Wednesday, June 16, 2004
வைரஸ் வரலாற்றில் முதல்முறையாக ..!
தினமும் ஒரு புது வைரஸ் வந்துகொண்டிருப்பது நமக்கு ஒன்றும் புதிதில்லை. ஆனால் புதிதாய் இப்போது கண்டறியப்பட்டுள்ள வைரஸுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. இதுவரையில்லாத தனி ரக வைரஸ் இது. வைரஸ் என்றால் சாதாரணமாய்க் கணினியை மட்டும் தாக்கும்படி இருந்த காலம்போய் விட்டது. கணினியில் இருந்து மொபைல் போனுக்கு வரும்படியாய் இந்த வைரஸ் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறான வகையில் இதுதான் முதல் முதல் வைரஸ். எனவே தங்கள் செல்பேசிக்கு மென்பொருட்களை இணையத்திலிருந்து இறக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஒரு செல்பேசியில் இந்த வைரஸ் தொற்றிக் கொண்டால் பக்கத்தில் உள்ள மற்றொரு செல்பேசிக்கு இது மிக எளிதாய்ப் பரவிவிடும். செல்பேசியில் உள்ள "ப்ளூடூத்" என்ற குறைந்ததூர வயர்லஸ் வசதி அருகில் உள்ள மின்னணு சாதனங்களை செல்பேசியுடன் இணைப்பதற்காய்ப் பயன்படுவது. இந்த வசதியைத்தான் இந்த வைரஸ் பரவ உபயோகப்படுத்துகிறது.
உறுமீன் வருமளவும் வாடி நிற்கும் கொக்காக, பக்கத்தில் தேவையான செல்பேசி வரும்வரை அமைதியாய் இவ்வரஸ் காத்திருந்து அருகாமையில் வந்தவுடன் அந்த செல்பேசிக்குத் தானாகவே பரவும் தன்மை கொண்டது என்பதுதான் இதன் மிகச் சிறப்பான அம்சம். ஜலதோஷம் பிடித்தவருக்கு அருகில் இருப்பவருக்கும் ஜலதோஷம் பரவுவதுபோல இந்த வைரஸ் பரவிவிடும். செல்பேசியில் நுழைந்த உடன் செல்பேசிக்கு மிகத் தேவையான ஒரு கோப்புப்போல தன்னை மாற்றிக் கொண்டுவிடும் என்பதால் இதைக் கண்டறிதும் கொஞ்சம் கடினமான காரியம்தான். இந்த வைரஸ் அந்த அளவுக்கு ஆபத்தானது இல்லை என்றாலும் இது வெறுமனே முதல்முதல் பதிப்புத்தான் என்பதால் பின்னர் வரும் அடுத்தடுத்த பதிப்புகள் வீரியம் கூடியவையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வைரஸின் பேரைச் சொல்ல மறந்துவிட்டேனே.. , அன்னாரின் பெயர் கேபிர்(cabir). பெரும்பாலான செல்பேசிகளின் இயங்குதளமான சிம்பியன்(symbian) என்ற இயங்குதளத்தைத் தாக்கும்படி எழுதப்பட்டுள்ளது. கொஞ்சம் நவீனமான செல்பேசிகளை மட்டும்தான் இதுதாக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது. நோக்கியா நிறுவனத்தின் 6600 ஒரு உதாரணம்.
இந்த வைரஸுக்குத் தடுப்பூசி மற்றும் மருந்துகள் தயாரிப்பில் செல்போன் நிறுவனங்கள் மிக மும்முரமாய் இறங்கியுள்ளன.
Comments:
சுவையான தகவல் முத்து...அடப்பாவமே என்னோட செல்பேசியில பூளுடூத் வசதி இருக்குதே! எனக்கு எப்ப நோய் வருதோ?
போஸ்கோ...
நல்ல வேளை நமக்கு ப்ளூடூத் இல்லை.. ஒயிட் டூத் மட்டும்தான்.. அதனால் மனிதர்கள் தப்பித்தார்கள் .. :)
Post a Comment
நல்ல வேளை நமக்கு ப்ளூடூத் இல்லை.. ஒயிட் டூத் மட்டும்தான்.. அதனால் மனிதர்கள் தப்பித்தார்கள் .. :)