<$BlogRSDUrl$>

Saturday, June 04, 2005

ஆழ்மனதின் ஆழத்தில்

Image hosted by Photobucket.comஒட்டுதல், கலத்தல், பரிமாற்றமடைதல் போன்ற சுவாரசியமான அம்சங்கள் உலகை அர்த்தமுள்ளதாய் ஆக்குகின்றன. இரண்டு தனியான பொருட்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டுவது மட்டுமல்ல ஈங்கு குறிப்பது. மாறாக, பாலில் கலந்திருக்கும் நீரைவிடுத்து பாலை மட்டும் தனியாய்ப் பிரித்தெடுத்துக்கொள்ளும் அன்னப்பறவையின் இயல்பை ஒத்து, கருத்துக்களும், எண்ணக்குவியல்களிலிருந்து சில பிறரிடமிருந்து நம்மின் மனத்தில் ஒட்டுதலே இங்கு குறிக்கப்படுவது.

எந்த ஒரு மனிதனும் தன்னந்தனியானவனே அல்லன். தானாக வந்த சுயம்புவும் அல்லன். ஒவ்வொரு மனிதனும் ஒரு அதிசயக் கலவை. எல்லா மனிதனிலும் எல்லாமும் இருக்கிறது. ஆனால் கலவையின் சாரத்தின் விகிதாச்சாரம் ஒவ்வொருவருக்கும் மிக வேறுபடுகிறது. அவற்றில் ஆதிக்கம் செலுத்தும் குணமே அம்மனிதனின் இயல்பைப் பெரும்பான்மையாகத் தீர்மானிக்கிறது.

தான் பழகிய நண்பர்கள், பகைவர்கள், அன்னியர்கள், கேள்விப்பட்டவர்கள், கேள்விப்படாதவர்கள், குழந்தைகள், விலங்குகள், புத்தகங்கள் என அனைவரின் இயல்பிலும், அனைத்தின் தொகுப்பிலிருந்தும் எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சம் மெதுவாய் நம்மை அறியாமலே நம்மில் கலக்கிறது. ஆழமாய் நம்மை நாமே ஊடுருவிப்பார்த்தால் இதைத் தெளிவாய் உணர இயலும். ஒருவரின் பெரும்பான்மையான குணங்கள், பழக்கங்கள் தாயிடமிருந்தும், தந்தையிடமிருந்தும், நெருங்கிய நண்பர்களிடமிருந்தும், நமது மனம்கூட அறியாமல், திருட்டுத்தனமாய்ப் பாலைக் குடிக்க வரும் பூனையின் நிதானத்துடன் நேரடியாகவும், மறைமுகமாயும் வந்து சேர்ந்திருக்கிறது.

இவ்வாறு வந்து சேர்ந்த குவியல்களில் விலைமதிக்கமுடியாத வைரங்களும், மாணிக்கங்களும், தங்கப்பேழைகளும் அடக்கம். பட்டை தீட்டப்படாத வைரங்களும் நிறையவே உண்டு. குப்பைகளும், முகஞ்சுளிக்க வைக்கும் நாற்றம் தரும் அழுகிய பொருட்களும், எதற்குமே உதவாத, ஆபத்தில்லா பொருட்களும் குறிப்பிடத் தகுந்த அளவில் சேர்ந்திருக்கின்றன.

முழுவதும் சாப்பிட்டு முடித்தாலும் தட்டில் ஒட்டியிருக்கும் துண்டுப் பருக்கைகள்போல், நாம் கடந்துவந்த பாதையின் சுவடுகளும், அது ஏற்படுத்திய தாக்கங்களும் மனதில் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் சில கண்ணிவெடிகள்போல ஆபத்தானவை, இன்னும் சிலவற்றை தூங்குகின்ற எரிமலைகளுடன் ஒப்பிடலாம். இன்னும் சில மிக இனிமையானவை, மனம் மயக்கும் வாசம் தருபவை. கொஞ்சம் சுவாரசியமற்ற வஸ்துக்களும் இங்கே உண்டுதான்.

சுவடுகள் மட்டுமல்லாமல், நமது வயதின் ஒவ்வொரு பருவமும் மீதமாய் நம்முள்ளே கலந்திருக்கிறது. ஒவ்வொருவனுக்குள்ளும் கள்ளங்கபடில்லாக் குழந்தை இருக்கிறது. மழலைமொழி பேசும் இன்னொரு குழந்தையைப் பார்த்தவுடன் மெதுவாய் விழித்தெழுந்து அதுவே மழலை மொழிபேசுகிறது. எத்தனைக் கடுமையானவனும் தனது குழந்தையைக் கொஞ்சும்போது பார்த்திருக்கிறீர்களா?, அங்கே கொஞ்சிக்கொண்டிருப்பதும், பொருளில்லா மழலைமொழியைப் பேசிக்கொண்டிருப்பதும் அவனல்ல. அது அவனில் மிச்சமிருக்கும் குழந்தை, விழித்தெழுந்து சகவயதுத் தோழனுடன் விளையாட வந்த குழந்தை.

மிக முதிர்ந்த மனிதனுக்குள்ளும், குழந்தைப் பருவம் மட்டுமல்லாது அவனின் விளையாட்டுப் பருவமும், துணைதேடும் துடுக்குத்தனமான வாலிபப் பருவமும்கூடக் கடைசிவரை கொஞ்சம் மிச்சமாகவே இருக்கிறது. உங்களுக்குள் அவை அவ்வப்போது மெதுவாய் உள்ளிருந்து குரல்கொடுத்து தமது இருப்பை உணர்த்தும். துடுக்குத்தனமான வாலிப மிச்சம் குடும்பப் படகினைக் கவிழ்க்கும் சுறாமீன்களாய் மாறுவது மிகச் சாத்தியம், இதற்கான உதாரணங்கள் சிலவற்றையாவது ஒவ்வொருவரும் அறிந்திருப்பர்.

ஒரு அழகிய, மனம் தைக்கும் கவிதையைப் படித்தவுடன் உங்கள் மனதின் ஓரத்திலிருந்து தெறிக்கும் மெல்லிய பொறாமையின் வாசத்தை உணர்ந்ததுண்டா?. இதற்கு இல்லையென பதில் சொல்பவர்கள் கவிதை படியாதவர்களாகத்தான் இருக்கவேண்டும். ஆம் என பதில் சொல்வோரே, அந்தப் பொறாமைத் துளி உங்களுக்குள் ஒளிந்திருக்கும் நீங்கள் உணரா கவிஞனிடமிருந்து வந்தது. ஆம், அது சக கவிஞனின் படைப்பைப் பார்த்து நாம் ஏன் இதைப்போல் சிந்திக்கவில்லை என்று ஏங்கும் ஒரு கவிஞனின் ஆதங்கத்தின் வாசம். இனிய படைப்புக்கள் எவற்றை ரசிக்கும்போதும் நீங்கள் விழிப்பாயிருந்தால் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் படைப்பாளியின் சுவடையும் உணர இயலும். (இன்னும் வரும்..)
| | |
Comments:
அட்டகாசமா சொல்லியிருக்கீங்க முத்து, Hats Off!
 

நன்றி ஜீவா :-).
 

ஆமாம் முத்து! நல்ல பதிவு!!!
இப்பத்தான் பார்த்தேன்.
 

நன்றி அக்கா.
 

முத்து, ஒர் இனிமையான கானகத்து நடுவே தெள்ளத் தெளிந்த நன்னீர் தேங்கி இருக்கும் குட்டை அருகே உட்கார்ந்து, 'எனக்குள் யார்' என்ற கேள்வியைக் கேட்டு ஆராய்ந்தால் வரும் வாக்கியங்களாக இப்பதிவு எனக்குப் படுகிறது. நல்ல எழுத்தாளனாய் ஆகிக் கொண்டு இருக்கிறாய். அற்புதமான படைப்பு, மிகையல்ல உண்மை. வாழ்த்துக்கள்
 

நல்ல பதிவு முத்து
 

//மிக முதிர்ந்த மனிதனுக்குள்ளும், குழந்தைப் பருவம் மட்டுமல்லாது அவனின் விளையாட்டுப் பருவமும், துணைதேடும் துடுக்குத்தனமான வாலிபப் பருவமும்கூடக் கடைசிவரை கொஞ்சம் மிச்சமாகவே இருக்கிறது. //

சரியா சொன்னீங்க முத்து..எது மிச்சம் இருக்கோ இல்லையோ... பொக்கை பல் சிரிப்பு அப்படியே வந்து ஒட்டிக்கும் :)

! நல்ல பதிவு ..

வீ. எம்..
 

மிக அருமையான பதிவு முத்து. கடைசி பத்தி என் எண்ணங்களை அழகாகப் பிரதிப்பலித்தது. நன்றி.
 

ஐய்யோ என்னால் சிப்பிக்குள் முத்து போல் எழுத இயலவில்லையே :-))
 

ஜான்போஸ்கோ, சந்திரவதனா, வீ.எம், வெங்கி, லதா,
அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
 

நன்றாக உள்ளது, சமீபகாலமா நம்ம வலைப்பூ பக்கமே காணோம் உங்களை
 

நன்றி குழலி. உங்கள் பதிவுக்கு வந்துகொண்டுதான் இருக்கிறேன். சில சமயம் மறுமொழி இடமுடிவதில்லை அதனால்தான் உங்களுக்குத் தெரியவில்லை.
 

அதுதான் கூறுகிறார்களே, ஒவ்வொருவனுக்குள்ளும் குழந்தை, பெற்றோர் மற்றும் ஆசிரியர் இருப்பதாக.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை குறிக்கும் வண்ணம் அதன் நகலை என்னுடைய "நீங்கள் எலியா பூனையா" பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_15.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

மோகன் காந்தி,
உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
 

சிப்பிக்குள் முத்தென்று சும்மாவா சொன்னார்கள். எனக்கு பயங்கர பொறாமையா இருக்கு. இப்பிடி இப்பிடி எல்லாம் நினைச்சிருக்கிறன் ஆனா எழுதினது கிடையாது. அப்பிடி எழுதணும் எண்ட சிந்தனையே வரேலை.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com