<$BlogRSDUrl$>

Saturday, April 10, 2004

யாராவது குடையைப் பார்த்திருக்கிறீர்களா ... ?

அன்றைக்குக் கொஞ்சம் வெளியே தூறல் போட்டுக்கொண்டிருந்தது. மென்சா என்று அழைக்கப்படும் பல்கலைக்கழக கேண்டீனில் போய் ஏதாவது சாப்பிடலாமே என்று நினைத்து உடன் ஆய்வு செய்யும் ஜெர்மானிய நண்பரும், நானும் அவரவர் குடையை எடுத்துக்கொண்டு துறையை விட்டு வெளியே வந்தோம்.அப்போதுதான் அந்த நண்பர் அதிர்ச்சியளிக்கும் ஒரு கேள்வியைக் கேட்டார்.

"....முத்து .. நீங்கள் ஜெர்மனிக்கு வருவதற்கு முன்பு குடையைப் பயன்படுத்தியிருக்கிறீர்களா .. ? "

எனக்கு ஒரு நிமிடம் அதிர்ச்சி , குழப்பம். திருதிரு வென விழித்தபடி,

"....நீங்கள் கேட்பது புரியவில்லையே ..."

இந்த முறை கேள்வியைக் கொஞ்சம் மாற்றிக் கேட்டார்.

"...இந்தியாவில் நீங்கள் மழையைப் பார்த்திருக்கிறீர்களா ... ? "

".. இதென்ன கேள்வி ..? மழையைப் பார்க்காமல் யாராவது இருப்பார்களா என்ன .. ?"

"... ஓ .. சரி .. மழையைப் பார்த்திருப்பீர்கள்.. ஆனால் இதுபோன்ற கனமான (!) மழையைப் பார்த்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன் ... ? "

"..... என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள் .. ? , இதையெல்லாம் எங்க ஊரில் மழை என்று சொன்னதேயில்லை., இதைவிடக் கொஞ்சம் கனமாய் இருந்தால்தான் அது மழை. இந்தியா ஒன்றும் மழையே பெய்யாத வறட்சியான நாடு இல்லையே ... உலகத்திலேயே அதிக மழை பெறும் சிரபுஞ்சிகூட இந்தியாவில்தானே இருக்கிறது..?"

"... ஓ .. அப்படியா என்ன.. ? , நான் சமீபத்தில் எகிப்து சென்றிருந்தேன். அங்கிருந்த ஒருவரிடம் குடை பற்றிக் கேட்டதற்கு, அவருக்குக் குடை என்றால் என்னவென்றே தெரியாது என்று சொன்னார்.. கிட்டத்தட்ட இந்தியாவும் எகிப்து மாதிரிதானே(!).. ? அதனால் கேட்டேன்."

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதுவரை இந்த ஊரில் நம்ம ஊர் மாதிரி கன மழை பெய்து நான் பார்த்ததேயில்லை.. அதிகபட்சம் , குறைந்த பட்சம் என இல்லாமல் எப்போதும் இந்தத் தூறல் மட்டும்தான். இந்தக் கனமழை(?) இந்தியாவில் இராது என்று நம்பிக்கொண்டிருந்திருக்கிறார். ஒரு அரை மணி நேரம் இந்தியாவின் நீள, அகலம், வற்றாத நதிகள்,வெள்ளம், வறட்சி என அத்தனையும் சொல்வதற்குள் எனக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது. இந்தியாவைப் பற்றி வெளிநாட்டில் இன்னும் பலர் என்ன என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com