<$BlogRSDUrl$>

Friday, March 31, 2006

சிரிங்க - வீடியோ

டைம் என்ன ஆகுது என்று கேட்டவனை இப்படியா குழப்புவது?. இப்படித்தான் மணி சொன்னேன் எனக் கொஞ்சம் விளக்கமாய்ச் சொல்லக்கூடாதா?. இதென்னடா புது டெக்னிக் என்று குழம்பியல்லவா போனேன். :-))
(6) Your Comments | | | |

Wednesday, March 29, 2006

கார்த்திக் - விஜய்காந்த் கூட்டு

தனியாகப் போட்டியிடப்போவதாய்க் கூறிவந்த விஜய்காந்த், பார்வர்ட் பிளாக் கட்சியுடன் கூட்டு வைக்கப்போவதாய்த் தெரிகிறது. அதிமுக, திமுக ஆகிய இரண்டுமே வலிமையான நிலையில் உள்ளதால் தனியாய்த் தேர்தலைச் சந்திப்பது அந்தளவுக்கு நல்லதல்ல எனப் பிறர் நினைப்பதாய்க் கூறப்படுகிறது.

திமுக, அதிமுக என எந்தக் கட்சிக்கூட்டணியில் சேர்வது எனக் கடைசிவரை குழப்பத்துடன் இருந்து, அதிமுக அழைப்பார்கள் என நம்பியிருந்து நடக்காமல் போனதால் விஜயகாந்த் கட்சியுடனாவது கூட்டுவைப்பது என்ற முடிவுக்குக் கார்த்திக் வந்துள்ளார். இவர்தவிர இத்தேர்தலில் இலவுகாத்த கிளிகளான திண்டிவனம், விஜய டி.ராஜேந்தர் போன்ற சிலரும் கூட்டணியில் சேரக்கூடும்.

ஜெயலலிதாவை எதிர்த்துக் கார்த்திக் ஆண்டிபட்டித் தொகுதியில் போட்டியிட உள்ளதால் இந்தக் கூட்டணி அதிக முக்கியத்துவம் பெறும், அல்லது குறைந்தபட்சம் சுவாரசியத்தை அதிகமாக்கும்.
(4) Your Comments | | | |

Sunday, March 26, 2006

"ரஜினி கட்சி" உதயம்

"ரஜினி மக்கள் கட்சி" என்ற புதிய கட்சி உதயமாகி உள்ளது. இது அதிமுக விற்கு ஆதரவளிக்கப்போவதாகத் தெரிகிறது. ஒவ்வொரு தேர்தலில் வாய்ஸ் கொடுத்துவந்த ரஜினி இந்தத் தேர்தலில் ஒதுங்கி இருந்ததால் சோர்வடைந்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு இப்போது புத்துணர்வு கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

காரைக்குடியில் இன்று காலை 10 மணியளவில் மாநில அளவிலான ரஜினிகாந்த் ரசிகர்மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ரசிகர் மன்றத்தினர் காரைக்குடி வந்துள்ளனர். கூட்டத்தில், `ரஜினி மக்கள் கழகம்' என்ற புதிய கட்சியினை தொடங்கி, அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்த உள்ளனர்.

மேலே நீல வண்ணமும், நடுவில் வெள்ளை நிறமும், கீழே சிவப்பு நிறமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இக்கொடியின் நடுவில் இந்தியாவின் வரைபடமும், அதில் ஐந்து நதிகள் தமிழகத்தை நோக்கி பாய்வது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக பகுதி பசுமை நிறைந்ததாகவும், அதனை ஒரு கை சுட்டிக் காட்டுவது போலவும் காட்டப்பட்டுள்ளது. நீல நிறம் பரந்த மனதையும், வெள்ளை நிறம் தூய்மையையும், சிவப்பு நிறம் தியாகத்தையும் குறிப்பதாக கூறப்பட்டுள்ளது.

இக்கட்சியின் முதல் தீர்மானமாக வரும் சட்ட மன்றத் தேர்தலில் ர.ம.க அதிமுகவை ஆதரிப்பதாய்த் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. எது எப்படியோ இந்தச் சட்ட மன்றத் தேர்தலுக்கு இன்னொரு கட்சி, தேர்தல் நிலவரம் நன்றாகச் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணிகளின் நடவடிக்கை, ரஜினியின் நடவடிக்கை எப்படி இருக்குமெனப் பார்ப்போம்.
(3) Your Comments | | | |

Saturday, March 25, 2006

சிரிக்க மட்டும்..

என்னங்க உங்களுக்கு இத்தனை வயசாச்சு.. இன்னும் இப்படிச் சின்னப் புள்ளைங்க போல இப்படி விளையாடுறீங்க..
(3) Your Comments | | | |

Friday, March 24, 2006

வீரப்பன் மனைவி போட்டி

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, பாமக சார்பில் பெண்ணாகரம் தொகுதியில் நிறுத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் அதை தட்ட மாட்டேன் என்று முத்துலட்சுமியும் கூறியுள்ளார்.

சந்தனக் கடத்தல் வீரப்பனின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி வீரப்பன் மலைவாழ் மக்கள் உரிமை இயக்கம் என்ற அமைப்பை தொடங்கினார். வீரப்பன் வேட்டையின்போது அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களை ஒன்று திரட்டி வந்தார். வீரப்பன் உயிருடன் இருந்தபோதே அவனை பாமகவில் சேர்க்க அக்கட்சி தீவிரமாக முயன்றது. வீரப்பனும் வன்னியர் என்பதால், ஜாதி அடிப்படையில் வீரப்பனை கட்சியில் சேர்க்க பாமக தலைமை முயன்றது.

இதற்காக சரணடைய வருமாறும் வீரப்பனுக்கு தூது விடப்பட்டது. ஆனால் முதலில் இதை ஏற்றுக் கொண்ட வீரப்பன் பின்னர் மனம் மாறி விட்டான். இந் நிலையில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியை பாமகவில் சேர்க்க முயற்சிகள் நடக்கின்றன. சமீபத்தில் திண்டிவனத்தில் நடந்த பாமக மாநாட்டில் முத்துலட்சுமியும் கலந்து கொண்டார். அவரை பெண்ணாகரம் அல்லது மேட்டூர் சட்டசபைத் தொகுதியில் பாமக சார்பில் நிறுத்தவும் முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது.இந் நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணியை சமீபத்தில் முத்துலட்சுமி சந்தித்துப் பேசியுள்ளார்.

இதுகுறித்து முத்துலட்சுமி கூறுகையில், நான் கொளத்தூரில் ஜி.கே.மணியை சந்தித்தது உண்மைதான். ஆனால் தேர்தலில் நிற்பது தொடர்பாக எதுவும் பேசவில்லை. எனது குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்யுமாறுதான் மணியிடம் கோரிக்கை வைத்தேன். அவரும் செய்வதாக கூறினார். ஆனால் இப்போது தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் அதுகுறித்து அவர் நினைக்க நேரமிருக்காது என நினைக்கிறேன். நான் தேர்தலில் நிற்க பாமகவிடம் சீட் கேட்கவில்லை. அவர்களும் என்னை அணுகவில்லை. தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இதுவரை முடிவு எடுக்கவில்லை. யோசித்து வருகிறேன். ஆனால் என்னை சந்திக்கும் பொதுமக்கள் தேர்தலில் நிற்க வற்புறுத்துகிறார்கள். பாமக சார்பில் பெண்ணாகரம் அல்லது மேட்டூரில் நிற்கும் வாய்ப்பு வந்தால் அதுகுறித்து அறிவிப்பேன் என்றார் முத்துலட்சுமி.

வீரப்பன் வேட்டை என்ற பெயரில் அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதல்கள், விசாரணை என்ற பெயரில் நடந்த கொடுமைகளால் பாதிப்படைந்த மக்கள் முத்துலட்சுமியை தேர்தலில் நிற்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். அவர்களது ஓட்டுக்களை அப்படியே அள்ளி எடுக்கும் முயற்சியாக முத்துலட்சுமியை பாமகவிற்குள் இழுக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
(8) Your Comments | | | |

Thursday, March 23, 2006

சிரிக்க வாங்க

எங்க ரெண்டு பேருக்கும் பொழுதுபோகலைன்னா இப்படித்தான் விளையாடுவோம். இதற்காகவே பல இடங்களில் பள்ளம் தோண்டி வைத்திருக்கிறோம். நீங்க யாராவது சேர்ந்துவிளையாட வர்றீங்களா?.

(9) Your Comments | | | |

விஜயகாந்த் - அதிமுக கூட்டு

வேலூர் மாவட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள விஜயகாந்த், தனது கூட்டத்துக்கு மக்கள் கூட்டம் வராததால் அப்செட் ஆகியுள்ளார். வழக்கமாக விஜய்காந்த் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் கூடி வந்த நிலையில் சில நாட்களாகவே அதில் பெரிய மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. பாமக பெல்ட் எனப்படும் வேலூர் மாவட்டத்தில் 3 நாள் பிரசாரத்தை விஜயகாந்த் புதன்கிழமை காலை தொடங்கினார். முதலில் ஓச்சேரி என்ற இடத்தில் அவர் பேசினார்.

ஆனால் அவருக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அங்கு பெரிய அளவில் கூட்டம் சேரவில்லை. ரசிகர்கள் மட்டுமே அதிக அளவில் திரண்டிருந்தனர். பொது மக்களில் யாரையும் காணவில்லை. இதனால் விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார். இருந்தாலும் அதை மறைத்துக் கொண்ட அவர் மிக வேகமாக பேசி முடித்து விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

விஜயகாந்த் பேசிக் கொண்டிருக்கையில் அவர் என்ன பேசுகிறார் என்பதை விட அவர் பேசுவதை போட்டோ பிடிப்பதிலேயே பாதிப் பேர் தீவிர கவனம் செலுத்தினர். ஓச்சேரி பிரசாரத்தை முடித்துக் கொண்ட கேப்டன், தொடர்ந்து நெமிலி, அரக்கோணம், சோளிங்கர், கலவை, வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.

நிதிப் பிரச்சனையில் கேப்டன்:

இதற்கிடையே விஜய்காந்தின் கட்சி கடும் நிதிப் பிரச்சனையில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மதுரையில் மாநாட்டை சில கோடிகள் செலவில் நடத்திய இதுவரை தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட செலவுகளுக்காகவும் சில கோடிகளை இழந்துவிட்டார். இதையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்பி மனு செய்தவர்களிடமும் மாவட்டச் செயலாளர்களிடமும் தேர்தல் செலவுக்கு பணம் திரட்டிக் கொள்ளுமாறு அவர் கூறியிருப்பதாகத் தெரிகிறது.

கட்சி ஆரம்பித்தது முதல் சில சொத்துக்களையும் விற்றுள்ளார் விஜய்காந்த். மேலும் சில சொத்துக்களையும் விலை பேசி வருவதாக செய்திகள் வருகின்றன.
சினிமா மூலம் இனியும் எந்த அளவுக்கு வருமானம் பார்க்க முடியும் என்பது சந்தேகமாக உள்ள நிலையில், சொத்துபணத்தை விற்க வேண்டுமா என்ற கேள்வி விஜய்காந்த் குடும்பத்தாரின் மனதில் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால் அதிமுக அழைக்கிறதே.. அங்கு போய்விடலாம் என்று விஜய்காந்துக்கு அவர்கள் அட்வைஸ் தந்து வருகின்றனர். இதற்கிடையே விஜய்காந்தின் மனைவி பிரேமலதாவை சசிகலா நேரிலேயே சந்தித்துப் பேசியதாகவும், அப்போது 15 முதல் 18 தொகுதிகள் வரை தர அதிமுக தயார் என்று கூறியதாகவும் தெரிகிறது. ஆனால், வைகோவை விட ஒரு தொகுதியாவது அதிகம் வேண்டும் என கேப்டன் தரப்பு கூறியுள்ளது. ஆனால், 20 தொகுதிகள் வரை தந்தாலே அதிமுக கூட்டணிக்குப் போய்விடுவார் விஜய்காந்த் என்கிறார்கள். அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய்காந்த் தரப்பு மறுத்தாலும் திரைமறைவில் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்து கொண்டுள்ளன.
(0) Your Comments | | | |

உளவியல் கொஞ்சம்

உளவியல் மீது பலருக்கும் ஆர்வம் இருக்கும். நான் சின்ன வயதில் நினைத்ததுண்டு, சைக்காலஜி படித்தவர்களால் அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சொல்லிவிடமுடியும், அதனால் நாமும் அதைப் படிக்க வேண்டும் என்று அந்த வயதில் நினைத்ததுண்டு. கொஞ்சம் உளவியல் பற்றிப் படித்த பிறகுதான் தெரிந்தது, அது எவ்வளவு பெரிய தவறான புரிதல் என்று. ஆனாலும் படிக்கும் இயற்பியல், வேதியியலைவிட அது வாழ்க்கைக்கு நேரடியாய் அதைக் கற்றவருக்கு உதவும் என்பது மிகவும் உண்மை.

உடலில் வரும் நோய்களின் எண்ணிக்கைக்குக் கணக்கே இல்லை. அதுபோல்தான் மனதுக்கு வரும் நோய்களின் எண்ணிக்கையும். இந்த இருநோய்களையும் நேரடியாகவே ஒப்பிட முடியும். சாதாரண தலைவலி, காய்ச்சல் போன்ற சில அடிக்கடிவரும் ஆபத்தில்லா மனநோய்களும் உண்டு. நமக்கு அடிக்கடிவரும் டென்சன், கோபம் அதனால் வரும் உடல் தளர்வு ஆகியவை எல்லாம் இந்த வகையைச் சார்ந்ததுதான். உடல் நோயாய் இருந்தாலும், மனநோயாய் இருந்தாலும் அது நம் உடலையும், இயல்பு வாழ்க்கையும் வெகுவாகவே பாதிக்கிறது. ஆனால், உடலில் நோய் இருந்தால் அது ஒருவர் புத்திசாலியாய் இருப்பதை எவ்வாறு நேரடியாய்ப் பாதிப்பதில்லையோ அதேபோல் மனநோயாளிகளும் புத்திசாலிகளாயும், அதிபுத்திசாலிகளாயும், வெற்றிபெற்ற மனிதர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு.

இன்னும் கொஞ்சம் சொல்லும் முன்னர் சுதந்திரம் பற்றிய ஒரு பொன்மொழியைச் சொல்லியாக வேண்டும். "நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன்". இதைச் சொன்னவர் பெரிய சிந்தனையாளர். அடுத்தவர் சொல்லும் ஒன்று தன்னால் ஏற்கமுடியாதது என்றாலும் அதைச் சொல்ல அவருக்கு உரிமை உண்டு என்று ஒத்துக்கொள்வது, அத்துடன் நில்லாமல் அவரின் அந்த உரிமையைக் காக்க உயிரையையும் கொடுக்கத் தயாராக இருப்பது. இது மிக உயர்ந்த வகைச் சிந்தனை, செயல்பாடு.

சாதாரணமாய், அடுத்தவர் சொல்வது நமக்கு ஒப்பில்லையென்றால், அதை அவ்வளவாய்க் கண்டுகொள்வதில்லை, இது சாதாரண வகை. இன்னொரு வகை உண்டு, அது கொஞ்சம் தீவிரமானது. ஒருவர் சொல்வதில் ஒப்பில்லையென்றால் அவருடன் பகைமை பாராட்டுவது, தமக்கு நெருங்கியவர்களிடம் அந்த ஒப்புமை இல்லாத நபரிடம் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளாதீர்கள் என்று சொல்வது, இன்னும் நெருங்கியவராயிருந்தால் தொடர்பே கூடாதென கட்டாயப்படுத்துவது. இது ஒரு அப்பட்டமான வன்முறை. ஆனால், இதை இந்த வன்முறையை எல்லாரிடமும் செய்ய இயலாது, மிக நெருங்கியவர்களிடம் மட்டுமே இதைச் செய்ய இயலும், கட்டாயப்படுத்த முடியும்.

இப்போது அடுத்த கட்டத்துக்கு வருகிறேன். இது ஒருவகை மனநோய். இதன் துல்லியமான சைக்கலாஜிகல் டெர்மினாலஜிகல் பெயர் நினைவில்லை, ஏதோ சிண்ரோம் அல்லது டிஸார்டர் என்று வரும். உங்களில் பலருக்கு இந்த நோயை நம்பவே இயலாது. மேலே கூறிய வன்முறையைவிடக் கொடுமையானது. ஒருவர் சொல்வதில் அல்லது செய்வதில் தமக்கு ஒப்புமை இல்லாவிட்டாவிட்டால் அவருக்குத் தீங்கு செய்வது. இது மனநோயின் ஆரம்பக்கட்டம். கொஞ்சம் முற்றிய நோயாய் இருந்தால் - சில ஆண்டுகள் பழைய நோயாய் இருந்தால், ஒப்புமையில்லாத நபருடன் தமக்கு நெருங்கியவர் தொடர்பு வைத்திருப்பதற்காக அவரிடம் பேசுவதைக் குறைத்துக் கொள்வார், நிறுத்திக்கொள்வார், சில நேரம் நெருங்கியவருக்கேத் தீங்கும் செய்வார். இதை நம்பமுடியாது என்று நினைக்காதீர்கள். முற்றிய நோயாளியாய் இருந்தால், முன்னால் சொன்னதைப் போல் நெருங்கியவருடன் அது நிற்காது. இது அதையும் தாண்டிக்..... கொடூடூடூ...ரமானது. தமக்கு முகமே தெரியாதவர்களிடமும் இது நீளும். தமக்கு ஒப்புமை இல்லாத ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தால் நோயாளியால் கொஞ்சமும் தாங்கிக்கொள்ள இயலாது. நெருங்கியவராய் இருந்தால் நேரடியாய்ச் சொல்லிவிடுவார். எனக்குச் ஜான் கொஞ்சமும் பிடிக்காது. அவனுடன் எந்தச் சகவாசமும் வைத்துக்கொள்ளாதே என. யாரெனத் தெரியாதவர்களிடமும் இதை நீட்டிப்பார். முகந்தெரியாதவர்களிடம் முதலில் மறைமுகத்தாக்குதல் செய்வார். ஒருநாள் அவர் தனியாய் வந்தால் இருட்டில் இருந்து கல்லால் அடிப்பார். முடியாவிட்டால் வேறு மறைமுகமான முறையில், தான் யாரென்பதைக் காட்டாமல் தாக்குதலில் ஈடுபடுவார். எதுவெல்லாம் தான் யாரென்பதைக் காட்டாமல் என்னவெல்லாம் செய்ய இயலுமோ அது அத்தனையையும் செய்வார். இத்தனைக்கும் அவருக்கும் இவருக்கும் எந்தச் சம்பந்தமும் இராது, முன்பகையும் இராது. எதுவும் முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் மொட்டைக் கடுதாசியாவது போடுவார். ஆனால், அதனால் வரும் பின்விளைவுகள் பற்றிக் கொஞ்சம் கவனமாய் இருப்பார், அச்சப்படுவார். அதனால் தான் யாரெனக் காட்டிக்கொள்ளவே மாட்டார். தாக்கப்படுபவர் கருப்பா சிவப்பா என்றுகூட அந்த மனநோயாளிக்குத் தெரிந்திராது, அதுபற்றியெல்லாம் அவருக்குக் கவலை இல்லை, அந்த ஒப்புமையில்லாதவருடன் தொடர்பு வைத்தது கொலைக்குற்றம் போலவே நமது மனநோயாளி கருதுவார். ஆனால் அதன் பின்விளைவு பற்றிய உணர்வு இருக்கும். உங்களால் நம்ப முடிகிறதா?. இதற்கே அசந்துவிடாதீர்கள், குணப்படுத்தமுடியாத அளவுக்கு முற்றிய நிலையும் உண்டு. அதைக் கேட்டால் மயங்கியே விழுந்துவிடுவீர்கள். இக்காரணத்துக்காய் முகந்தெரியாதவரிடம் தான் யாரென்பதைக் காட்டியே நேரடியாகத் தாக்குவார். அதன் பின் விளைவைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படமாட்டார். கத்தியையோ அல்லது துப்பாக்கி எடுத்து அறிமுகமில்லாத ஒருவரை நேருக்கு நேராய்த் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது நினைத்துப்பார்க்க முடிகிறதா?. அறிமுகமில்லாத ஒருவரை, நெருங்கிய ஒருவரை உப்புச்சப்பில்லாத காரணத்துக்காய் கொலை செய்த மனநோயாளிகள் எத்தனையோ பேர் உண்டு. காரணம் என்னவென்று பார்த்தால் இதுபோல் குணப்படுத்த முடியாத அளவுக்கு ஒரு டிஸார்டரால் பாதிக்கப்பட்டிருந்திருப்பார். அவர் ஆரம்பத்திலேயே சிகிச்சைக்கு உள்ளாக்கியிருந்தால் அந்த அளவுக்குப் போயிராது.

பொன்மொழி சொல்லும் வகையைச் சார்ந்தவர்கள் அதிகம் உள்ள சமுதாயம் மிக ஆரோக்கியமானது. நாத்திகப் பெரியாரும், தீவிர ஆத்திக ராஜாஜியும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தது இதனால்தான். காந்தியும், ஜின்னாவும் கூட நல்ல நண்பர்களே. இது மிக ஆரோக்கியமான ஒன்று. கடைசியில் உள்ள வகையைச் சேர்ந்தவர்கள் தனியாகப் பிரித்துவைக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் பெரும்பாலும் அதிக எண்ணிக்கையில் இருப்பதில்லை. சங்கிலியால் கட்டிப் போட்டிருப்பார்களே அந்த வகை. எளிதாய்க் கண்டுணர முடியும். அதற்கும் கொஞ்சம் முன்னால் உள்ள மனநோயாளிகள் சுதந்திரமாக உலாவிக்கொண்டிருப்பவர்கள். எளிதாய் உணர முடியாதவர்கள். இவர்களும் அதிகமான எண்ணிக்கையில் இருப்பதில்லை, அரிதாகத் தட்டுப்படுபவர்களாய் இருப்பார்கள். ஆனாலும் விபத்துபோல அவர்களிடம் சிக்கிக் காயம்பட்டவர்களும், உயிரைவிட்டவர்களும் உண்டு.

நீங்கள் இதில் எந்த வகை மனிதர்களையெல்லாம் பார்த்திருக்கிறீர்கள்?. உங்கள் நண்பர்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள்?.
(12) Your Comments | | | |

Wednesday, March 22, 2006

பிரஷர் குக்கர் பாம்-பயப்படாதீங்க


இங்கே வரும்போது மறக்காமல் கொண்டு வந்த ஒரு பொருள் நம்ம ஊரு "பிரஸ்டீஜ்" பிரஷர் குக்கர். தமிழ் மக்கள் யாருக்கும் ஒரு வாரம் சோறு கொடுக்காம வெறும் ரொட்டி, பீஸா, பிரட்.... இப்படியே கொடுத்தால் அவரின் நிலை கவலைக்கிடமாகிவிடும். இங்கே வரும்போது இதைக் கருத்தில்கொண்டே கைவசம் பிரஷர் குக்கருடன் இறங்கினேன். கிட்டத்தட்ட தினமும் பயன்படுத்தும் பொருட்களில் இதுக்குத்தான் முதலிடம், மூளையெல்லாம் கூட அடுத்துத்தான் :-).

பிரஷர் குக்கர் வச்சு சமைக்குறதுல நமக்கு நிறைய வசதி இருந்தாலும் இந்த ஊர் மக்கள் ஏன் இப்படிப் பயப்படுறாங்கன்னு தெரியலை. கிட்டத்தட்ட எல்லோருமே பயப்படுறாங்க. நான் சமைக்க குக்கரைத் தொட்டாலே "டைம் பாம்" லெவலுக்குப் பயப்படுறாங்க ஏனென்றே புரியலை.

அன்று நான் குக்கரை அடுப்பில் வைத்திருப்பதைக் கவனிக்காமல் அந்த சீனத்தோழி பக்கத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கும்ப்போதுதானா திடீரென எனது பிரஷ்டீஜ் குக்கர் விசில் அடித்துத் தொலைக்க வேண்டும்?. அடுத்தவிநாடி என் பக்கத்தில் யாருமே இல்லை. குறைந்தது 20 அடிதூரத்துக்கு ஒரு ஆளையும் காணோம்.
(18) Your Comments | | | |

Tuesday, March 21, 2006

கொஞ்சம் சிரிங்க

மிஸ்டர் லிட்டில் சிக்கன், உங்க ஷூ் சைஸ் என்ன?. உங்களுக்கு என ஸ்பெஷலா ஆர்டர் கொடுத்துச் செய்தீர்களோ?.

உங்களோட ஒன்றுவிட்ட தாத்தாவுக்கு ஜுரம் என்று சொன்னார்களே. இப்ப சரியாகி விட்டதா?. கவனமா இருக்கச் சொல்லுங்க, பறவைக்காய்ச்சலா இருக்கப்போகுது.
(1) Your Comments | | | |

பாரதியாரும் நானும்

நான் படித்த பெரும்பாலான புத்தகங்கள் 15 வயதுக்குள் படித்தவையாகத்தான் இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு அடிக்கடி வருவதுண்டு. எனக்கு எழுதப்படிக்கத் தெரிந்ததிலிருந்து பதினாறு பதினேழு வயது வரை புத்தகங்கள் மீது அப்படி ஒரு பைத்தியம். எங்கள் ஊரில் நூலகம் என்று எதுவும் இல்லை. ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருந்த அந்தப் பக்கத்து ஊர் நூலகம் உலகிலேயே மிகப்பிடித்தமான இடங்களுள் ஒன்றாக அந்த வயதில் இருந்தது (அந்த வயதில் உலகில் வேறு எந்த இடத்துக்குப் போயிருக்கிறாய் என்று யாரும் தயவு செய்துகேட்காதீர்கள்).

முதன்முதலில் அந்த நூலகத்துக்குப் போகும்போது எனக்கு ஒரு எட்டு வயதிருக்கும் என்று நினைக்கிறேன். அந்த வயதில் அந்த நூலகம் மீது அப்படி ஒரு ஈர்ப்பு எப்படி வந்ததோ தெரியவில்லை. அன்றைக்கு அந்த நூலகத்தில் இருந்த புத்தகங்கள் ஆறாயிரத்துக்கும் குறைவாய் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். என்றாவது ஒருநாள் அங்குள்ள அத்தனை புத்தகத்தையும் படித்துவிட வேண்டும் என்பதே அந்தக்காலத்திய லட்சியமாய் இருந்தது. ஆனால் முடியவில்லை :-(. எப்படியும் ஒரு ஆயிரத்தைத் தாண்டியிருப்பேன் என்று நினைக்கிறேன். எனக்குக் கிடைத்த பெரிய அதிர்ஷ்டங்களுள் ஒன்றாய் அந்த நூலக அறிமுகம் கிடைத்ததைக் கருதுவேன். பையன் பாடப்புத்தகத்தைப் படிக்காமல் இப்படி உருப்படாமல் கதைப் புத்தகங்களைப் படிக்கிறானே என்று வீட்டில் அம்மாவிடம் வாங்கிய திட்டுகளுக்குக் கணக்கே இல்லை. பக்கவீட்டுப் பையன்களுடன் விளையாடும் எனது தம்பிகளுக்கு அதற்காய் அவ்வளவாய்த் திட்டுகிடைத்ததேயில்லை, புத்தகம் படித்த எனக்கு மட்டும்தான் எதிர்ப்பு. விடுமுறையாய் இருந்தால் சாப்பிடும் நேரத்தில் மட்டுமே என்னை வீட்டில் பார்க்க முடியும், எப்படியாவது வீட்டில் அனைவருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு நைஸாய் நழுவிவிடுவது அப்போது எனக்குக் கைவந்தகலை.

எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் முழுமையாக வாசிக்காமல் விடுவதில்லை என்பது அன்று பழக்கமாகவே இருந்தது. அந்த வயதில் சில புத்தகங்களைப் படித்தபோது மிகவிநோதமாகத் தோன்றும், பாரதியாரின் கண்ணன் பாட்டு அதில் ஒன்று, பாரதியார் ஏன் இப்படிக் கொஞ்சமும் அர்த்தமில்லாமல் எழுதியிருக்கிறார், நாம் எழுதியிருந்தால் இதைக் கொஞ்சம் நன்றாய் எழுதியிருப்போமே என்று அந்தப் பன்னிரண்டு வயதில் நினைத்ததுண்டு, (யாரும் டென்சனாகிவிடாதீர்கள், சின்னப்பையன்தானே மன்னித்துவிட்டுவிடுங்கள் :-) ). நான் முதன்முதலாய்க் கவிதை எழுதியபோது பத்து வயதிருக்கும் என்று நினைக்கிறேன், (யாரும் வெண்பா, வஞ்சிப்பா வகையாய் இருந்திருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள், "புதுக்கவிதை"தான், அந்த வயதில் எனக்கே அது வெகுசுமாரான ஒன்றாய்த்தான் தெரிந்தது, அந்தக் காகிதமெல்லாம் இப்போது எங்கே போனதோ தெரியவில்லை).

இன்றைக்கு வலைப்பூவில் ஏதோ நாலு வரி தமிழில் எழுதமுடிகிறது என்றால் அதற்கு அந்த வயதில் படித்த புத்தகங்களே காரணம். ஆனால் தமிழ்ப்புத்தகங்கள் என்ற சின்ன வட்டத்துக்குள்ளேயே அன்று நின்றிருந்தது இப்போது நினைத்தால் கொஞ்சம் வருத்தமான விஷயமாய்த்தான் இப்போது தோன்றுகிறது.
(5) Your Comments | | | |

பாருங்க... சிரிங்க...

இவ்வளவு வேகமாப் போகாத போகாதன்னு படிச்சுப் படிச்சுச் சொன்னாலும் இந்த டிரைவர் கேட்டாத்தான.., இப்ப பாதி வண்டி எங்க விழுந்துச்சோ தெரியலையேஏஏஏஏ...
(9) Your Comments | | | |

புதுசு.. இது புதுசு...

"முத்து" என்ற பெயரில் ஒரு தளப்பெயரைப் பதிவு செய்யனும் அப்படின்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டே இருந்தேன். ஆனால் எங்க போனாலும் அந்தப் பெயரை வேற யாராவது ஏற்கனவே எடுத்திருக்காங்க. மின்னஞ்சல் முகவரிகூட அதுபோல் உருவாக்கிக்க முடியலை. கூகிள் மெயில் ஆரம்பிச்சப்ப அப்பெயரில் ஐடி வச்சுக்கலாமேன்னு போனா பேரு ரொம்ப சின்னதா இருக்கு முடியாது அப்படிங்குது. ஒருவழியாய் இலவசமாகவே முத்து அப்படிங்கற பெயரில் ஒரு தளத்தைப் பதிவு செய்திருக்கிறேன். எப்படி இவ்வளவு நாளா மக்கள் விட்டிருந்தாங்கன்னு தெரியலை. இனிமே என்னோட வலைப்பதிவுக்கு www.muthu.tk என்ற முகவரியிலும் வரலாம், அதுக்காக பழைய பிளாக் ஸ்பாட் முகவரியை மாற்றிவிட்டேன் என்று நினைக்க வேண்டாம். அதுபாட்டுக்கு அது, புதுசா இது. அதுமட்டுமில்லாம இனிமே எனக்கு மின்னஞ்சல் அனுப்ப comments@muthu.tk என்ற எனது சொந்த முகவரிக்கே நீங்கள் அனுப்பலாம். பாருங்க... ஞாபகம் வச்சுக்க எவ்வளவு ஈசி. உங்க யாருக்காவது இதுபோல் உங்கள் பெயரிலோ அல்லது விருப்பமான பெயரிலோ தளப்பெயர் வேண்டுமென்று நினைத்தால் .tk யில் இலவசமாகவே உருவாக்கிக்கொள்ளலாம்.
(2) Your Comments | | | |

Monday, March 20, 2006

திருட்டு "தம்" தப்புங்க..

புகைத்தல் உடலுக்குக் கெடுதி. மனிதர்களுக்கு மட்டுமல்ல.. பூனையாரே உங்களுக்கும்தான். ஆனா இப்படி நீங்க திருட்டு தம் அடிக்கிறது துளசியக்காவுக்கு எப்பவுமே தெரியாதுன்னு தப்பா நினைக்காதீங்க, ஒருநாள் கையும் களவுமா சிக்கப்போறீங்க.
(5) Your Comments | | | |

உங்களுக்கும் பிடித்திருக்கலாம்

உலகத்தில் பலருக்கும் பல விஷயங்கள் பிடிக்கின்றன. பல விஷயங்களிலும் சில பிடிக்கின்றன. காரணமே இல்லாமல் சில பிடிக்காமல் போவதுமுண்டு. எனக்கு மிகவும் பிடித்த சில.

நகைச்சுவை, சிரிப்பு, புன்னகை
குழந்தைகள்
நண்பர்கள்
புத்தகங்கள், கலைகள்

பிடித்தவை என்று பட்டியல் போட்டால் மிகப் பெரிதாய் வரும், குறைந்த பட்சம் மேலே உள்ளதை மட்டுமாவது சொல்ல முயற்சிக்கிறேன்.

அடுத்தவரை மனம் மகிழ்ந்து சிரிக்க வைக்கும் அனைவரும், அனைத்துமே எனக்குப் பிடிக்கும். சிரிக்கச் சிரிக்கப் பேசும் நண்பர்கள் ( நண்பிகளும்தான் ;-) ). நகைச்சுவைத் துணுக்குகள், கடிகள், கார்ட்டூன்கள், நகைச்சுவைக் கதைகள், என
அனைத்துமே பிடித்தமான வகையைச் சார்ந்தவைதான். தெனாலி ராமன், பீர்பால், முல்லா என அனைத்து நகைச்சுவைக்கதைகளும் பிடிக்குமெனச் சொல்லவே வேண்டியதில்லை. படங்களில்கூட நகைச்சுவைப் படங்களே எனது முதல் சாய்ஸ். இதேபோல் அலைவரிசை ஒத்த நண்பர்களுடன் பேசும்போது யாரும் அருகில் இருந்தால் அவர்கள் கதி அதோ கதிதான். நானும் என் நண்பனும் ஒரு நாள் பேசிப் பேசி சிரித்ததைக் கேட்டு, எனது பக்கத்துவீட்டுக்காரர் நடுங்கியதே இதற்குச் சாட்சி, இரவு பத்து மணிக்குமேல் தான் வீட்டில் தனியாக இருக்கும்போது திடீர் திடீர் என வெடிச்சிரிப்புச் சத்தம் கேட்டால் பாவம் அவர் வேறு என்ன செய்வார் ?.

என்னடா இவன் திடீரென இவனுக்குப் பிடித்தது என ஆரம்பிக்கிறானே என யாரும் குழம்பமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். நண்பர் சாம் சங்கிலித் தொடருக்கு என்னை அழைத்திருக்கிறார். அவருக்கு நன்றி. மற்ற பிடித்த விஷயங்களையும் சீக்கிரமே எழுதுகிறேன்.
(2) Your Comments | | | |

Friday, March 17, 2006

அமானுஷ்யங்கள்

சின்ன வயதிலிருந்தே எனக்கு அறிவியல் மீது எவ்வளவு ஆர்வம் உண்டோ அதே அளவுக்கு அறிவியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளின் மீதும் ஆர்வம் உண்டு. நேரடியாய்ப் பெரியது ஒன்றையும் கண்டதில்லை, சோதிடத்தை அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்று முழுவதுமாய் ஒதுக்க முடியுமா என்று தெரியவில்லை, அதில் சில அனுபவங்கள் உண்டு, சின்ன வயதில் - ஒரு 15 வயதிருக்கும் அப்போது. எனது ஜாதகத்தை வைத்து அவர் எனக்கு, எனது மாமாவுக்கு, என்னுடைய தாத்தாவின் அப்பாவுக்கு, எனது வீடு தாண்டி 6 ஆம் வீட்டிலிருப்பவருக்கு என ஆச்சரியப்படும், யூகிக்க முடியாத கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என பலவற்றைச் சொன்னார். கொஞ்சமும் நம்பமுடியாத, எனக்குத் தெரிந்த அறிவியல்படி புரிந்துகொள்ள முடியாத நிகழ்வு அது. ஆனால் அது முழுக்க உண்மை. சோதிடத்தை அமானுஷ்யம் என்று சொன்னால் சோதிடர்கள் பலர் கோபங்கொண்டு சண்டைக்கு வரலாம், சரி இருக்கட்டும்.

இதைத் தவிர கிட்டத்தட்ட அதே 15 வயதில் சில நண்பர்களுடன் சேர்ந்து ஆவிகளுடன் பேச முயன்ற எனது முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் அது பற்றி நேரடி அனுபவங்களைப் பலரிடம் கேட்டதுண்டு. நமது பாஸ்டன் பாலா மற்றும் பக்கா பகுத்தறிவு பேசும் நண்பர் காஞ்சிபிலிம்ஸ் (அவர் அந்த வலைப்பதிவை மூடிவிட்டார்) ஆகியோரும் இதில் அடக்கம்.

இதைத் தவிர சம்பந்தமேயில்லாமல் திடீரெனத் தோன்றிய விசித்திர எண்ணங்கள், அப்படியே கொஞ்சநேரத்தில் நடந்து ஆச்சரியப்படுத்தியதுண்டு. மேலும் இது நடக்கப்போகிறது என நெருக்கமானவர்கள் சொன்னவை பல அப்படியே நடந்ததுண்டு, சில தவறியதுமுண்டு.

நமது நண்பர் முருகபூபதி கொஞ்ச நாளைக்கு முன்னால் அவருக்கு நிகந்த நிகழ்வொன்றைச் சொல்லியிருக்கிறார். நான் இதுபோல் கேள்விப்படுவது முதல் முறையல்ல, இதை நான் இரண்டாம் முறையாகக் கேள்விப்படுகிறேன். கொஞ்ச நாளைக்கு முன்னால்வரை ஜெர்மனியில் எனக்கு அருகில் இருந்த எனது நண்பரொருவருக்கு இதே அனுபவம் அப்படியே ஏற்பட்டது, சம்பவம் நடந்தபோது அவர் அருகில் நான் இல்லை, அவர் சொல்லித்தான் நடந்தது எனக்குத் தெரியும். கிட்டத்தட்ட முருகபூபதிக்கு ஏற்பட்டது அப்படியே நடந்தது, அவர் யாரென சொல்லிக்கொள்ளவே இல்லை. மிகவும் வற்புறுத்திக் கேட்டபோது ஏதோ பெயர் சொன்னாராம், முருகபூபதி சொன்ன அதே பெயர்போல்தான் இருந்தது, ( நண்பர் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார், திரும்பவும் அவரிடம் அந்தப் பெயரைக் கேட்டுச் சொல்கிறேன்). இதில் விஷேசம் என்னவென்றால் எனது நண்பர் சென்றது புனைப்பெயரில், அவரின் அந்தப் புனைப்பெயர் பற்றி அவருக்குத் தெரிந்த நண்பர்கள் யாருக்கும் தெரியாது. ஒருவேளை தெரிந்தவராக இருந்துவிட்டாலும் நண்பருக்கு மட்டும் தெரிந்தவற்றை அவரால் எப்படிக்கூறமுடியும்??. ஆனால், அந்த மர்மநபர் சொன்ன அனைத்தும் உண்மை, அத்தனை பேரில் ஏன் அந்த நண்பரை மட்டும் தெர்ந்தெடுத்துப் பேசினார் என்று ஆரம்பித்து வரும் பல கேள்விகளுக்கும் பதிலே இல்லை.

அறிவியல் உலகத்தில் அதுவும் அறிவியல் ஆய்வில் இருக்கும் ஒருவனே, இதுபோல் பகுத்தறிவுக்குச் சம்பந்தமில்லாத மூடநம்பிக்கைகளைப் பரப்புவதா என்று நம் நண்பர்கள் சிலர் என்மேல் பாயக்கூடும் என்பதை நன்றாக அறிந்தே இதைப் பதிக்கிறேன் :-)).

சரி. இதேபோல் நம் நண்பர்கள் யாருக்காவது மிக அதிசயமான நிகழ்வுகள், அறிவியல்படி புரிந்துகொள்ள முடியாத நிகழ்வுகள் நடந்ததுண்டா ? என்று அறிந்துகொள்ளவும் ஆசை.
(19) Your Comments | | | |

Thursday, March 16, 2006

பிறப்பு விகிதம் - அபாயத்தில்

எதிர்பார்த்ததைவிடவும் பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே வருகிறது. இது கவலைதரும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாய்ச் செய்திகள் கூறுகின்றன. மக்கள்தொகை பற்றி சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்று இதை வெளிப்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால் 2050 ல் இன்று இருக்கும் குழந்தைகளைப்போல் பாதிதான் அன்று இருக்குமாம். உடனே அவசரப்பட்டு இது இந்தியாவிலா என்று நினைத்துவிட வேண்டாம். இது ஜெர்மனியைப் பற்றியது.

ஸ்பீகல் என்ற இணைய இதழில் வந்த கட்டுரை இங்கே. இது ஜெர்மனில் இருப்பதால் ஆங்கிலத்துக்கு மாற்றிக்கொள்ள விரும்புவர்கள் கூகிள்துணையுடன் படிக்கலாம். சில மாநிலங்களில் பிறப்புவிகிதம் உலகிலேயே மிகக் குறைவான அளவாய் உள்ளது. குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பமுடைய பெண்களும், பெற்றோர்களும் குறைந்துகொண்டே வருவதற்கு வேலையில்லாத் திண்டாண்ட விகிதம் அதிகரித்துவருவதே முக்கியக் காரணம் என்று கருதுகிறார்கள் ( அப்படிப் பார்த்தால் இந்தியாவில்...?). நிலையான மக்கள்தொகை இருக்க குறைந்தபட்சம் 2.1 பிறப்பு விகிதம் இருந்தாக வேண்டும். ஜெர்மனியில் அதைவிடவும் மிகக்குறைந்த பிறப்புவிகிதம் இருப்பதே கவலைப்படும் நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தக் கட்டுரையில் இல்லாத, எனது சொந்தக் கருத்து ஒன்று இங்கே. இந்த அளவுக்குப் பிறப்பு விகிதம் இருப்பதற்குக்கூட துருக்கி மக்கள் இங்கே அதிகம் பேர் குடியுரிமை பெற்றிருப்பது காரணமாய் இருக்கலாம், இல்லாவிட்டால் இதைவிடவும் குறைவாகவே பிறப்புவிகிதம் இருந்திருக்கும். இதைப் பற்றி இன்னொரு முறை எழுத நினைத்திருக்கிறேன்.
(6) Your Comments | | | |

Wednesday, March 15, 2006

செந்தில் - கருணாநிதி போட்டி ??

நடிகர் செந்தில் கருணாநிதிக்குச் சவால் விட்டுள்ளார். அவரை எதிர்த்து கருணாநிதி போட்டியிட்டால் என்ன நடக்குமென்று சொல்லியுள்ளார். டெபாசிட் போய்விடுமென்று தெளிவாகவே சொல்லியுள்ளார், ஆனால் யாருக்கு என்று சரியாக சொல்லவில்லை. எது எப்படியோ, செந்தில் நல்ல நகைச்சுவை நடிகர்தான், ஆனால் அதற்காய் தேர்தல் பிரச்சாரத்தில் தனது நகைச்சுவை உணர்வை இப்படிக்காட்டுவது நன்றாகவா இருக்கிறது :-).
(8) Your Comments | | | |

Saturday, March 11, 2006

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வருது..?

தமிழக அரசியலைப் பொறுத்தவரை வெற்றி பெறப்போகும் கட்சிக்குத் தேவை இரு மிக முக்கியமான அம்சங்கள். அவை இரண்டும் இரு கண்கள் என்றே கூறலாம். இதில் முதலிடம் வகிப்பது, தோல்வி அடையப்போகும் கட்சிக்கெதிரான எதிர்ப்பலை. இங்கே ஒரு மேல்நாட்டு அறிஞரின் பொன்மொழி நினைவுக்கு வருகிறது. இதைச் சொன்னவரின் பெயர் நினைவில் இல்லை, ஆனால் அவர் சொன்னது இதுதான். "..ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற அக்கட்சிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவைக்காட்டிலும் எதிர்க்கட்சியின்மீது மக்கள் கொண்டிருக்கும் கோபமே முக்கியக் காரணமாய் இருக்கும்... ". இது பிற நாட்டுக்கோ, மாநிலத்துக்கோ எந்த அளவுக்குப் பொருந்தும் என்பது தெரியவில்லை என்றாலும் இது தமிழகத்துக்கு மிகப் பொருந்தும்.

மனிதர்களின் உளவியலே வழக்கம்போல இங்கே தீர்மானிக்கிறது. எப்போதுமே ஒருவனின் அறிவினைத் தட்டிவிடுவதைக்காட்டிலும், அறிவுக்கண்ணைத் திறந்து அவனைச் செயல்பட வைப்பதைக் காட்டிலும், அவனின் உணர்ச்சிகளைத் தட்டிவிட்டு தமக்குச் சாதகமாய்ச் செயல்படவைப்பது மிக எளிது. இதில் பல அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்கள். இதனாலேயே எதிரணியின் மீதான கோபம், எதிர்ப்பலை வெற்றிபெறப்போகும் கட்சிக்கு மிகப்பெரிய பலமாய் அமைந்துவிடுகிறது.

இரண்டாவதாய், தமிழக அரசியலில் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பது வலிமையான கூட்டணிகள். இதற்காய், கடந்த காலங்களில் நடந்த பல நிகழ்வுகளை, வெற்றி தோல்விகளை எடுத்துக்காட்டுகளாய்ச் சுட்ட முடியும். ஆனால், இந்தக் கூட்டணிகள் எதிரணியின் மீது தீவிர எதிர்ப்பலை இல்லாத நிலையிலேயே முக்கியத்துவம் பெறுகின்றன. தீவிர எதிர்ப்பலையுள்ள கட்சியின் கூட்டணி வலிமையாய் இருந்தாலும் அது தோல்வியடையப் போவது உறுதி. ஏற்கனவே சொன்னபடி, தேர்தலைப் பொருத்தவரை மக்களின் அறிவைவிட, சிந்தனையைவிட அவர்களின் உணர்ச்சிகளே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றன.

தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஏதாவது ஒரு கட்சியே தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி புரிந்துவருவது நடந்துவருகிறது. அது இந்தத் தேர்தலிலும் தொடருமா என்பது கேள்விக்குறியே. தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான அஸ்திவாரம் இத்தேர்தலில் திமுக கட்சியால் அமைக்கப்பட்டுவிட்டது போன்றே தோன்றுகிறது. இந்தக் கருத்துக்கு வலிமை சேர்ப்பதாகக் கருதுவது கீழ்க்காணும் சில அம்சங்களை.

1. கடந்த அதிமுக அரசின் மீது இருந்ததைப்போல், தமிழக மக்களுக்குப் பெரிய அளவில் எதிர்ப்பலை இருப்பதாய்த் தோன்றவில்லை. ஜெயலலிதாவின் பல அதிதீவிர நடவடிக்கைகளைத் தலைமை கொண்டிருக்க வேண்டிய, இதுவரை இருந்த எந்த ஆட்சியாளர்களுக்கும் இல்லாத துணிச்சலான குணாதிசயமாக தமிழக மக்கள் பலர் எண்ணத் தொடங்கிவிட்டனர் என்பது கண்கூடு.

2. எந்தக் கட்சியின்மீதும் தீவிர எதிர்ப்பலை இல்லாத நிலையில் முக்கியத்துவம் பெறப்போவது வலிமையான கூட்டணிகள். திமுக நல்ல கூட்டணி அமைத்திருந்தாலும், அதிமுகவின் கூட்டணி ஒன்றும் மோசமில்லை. திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு சரியான போட்டி இத்தேர்தலில் இருக்கப்போவது உறுதி. ஒருவேளை கடும்போட்டியில் அதிமுகவைவிட திமுக சில தொகுதிகள் அதிகம் வென்றாலும் தனியாக ஆட்சியைமைக்குமளவுக்கு அதிக இடங்களைப் பிடிக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. திமுக ஒதுக்கியிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையைப் பார்த்தாலே தெரியும்.

இவையெல்லாம் பல தசாம்சங்களாய் அரசியல் விளையாட்டில் கைதேர்ந்த கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் தெரியாமலிருக்க நியாயமில்லை. தமது கட்சி தற்போது கொண்டிருப்பது வெறும் தேர்தல் கூட்டணி மட்டும்தான் என்று வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டிருக்கும் வைகோவின் நிலை கூட்டணி ஆட்சி என்று வரும்போது மிகவும் முக்கியத்துவம் பெறும். தனியாக ஆட்சியமைக்க முடியாமல் ஒருவேளை இக்கட்டான நிலை ஏற்பட்டால், வைகோவின் உதவிகூட திமுகவுக்குத் தேவைப்படலாம். இதைக் கருணாநிதி நன்றாக உணர்ந்துள்ளதாலேயே, எதிரணிக்குச் சென்றுவிட்ட வைகோவைக் கடுமையாக விமர்சித்து இதுவரை ஒருவார்த்தைகூடச் சொல்லாமல் தவிர்த்துவருகிறார்.

எது எப்படியோ, இதுவரை இல்லாத ஒரு சுவாரசிய திருப்பம் தமிழக அரசியலில் மே 11 க்குப் பிறகு ஏற்படப்போவது உறுதி. வைகோ, ஸ்டாலின், விஜயகாந்த் ஆகியோரின் அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதற்கான விடை அன்றே தோராயமாய்க் கிடைத்துவிடும்.
(0) Your Comments | | | |

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com