<$BlogRSDUrl$>

Monday, January 19, 2004

மாமிசத் தாவரங்கள் மனிதனைக் கொன்று தின்னுமா ... ?

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் ஒரு காட்டின் வழியே நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். திடீரென பக்கத்திலிருந்த மரத்தின் கிளைகள் உங்களை நோக்கி நீளுகிறது. நீங்கள் சுதாரித்து விலகுவதற்குள் உங்களின் ஒரு கையைச் சுற்றிப் பிடித்துக் கொள்கிறது. இன்னொரு கையால் அதை விடுவிக்க நினைக்கிறீர்கள். ஆனால் பலனில்லை. காலம் கடந்துவிட்டது. உங்களின் இன்னொரு கையையும், இடுப்பையும் சுற்றிவளைத்துவிடுகிறது. அதன் கிளைகள் உங்களை மொத்தமாக ஆக்கிரமித்துவிடுகிறது. நினைப்பதற்கே கொஞ்சம் அச்சமாக இல்லை..? இதுபோன்ற சம்பவங்களை நீங்கள் கதைகளில் படித்திருக்கலாம். உண்மையில் இதுபோன்ற நிகழ்ச்சி சாத்தியமா..? இதில் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது ..!

மாமிசத்தை உண்ணும் தாவரங்கள் நிறையவே இருக்கின்றன. மிகப் பிரபலமான உதாரணம் நெபந்தஸ் என்ற தாவரம். தாவரங்கள் என்பவை விலங்குகள் உண்பதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கின்றன என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோமே. எப்படி சில தாவரங்கள் நான்-வெஜிடேரியனாக மாறிவிடுகின்றன. சிங்கம் , புலி போல இத்தாவரங்கள் சுத்தமான அசைவப் பிரியர்களா இவை... ? இதற்குப் பதில் என்னவென்றால் இல்லை என்பதுதான். பிறகு ஏன் இவை மாமிசம் சாப்பிடுகின்றன..? நமக்குப் போரடித்தால் வாரத்தில் ஒரு தடவை ஞாயிற்றுக் கிழமை சிக்கன் 65 சாப்பிடுகிறோமே அது போலவா..?

பூச்சி இரையாகப் போகுது

உண்மையில் மற்ற தாவரங்களைப் போலவே இத்தாவரங்களுக்கும் பச்சையம் உண்டு. இவை வாழ நீர் , சூரிய ஒளி , காற்று அவசியம். ஆனால் இவை தவிர சில முக்கியத் தனிமங்களும் இவற்றுக்குத் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் அத்தனிமங்கள் இவை வளரும் நிலத்தில் இருப்பதில்லை. அல்லது மிகக்குறைந்த அளவில் இருக்கும். எனவே இந்த நைட்ரஜன் போன்ற தனிமங்களுக்காகத்தான் பூச்சி போன்ற சிறிய விலங்குகளைத் தின்றுவிடுகின்றன.

சமீபத்தில் நெதர்லாந்து போயிருந்தபோது இந்த நெபந்தஸ் தாவரம் ஒன்றைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சின்ன பூச்சட்டியில் முழுத்தாவரத்தையும் விற்பனைக்காகத் தொங்கவிட்டிருந்தார்கள். இத்தாவரம் பூச்சிகளைக் கவர அதற்கே உரிய ஒரு வாசனையைப் பரப்பும். இந்த வாசனையை நுகர்ந்து பூவுக்குள் பூச்சி நுழைந்தவுடன் தாவரம் தயாராக வைத்திருக்கும் மூடியைக்கொண்டு அப்பூவை மூடிவிடும். அப்புறமென்ன உள்ளே போன பூச்சியின் கதி அதோ கதிதான்.

ஆனால் நாம் பொங்கலுக்குக் கரும்பைக் கடித்து, அரைத்து தின்பதுபோல பூச்சியைத் தின்ன அத்தாவரத்துக்குப் பற்கள் இல்லை. ஆனால் மற்ற படி நாம் உணவைச் ஜீரணிப்பதுபோலத்தான் அதுவும் ஜீரணிக்கிறது. பூச்சியைப் பிடித்ததும் அந்தப் பூ ஒரு சின்ன வயிறு போலவே செயல்பட ஆரம்பிக்கிறது. மெதுவாக ஒரு திரவத்தைச் சுரக்கிறது. அந்தத் திரவம் பூச்சியின் முழு உடலையும் கரைத்த பின்னர் அதிலுள்ள , கனிமங்களை உறிஞ்சி எடுத்துக்கொள்கிறது. சரி, இது சின்னப் பூச்சிகளுடன் நிறுத்திக்கொள்கிறதா ? இல்லை, சிறிய தவளைகள், சில சமயம் எலிகள் கூட இத்தாவரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மனிதனைத் தின்னுமளவுக்கு தாவரங்கள் இல்லை என்பதே உண்மை. இவ்வகைத்தாவரங்கள் மனிதனைக்கூடத் தின்னும் என்ற வதந்தி பரவக் காரணம். பல மீட்டர் வரை வளரும் அமர்போபாலஸ் டைட்டானியம் போன்ற அசைவத்தாவரங்களாக இருக்கலாம். இவை வளர்ந்தவுடன் பூச்சிகளை ஈர்க்க நம்மால் சகிக்கமுடியாத துர்நாற்ற்த்தைப் பரப்பும், கிட்டத்தட்ட அந்த நாற்றம் ஒரு மனிதன் அந்த பூவுக்குள் இறந்து,அழுகிக்கிடப்பதைப் போல் இருக்குமாம். இது போல் நிறையத் தாவரங்கள் இருக்கின்றன. இதனால் இத்தகைய கட்டுக்கதைகள் பரவியிருக்கலாம்.

துர்நாற்றம் வீசும் பூச்சித்திண்ணித் தாவரம்


உண்மையில் ஒருவர் சொன்னது போல, அசைவத்தாவரங்களால் மனிதனுக்கு ஆபத்து என்பதை விட மனிதனால் அசைவத்தாவரங்களுக்கு ஆபத்து என்பதே பொருத்தமாக இருக்கும். இவற்றின் பிரபலத்தன்மையே அவற்றுக்கு ஆபத்தாகிவிட்டது. இதைக் கண்டவுடன் வேரோடு பிடுங்கி , விற்றுவிடுகின்றனர். இதனால் இப்போது இத்தாவரங்கள் அருகி வருகின்றன.
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com