last name, city, state
last name, zip code
(0) Your Comments | | | |

Sunday, February 08, 2004

ஜேம்ஸ்பாண்ட் ரகசிய கேமரா...

ஜேம்ஸ்பாண்ட் கேமராசின்ன வயசில் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது நிறைய ஜேம்ஸ்பாண்ட் புத்தகம் படிப்பதுண்டு .. ஜேம்ஸ்பாண்ட் படங்களும் பார்த்ததுண்டு .. ஒரு விரல் நீளத்தில் துப்பாக்கி வைத்திருப்பார் .. கேமரா வைத்திருப்பார் .. இன்னும் என்னென்னவோ ஆச்சரியமான பொருட்களெல்லாம் வைத்திருப்பார் .. இதையெல்லாம் ஏன் இப்போது சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா ..? வேறு ஒன்றும் இல்லை .. அதுபோன்ற ஒரு கேமரா விலைக்கு வந்திருக்கிறது .. 6 செண்டிமீட்டர் நீளம்தான். அதில் 300 போட்டோ எடுக்கலாம் .. சத்தத்தை பதியலாம், வீடியோவும் கூட எடுக்கலாம் .. இன்னும் ஒரு சிறப்பான அம்சம் என்னவென்றால் நாம் அதில் நேரத்தைக் குறிப்பிட்டு 10 நாட்கள் கழித்து இந்த நேரத்தில் போட்டோ எடுத்து வை என்று அதற்குச் சொல்லிவிட்டால் சரியாக அதேபோல் எடுத்துவைத்துவிடும் .. விலையும் கூட ரொம்ப அதிகமில்லை .. நம்ம ஊரு பணத்தில் 6000 ரூபாயை விடக் குறைவுதான் .. யாராவது ஜேம்ஸ்பாண்ட் வேலை பார்க்கவேண்டுமென்றால் வாங்கி வைத்துக்கொள்ளலாம் .. நிச்சயம் உதவும்
(0) Your Comments | | | |

Friday, February 06, 2004

மோப்பம் பிடிக்கும் எலி .. !

சில நாட்களுக்கு முன் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரையில் சொல்லியிருக்கிறார்கள். மோப்பக்கார எலி ஏல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும், புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் ஜீன் மாற்றம் செய்த எலியை உருவாக்கியிருக்கிறார்கள்.. அவர்கள் செய்த மாற்றம் என்னவென்றால் அந்த எலியில் உள்ள ஒரு புரோட்டீனை நீக்கிவிட்டார்கள்.. அந்தப் புரோட்டீனின் பெயர் கே.வி.1.3 . நரம்பு மண்டலத்தில் தகவல்களைக் கடத்துவதுடன் இந்தப் புரோட்டீன் தொடர்புடையது .. மேலும் நுகரும் தன்மையுடன், மோப்ப சக்தியுடன் தொடர்புடையது .. அந்தப் புரோட்டீனை நீக்கிவிட்டதால் குறிப்பிட்ட அந்த எலியால் எதையும் மோப்பம் பிடிக்கமுடியாது என்று எதிர்பர்த்தார்கள் .. ஆனால் நடந்ததே வேறு .. இப்போது அந்த எலியின் மோப்பம் பிடிக்கும் திறன் ஆயிரம் முதல் பத்தாயிரம் மட்ங்கு வரை அதிகரித்துவிட்டது . இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்புதான்.. இது மணத்தை நுகர்ந்து பார்க்கத் தெரியாமல் ஆக்கும் அனொஸ்மியா என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் உதவலாம்.. அமெரிக்காவில் மட்டும் 40 லட்சம் பேர் சுவை , மோப்ப சக்திக்குறைபாடு இவற்றால் பாதிக்கப்ப்ட்டுள்ளனராம் .. மேலும் வயதாக வயதாக இந்த மோப்ப சக்தி குறைந்து கொண்டு வரும்.. இவ்வளவு ஏன் ..நம் எல்லோருக்கும் மோப்ப சக்தி ஒரே மாதிரியாக இருக்கிறதா என்ன. ? நம்முடைய நண்பர்களுக்கிடையேதான் இந்த மோப்ப சக்தி எவ்வளவு தூரம் வேறுபடுகிறது ..?இன்னொரு விஷயம் ... பொதுவாக ஆண்களைவிட பெண்களுக்கு 10 மடங்கு மோப்ப சக்தி அதிகமாம்.. அதுவும் கர்ப்பகாலங்களில் இந்த மோப்ப சக்தி இன்னும் அதிகமாய் இருக்கும். இது எல்லாவற்றுக்கும் கே.வி1.3 புரோட்டீனுக்கும் ஏதாவது தொடர்பு கண்டிப்பாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள் .
(0) Your Comments | | | |

Wednesday, February 04, 2004

சர்க்கரை இல்லாத சர்க்கரை ...

xylitolகடைகளில் "சுகர் ஃப்ரீ" என்ற அறிவிப்புடன் இனிப்புத் தின்பண்டங்களைப் பார்த்ததுண்டா .. நான் சில முறை அவ்வாறு பார்த்துக் குழம்பியதுண்டு .. உண்மையில் அவை இனிப்பாக இருந்தாலும் அவற்றில் சர்க்கரை சேர்க்கப்படவில்லை .. அதில் கலந்திருப்பது ஸைலிட்டால் என்ற சர்க்கரை ஆல்கஹால் . இதனைச் செரிக்க இன்சுலின் தேவையில்லை .. எனவே சர்க்கரை நோயுள்ளவர்களும் கூட இதனைச் சாப்பிடலாம் .. மேலும் இது பற்களில் பாதிப்பை உருவாக்குவது இல்லை .. எனவே பற்பசை , சூயிங்கம் மற்றும் சில மிட்டாய்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது .. பிர்ச் மரக்கூழில் இருந்து இது பிரித்தெடுக்கப்படுகிறது .. ஆக ஆடு,கோழி,மாடு முதல் கீரை,பழம் , காய் என மரக்கட்டை வரை மனிதன் சாப்பிடுவதில் எதையும் விட்டுவைப்பதில்லை ..
(0) Your Comments | | | |

Tuesday, February 03, 2004

அரட்டைப்பெட்டி

புதிதாக அரட்டைப்பெட்டி ஒன்றை வலைப்பூவில் சேர்த்துவிட்டுள்ளேன் ... இடது ஓரம் இருக்கிறது பாருங்கள் அதுதான் .. நண்பர்கள் யாரும் இந்தப் பக்கம் வந்தால் அதில் ஒரு சத்தம் கொடுத்துவிட்டுப்போகலாம் ... பின்னர் நான் பார்த்துக்கொள்ளுவேன் .. ஏதாவது சொல்லவேண்டுமென்ராலோ அல்லது கேட்கவேண்டுமென்றாலோ அல்லது நண்பர்களுக்குள் சும்மா அரட்டை அடிக்கக்கூட இதைப் பயன்படுத்தலாம் ... இதில் இத்தனை மடல்தான் அடிக்கமுடியும் என்று பிளாக்பேக் மாதிரி ஒரு வரம்பு இல்லை ,... நம் விருப்பம்போல பயன்படுத்தலாம் ... ஆங்கிலம்தான் வசதியாக் இருக்கிறது.. தமிழில் செய்தி அடித்தால் எழுத்துருவில் சில குழப்பங்கள் வருகின்றன .. தற்செயலாக ஒரு ஆங்கில வலைப்பூவில் இந்த பெட்டியைப் பார்த்தேன் .. சரி இருக்கட்டுமே என்று எனக்கும் ஒன்று வாங்கிச் சேர்த்துவிட்டுவிட்டேன் .. உங்களுக்கும் வேண்டுமென்றால் myshoutbox.com சென்று ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள் ... இது இலவசம்தான் ..
(0) Your Comments | | | |

Sunday, February 01, 2004

நீங்களும் முயற்சி செய்து பார்க்கப் போகிறீர்களா .... ?

இன்றும் நேற்றும் klipfolio 2.5 நிரலியை முயற்சி செய்து பார்த்தேன். அது ஒரு பெரிய கதை. ஏற்கனவே ஒரு தடவை வெங்கட் வலைப்பூவில் பார்த்தவுடன் முயற்சி செய்து பார்த்தேன். அப்போது எனக்கு அது சரியாக வேலைசெய்யவில்லை. திரும்பவும் நேற்று முயற்சி செய்துபார்த்தேன். நன்றாக வந்தது. அவருடைய வலைப்பூவின் சுருக்கத்தை அவருடைய வலைப்பூவுக்குச் சென்று பார்வையிடாமல் என்னுடைய மேசைத்தளத்திலேயே பார்க்க முடிந்தது.

வெங்கட் சொன்னதுபோல் அனைவரின் வலைப்பூவையும் இணைக்க இது ஒரு நல்ல வழிதான் என்றே தோன்றுகிறது. நம்முடைய வலைப்பூவுக்கும் அவர் எழுதியதுபோல் கிளிப் ஸ்கிரிப்ட் எழுதிப் பார்க்கலாமே என்று நினைத்து முயற்சி செய்தேன். அதற்கு RSS feed வேண்டுமென்பதை அதைச் செய்யும்போதுதான் எனக்குத் தெரிந்தது. நான் வைத்திருப்பது blogger.com இலவச சேவை. என்னுடைய வலைப்பூவில் settings பகுதிக்குப் போய் அப்படி ஏதும் இருக்கிறதா என்று பார்த்தேன். அது http://muthukmuthu.blogspot.com/atom.xml என்று இருந்தது. ஆனால் அது வேலை செய்யவில்லை. அந்த முகவரிக்குப் போனால் பக்கத்தைக் காணவில்லை என்று பதில் வந்தது. சரி, என்ன செய்யலாம் என்று யோசித்துவிட்டு blogger.com -க்கு ஒரு வரி எழுதிப்போட்டேன். என்னுடைய xml feed வேலை செய்ய்வில்லை என்று. என்ன ஆச்சரியம் அடுத்த சில மணி நேரத்தில் வேலை RSS செய்தது. கொஞ்ச நேரத்தில் சரி செய்துவிட்டார்கள் போலத் தெரிகிறது. திரும்பவும் கிளிப் ஸ்கிரிப்ட் எழுதிப் பார்த்தேன். எனக்கும் கணினிக்கும் ரொம்ம்ம்ப தூரம். படித்தது , படித்துக்கொண்டிருப்பது எதுவும் கணினிக்குக் கொஞ்சம் சம்பந்தமுடையது இல்லை. எப்படியோ ஒரு வழியாக அதை எழுதி முடித்து இணைத்து நிரலியை இயக்கிப் பார்த்தால் என்னுடைய வலைப்பூவைத் தவிர எல்லாமே நன்றாக இயங்கியது. திரும்பவும் என்ன செய்வது என்ற குழப்பம். இந்த நிரலியை தமிழ் வலைப்பூவுக்குப் பயன்படுத்திக்கொண்டிருப்பவர் வெங்கட். அவரிடம் கேட்டுப் பார்க்கலாமே என்று தோன்றியது. அவர் ஸ்கிரிப்டைக் கொடுங்கள் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொடுக்கிறேன் என்று சொன்னார்.

அவருக்கு அந்த ஸ்கிரிப்டை மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு அப்படியே klip folio நிரலியைத் தரும் serence.com - காரர்களுக்கும் ஒரு வரி எழுதினேன். அங்கே இருந்து அடுத்த சில மணி நேரத்தில் பீட்டர் என்பவர் பதில் அனுப்பியிருந்தார் ..(ஞாயிற்றுக் கிழமைகூட வேலை செய்கிறார்களா என்ன.. ?) "......மன்னிக்கவேண்டும், நீங்கள் சொல்வது உண்மைதான்.. உங்கள் வலைப்பூவுக்கு நிரலி வேலை செய்யவில்லை..( அதுதான் எனக்கு ஏற்கனவே தெரியுமே). இந்த நிரலியின் தற்போதைய வெளியீட்டில் xml feed வேலை செய்யாது. நீங்கள் கொடுத்திருப்பது xml feed . அதனால்தான் உங்களுக்கு இப்பிரச்சனை. ஆனால் இன்னும் சில வாரங்களில் நாங்கள் வெளியிடப் போகும் அடுத்த வெளியீட்டில் கட்டாயம் xml feed வசதியும் இருக்கும். வேண்டுமானால் இப்போதைக்கு எங்களின் feed viewer நிரலியை klipfolio -வுடன் பயன்படுத்திப் பாருங்கள். அது .xml feed -க்கும் நன்றாக வேலை செய்யும்" என்று பதில் அனுப்பினார்.

எனக்கோ கொஞ்சம் கலக்கம். என்னடா இது.. எத்தனை நிரலியைத்தான் பயன்படுத்துவது என்று நினைத்துக்கொண்டே feed viewer - நிரலியை இறக்கினேன். நான் எதிர்பாரா விதமாக அதுவாகவே klipfolio 2.5 நிரலியுடன் இணைந்துவிட்டது. இணைந்தவுடன் RSS இணைப்பைக் கேட்டது. கொடுத்துமுடித்தவுடன் அதில் அழகாக என்னுடயை வலைப்பூவின் சுருக்கம் தெரிய ஆரம்பித்தது. அப்போதுதான் தெரிந்தது இது எவ்வளவு எளிதானது என்று. இது தெரியாமல் நமக்குப் புரியாத ஸ்கிரிப்ட் அது இது என்று எழுதி நொந்துவிட்டேனே, சரி ... இதுபோல் மற்றவர்கள் வலைப்பூவுக்கும் செய்து பார்க்கலாம் என்று எண்ணி திரும்பவும் இன்னொரு feed viewer - ஐ இறக்கினேன் சிறிய செவ்வக வடிவில் இன்னொரு கட்டமாக klipfolio 2.5 நிரலியுடன்
இணைந்துகொண்டு RSS முகவரியைக்கேட்டது. blogger.com -ல் அனைவரின் வலைப்பூ முகவரியுடன் atom.xml என்று சேர்த்தால் RSS முகவரி கிடைத்துவிடுகிறதுதானே.? எனவே http://kasiblogs.blogspot.com/atom.xml என்று காசி அண்ணாவின் RSS முகவரியைக் கொடுத்தேன். திரும்பவும் அழகாக அவருடைய வலைப்பூவில் சமீபத்தில் அவர் எழுதியவற்றின் சுருக்கத்தை என்னுடைய மேசைத் தளத்திலேயே பார்க்கமுடிந்தது. கடையில் என்னதான் சொல்ல வருகிறாய் என்று கேட்கிறீர்களா.. ? இது உங்களுக்குக் குழப்பினால் விட்டுவிடுங்கள். இதைப் பயன்படுத்தவிரும்பினால் நீங்கள் செய்யவேண்டியது மிக எளிது.

1. முதலில் klipfolio 2.5 நிரலியை serence.com - லிருந்து இறக்கி நிறுவுங்கள்( உங்கள் கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் தீச்சுவர்கள் இந்த நிரலியை இணையத்துடன் தொடர்புகொள்ளாமல் தடுக்க முயற்சிக்கலாம், அதையும் பார்த்துக்கொள்ள்ளுங்கள். எனக்கு இது முதலில் நடந்தது.)

2. நிறுவியபின் நிரலியை ரைட் கிளிக் செய்து கிளிப் செட்டப் என்பதில் உங்களுக்குத் தேவையான படி மாற்றிக் கொள்ளுங்கள். அதில் default - ஆக இருக்கும் வானிலை, CNet news போன்றவை உங்களுக்குத் தேவை என்றால் டிக் செய்து தேர்வு செய்துகொள்ளுங்கள்.

3. serence.com - லிருந்து feed viewer ஐ add klip என்பதை அழுத்தி இறக்குங்கள். அதுவாகவே klipfolio 2.5 நிரலியுடன் இணைந்து கொள்ளும். அதில் நீங்கள் எந்த வலைப்பூவின் சுருக்கத்தைக் காணவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த வலைப்பூவின் RSS முகவரியைக் கொடுங்கள். மறவாமல் அந்தக் கிளிப் செட்டப்பில் எவ்வளவு மணி நேரத்துக்கு ஒரு முறை நிரலி அந்த வலைப்பூவுடன் தொடபுகொண்டு செய்தி சேகரிக்கவேண்டும் போன்ற விபரங்களைத் தெரிவு செய்துகொளுங்கள். இப்போது உங்களால் நீங்கள் கொடுத்த வலைப்பூவின் அல்லது பக்கத்தின் சுருக்கத்தைப் படிக்க முடியும்.

4.மீண்டும் நீங்கள் இன்னொரு தளத்தின் சுருக்கத்தைப் பெற விரும்பினால் திரும்பவும். serence.com - லிருந்து feed viewer ஐ இறக்குங்கள். அதுவாகவே klipfolio 2.5 நிரலியுடன் சிறிய செவ்வக வடிவில் இணைந்து கொள்ளும். அதில் நீங்கள் எந்த வலைப்பூவின் சுருக்கத்தைக் காணவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த வலைப்பூவின் RSS (கிட்டத்தட்ட .food , .rss , .xml என அனைத்துமே வேலைசெய்யும் என்று நினைக்கிறேன் ) முகவரியைக் கொடுங்கள். மறவாமல் அந்தக் கிளிப் செட்டப்பில் எவ்வளவு மனி நேரத்துக்கு ஒரு முறை நிரலி அந்த வலைப்பூவுடன் தொடர்புகொண்டு செய்தி சேகரிக்கவேண்டும் என்பதையும் மீண்டும் தெரிவு செய்துகொளுங்கள்.

5. ஏதாவது பிரச்சனை வந்தால் கேளுங்கள். எனக்குத் தெரிந்தால் சொல்கிறேன.
பின்னர் மிக எளிதாய் உங்கள் மேசைத்தளத்திலேயே அவர்களின் பக்கத்துக்குச் செல்லாமலேயே அனைவர் எழுதியதையும் படித்து ரசியுங்கள்.

என்னுடய வலைப்பூவையும் அதில் இணைக்க விரும்பினால் RSS முகவரி http://muthukmuthu.blogspot.com/atom.xml. அவ்வளவுதான் ... !!


.
(0) Your Comments | | | |

தேடுங்கள் கிடைக்கும் .. ! (4) - கூகிள்

அவர்கள் இருவரும் அதுவரை இருந்த தேடுதல் உத்தியை விட்டுவிட்டு புதிதாய்ச் சிந்தித்தார்கள் ... ஒரு பக்கத்தின் முக்கியத்துவத்தை நேரடியாய்ப் பார்த்துத் தெரிந்துகொள்வதைவிட, அதன் பின்புலத்தை வைத்து கணக்கிடுவதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தார்கள் .. அதுவே கூகிளின் வெற்றிக்கு முக்கியக் காரணமாய் அமைந்தது .. அவர்கள் ஸ்டேன்போர்டு பல்கழைக்கழகத்தில் படிக்கும்போது தொடங்கிய இத்திட்டத்துக்கு முதலில் backrub என்று பெயர் வைத்திருந்தார்கள் ..இதுவும் பொருத்தமான பெயர்தானே .. அவர்கள் "பேஜ் ரேங்க்" என்ற ஒரு தத்துவத்தைப் பின்பற்றினார்கள் .. இதன்படி ஒரு பக்கம் ஒரு நாளைக்கு எத்தனை தடவை மற்றவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தவிரவும் , அத்தளத்துடன் எத்தனை பேர் இணைந்திருக்கிறார்கள், தேடும் சொற்களுடன் அப்பக்கத்திலுள்ள விஷயம் எந்த அளவுக்குப் பொருந்துகிறது என்று பல விஷயங்களை இணைத்து புதுத் தேடும் தொழில்நுட்பத்தை உருவாக்கினர்...சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் வெங்கட் அவருடைய வலைப்பூவில் கூகிள் ஒரு மனிதனைப் போலவே தேடுகிறது என்று அருமையாக ஒரு கட்டுரைத் தொடர் எழுதியிருந்தார் ..

இன்று கூகிள் இந்த அளவுக்கு வேகமாகத் தகவல்களைத் தேடிக் கண்ணிமைக்கும் நேரத்தில் தருகிறது என்பதற்குக் காரணம் அவர்கள் பயன்படுத்தும் நவீன தேடுதல் தொழில்நுட்பமும் , வலைப்பின்னலில் இணைக்கப்பட்டுப் பயன்படுத்தும் அவர்களின் ஆயிரக்கணக்கான கணினிகளும்தான் காரணம் .. இன்றும் தினமும் பல கணினிப் பொறியாளர்கள் கூகிள் நிறுவனத்தில் தங்களின் தொழில்நுட்பத்தை எப்படி மேம்படுத்தலாம் என்று ஆராய்ந்து செயல்பட்டுவருகிறார்கள் ...

கூகிளில் தகவல்களைத் தேடுவதைபோலவே இன்னும் பலவற்றைத் தேடலாம் .. பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம் .. செய்திகளை உடனடியாகப் படிக்கலாம் .. தேவையான படங்களை மட்டும் தேடி எடுக்கலாம் .. கணக்குப்போடக் கால்குலேட்டாராக கூகிளைப் பயன்படுத்தலாம் ... அது இலவசமாய்த் தரும் கூகிள் பாரைப் பயன்படுத்தி அடிக்கடி நமக்குத் தொல்லைதரும் பாப்-அப் சன்னல்களை வரவிடாமல் தடுத்துவிடலாம் .. எத்தனையோ மொழிகளுக்கு மொழிபெயர்ப்பாளராய்ப் ப்யன்படுத்தலாம் ... இதுதவிர இன்னும் பல பயன்பாடுகள் உள்ளன...

சரி .. கூகிள் திறமையான , உயர்தர தேடுüபொறியாக இருந்தாலும் நாம் எப்படித் தேடுகிறோம் என்பதும் முக்கியம்தானே...? பலதடவை தேடும்போது தேடியதை விட்டுவிட்டு வேறு எதையோ பார்த்து போய்க்கொண்டிருப்போம் .. கடைசியில் வேட்டைக்குக் காட்டுக்குப்போய் பாதை தெரியாமல் காட்டின் நடுவில் சிக்கிக்கொண்ட கதையாகிவிடுமே ...

( வளரும் ... )
(0) Your Comments | | | |

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com