Wednesday, April 07, 2004
நாம எழுதுறது பேனாவுக்கு ஞாபகம் இருக்குமா.. ?
நம்மில் பலருக்குத் தெரிந்த விஷயம்தான். பனைவோலைகளில் எழுத்தாணி கொண்டு ஆயிரக்கணக்கான வருடங்கள் எழுதியபின் பேனாவும் , காகிதமும் வந்தது.. முன்பெல்லாம் மாவாட்டும்போது உரல் அசையாமல் இருக்க ,குழவி மட்டும் சுற்றும். இன்று குழவி அசையாமல் இருக்க , உரல் மட்டும் சுற்றுகிறது. இன்னும் கொஞ்ச நாளில் உலகத்தில் என்னதான் வரப்போகுதோ என்று எங்கள் ஊரில் பலர் ஆச்சரியப்பட்டதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். நான் சொல்ல வந்ததை விட்டுவிட்டு எங்கோ போய்விட்டேன். சில நாட்களுக்கு முன்னர் டிஜிட்டல் பேனா பற்றிப் பார்த்தேன். புதிதாய்ச் சந்தைக்கு வந்திருக்கிறது. பார்க்கும்போதே ஆசையாய் இருக்கிறது. விலை கொஞ்சம் அதிகம்(?). கிட்டத்தட்ட 100 யூரோ விலையுள்ள இந்தப் பேனாவில் என்ன விஷேசம் என்றால் பேப்பரில் எழுதிவிட்டு அந்தப் பேப்பரைக் கீழே கூடப் போட்டுவிட்டுப் போய்விடலாம். எழுதிய அனைத்தும் பேனாவுக்குள் சேமிக்கப்பட்டிருக்கும்.தேவைப்படும்போது USB போர்ட்டைப் பயன்படுத்தி பேனாவில் இருப்பதைக் கம்ப்யூட்டருக்குள் சேமித்துக் கொள்ளலாம். படம் வரைவது, எழுதுவது என்று சாதாரண பேனாவை வைத்து என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் இதை வைத்தும் செய்யலாம்.இந்தப் பேனாவை வாங்க எனக்கு ஆசையா இருக்குது. "..பேனாவைப் பயன்படுத்தியே பல நாள் ஆகுது.. ஒன்றரை வருஷத்துக்கு முன்னால் நம்ம ஊரிலிருந்து வாங்கி வந்த ரெனால்ட்ஸ் பேனாவே இன்னும் அப்படியே இருக்குது.. இதில் இந்த பேனாவை வாங்கி என்ன செய்யப்போற.." என்று மனச்சாட்சி கேட்பதும் நியாயமாகவேபடுகிறது.
| | |
Comments:
Post a Comment