<$BlogRSDUrl$>

Thursday, January 29, 2004

தேடுங்கள் கிடைக்கும் .. ! (3) - கூகிள்

தேடுபொறி பற்றிய நம் தேடலை முதலில் கூகிளில் இருந்து ஆரம்பிக்கலாம். இணையத்தில் தேடல் என்றாலே நினைவுக்கு முதலில் வருவது கூகிள்தானே ... கூகிள் என்ற பெயர் வைத்ததற்கே ஒரு காரணம் உண்டு.. கணிதத்தில் Googol என்பது ஒரு மிகப்பெரிய எண். ஒன்று போட்டு அதற்குப் பின்னால் நூறு பூச்சியம் போடுங்கள் என்ன எண் வரும்.. ? அந்த எண்ணுக்குப் பெயர்தான் Googol.. இதுவரை ஒரு Googol அளவுக்கு இந்தப் பிரபஞ்சத்தில் எதுவுமே இல்லை .. பிரபஞ்சத்தின் அத்தனை துகளகளையும் எண்ணினால் கூட Googol-ல் லட்சம் கோடியில் ஒரு பங்குகூட தேறாது..அவ்வளவு பெரிய எண் இது. ஆக கூகிளின் லட்சியம் எவ்வளவு பெரியது என்று நினைத்துப் பாருங்கள்..

நாள்தோறும் கூகிள் தேடு எந்திரம் 20 கோடி முறைக்கும் மேலாக பயன்படுத்தப்படுகிறது.. கிட்டத்தட்ட நூறு கோடிக்கும் மேலான இணையப் பக்கங்களைப் பற்றிய தகவல்களை வைத்திருக்கிறது.கூகிளைப் பயன்படுத்துபவர் வடதுருவத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளராய் இருக்கலாம்.. அமெரிக்காவில் இருக்கும் மருத்துவராய் இருக்கலாம் .. நம்மூரில் பள்ளியில் படிக்கும் சிறுவர்களாகவோ, புதிதாய் ஒரு கார் வாங்க யோசித்துக்கொண்டிருக்கும் அம்மணியாகவோ, ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவோ அல்லது யாராகவும் இருக்கலாம். இவ்வளவு ஏன் கூகிள் பற்றிய தகவல்களையேகூட நான் கூகிளில் தேடித்தானே எடுத்தேன்..?



கூகிளின் கதை மிக சுவாரசியமானது.. கூகிள் ஒன்றும் பெரிய நிறுவனத்தால் தொடங்கப்படவில்லை .. அதைத்தொடங்கிய இருவரும் 25 வயதுக்கும் குறைவான இரு பல்கலைக்கழக மாணவர்கள் .லேரி பேஜ் மற்றும் செர்கே பிரின் .இருவரும் முதன் முதலில் 1995 ஆம் வருடம் ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிக்கும்போது சந்தித்துக்கொண்டார்கள். அப்போது லேரிக்கு 24 வயது, செர்கேவுக்கு 23 வயது. அவர்கள் இருவரும் எதைப் பற்றி உரையாடினாலும் இருவரின் கருத்தும் மிக வித்தியாசமாய்,தனித்துவமானதாய் இருந்தது.. அடிக்கடி இருவரும் பெருந்திரளான தகவல் வெள்ளத்திலிருந்து தேவையானதை எப்படி எடுப்பது என்று விவாதித்தார்கள்.. இதுவே பின்னாளில் உலகின் தலைசிறந்த தேடுபொறி உருவாக அடிகோலியது ....
| | |
Comments:
this is a very good article.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com