Saturday, June 05, 2004
வேரும் , மொழியும் ... !
சில நாட்களுக்கு முன்னர் ஜார்ஜிய நண்பரொருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது சில தகவல்கள் கிடைத்தன.
நான், "....உங்கள் நாட்டில் என்ன மொழி பேசுவீர்கள்.. ? ஆங்கிலமா..? "
".. ஆங்கிலமா..? ஜார்ஜியாவின் மொழி ஜார்ஜியன் . உங்களுக்குத் தெரியுமா..? எங்கள் மொழி உலகின் தொன்மையான மொழிகளுள் ஒன்று. .. ஆனால் கிரீக், லத்தீன் அளவுக்கு மற்றவர்களிடம் பிரபலம் அடையவில்லை. ஏனென்றால் அந்தளவுக்கு மொழியை எங்கள் நாட்டில் இருந்தவர்கள் முன்னெடுத்துச் செல்லவில்லை..." என்றார் ஆதங்கத்தோடு.
தொடர்ந்து அவரே சொன்னார், "...ஜார்ஜியாவின் வரலாறு ரோமின் வரலாறு போலவே பழமையானது. ஜார்ஜியா ஒரு நாடாகப் பிரபலமாக இருந்த காலத்தில் ரோம் பிரபலமான நகரமாக இருந்தது. ..., இன்றைக்குக் கிட்டத்தட்ட சிங்கப்பூர் எப்படி இருக்கிறதோ அதுபோல அன்று ரோம் இருந்தது.., ஜார்ஜிய மொழியும் லத்தீன் , கிரீக் போன்றவற்றைப் போலவே தனித்தன்மை வாய்ந்தது..." , என்று சொல்லிவிட்டுத் திரும்பக் கேட்டார்,"...நீங்கள் என்ன மொழி பேசுவீர்கள் ..? "
".... நான் பேசும் மொழி தமிழ். உலகில் வழக்கிலுள்ள ஓரிரு செம்மொழிகளுள் ஒன்று... "
" ... ஓ .. அப்படியா..? , எனக்கு இந்திய மொழிகளைப் பற்றிக் கொஞ்சம் தெரியும். ஐரோப்பிய மொழிகளின் நிறையச் சொற்களை இந்திய மொழிகளில் காணமுடியும், ஏனெனில் அவை ஐரோப்பியமொழிகளின் கலப்பினால் உருவானவை..."
எனக்கு அவர் சொன்னதில் முழுவதும் உடன்பாடில்லை. எனவே என்னுடைய கருத்தைச் சொன்னேன்.
"... நீங்கள் சொன்னதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. ஆனால் முழுவதும் உண்மை இல்லை. இந்திய மொழிகளில் இந்தோ-ஐரோப்பிய மொழிகள், திராவிட மொழிகள் என இரு பிரிவுகள் உண்டு. இந்தோ-ஐரோப்பிய வகையைச் சார்ந்த சமஸ்கிருதத்தை வேராகக் கொண்டவற்றில் ஐரோப்பிய மொழிகளின் நிறையச் சொற்களைக் காண இயலும்.., ஆனால் திராவிட மொழிப் பிரிவைச் சார்ந்த தமிழில் ஐரோப்பிய மொழிகளின் சொற்கள் இல்லையென்றே சொல்லலாம். தமிழை வேராகக் கொண்ட பிற திராவிட மொழிகளில் காணப்படும் ஐரோப்பிய மொழிச்சொற்களும்கூட சமஸ்கிருத மொழித்தாக்கத்தால் வந்தவையே...."
கொஞ்சம் ஆச்சரியத்துடன் கேட்டார்,
"... இந்தியாவிலுள்ள இந்தோ-ஐரோப்பிய மொழிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழைப் பற்றி அந்தளவுக்குக் கேள்விப்படவில்லையே.."
சில வினாடி மவுனத்துக்குப் பின்னர் அவர் முன்னர் எனக்குச் சொன்ன பதிலையே திரும்பச் சொன்னேன்.
"...தமிழ் மொழி உலகின் தொன்மையான தனித்தன்மை வாய்ந்த மொழிகளுள் ஒன்று. .. ஆனால் கிரீக், லத்தீன் அளவுக்கு மற்றவர்களிடம் பிரபலம் அடையவில்லை. ஏனென்றால் அந்தளவுக்கு மொழியை எங்கள் நாட்டில் இருந்தவர்கள் மற்றவர்களிடம் முன்னெடுத்துச் செல்லவில்லை..." என்றேன் ஆதங்கத்தோடு.
Comments:
Post a Comment