<$BlogRSDUrl$>

Tuesday, May 18, 2004

மைக்ரோசாப்ட் Vs வெங்காயம்


வெங்காயம்(onion) மிகப் பிரபலமான ஒன்று. நாம் சாப்பிடும் வெங்காயத்தை நான் சொல்லவில்லை. இது ஒரு செய்திப் பத்திரிக்கை, மற்ற செய்திப் பத்திரிக்கைகளுக்கும் இதற்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு, சாதாரணமாய் எல்லாப் பத்திரிக்கைகளும் நடந்த(?) செய்திகளை அப்படியே(!) வெளியிட்டால் "வெங்காயம்" மட்டும் கற்பனையாகச் செய்திகளை வெளியிடும். இந்தக் கற்பனைச் செய்திகளின் நோக்கம் புரளியைக் கிளப்புவது அல்ல, வயிறு குலுங்கச் சிரிக்கவைப்பது மட்டுமே. நம் நண்பர்கள் பலருக்கு இந்த வெங்காயத்தைப் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். இதில் வந்த பல கற்பனைச் செய்திகள் மிகப் பிரபலமடைந்து உண்மையான செய்தியாக இருக்குமோ என்ற அளவுக்குச் சந்தேகத்தைக் கிளப்பியதுண்டு.

அதில் ஒன்று மைக்ரோசாப்ட் ஒரு நூதன காப்புரிமை பெற்றதாய் வந்த செய்தி. இந்தக் கற்பனைச் செய்தி கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்னர் ஆனியன் இதழில் வந்து மிகப் பிரபலமடைந்து அனைவராலும் பேசப்பட்டது. இங்கே என் நண்பரொருவர் சில மாதங்களுக்கு முன்னால் என்னிடம் அதே செய்தியைக் கூறி இது உண்மைதான் எனப் பிடிவாதமாய்ச் சொன்னார். அது ஒன்றும் நீங்கள் நினைக்கும் அளவுக்கு நூதனமான காப்புரிமை அல்ல. பூச்சியம் , ஒன்று ஆகிய எண்களுக்கு மைக்ரோசாப்ட் காப்புரிமை(!) பெற்றிருக்கிறது என்பதுதான் அந்த நகைச்சுவைச் செய்தி. அமெரிக்கா செய்யும் காப்புரிமைகளைப் பார்க்கும்போது சில வருடங்களில் இது உண்மையாகவே நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, என்றாலும் அவர்கள் எழுதியிருந்த விதத்தைப் படித்தவுடன் என்னால் சிரிப்பை அடக்கவே இயவில்லை, அதுவும் பில்கேட்ஸ் இந்தக் காப்புரிமை பெற்றபின் பத்திரிக்கைக்குக் கொடுத்த பேட்டி என ஒன்றை எழுதியிருந்தார்களே மிக அசத்தல்.

" ..... இதை ஒரு கூட்டுமுயற்சியாய்ச் சிந்திக்க வேண்டும். மின்னிலக்க முறையில் எப்படி ஒன்றும் , பூச்சியமும் இருக்கிறதோ அதேபோல் உலகின் தனிச்சிறப்பு வாய்ந்த, மிகப் பெரிய , பணக்கார நிறுவனமான மைக்ரோசாப்ட் எண் ஒன்றைப் போன்றது , எங்கள் நிறுவனம் உருவாக்கும் மென்பொருட்களைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான நுகர்வோர்களே நீங்கள்தான் அந்தப் பூச்சியம்... கம்ப்யூட்டர் உலகத்தில் புரட்சியை ஏற்படுத்த நாம் இருவரும் சேர்ந்து செயல்படவேண்டும்."
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com