Friday, May 21, 2004
கன்னத்தில் "பளார்" வாங்கிய அதிபர் ...
முகத்தில் அறைந்தால் போல பேசினார் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம்.. கடந்த வாரம் ஜெர்மனி அதிபர் ஷ்ரோடரை ஒருவர் முகத்தில் உண்மையிலேயே அறைந்து விட்டார். ஜெர்மனியில் அதிபரைச் சந்திப்பது என்பது, தற்போதைய தமிழக முதல்வரைச் சந்திப்பதுடன் ஒப்பிட்டால் அவ்வளவு கடினமான காரியமே அல்ல.. அதிபரைச் சந்திக்க அந்தளவுக்குக் கெடுபிடிகள் ஏதுமில்லை. அதனால்தான் ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக்கூட்டத்தில் அதிபர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இது நடந்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னர் அதிபர் ஷ்ரோடர், அவரது கட்சியில் புதிதாய்ச் சேர்ந்த நபர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார், அப்போது அருகில் நின்று கொண்டிருந்த அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு நபரே அதிபரின் இடது கன்னம் சிவக்கும்படி " பளார்" என ஒரு அறை விட்டார். அருகிலிருந்த அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க , அதிபரின் பாதுகாப்புப் படைவீரர்கள் அந்த நபரைப் பாய்ந்து பிடித்தனர். கைது செய்யப் பட்ட அந்த நபர் போலீஸ் விசாரணையில் "பளார்" விட்டதற்கான காரணம் எதையும் தெரிவிக்கவில்லை. அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் , வழக்குத் தொடரப்பட்டு விடுவிக்கப்படிருக்கிறார். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை வரை அவருக்கு விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
மக்கள் ஒன்றும் இதை அவ்வளவு பெரிதாய் எடுத்துக் கொண்டதைப் போலத் தெரியவில்லை. ஜெர்மனியில் ஒரு அமைச்சர் இப்படி சொல்லியிருக்கிறார்..
"..... என்னதான் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இதுபோல் நடப்பதைத் தடுக்க முடிவதில்லை.. இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்னால் என் மீதும் "பெயிண்ட் குண்டு " வீசப்பட்டு எனது காதில் காயம் ஏற்பட்டது... "
"பெயிண்ட் குண்டு" என்றவுடன் ஏதோ ஆபத்தான பெரிய குண்டு என நினைத்துவிட வேண்டாம், ஒரு மெல்லிய பாலித்தீன் பையில் பெயிண்ட்டை நிரப்பி வீசுவதுதான் பெயிண்ட் குண்டு. அவர் மீது அன்று வீசப்பட்டது சிவப்பு நிறப் பெயிண்ட்.
Comments:
Post a Comment