<$BlogRSDUrl$>

Sunday, February 22, 2004

வலைப்பூக்களும் , அது பற்றிய சில எண்ணங்களும்.. !

வெங்கட் அவர் வலைப்பூவில் எழுதியிருந்த மூன்றாம் வலை பற்றி இவ்வார வலைப்பூவில் ஐகாரஸ் பிரகாஷ் எழுதியிருந்தார் .. வளரும் நிலையிருக்கும் வலைப்பூத் தமிழுக்கு இது ஒரு தேவையான, அவசியமான கருத்துப்பரிமாற்றம் என்றே தோன்றுகிறது .. பிரகாசும், வெங்கட்டும் பல நல்ல கருத்துக்களைச் சொல்லியிருந்தார்கள் .. சாதாரணமாக டைரியில் எழுதுவதுபோல அன்றாட நிகழ்வுகளை வலைப்பூவில் எழுதுவதை ஒருவர் தவிர்க்கவேண்டும் என்று வெங்கட் சொல்லியிருந்தார். இங்கு அவர் கூறுவதிலிருந்து மாறுபட நினைக்கிறேன் .. ஒரு வலைப்பூவின் அல்லது வலைப்பதிவின் வீச்சு அங்கே இருந்து ஆரம்பிப்பதில் எந்தத் தவறுமில்லையே ..? இன்னும் சொல்லப்போனால் இது குறைந்த பட்சம் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரையும் வலைப்பூ துவங்கத் தூண்டும் என்பதுபோல் எண்ணத் தோன்றுகிறது ..

பொதுநலச் சிந்தனைகளையும் , கருத்துக்குவியல்களையும் , தத்துவமுத்துக்களையும்தான் அனைவருமே எழுதவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது ... அவரவரால் இயன்றதை அவரவர் எழுதலாம் .. வலைப்பதிவின் எழுத்துக்கு ஒரு எல்லையை , வரம்பை அறிவுஜீவிகளின் நிலையிருந்து நிர்ணயிப்பது என்பது அதுவும் குறிப்பாக, தவழும் அல்லது தளிர் நடையிட்டுக்கொண்டிருக்கும் தமிழ் வலைப்பதிவுகளுக்கு நிர்ணயிப்பது அந்தளவுக்குச் பயனுடையதாய் இருக்குமா என்று தெரியவில்லை ... ஆனால் வலைப்பூவின் தரத்துக்குத் தகுந்தவாறு , அலைவரிசை ஒத்த வாசகர்கள் கிடைப்பர் எனபதிலும் , தரமும் , பொருளும் அதிகமுள்ள வலைப்பூக்கள் பெரும்பாலோரால் விரும்பப்படும் என்பதிலும் சந்தேகமில்லை ...

தமிழ் வலைப்பூவின் இன்றைய தேவை அது சாதாரண மக்களுக்கு படிக்க ,படைக்க எட்டவேண்டும் .. மின்னஞ்சல் முகவரி வைத்திருக்கும் ஒவ்வொருவரும் வலைப்பதிவினைப் படிக்க மற்றும் தானும் ஒரு பதிவு ஆரம்பிக்க முயலவேண்டும். இந்தத் திசையில் இன்று அனைவரும் தம்மால் இயன்ற சிறு துரும்பை எடுத்துப் போடவேண்டும். அவரவர் நண்பர்களை இத்திசையில் முடிந்தளவு ஊக்குவிக்க வேண்டும் .. இணையத்தைப் பயன்படுத்தும் பள்ளி, கல்லூரி மாணவர்களில் இருந்து அனைவரும் வலைப்பூ படிக்க , பதிக்க உதவவேண்டும் ..

இப்படிச் சொல்வதால் அனைவரும் அவரவர் தட்பவெப்பத்தையும் , இன்று புதிதாய்ச் சமைத்த ஒரு ஐட்டத்தின் சுவையையும் மட்டும்தான் எழுதவேண்டும் என்று சொல்லவதாய் நினைக்கவேண்டாம்.. ஆனால் அவற்றை எழுதுவதிலும் தவறில்லை என்பதுதான் என் பணிவான கருத்து.. சாதத்திலிருந்து சாம்பார் ,மோர்வத்தல், தோசை , வடை என்று அத்தனையையும் நம் தமிழ் மக்கள் வலைப்பூவில் எழுத ஆரம்பித்தால் அதுவும்கூட நிச்சயம் தமிழுக்கும் , தமிழ் வலைப்பதிவுக்கும் பயனளிக்கும் என்றே தோன்றுகிறது .. இன்னும் சொல்லப்போனால் இவை சில பயனற்ற விவாதங்களை விட அனைத்து மக்களுக்கும் நேரடியாய்ப் பயனளிக்கக்கூடியது என்பதில் சந்தேகமில்லை ...ஒரு வேளை அவ்வாறு யாராவது சமையலுக்காக என்று தனியாய் ஒரு வலைப்பூ ஆரம்பித்தால் முதல் ஆளாய் அவ்வலைப்பூவின் முகவரியை நான் என்னுடைய கணினியில் குறித்து வைத்துக் கொள்ளுவேன் .. இன்று நண்பர்களுக்கோ , எனக்கோ , அல்லது நாளை வரப்போகும் எனது மனைவிக்கோ இக்குறிப்புகள் சமைக்க உதவலாம்தானே ..?


சமையலில் இருந்து கணினித் தொழில்நுட்பம், கருத்துக்குவியல்கள் , உலக நடப்புக்கள் , கவிதைகள் , கட்டுரைகள் என்று அனைத்துமே வலைப்பதிவில் வரட்டுமே .. பாரதி சொன்னதுபோல் சந்தி தெருப்பெருக்கும் சாத்திரத்தில் இருந்து , எட்டுத்திக்கும் உள்ள கலைச்செல்வங்கள் வரை அனைத்தையும் தமிழில் கொண்டுவந்து குவிக்க வலைப்பூக்கள் பேருதவி புரியப்போகின்றன என்று சொன்னால் அது மிகையாகது ...

என் பால்ய நண்பனொருவன் அவன் ஊரிலிருக்கும் தட்பவெப்பத்தையும் , பக்கத்துவீட்டுக்காரர்களைப் பற்றியும் , அவன் நண்பர்களைப் பற்றியும் எழுதிக் கொண்டிருந்தால் அவை அவனுக்குச் சம்பந்தமே ஒருவருக்கு அத்தனை சுவாரசியமாக இல்லாமல் இருக்கலாம் ..ஆனால் அவற்றில் பல எனக்குப் பரிச்சயமானவைகளாக இருப்பதால் அவற்றில் எனக்கும் , என் போன்ற அவனின் பிற நண்பர்களுக்கும் மிகச் சுவாரசியமானவைகளாக இருப்பதில் வியப்பென்ன .. ? அவன் அதனை உலகில் உள்ள அனைவரையும் நினைத்துப் பதிக்கவில்லை .. ஒரு டைரியைப் போல பின்னால் அவன் படித்துப்பார்க்க ஒரு பதிவாக இருக்குமே என்று நினைத்திருக்கலாம் .. அல்லது என் போன்ற சில நண்பர்களை நினைத்து எங்களுக்காகப் பதித்திருக்கலாம் .. ஆனால் அவனின் பதிவுகள் அனைத்துமே இந்தச் சின்ன வட்டத்துடனேயே நின்று விடுவது என்பது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை ..

ஒரு அறிவியல் வல்லுனர் இன்று புதிதாய் வந்த கண்டுபிடிப்புக்களையும் , அதன் சாதக பாதகங்களையும் விளக்கி எழுதலாம் .. அவரே இலக்கியத்திலும் நல்ல பரிச்சயமிக்கவரானால் அது பற்றியும் எழுதலாம் .. பள்ளிக்கூடத்தில் படிக்கும் சிறுவன் தன் பதிவில் அவன் இன்று பார்த்ததை , நடந்ததை எழுதலாம் .. ஒரு சமூக சிந்தனையாளர் தன்னுடைய சிந்தனைகளை எழுதலாம் .. மனிதனின் எண்ணத்துக்கும் ,எழுத்துக்கும், படைப்புக்கும் எல்லையேது .. ? இங்கே நாம் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும் .. எந்த ஒரு வாசகரின் , வலைப்பதிவாளரின் எல்லை அல்லது தேவை என்பது மேலே சொன்ன எவற்றுடனும் நின்று விடுவதில்லை..

வலைப்பூக்களிலிருந்து தேவையான தகவல்களை தேடியெடுப்பது பற்றிச் சொல்லும்போது சில சமயம் என்னுடைய பதிவில் இருக்கும் எந்த வார்த்தையையும் கூகிளில் வெட்டி, ஒட்டித் தேடினால் ஆச்சரியப்படும்வகையில் சரியாக என் வலைப்பூவை கூகிள் தேடிக்கொடுக்கிறது .. சில சமயம் அவ்வாறு தருவதில்லை .. சில சமயம் தேடியெடுத்தல் கொஞ்சம் கடினமான செயலாக இப்போது தெரியலாம் .. காசி அண்ணனின் ரவா தோசைப் பதிவைக் கூகிளில் தேடிப்பார்த்துக் களைத்துப்போய் , வீட்டில் பேச்சு வாங்கியதை நண்பர் சுரதா சோகத்துடன் இங்கு ஒரு முறை சொல்லியிருந்தார் ..

நாம் நினைத்ததைத் தேடும்போது சில சமயம் இதுபோல் நடக்கத்தான் செய்கிறது .. ஆனால் இது நிரந்தரமான பிரச்சனை என்று சொல்வதற்கில்லையே .. ? பத்து வருஷத்துக்கு முன்னால் இணையத்தேடல் இன்று போல் இவ்வளவு எளிதானதா.. ? இவ்வளவு ஏன்.. ? தமிழில் ஒரு வலைப்பக்கத்தைப் பார்ப்பது என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எவ்வளவு அரிதாய் இருந்தது .. இன்று கூகிள் தமிழிலியே வந்துவிட்டது .. நண்பர் சுரதாவும்கூட திஸ்கியிலேயே தமிழைத் தேட கூகிள் தேடுபொறி வடிவமைத்திருக்கிறார் .. ஆக இன்றைக்குக் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் நாளை இவ்வலைப்பூக்களில் உள்ளவற்றைத் தேடியெடுப்பது என்பது அவ்வளவு பெரிய செயலாய் இராது என்றே எண்ணத் தோன்றுகிறது ..
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com