<$BlogRSDUrl$>

Wednesday, February 25, 2004

மெகா சைஸ் வைரப்படிகம் ..!

Picture courtesy: Astro Society சமீபத்தில் அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைக்கழத்தின் விஞ்ஞானிகள் ராட்சத சைஸ் (இன்னும் சொல்லப்போனால் அதைவிட பெரிசு) படிகம் ஒன்று இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள் .. கிட்டத்தட்ட அதன் பண்புகள் வைரத்தைப்போலவே இருக்கிறது என்றும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள் .. உடனே அது எத்தனை காரட் என்று கேட்கவேண்டாம் ஏனென்றால் அதனைக் காரட்டில் சொல்வது கொஞ்சம்(?) கஷ்டமான காரியம் .. எத்தனை கிலோ மீட்டர் நீளம் என்று வேண்டுமானால் சொல்லலாம் ... கிட்டத்தட்ட அந்த படிகத்தோட அளவு நம் நிலாவின் அளவு இருக்குமாம் .. கற்பனை செய்து பார்த்தால் தலையே சுற்றுகிறது .. எந்த ஊரிலுள்ள வைரச்சுரங்கத்தில் இது கிடைத்தது என்று யாரும் யோசிக்குமுன் சொல்லிவிடுகிறேன் .. அது பூமியிலேயே இல்லை .. மேலும் அதில் சிறு பகுதியைக் கூட பூமிக்குக் கொண்டு வருவதும் சாத்தியம் இல்லை .. பிரபஞ்சத்தில் "வெள்ளை நிறக்குள்ளர்" என்று சொல்லப்படக்கூடிய இறந்து கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரத்தின் மையப்பகுதியில் இருக்கிறது இந்தப் படிகம்...

அசல் வைரம் முழுக்க முழுக்கக் கார்பன் என்ற தனிமத்தால் ஆனது..உண்மையான வைரத்தை எரித்தால் சாம்பல்கூட எஞ்சாது ..... நிலக்கரிக்கும் வைரத்துக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை .. இரண்டுமே கார்பன்தான்.. கரிக்கு மிக அதிக அளவில் அழுத்தம் கொடுக்கும்போது அதன் படிக அமைப்பு மாறி வைரமாக மாறிவிடுகிறது.. இப்போது கண்டுபிடிக்கப்பட்ட படிகம் கிட்டத்தட்ட சம அளவில் கார்பனும் , ஆக்ஸிஜனும் சேர்ந்து உருவானதாக யூகிக்கிறார்கள் .. நட்சத்திரத்தின் மையப்பகுதியில் இருக்கும் அழுத்தத்தில் கோடியில் சிறு பகுதிகூட வைரத்தை உருவாக்குவதற்குப் போதுமானது .. எனவேதான் இத்தனை பெரிய படிகம் ஒன்று அதில் உருவாகி இருக்கிறது .. மேலும் கார்பனும், ஆக்ஸிஜனும் சேர்ந்திருந்தாலும் இந்தப் படிகத்தின் பண்புகள் வைரம் போலவே இருப்பதாய் முடிவு செய்திருக்கிறார்கள் ... இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற வெள்ளைக்குள்ளர்களின் ஈர்ப்புசக்கதி மிக மிக அதிகமாக இருக்கும் .. அதனால் பூமியில் 50 கிலோ இருக்கும் ஒருவர்( 50 கிலோ தாஜ்மகால் ?) அங்கு போனால் சில நூறு டன்கள் எடை கொண்டவராய் இருப்பார் .. மேலே படத்தில் இருப்பதும் ஒரு வகை வெள்ளைக்குள்ளர் நடசத்திரம்தான்..

ஒரு சிறு கற்பனை .. மேலே சொன்ன படிகத்தில் சில(?) கிலோமீட்டர் நமக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்... ? சலவைக்கல் என்னங்க .. பெரிய சலவைக்கல் .. வைரக்கல்லிலேயே நாம் பல தாஜ்மகால் கட்டலாம் ....
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com