<$BlogRSDUrl$>

Monday, May 31, 2004

வெப்பமான கோடைக்காலம் ...


சென்ற 2003 ஆம் வருடக் கோடைக்காலம் கடந்த ஐந்து நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் மிக வெப்பமான கோடையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்த கோடை ஐரோப்பாவையும் விட்டுவைக்கவில்லை. ஐரோப்பாவை அதைவிட அதிகமாகப் பாதித்தபடியால் கிட்டத்தட்ட 17,000 பேருக்கு மேல் ஐரோப்பாவில் மட்டும் பலியானார்கள். ஐரோப்பாவில் குளிருக்குத் தயாராக இருக்கும் மக்கள் வெப்பத்துக்கு அந்தளவுக்கு ஆயத்தமாய் இருப்பதில்லை. இங்கு மின் விசிறிகளைப் பார்ப்பதே மிக அபூர்வம். போதாதற்கு கட்டிடங்களின் சன்னல்கள் பெரும்பாலும் மூடப்பட்டே இருப்பதால் வெப்பத்தின் உக்கிரத்தை இன்னும் அதிகப்படுத்திவிடுகின்றன. எனவேதான் கோடையின் உக்கிரமாய் இருக்கும் சில நாட்கள் கூட இங்குள்ள மக்களைப் பாடாய்ப்படுத்திவிடுகிறது. ஜெர்மனியை எடுத்துக் கொண்டால் மின்விசிறிகளைப் பயன்படுத்தியவர்கள் கொஞ்சம்தான். இவர்களில் சிலர் "சீலிங் பேனைப்" பார்த்ததே இல்லை. இந்த நேரத்தில் ஒரு ஜெர்மன் நண்பர் குடையைப் பற்றி என்னிடம் சந்தேகம் கேட்டது சம்பந்தமே இல்லாமல் நினைவுக்கு வருகிறது.

ஐரோப்பா கோடைக்காலத்தில் எனக்குப் பிடித்த விஷயம் மிக நீண்ட பகல்தான். இரவு 11 மணிக்கு ஆனபிறகும் கூட வெளிச்சமாய் இருக்கும். சில சமயம் சூரியன் மறைவதே இரவு 10 மணிக்கு மேல்தான். மதியம் சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டிவிட்டு நன்றாய்த் தூங்கி இரவு எட்டு மணிக்கு எழுந்தால் பெரிய குழப்பமே வந்துவிடும்- இது காலை எட்டு மணியோ என்று. இங்கு வந்த புதிதில் இரவு ஏழு மணியை அடுத்த நாள் காலைதான் என்று நினைத்து பல்துலக்கி குளித்துவிட்டு ரெடியான நண்பர் ஒருவரை எனக்குத் தெரியும்.

இந்த வருடக்கோடை எப்படி இருக்குமென்று தெரியவில்லை என்று சொன்ன இங்கிருக்கும் நண்பரிடம், "...போன வருடம் மாதிரியே அதிக வெப்பமாய் இருக்குமென்று நினைக்கிறேன்.." என்று சொன்னேன்.
பதிலுக்கு அவர்,.".. ஒரு வேளை உங்கள் வாக்குப் பலித்தால் உங்களைச் சும்மா விடமாட்டேன்.." எனச் செல்லமாய் மிரட்டியிருக்கிறார்.
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com