<$BlogRSDUrl$>

Thursday, May 13, 2004

வர்ணஜாலம்


பொதுவாய் ஒரு வேதிப்பொருளை ஒரு திரவத்தில் கரைத்தால் அந்தப் பொருளின் நிறம்தான் அந்தக் கரைசலுக்குக் கிடைக்கும். தண்ணீரில் செம்மண்ணைப் போட்டுக் கலக்கினால் கிடைப்பது சங்க இலக்கியப்புகழ் சிவப்பு நிறச் செம்புலப்பெயல்நீர். இதற்குக் காரணம் அதிலுள்ள இரும்புத்தாது என்பது வேறு விஷயம். தண்ணீர் ஆவியானால் அந்தச் செம்மண்ணைத் திரும்பவும் பெறமுடியும். இதேபோல் சமையல் உப்பைத் தண்ணீரில் கரைத்தால் நிறமற்ற கரைசல் கிடைக்கும், கரைசலை ஆவியாக்கினால் திரும்பவும் அந்த உப்பே நமக்குக் கிடைக்கும், உப்பளங்களில் நடக்கும் விவசாயம் இதுதானே. இதேபோல் நீல நிற காப்பர் சல்பேட் படிகத்தைத் தண்ணீரில் கரைத்தால் அழகிய நீல நிறக் கரைசல் கிடைக்கும், பிறவற்றைப் போலவே கரைசலை ஆவியாக்கினால் திரும்பவும் காப்பர் சல்பேட் படிகத்தை திரும்பப் பெறலாம்.





"ஃபிரிடினோ பீனோலேட்" என்ற குடும்பத்தைச் சேர்ந்த வேதிப்பொருட்கள் மேற்கண்ட சாதாரண நிகழ்வுக்கு விதிவிலக்காய் இருக்கிறன. இவை நாம் கரைக்கும் திரவத்தின் தன்மையைப் பொருத்துக் கரைசலின் நிறத்தை மாற்றிக் காட்டும். பொதுவாய் இக்கரைசலின் வண்ணம் பளிச்சென மனதைக் கவரும் நிறமாகப் இருக்கும். எல்லாம் சரி, இந்த நிகழ்வு எதற்குப் பயன்படப்போகிறது ? என்றால் இதைப் பல நோக்கங்களுக்காய்ப் பயன்படுத்த இயலும். உதாரணத்துக்குச் சொன்னால், திரவத்தின் அடிப்படைப் பண்பான "போலாரிட்டி" என்பதைத் தீர்மானிக்கவும் , இதற்காய் ஒரு தோராயமான அளவுகோலை உருவாக்கவும் இக்குறிப்பிட்ட வேதிப்பொருளைப் பயன்படுத்தலாம்.

"போலாரிட்டி" என்றால் என்ன என்பதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல ஆரம்பித்தால் முழுவதும் வேதியியல் சம்பந்தமாய் இருக்குமென்பதால் கொஞ்சம் எளிதாய் மேலோட்டமாய்ச் சொல்ல முயற்சிக்கிறேன். போலாரிட்டி என்பது கிட்டத்தட்ட மின்தன்மை போல என வைத்துக்கொள்ளலாம். போலாரிட்டி அதிகமான வேதிப்பொருட்கள் போலாரிட்டி அதிகமான திரவத்தில் மட்டும்தான் கரையும். உதாரணமாய் நாம் பயன்படுத்தும் சமையல் உப்பு போலாரிட்டி அதிகமான வேதிப்பொருள், எனவே இது போலாரிட்டி அதிகமாக உள்ள தண்ணீர் போன்ற திரவங்களில் மட்டும்தான் கரையும். மண்ணெண்ணையின் போலாரிட்டி மிகக் குறைவு எனவே மண்ணெண்ணையில் சமையல் உப்பு கொஞ்சம்கூடக் கரையாது. நண்பர்கள் யாராவது சிறுவயதில் மண்ணெண்ணையில் உப்பைக் கரைத்துப் பார்த்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. பள்ளியில் படிக்கும்போது மண்ணெண்ணையில் உப்பைக் கரைத்துப் பார்த்து திட்டு வாங்கிய அனுபவம் எனக்கு உண்டு. சொல்ல மறந்துவிட்டேன்.. அன்று எனக்கும் அது கொஞ்சம் கூடக் கரையவேயில்லை. தண்ணீரும், மண்ணெண்ணெயும் ஒன்றோடொன்று கலப்பதில்லை, இதற்குக் காரணமும் இந்தப் போலாரிட்டிதான்.

நமது விஷயத்துக்கு வருவோம். போனவாரம் மேலே குறிப்பிட்ட "பீனோலேட்" வகை வேதிப்பொருளை வேறு ஒரு ஆய்வுக்காய்த் தயாரித்தேன். ஒரு ஆசையில் அதைப் பல திரவங்களில் கரைத்துப் பார்த்தபோது, எதிர்பார்த்ததுபோலவே அழகான பல நிறங்களில் கரைசல்கள் கிடைத்தன. நண்பர்களுக்குக் காட்டலாமே என ஒரு போட்டோவும் எடுத்துவைத்தேன். அதுதான் நீங்கள் இங்கு பார்ப்பது. தங்க நிறத்தில் மஞ்சளாய்த் தெரிவது குறிப்பிட்ட வேதிப்பொருளைத் தண்ணீரில் கரைத்த கரைசல். மற்ற திரவங்களில் ஒன்றைத் தவிர ஏனையவை அனைவருக்கும் அவ்வளவு பரிச்சயமானவை அல்ல, இடமிருந்து வலமாக, கரைக்கப் பயன்படுத்தப்பட்ட திரவங்கள் டெட்ராஹைட்ரோபியூரான் , டைமெத்தில் ஃபார்மமைட் , தண்ணீர் , எத்தில் ஆல்கஹால் ( அட அதாங்க, எல்லோருக்கும் நல்லாத் தெரிஞ்ச நம்ம தண்ணி ;) )
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com