<$BlogRSDUrl$>

Thursday, June 16, 2005

தென்னிந்தியச் சந்தேகங்கள்

இந்தியாவின் வடமாநில மக்களுக்குக் கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வருவோர் எல்லாமே ஒன்றுதான். எல்லோரையும் மதராஸி என்றுதான் அழைப்பது வழக்கம். இன்னும் நிறையப் பேர் அங்கு மெட்ராஸ் என்பது ஒரு மாநிலம் என்றே நம்பிக்கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த மத்தியப் பிரதேச நண்பர் ஒருவர் தென்னிந்தியர் என்றாலே தமிழர்கள் என்றுதான் பொருள் என்பார், தென்னிந்தியா என்றால் தமிழகத்தைத் தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்கள் இருக்கின்றன என்ற உண்மை ஆய்வு செய்துகொண்டிருக்கும் அவருக்குக்கூட உணரப்படுவதில்லை. ஏன் இப்படி என்று எனக்குப் புரியவேயில்லை.

சரி. கிட்டத்தட்ட இதுபோல் இன்னொரு சந்தேகமும் எனக்கு உண்டு. ஈழத்து நண்பர்களில் பெரும்பாலோர் தமிழகத் திரைப்படங்கள் பற்றிச் சொல்லும்போது தென்னிந்தியப் படங்கள் என்றே குறிப்பிடுகிறார்கள். தென்னிந்தியப் படங்கள் என்றால் அது மலையாள, கன்னட, தெலுங்கு மொழிப் படங்களையும் சேர்த்தே குறிக்குமென அவர்கள் உணர்ந்தே சொல்கிறார்களா என்று தெரியவில்லை. இன்னும் சில ஈழத்து நண்பர்கள் "தென்னிந்தியத் தமிழ்த்திரைப்படங்கள்" என்று ஒருகுழப்பம் தரும் வகையில் கூறுகிறார்கள். "வடஇந்தியத் தமிழ்த்திரைப்படம்" என்ற ஒரு பிரிவு இருந்தால்தானே இப்பெயர் சரியானது?, அல்லது தமிழ்நாட்டைத் தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் எங்காவது தமிழ்த் திரைப்படம் தயாரிப்பார்களானால் இப்பெயர் சரிதான். ஆனால் அப்படி ஏதுமில்லாதபோது "இந்தியத் தமிழ்த்திரைப்படங்கள்" அல்லது "தமிழகத் திரைப்படங்கள்" என்ற பெயர்தானே சரியாய் வரும்?. ஈழத்தவர்கள் மேற்கூறியவாறு சொல்லாமல் ஏன் முதலில் சொன்னவாறு சொல்கிறார்கள் என்ற பெரிய குழப்பம் வெகுநாட்களாகவே எனக்கு உண்டு.
| | |
Comments:
AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|இந்தியத்தமிழ்த்திரைப்படங்கள் என்று சொன்னார்களானால், பிறநாடுகளின் தமிழ்த்திரைப்படங்களிலிருந்து வித்தியாசப்படுத்தவாக இருக்கலாம். நீங்கள் சொல்வதுபோலவே ஏன் அவர்கள் தென்னிந்தியத்தமிழ்த்திரைப்படங்கள் என்று சொல்கிறார்கள் என்று அனோனிமாசுக்கும் வியப்பாகவே இருக்கிறது. ஆனால், இப்படியான கேள்விகள் வாழ்க்கையிலே குழப்பங்களாக அனோனிமாசு விடுவதில்லை. இப்படியான குழப்பங்கள் வாழ்க்கையிலே பிக்கல் பிடுங்கலே இல்லாத ஆண்களுக்கு வருகின்றனவோ?|
 

///இப்படியான குழப்பங்கள் வாழ்க்கையிலே பிக்கல் பிடுங்கலே இல்லாத ஆண்களுக்கு வருகின்றனவோ?///

அனானிமாசு,
உங்களுக்கு வந்த வியப்பு நீங்கள் ஆணாக இருந்தால் குழப்பமாய் ஆகியிருக்கும். நீங்கள் பெண்ணானதால் வியப்புடன் நின்றுவிட்டது போலும் :-).
 

:-)
 

தமிழ் நடிகர்கள் மட்டும் இருக்கிற நடிகர் சங்கங்கிறது, தென்னிந்திய நடிகர் சங்கம்தானப்பா?
 

அப்படிப்போடு,
இப்போதுதான் விழித்துக்கொண்டு பேரை மாற்றப்போகிறார்களாம், எங்கோ சமீபத்தில் படித்த ஞாபகம்.
 

முத்து,
இது சகஜம் தான். எங்கள் ஊர்க்காரர்களுக்கு திருவண்ணாமலைக்கு தெற்கே இருப்பதெல்லாம் ஒன்று தான். 'யாரோ தெற்கத்தி ஆளு' என்று சொல்லிவிடுவார்கள். (நீங்க தெற்கத்தி ஆளு போல இருக்குது :-) ). இதேபோல நாஞ்சில் நாடனின் கதையில் கூட வரும். நாகர்கோவில் மாவட்டத்தை களமாக வைத்து எழுதப்படும் கதைகள். ஒரு ஊரின் வடக்கெல்லையில் உள்ள நகரத்தைக் குறிப்பிட்டு அதற்கு வடக்கே உள்ளதெல்லாம் வடக்குதான் அது டெல்லியோ, பம்பாயோ, திருச்சியோ: "வடக்கெ எங்கெயோ இருக்கானாம்ல"
 

This comment has been removed by a blog administrator.
 

மதராஸ் மாநிலம் ஒருகாலத்தில் இருக்கத்தானே செய்தது.
சென்ற வாரம் ஒரு ஆமெரிக்கர் நீங்கள் எந்த ஊர் என்று கேட்டதற்கு 'சென்னை' என்றேன் - அவருக்கு புரியவில்லை, மதராஸ் என்று பின்னால் சொன்னவுடன் புரிந்துவிட்டது.
மற்றொரு சமயம் ஒரு வட இந்திய இஸ்லாமிய கடைக்காரர் என்னிடம் அதே கேள்வி கேட்டார். நான் சென்னை என்று சொன்னதற்கு அவருக்கு கோபம் வந்து விட்டது. "சென்னை என்று சொல்லாதீர்கள், மதராஸ் என்று சொல்லுங்கள். இப்படித்தான் பாம்பேயையும், கல்கட்டாவையும் பெயர் மாற்றி பி.ஜே.பி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள்" என்றாரே பார்க்கலாம்!
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com