<$BlogRSDUrl$>

Friday, April 23, 2004

என்கோடிங் பிரச்சனை ..


சில நாட்களாய் பிளாக் ஸ்பாட் வலைப்பூக்களில் இந்தப் பிரச்சனையைக் கவனித்திருக்கிறேன். இதற்கு முன்னர் இப்பிரச்சனை இருந்ததாய் ஞாபகம் இல்லை. சில சமயம் பக்கம் இறங்க வெகு நேரமாகிறது அல்லது "பேக்ரவுண்ட்" (background color) மட்டும் இறங்கிவிட்டு நின்றுவிடுகிறது. உடனே பக்கத்தை மீளேற்றம்(refresh) செய்தால் என்கோடிங் மாறி தமிழ் எழுத்துரு அனைத்தும் குழம்பிய நிலையில் தெரிகிறது. திரும்பவும் நாமாக UTF-8 தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. முதலில் எனக்கு மட்டும்தான் இப்பிரச்சனை இருப்பதாய் என்று நினைத்தேன்.. நண்பர் ஜான் போஸ்கோ சமீபத்தில் ஆரம்பித்த அவரது பிளாக்ஸ்பாட் பதிவிலும் இப்பிரச்சனை வருகிறது.. வேறு யாரும் இதைக் கவனித்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை.
(0) Your Comments | | | |

Thursday, April 22, 2004

எனக்கும் ஒரு ஜிமெயில் தாங்க...

100 MB மெயிலுக்கு யாகூ 50 டாலர் காசு கேட்டுக்கொண்டிருக்கும்போது கூகிள் இலவசமாய் 1000 MB அளவில் மின்னஞ்சல் வசதி தருவது நம்பவே முடியலை. இன்னும் இந்த ஜிமெயில் சோதனை ஓட்டத்திலேயே இருக்கிறது என்பது ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். அவங்க கடையைத் திறந்தா ஓடிப்போய் ஒரு கணக்குத் துவங்க வேண்டும் என்று சில வாரங்களாகவே நினைத்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கு பிரின்ஸஸ் பவித்ராவும் , கார்த்திகேயனும் ஆளுக்கு ஒரு மின்னஞ்சல் கணக்குத் துவங்கியதை எழுதியிருந்தார்கள்.

உடனே ஓடிப்போய் பார்த்தால் அது இன்னும் சோதனையிலேயே இருக்கிறது என்று சொன்னது. அவங்க மட்டும் எப்படி ஆரம்பிச்சாங்க அப்படின்னு நினைச்சுக்கிட்டே கார்த்தி மாதிரி நாமும் பிளாக்கரில் நுழைந்து பார்த்தால் துவக்க முடியுமோ என்ற சந்தேகத்துடன் நுழைந்தால், அதே மாதிரி கேட்டது.. " ... நீங்க பிளாக்கரில் சுறுசுறுப்பா(?) இருப்பதால் உங்களுக்கு ஜிமெயிலில் ஒரு மின்னஞ்சல் கணக்குத் தரலாம்னு நினைக்கிறோம் .. வேணுமா ... ? " அப்படின்னு கேட்டது. ஆகா.. இதுக்காகத்தான உள்ளேயே வந்தேன் என்று நினைத்துக் கொண்டே முத்து அப்படிங்கற பேருக்கு ஒரு அக்கவுண்ட் அப்படினுன்னு சொன்னேன். குறைந்த பட்சம் பெயரில் 6 எழுத்தாவது இருக்கணும் , முத்து ரொம்பச் சின்னப் பேரா இருக்குது வேற பேர் சொல்லு அப்படின்னு திரும்பக் கேட்டதால் வேற வழியில்லாமல் வேறு பெயரில் ஒரு அக்கவுண்ட் திறந்துவிட்டேன். இந்த தடவையாவது முத்து அப்படிங்கற சொந்தப் பெயரிலேயே ஆரம்பிக்கலாம்னு நினைத்தேன்.. முடியாமப் போச்சு .. சரி பரவாயில்லை.. பிரின்ஸஸ் பவித்ராவுக்கும் , கார்த்திகேயனுக்கும் பல ஜிகா பைட் நன்றிகள். :)
(0) Your Comments | | | |

Wednesday, April 21, 2004

காந்தள் மலர்

கார்த்திகைப் பூ என்ற காந்தள்மலர்காந்தள் மலர் என்ற கார்த்திகைப் பூ பற்றிச் சுந்தரவடிவேல் எழுதியிருந்தார். அதன் மருத்துவ குணங்கள் மற்றும் இதர பண்புகளைப் பற்றிச் சிரத்தையுடன் தேடிச் சொல்லியிருந்தார். அந்தப் பூவைப் பார்த்தவுடன் எனக்குப் பழைய பள்ளி ஞாபகங்கள் வருது. நான் முதல் வகுப்பிலிருந்து ஐந்தாவது வரை படித்த பள்ளிக்கு அருகில் இந்தப் பூக்கள் நிறைய இருக்கும். சிலர் அதைப் பறித்து விளையாடுவதும் உண்டு.. "மெட்ராஸ் ஐ" என்ற கண்வலி சீஸனில் பள்ளிச் சிறுவர்கள் இந்த மெட்ராஸ் ஐ வருவதற்கு ஏகப்பட்ட கதைகள் சொல்வார்கள் . எனது மூன்றாம் வகுப்பு கிளாஸ்மேட் அப்போ ஒரு தடவை சொன்னது நல்லா ஞாபகம் இருக்குது.

".......இந்தப் பூவைப் பார்த்துக்கிட்டே இருந்தால் நாளைக்கு உனக்கு மெட்ராஸ் ஐ வந்துரும்.. சந்தேகமிருந்தால் சோதனை பண்ணிப் பாரு ..."

அப்போதுதான் "மெட்ராஸ் ஐ" கண்வலியால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவன் அவனுடன் சேர்ந்து கொண்டு சாட்சி சொன்னான்,

"......நேத்து இந்தப் பூவை வச்சு விளையாண்டதால்தான் இன்னைக்கு எனக்குக் கண்வலி வந்துவிட்டது.. "

அன்றைக்குத் தற்செயலாய் இந்தப் பூவைப் பார்த்தால்கூடக் கண்களைக் கையால் மூடிக்கொண்டு போய்க்கொண்டிருந்தேன். எனக்குப் பயமெல்லாம் இல்லை.. நானாவது பயப்படுறதாவது.. இருந்தாலும் ஒரு பாதுகாப்புக்காகத்தான்.. :) :)
(0) Your Comments | | | |

Friday, April 16, 2004

வேடிக்கையான சவால் .. முயன்று பாருங்கள்...

என் நண்பர் என்னிடம் சொன்னார்...
உங்களுக்கு மொத்தம் மூன்று வாய்ப்புக்கள் தரப்படும்.. நீங்கள் வேகமாகக் கீழேயுள்ள வார்த்தைகளின் நிறத்தை ஆங்கிலத்தில் சொல்லவேண்டும்... ( வார்த்தைகளின் நிறத்தை மட்டுமே...வார்த்தையை அல்ல....) நான் முயன்று பார்த்தேன்.. என்னால் அவ்வளவு வேகமாய் மூன்று வாய்ப்புகளுக்குள் தடங்கலில்லாமல் சொல்ல இயலவில்லை.. உங்களால் முடிகிறதா என முயன்று பாருங்கள்..
(0) Your Comments | | | |

Wednesday, April 14, 2004

சில்லறை கேட்ட பெண்மணி கைது ...

தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ தினத்தந்தி செய்தி மாதிரி இருக்குதா..?. போன மாதம் அமெரிக்காவில் நடந்தது இது. ஒரு பெண்மணியை சில்லறை கேட்ட குற்றத்துக்காக கைது செய்திருக்கிறார்கள். சில்லறை கேட்பது ஒரு குற்றமா என முதலில் தோன்றலாம், முழுவதையும் படித்துவிட்டு முடிவுக்கு வரலாம். போன மாதம் ஒரு பெண்மணி அமெரிக்காவில் வால்மார்டில் சில பொருட்களை வாங்கிக்கொண்டு பணம் செலுத்துவதற்காக 1 மில்லியன் அமெரிக்க டாலரைக் கொடுத்தார் எனக் கூறப்படுகிறது. இதில் நகைச்சுவையான விஷயம் என்னவென்றால் அமெரிக்காவில் அந்தளவுக்குப் பெரிய நோட்டையெல்லாம் வெளியிடுவதே இல்லை. அந்தப் பெண்மணி சொல்வது என்னவென்றால்

".... நான் இரண்டு டாலருக்கு வாழ்த்து அட்டை வாங்கினேன் , பணம் செலுத்துமிடத்தில் என்னிடம் இருப்பது இதுதான் எனறு சொல்லி இந்த நோட்டைக் காட்டினேன்... என்னைக் கைது செய்துவிட்டார்கள்.. இது பைத்தியக்காரத்தனமாய் இருக்கிறது"

பெரிய நோட்டு


போலீஸ் காவலில் இருக்கும் அவரிடம் அமெரிக்கா 1 மில்லியன் டாலர் நோட்டை வெளியிடுவதில்லையே ... உங்களுக்குத் தெரியாதா எனக் கேட்டதற்கு,

"..... அரசாங்கம் எந்த எந்த நோட்டை வெளியிடுகிறது என்று தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கமுடியாது..." என்கிறாராம்.

காவல்துறை 1 மில்லியன் டாலர் நோட்டுக்குச் சில்லறை கேட்டதாய் வழக்குப் பதிந்திருக்கிறதாம் .. :)
(0) Your Comments | | | |

Saturday, April 10, 2004

யாராவது குடையைப் பார்த்திருக்கிறீர்களா ... ?

அன்றைக்குக் கொஞ்சம் வெளியே தூறல் போட்டுக்கொண்டிருந்தது. மென்சா என்று அழைக்கப்படும் பல்கலைக்கழக கேண்டீனில் போய் ஏதாவது சாப்பிடலாமே என்று நினைத்து உடன் ஆய்வு செய்யும் ஜெர்மானிய நண்பரும், நானும் அவரவர் குடையை எடுத்துக்கொண்டு துறையை விட்டு வெளியே வந்தோம்.அப்போதுதான் அந்த நண்பர் அதிர்ச்சியளிக்கும் ஒரு கேள்வியைக் கேட்டார்.

"....முத்து .. நீங்கள் ஜெர்மனிக்கு வருவதற்கு முன்பு குடையைப் பயன்படுத்தியிருக்கிறீர்களா .. ? "

எனக்கு ஒரு நிமிடம் அதிர்ச்சி , குழப்பம். திருதிரு வென விழித்தபடி,

"....நீங்கள் கேட்பது புரியவில்லையே ..."

இந்த முறை கேள்வியைக் கொஞ்சம் மாற்றிக் கேட்டார்.

"...இந்தியாவில் நீங்கள் மழையைப் பார்த்திருக்கிறீர்களா ... ? "

".. இதென்ன கேள்வி ..? மழையைப் பார்க்காமல் யாராவது இருப்பார்களா என்ன .. ?"

"... ஓ .. சரி .. மழையைப் பார்த்திருப்பீர்கள்.. ஆனால் இதுபோன்ற கனமான (!) மழையைப் பார்த்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன் ... ? "

"..... என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள் .. ? , இதையெல்லாம் எங்க ஊரில் மழை என்று சொன்னதேயில்லை., இதைவிடக் கொஞ்சம் கனமாய் இருந்தால்தான் அது மழை. இந்தியா ஒன்றும் மழையே பெய்யாத வறட்சியான நாடு இல்லையே ... உலகத்திலேயே அதிக மழை பெறும் சிரபுஞ்சிகூட இந்தியாவில்தானே இருக்கிறது..?"

"... ஓ .. அப்படியா என்ன.. ? , நான் சமீபத்தில் எகிப்து சென்றிருந்தேன். அங்கிருந்த ஒருவரிடம் குடை பற்றிக் கேட்டதற்கு, அவருக்குக் குடை என்றால் என்னவென்றே தெரியாது என்று சொன்னார்.. கிட்டத்தட்ட இந்தியாவும் எகிப்து மாதிரிதானே(!).. ? அதனால் கேட்டேன்."

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதுவரை இந்த ஊரில் நம்ம ஊர் மாதிரி கன மழை பெய்து நான் பார்த்ததேயில்லை.. அதிகபட்சம் , குறைந்த பட்சம் என இல்லாமல் எப்போதும் இந்தத் தூறல் மட்டும்தான். இந்தக் கனமழை(?) இந்தியாவில் இராது என்று நம்பிக்கொண்டிருந்திருக்கிறார். ஒரு அரை மணி நேரம் இந்தியாவின் நீள, அகலம், வற்றாத நதிகள்,வெள்ளம், வறட்சி என அத்தனையும் சொல்வதற்குள் எனக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது. இந்தியாவைப் பற்றி வெளிநாட்டில் இன்னும் பலர் என்ன என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.
(0) Your Comments | | | |

Friday, April 09, 2004

ராமன் பாலம் என்ற ஆதாம் பாலம் - ஒரு மறு பார்வை

ராமன் பாலம்சில வருடங்களாய் ஆதாம் பாலம் என்ற ராமன் பாலம் பற்றி ஒரே பேச்சாய் இருக்கிறது ..எங்கோ இதைப் பற்றிப் பார்த்தவுடன் கொஞ்சம் சுவாரசியமாய் இருந்ததால் ஒரு தடவை முன்பே எழுதியிருந்தேன். இந்தப் பாலத்தைப் பற்றி அல்லது பாலம் போன்ற நிலப்பரப்புப் பற்றி ராமேஸ்வரம் பகுதியில் இருக்கும் நிறையப் பேருக்கு எத்தனையோ வருடமாய்த் தெரியும் என்றாலும் நாலைந்து வருடங்களுக்கு முன்னர் இதன் புகைப்படங்களை நாசா வெளியிட்டு இதைத்தாங்கள் கண்டறிந்ததாய் உலகிற்குப் பறை சாற்றிக் கொண்டது. இது ராமாயண காலப் பாலம்தான் என ஒரு சாரார் சொல்ல, ஒன்னொரு பிரிவினர் இல்லையென மறுக்க சில ஆண்டுகளாய்ச் சூடான விவாதம் நடைபெற்று வருகிறது. இது பற்றி நாசா மிக எச்சரிக்கையாகக் கருத்துச் சொல்லியிருக்கிறது.

"...... விவாதம் நடைபெற்றுவரும் படங்களை வெளியிட்டதென்னவோ நாங்கள்தான், ஆனால் இது பற்றி வெளிவந்த எந்தக் கருத்தும் எங்கள் சொந்தக் கருத்து அல்ல..., வெறும் செயற்கைக் கோள் புகைப்படங்களைக் கொண்டு அதன் வயது மற்றும் அது மனிதனால்தான் கட்டப்பட்டதா என்றும் தீர்மானிப்பது இயலாத காரியம்.."

நாசா விண்வெளி நிறுவனம் "ஆதாம் பாலம்" என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தற்கு காரணம் பைபிளில் கூறப்படும் ஆதாம் , ஏவாள் வாழ்ந்த தோட்டம் இலங்கையில்தான் இருந்தது என்ற நம்பிக்கைத்தான் காரணமாம். இப்பாலம் பற்றிப் பல சர்ச்சைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. சென்றவருட இறுதியில் ஒரு அறிவியல் இதழில் ஒரு தொலையுணர்வு மைய இயக்குனராய் இருக்கும் ஒரு பேராசிரியர் ராமாயணத்துக்கும் இதற்கும் தொடர்பிருக்கலாம் என்பதுபோல ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியிருந்தார். இதற்கு இன்னொரு பேராசிரியர் மாற்று கருத்துச் சொலியிருக்கிறார்.

2004 ஆம் வருட என்சைக்ளோபீடியாவில் இந்தப் பாலம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதைப் பாருங்கள்...

" ....ஆதாம் பாலம் அல்லது ராமன் பாலம் , இது 18 மைல் (30 கி.மீ) நீளமுடையதாய் இருக்கிறது, அதிக பட்சமாய் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4 அடி ஆழத்தில் இருக்கிறது. இந்தியப் புராண நம்பிக்கையின்படி, இப்பாலம் ராமன் என்ற ராமாயண காவியநாயகனால், அசுர அரசன் ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட தனது மனைவி சீதையை மீட்க இப்பாலத்தைக் கட்டினார்."

இந்தப் பாலம் செயற்கைக் கோள் புகைப்படத்துக்குக்கு மட்டும்தான் தெரியும் என்பதில்லை. ராமேஸ்வரத்தில் இருந்து கொஞ்ச தூரம் படகில் போனால் இப்பாலத்தைப் பார்க்கலாம். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் மீன் பிடிப் படகுக்காரர்களிடம் 50 ரூபாய் கொடுத்து பார்த்து வந்த இங்கிருக்கும் எனது நணபர் மோகன் சொன்னது,

"...கிட்டத்தட்ட 3 மீட்டர் அகலத்தில் பல கி.மீ நீளத்துக்குத் தெரிகிறது. படகில் போனால் அருகில் போய் தெளிவாகப் பார்க்கலாம் , அதன் சீரான அமைப்பைப் பார்க்கும்போது அது இயற்கையாய் உருவானதுபோல் இல்லை. தேவையில்லாமல் நம்மூர் அரசியல்வாதிகள் பிரச்சனை செய்து கொண்டிருப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமாய் இதுபோல் விஷயங்களை தொல்பொருள் ஆய்வுக்கு உட்படுத்தலாம் , குறைந்த பட்சம் இதைச் சுற்றுலா மையமாகவாவது ஆக்கலாம் .. "

நம் நணபர்கள் யாராவது தற்செயலாய் அந்தப் பக்கம் போனால் ஒரு வாட்டி பார்த்துவந்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.. இப்போது இது பற்றி விவாதம் செய்பவர்கள் எல்லோரும் இதைப் பார்த்துவிட்டுத்தான் செய்கிறார்களா என்று யாரும் கேட்கவேண்டாம். நானும் ஊருக்குப் போகும்போது முடிந்தால் ஒரு முறை போய்ப்பார்க்க வேண்டும். இன்னும் பார்க்காததால் இது பற்றி நான் எனது கருத்து என எதுவும் சொல்லவில்லை. ( இதுவரை சொன்னது எல்லாம் ஏதோ நம்மால் முடிந்ததைக் கொளுத்திப் போடுவோம் என்ற நல்ல(?) எண்ணத்தில்தான். ).

ஆர்வமுடையவர்களுக்காக..

என்சைக்ளோபீடியா
பிரிட்டானிகா
விக்கிபீடியா
யாகூ.கல்வி
(4) Your Comments | | | |

Wednesday, April 07, 2004

நாம எழுதுறது பேனாவுக்கு ஞாபகம் இருக்குமா.. ?

நம்மில் பலருக்குத் தெரிந்த விஷயம்தான். பனைவோலைகளில் எழுத்தாணி கொண்டு ஆயிரக்கணக்கான வருடங்கள் எழுதியபின் பேனாவும் , காகிதமும் வந்தது.. முன்பெல்லாம் மாவாட்டும்போது உரல் அசையாமல் இருக்க ,குழவி மட்டும் சுற்றும். இன்று குழவி அசையாமல் இருக்க , உரல் மட்டும் சுற்றுகிறது. இன்னும் கொஞ்ச நாளில் உலகத்தில் என்னதான் வரப்போகுதோ என்று எங்கள் ஊரில் பலர் ஆச்சரியப்பட்டதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். நான் சொல்ல வந்ததை விட்டுவிட்டு எங்கோ போய்விட்டேன். சில நாட்களுக்கு முன்னர் டிஜிட்டல் பேனா பற்றிப் பார்த்தேன். புதிதாய்ச் சந்தைக்கு வந்திருக்கிறது. பார்க்கும்போதே ஆசையாய் இருக்கிறது. விலை கொஞ்சம் அதிகம்(?). கிட்டத்தட்ட 100 யூரோ விலையுள்ள இந்தப் பேனாவில் என்ன விஷேசம் என்றால் பேப்பரில் எழுதிவிட்டு அந்தப் பேப்பரைக் கீழே கூடப் போட்டுவிட்டுப் போய்விடலாம். எழுதிய அனைத்தும் பேனாவுக்குள் சேமிக்கப்பட்டிருக்கும்.தேவைப்படும்போது USB போர்ட்டைப் பயன்படுத்தி பேனாவில் இருப்பதைக் கம்ப்யூட்டருக்குள் சேமித்துக் கொள்ளலாம். படம் வரைவது, எழுதுவது என்று சாதாரண பேனாவை வைத்து என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் இதை வைத்தும் செய்யலாம்.இந்தப் பேனாவை வாங்க எனக்கு ஆசையா இருக்குது. "..பேனாவைப் பயன்படுத்தியே பல நாள் ஆகுது.. ஒன்றரை வருஷத்துக்கு முன்னால் நம்ம ஊரிலிருந்து வாங்கி வந்த ரெனால்ட்ஸ் பேனாவே இன்னும் அப்படியே இருக்குது.. இதில் இந்த பேனாவை வாங்கி என்ன செய்யப்போற.." என்று மனச்சாட்சி கேட்பதும் நியாயமாகவேபடுகிறது.
(0) Your Comments | | | |

Thursday, April 01, 2004

புற்றுநோய்க்கு ஒரு மிக எளிய மருந்து ...

மஞ்சள் மஞ்சளின் மருத்துகுணம் பற்றி பல நூற்றாண்டுகளாய் நம் ஊரில் சொல்லப்பட்டு வருவதுதான்.. விஞ்ஞானிகள் மஞ்சளின் மற்றொரு முக்கிய மருத்துவப் பண்பைக் கண்டறிந்துள்ளனர்.. மஞ்சள் புற்று நோயை எதிர்க்கும் தன்மை கொண்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.. இன்னும் கொஞ்சம் தெளிவாய்ச் சொல்வதானால் மஞ்சளின் மஞ்சள் நிறத்துக்குக் காரணம் அதில் இருக்கும் "கர்குமின் " என்ற வேதிப்பொருளாகும் .... இதன் பண்புகளை ஆராய்ந்தபோது இது புற்று நோயை எதிர்ப்பது தெரிய வந்துள்ளது.. இது விஞ்ஞானிகளை மிகக் கவர்ந்துள்ளதற்குக் காரணம், இதுபோன்ற உணவாய்ப் பயன்படும் பொருட்களை நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தும்போது பக்க விளைவுகள் எதுவும் இருப்பதில்லை .. , மஞ்சளில் உள்ள கர்குமினை அதிக அளவில் , நெடுநாள் சேர்த்து வந்தாலும் பக்கவிளைவு என்று சொல்லும்படியாய் எதுவும் நிகழ்வதில்லை. ஆங்கில மருத்துவத்தின் வேதிப்பொருட்களை உட்கொள்ளும்போது ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை ...

எனவே இதுபோல் உணவுப் பொருட்களையே மருந்தாக பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டுவருகிறார்கள்.மேலும் இந்தியக் கணடத்தில் இன்றுவரை சில குறிப்பிட்ட வகைப் புற்றுநோய்கள் காணப்படாததற்கு மக்கள் உணவில் அடிக்கடி மஞ்சளைச் சேர்த்துவந்திருப்பதே காரணம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
(0) Your Comments | | | |

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com