<$BlogRSDUrl$>

Friday, February 25, 2005

உங்களுக்கு யாப்பான் நாடு தெரியுமா ?


ஒவ்வொரு நாடும் இன்னொரு பெயரால் அழைக்கப்படுவது என்பது சகஜமானது. இந்தியா-பாரதம், இலங்கை-சிலோன், பர்மா-மியான்மர் இதுபோல் இன்னும் பல உண்டு. சில பெயர்கள் ஆங்கிலத்தில் வேறு மாதிரியாகவும் தங்களின் சொந்த மொழியில் வேறு மாதிரியாகவும் அழைக்கப்படும்.

எனது நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்கு வந்தார். திருச்சி விமான நிலையத்திலிருந்து அவர் கிளம்பியபோது அவர் பாஸ்போர்ட்டைச் சோதித்த விமான நிலைய அதிகாரி அவரை மேலும் கீழுமாகப் பார்த்திருக்கிறார். பாஸ்போர்ட்டைத் திரும்பித் திரும்பிப் பார்த்திருக்கிறார். இவருக்கு ஏனென்று புரியவில்லை. பாஸ்போர்ட்டைச் சோதித்தபின்னர் ஜெர்மனி விசா எங்கே என்று கேட்டாராம். காரணம் என்னவென்றால் ஜெர்மனி என்பது ஆங்கிலப் பெயர். ஜெர்மனில் ஜெர்மன் நாட்டை டாயிட்ஷ்லண்ட் என்றுதான் கூறுவார்கள். விசாவிலும் டாயிட்ஷ்லண்ட் என்றுதான் இருக்கும். நண்பர் பாஸ்போர்ட்டில் ஜெர்மன் விசா இருந்த பக்கத்தைக் காட்டி, இதை எல்லாம் விளக்கிய பின்னர் அரை மனத்துடன் அதிகாரி விமானத்துக்குள் அனுமதித்தாராம்.

நம் தமிழ் மொழிபோலவே ஜெர்மனுக்கும் சில விஷேசங்கள் உண்டு. அதில் முக்கியமானது ஜெர்மனில் சில ஒலிகள் கிடையாது. J என்ற ஒலி ஜெர்மனில் இல்லை. சிலபல நகைச்சுவைச் சம்பவங்கள் இதை மையமாகக்கொண்டு நடப்பதுண்டு. ஜெர்மனில் "Ja" என்பதன் உச்சரிப்பை "Ya" என்பதுபோல உச்சரிப்பர். இதனால் Japan-ஆனது யாப்பான் என்று வாசிக்கப்படும். மேலும் "va" என்பது "fa" போல் வாசிக்கப்படும். எனவே பெங்களூர் நண்பர் Jeyaprakash - யெயபிரகாஷ் எனக் கொஞ்சகாலம் இங்குள்ள அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார். இன்னொரு நண்பர் Vijayasarathy - பியயசராதி எனப் பெயர் மாற்றமாகிவிட்டார் :~).
(0) Your Comments | | | |

Thursday, February 24, 2005

நீ காலில் விழு


வலைப்பூக்களில் ஏகப்பட்ட நல்ல பதிவுகள். பெரும்பாலானவை நிகழ்காலத்தின் கண்ணாடிகள். வருங்காலத்தில் நமது வலைப்பதிவுகள் இன்றையதேதியின் வாழ்வையும், செம்மையையும், அவலத்தையும் காட்டும் ஆவணமாக இருக்கப்போகின்றன என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்கும் என்று நினைக்கவில்லை.

கிறுக்கல்களில் இன்று ஒரு சுவாரசியமான பதிவு. அதற்குப் பலர் தங்களின் கருத்தையும் மொழிந்திருக்கிறார்கள். அங்கு கறுப்பி கொஞ்சம் சந்தோசத்துடன்(!) சொல்லியிருந்தார், "... பொண்ணுகளுக்கு நல்லாத்தான் மரியாதை கொடுக்கறீங்கள். ஆணுகளையே காலில விழ வைச்சிட்டா இந்த அம்மா". அதைப் பார்த்தவுடன் சட்டென தோன்றிய இதை இங்குப் பதித்துவிட்டேன்.

உண்மையில் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதோ அல்லது ஆண்கள் பெண்களின் காலில் விழுவதோ ஒன்றும் புதிதல்ல. அது காலங்காலமாய் இருந்து வரும் விஷயம். அது சில சமயம் வீட்டுககுள் ஒருவருக்கும் தெரியாமலும் நடப்பதுண்டு, அதைப் பற்றி நான் பேசுவதாய் நினைக்கவேண்டாம் :~).

சொல்லவந்தது, அம்மாக்களின் கால்களில் விழுவது பல நூற்றாண்டுகளாய் இருந்துவரும் விஷயம். அதில் தவறு இருப்பதாய் நானும் நினைக்கவில்லை. ஆனால் இங்கு முக்கியச் சர்ச்சையே அம்மா/மக்களின் தகுதிதான். இந்த அம்மா/மக்களின் தகுதியைப் பற்றிக் கணநேரம் சிந்திப்பவர்கள் யாரும் இப்பிரச்சனையை சீரியஸாய் எடுத்துக்கொள்வார்களா அல்லது சிறு நகைப்புடன் தத்தம் வேலையைப் பார்த்துகொண்டு போவார்களா என்று தெரியவில்லை. சரி இதை விட்டுவிடலாம்.

உண்மையில் காலில் விழுவதின் அர்த்தமே வேறு. ஒருவர் மற்றவரின் காலில் விழும்போது நிற்பவரிடம் தன்னுடைய பாவங்கள் அனைத்தையும் ஒப்படைத்துவிடுவதாய் ஐதீகம். பெற்றோர் மற்றும் பெரியோரின் காலில் விழுந்து தன்னுடைய பாவங்களை அவர்களுக்குக் கொடுத்துவிடுவதாய் ஐதீகம். இயேசு/மேரி அடுத்தவரின் பாவங்களைத் தாங்கள் ஏற்றுக்கொள்வதாய்ச் சொல்லப்படுவதையும் இத்துடன் கருத்தில் கொள்க.

காலப்போக்கில் ஏகப்பட்ட மாற்றங்கள்/திரிபுகள் நடக்கின்றன. அதில் இந்த விஷயமும் ஒரு விதிவிலக்கல்ல.
(1) Your Comments | | | |

சென்னை - மெட்ராஸ் - 3000 கி.மீ


ஊர்ப்பெயரை மாற்றுவதால் என்னென்ன கூத்துகள் நடக்கலாமென்பதற்கு ஒரு சாம்பிள். ஒரு பார்ட்டிக்குப் போனபோது ஜெர்மன் நண்பர் சோகத்துடன்/அசடு வழிய சொன்னது. அவர் ஒரு கன்சல்டண்ட். இரும்புத் தளவாடங்கள் உற்பத்தி தொடர்பான வல்லுனர். இந்தியாவில் அவருக்கு பல வாடிக்கையாளர்கள். அவரின் நிறுவனம் இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் உள்ளதாம். ஒருநாள் இவர் மெட்ராஸில் இருந்தபோது ஒரு சென்னை வாடிக்கையாளர் தொழிற்சாலைத் தயாரிப்புத் தொடர்பாகச் சந்திக்க விரும்பியிருக்கிறார்.

கண்ஸல்டண்ட், ".. நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள்..? "
"... சென்னையில் இருக்கிறேன்..", வாடிக்கையாளர் பதில்.
"....அப்படியா நான் இப்போது வேறு நகரத்தில் இருக்கிறேன், நாளை நாம் இருவரும் டெல்லி கிளை அலுவலகத்தில் சந்திக்கலாம்... ."

இருவரும் ஒரு நாள் காத்திருந்து விமானம் மூலம் டெல்லி சென்று அங்குள்ள கிளையில் சந்தித்தபோதுதான் உண்மை புரிந்திருக்கிறது. இருவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி எந்த விமானத்தில் வந்தோம் எனப் பரிமாறிக்கொண்டார்கள். ஆனாலும் அன்று ஒரு சின்ன சந்தோசம் - இருவரும் ஒரே விமானத்தில் வரவில்லை :~).
(0) Your Comments | | | |

Sunday, February 20, 2005

வெனிஸ் நகரம்


வெனிஸ் ஒரு மிக அழகான நகரம். சென்ற வாரம் நண்பர் குழாமோடு அங்கு சென்றிருந்தோம். இதைத் தண்ணீரில் மிதக்கும் நகரம் என்று கூறுவார்கள். நகரைச்சுற்றிலும் தண்ணீர்தான். படகிலேயே முழுநகரையும் சுற்றிப்பார்க்கலாம். கிட்டத்தட்ட இதுபோல் இன்னொரு நகரமும் ஐரோப்பாவில் உள்ளது. அது ஆம்ஸ்டர்டாம். வெனிஸ் நகரத்தைச் சுற்றிச் சின்னச் சின்ன அழகான தீவுகளும் உண்டு. முடிந்தால் இதுபற்றி நிறைய எழுத வேண்டுமென நினைக்கிறேன். கீழேயுள்ளவை அங்கு எடுத்த சில புகைப்படங்கள்.

கடைசிப் புகைப்படத்தில் வலது ஓரம் நிற்பது நான்தான்.





(2) Your Comments | | | |

Thursday, February 17, 2005

ஒருவேளை இப்படி நடந்துவிட்டால் ... ??


அந்தக் கேள்வி மிகச் சுவாரசியமானது.விசித்திரமான மற்றும் சுவாரசியமான பல கேள்விகள் கூகிள் பதில்கள் பகுதியில் அவ்வப்போது கேட்கப்படுவதுண்டு. பொழுதுபோகாவிட்டால் அங்குள்ள கேள்விகள் பதில்களை நான் அவ்வப்போது பார்ப்பதுண்டு.

ஒரு நீண்டகால முன்ணுணர் திட்டம் போன்ற ஒரு புராஜக்டில் இயங்கிவருவதாகவும் அதற்கு யோசனைகளை எதிர்பார்ப்பதாகவும் ஒருவர் தெரிவித்திருந்தார். இரு வேறு தலைப்புக்களில் யோசனை கேட்டு அவற்றுக்குக் கொஞ்ச உதாரணங்களையும் கொடுத்திருக்கிறார். இக்கேள்வியின் பொருத்தமான பதிலுக்கு அவர் கொடுக்கச் சம்மதித்திருக்கும் தொகை முப்பது டாலர். நமது வலைப்பூ நண்பர்களுக்கு நல்ல ஐடியா ஏதும் இருந்தால் பதில் சொல்லி முப்பது டாலரை வாங்கிக்கொள்ளலாம். :-)

அவர் கொடுத்த இரு தலைப்புக்களும் உதாரணங்களும்

1. நாகரீகம் அழியக் காரணங்கள்
2. மிக அசாதாரண நிகழ்வுகளாய்/எதிர்காலத்தில் நடக்ககூடியதாய் அமெரிக்க அரசின் சந்தேகக் கருத்தேற்றத்தில் ரகசியமாய் இருக்கச் சாத்தியமானவை.

அவர் கொடுத்த சில உதாரணங்கள்

1. நாகரீகம் அழியக் காரணங்கள்
உலகப்போர்
உள்நாட்டுப் போர்
மக்கள் தொகை குறைதல்
விவசாயம் பொய்த்தல்
..........
.....
...


2. மிக அசாதாரண நிகழ்வுகளாய்/எதிர்காலத்தில் நடக்ககூடியதாய் அமெரிக்க அரசின் சந்தேகக் கருத்தேற்றத்தில் ரகசியமாய் இருக்கச் சாத்தியமானவை.
அணுஆயுதத் தாக்குதல் அமெரிக்காவின் மீது
வேதியியலாயுதத் தாக்குதல்
உயிரியலாயுதத் தாக்குதல்
வெளிக்கிரக உயிரிகள் பூமிக்கு வருதல்
சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா ஒரே சக்திமண்டலமாக ஒருங்கிணைதல்.
.............
............


ஆர்வத்துடன் ஒருவர் சொன்ன பதில், எதையும் தின்னக்கூடிய உயிரிகள் (தோற்றம் அல்லது வரவு).

குறும்புக்கார ஒருத்தர் உலகிலுள்ள பெண்கள் அனைவரும் தாம்பத்தியத்துக்கு ஒட்டுமொத்தமாக மறுத்துவிடுவது என்று சொல்ல, அதற்கு இந்தக்கேள்வி கேட்டவர் சொன்ன பதில்.

"... எனக்குத் தெரிந்து குறைந்தது இருதடவை வரலாற்றில் நடந்திருக்கிறது,
(1) Lysistrata (Aristophanes) in 375 BC
(2) எனது முன்னாள் மனைவி 1991 AD ... "

எனக்கு "உன்னால் முடியும் தம்பி" திரைப்படப் பெண்கள் சட்டென நினைவுக்கு வந்தார்கள். :~)
(0) Your Comments | | | |

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com