Sunday, May 30, 2004
தமிழ் - செம்மொழி அந்தஸ்து அவசியமா ... ?
இந்திய அரசால் தமிழ் செம்மொழி என அறிவிக்கப்படவுள்ளது. பல்லாண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கவேண்டிய விஷயம் இது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேல் தாமதமாய் நடந்தாலும் இது அனைவரும் கொண்டாட வேண்டிய விஷயம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
தமிழ் செம்மொழி என அறிவிக்கப்படுவதால் என்ன பெரிய நன்மை.. ? , இது அவ்வளவு முக்கியமான விஷயமா..? என்ற தொனியில் தமிழ் நன்றாய் அறிந்த நண்பர்களே கேட்கும்போது மனதில் ஏற்படும் தாங்க இயலா அதிர்ச்சியை, ஆற்றாமையைத் தவிர்க்க இயலவில்லை. தமிழைச் செம்மொழி என அதிகாரப்பூர்வமாய் அறிவிப்பது என்பது நம்மூர் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் கவுரவ டாக்டர் பட்டம்போலவோ என்று பலர் நினைப்பது ஏக்கம் தரும் சோகமான விஷயம்.
உலகில் செம்மொழி என அதிகாரப்பூர்வமாய் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் கிரீக், லத்தீன், ஹீப்ரு, சீனம், சமஸ்கிருதம், பாரசீகம் ஆகிய மொழிகள் மட்டுமே. எனவே இந்த மொழிகளில் உலக அளவில் பல பல்கலைக்கழகங்களில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பணம் செலவழிக்கப்பட்டு மொழியியல் ஆய்வுகள் நடந்துவருகின்றன. செம்மொழி என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சமஸ்கிருத மொழி ஆய்வுகளுக்காய் ஆண்டுதோரும் பல கோடி ரூபாய் இந்திய அரசால் செலவழிக்கப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதானே..? இந்தியா தவிர மேற்கத்திய நாடுகளிலும், பிற நாடுகளிலும் சமஸ்கிருதம் உள்ளிட்ட அனைத்துச் செம்மொழி ஆய்வுகளுக்காகவும் ஆண்டுதோறும் பல மில்லியன் டாலர் பண உதவியுடன் ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. தமிழ் செம்மொழியாக உலகெங்கிலும் உள்ள மொழியியல் அறிஞர்களால் அறியப்பட்டிருந்தாலும், தமிழ் மொழி ஆய்வுகள் பல்லாண்டுகளாய்ப் பல்வேறு நாடுகளில் உள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவந்தாலும், தமிழ் செம்மொழி என அதிகாரப்பூர்வமாய் அறிவிக்கப்படாமல் இருந்தது ஒரு பெரிய குறையாகவே இருந்து வந்தது.
செம்மொழி என ஒரு மொழி அழைக்கப்பட அதற்கு இருக்கவேண்டிய தன்மைகளான தனித்து இயங்கும் தன்மை, பழமை, பல மொழிகளின் தாய், இலக்கிய, இலக்கண வளம் என அனைத்துத் தகுதிகளும் தமிழுக்கு இருந்தாலும் பல்லாண்டுகளாய்க் கவனிக்கப்படாமலேயே இருந்துவந்தது. தமிழ் செம்மொழியாய் அறிவிக்கப்பட இருப்பதால் இனி வரும் ஆண்டுகளில் சமஸ்கிருதத்துக்குச் செய்யப்பட்டு வருவதைப்போலத் தமிழ் வளர்ச்சிக்காகவும் பெரும் அளவில் மத்திய அரசால் பணம் ஒதுக்கீடு செய்யப்படும். இப்போது இருப்பதை விட அதிக அளவில் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், மேற்கத்திய நாடுகளிலும் தமிழ்த்துறைகள் புதிதாய்த் துவங்கப்பட இது வழிவகுக்கும்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர். ஜார்ஜ் எல். ஹர்ட் ஆதங்கத்துடன் சில வருடங்களுக்கு முன்பு சொல்லியிருந்தததை முடிந்தவரை தமிழாக்கியிருக்கிறேன்,
" ...... தமிழைச் செம்மொழி என அதிகாரப்பூர்வமாய் இன்னும் அங்கீகரிக்காதது அரசியல் காரணங்களாலேயே என நம்புகிறேன். தமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட்டால் பிற இந்திய மொழிகளும் செம்மொழி அங்கீகாரம் கோரும் என்ற பயமும் இதற்குக் காரணம்.ஆனால் இது ஒரு தேவையில்லாத அச்சம். இந்திய மொழிகளின் இலக்கிய வளத்தையும், செழுமையையும் நான் நன்றாகவே அறிந்திருக்கிறேன். உலகின் சிறந்த மொழிகளின் பட்டியலில் அவைகளும் பங்கு வகிப்பதை அறிவேன். ஆனாலும் தமிழையும், சமஸ்கிருதத்தையும் தவிர ஏனைய இந்திய மொழிகள் செம்மொழி அல்ல, ஐரோப்பாவில் கிரீக் செம்மொழி என அறிவிக்கப்பட்டதால் ஜெர்மன், பிரெஞ்சு , ஆங்கிலம் போன்ற பிற மொழிகள் செம்மொழி அந்தஸ்து கோரும் நிலை ஏற்படவில்லை, அவைகளால் அவ்வாறு கோரவும் இயலாது...
............... தமிழ் செம்மொழி என்று கூறுவதற்காய்க் கட்டுரை எழுதவேண்டிய நிலை ஏற்பட்டது எனக்கு வினோதமாக இருக்கிறது. இந்தியா ஒரு பெரிய, சிறப்புமிக்க நாடு என்றும், இந்துமதம் உலகின் சிறந்த, பெரிய மதங்களுள் ஒன்று என்றும் நிறுவுவதற்குக் கட்டுரை எழுத அவசியமில்லை அதைப்போலவே, தமிழ் செம்மொழி என நிரூபிக்கக் கட்டுரை எழுத அவசியமே இல்லை... "
தமிழ் செம்மொழிதான் என இப்படி அயல்நாட்டவர் சான்றிதழ் வழங்கும் நிலை ஏற்பட்டதை என்னவென்று சொல்வது.. ? :(
ஆர்வமுடையவர்களுக்காக
1. பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹர்ட்
2. விக்கி பீடியா
3. பிரிட்டாணியா
Comments:
Post a Comment