<$BlogRSDUrl$>

Friday, April 22, 2005

NOT for MATURE AUDIENCE


ரஜினியை விட ரஜினி படங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சந்திரமுகி படம் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன், பலரும் பலவிதமாய் எழுதியபின்னர் நாமும் வலைப்பூவர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சவேண்டாமென்று எண்ணத்தைத் தடுத்துவிட்டேன்.

பொதுவாகக் கனமான கதையம்சம் கொண்ட, இன்னும் குறிப்பாய்ச் சொன்னால் சோகமான கதையமைப்புக் கொண்ட படங்களை எனக்குப் பிடிப்பதே இல்லை. சின்ன வயதில் துலாபாரம் படம் பார்த்துவிட்டுச் சில வருடங்கள் தமிழ்படங்கள் பக்கம் தலைவைத்தும் படுக்காமல் இருந்தேன். எது தரமானது என்பதல்ல, எதை விரும்புகிறோம் என்பதுதான் பிரச்சனை. குழந்தைகளுக்கு சத்தான உணவைவிட இனிப்பு ரொம்பப் பிடிக்குமே அதுபோலத்தான். சத்தான உணவை மட்டுமே விரும்பும் அரிதான சமர்த்துக் குழந்தைகளும், வளர்ந்தவர்களும் என்றைக்கும் உண்டுதான்.

யதார்த்தத்தை நாம் ஏன் திரைப்படத்தில் தேடவேண்டும்?. அதுதான் எங்கும் எதிலும் இருக்கிறதே. டூயட் பாடுவதுகூடத்தான் நிஜவாழ்வில் நடப்பதில்லை (நம் யாராவது நண்பர்கள் முயன்றிருக்கிறீர்களா ? :-) ).

நமது மனம் பக்குவமடைந்த பின்னர்-குழந்தைத்தனத்தைத் தொலைத்ததனால் எவற்றையெல்லாம் இழந்திருக்கிறோம் என்று மீண்டும் அந்த நிலைக்குப் போனால்தான் தெளிவாய்ப் புரியும்.

ரஜினி படங்களில் எனக்குப் பிடித்த அம்சங்கள் பல. அந்த அம்சங்கள் அனைத்தும் யதார்த்தத்தை விட்டு மிக அதிகம் விலகி இருப்பவை. வில்லனின் அடியாட்களை பறந்து பறந்து அடிப்பது, கணட இடத்தில் தீக்குச்சியைக் கிழித்துப் பற்றவைப்பது, கத்தியைப் பூமராங் போல பறக்கவிடுவது ஆகியவை அவற்றில் சில. இதுபோன்றவற்றை ரஜினி செய்யும்போது சந்தோசமாக, சத்தமாகக் கைதட்டி ரசிப்பது உண்டு. இதில் சிந்திக்க எதுவும் இல்லை. மேஜிக் செய்பவர் வித்தை காட்டும்போது குழந்தைகள் கண்கள் விரிய சந்தோஷமாய் ஆரவாரிப்பதில்லையா என்ன.

அந்த வகையில் சந்திரமுகி படம் ஏமாற்றவில்லை. நேரம் போவதே தெரியாமல் இரண்டு மணி நேரத்துக்குமேல் இனிமையாகப் பொழுதைக்கழித்து வரலாம். ரொம்ப நாள் கழித்து ரஜினி படத்தைத் தியேட்டரில் பார்த்தேன். பலர் சொன்னதுபோல் முதல் காட்சியே அருமை. குழந்தை மனம் இருந்தால் கைதட்டி மகிழலாம்.

எல்லாம் சரிதான். ஆனால் எனக்குப் புரியாதது ஒன்றுதான். இதே போன்ற "ரஜினி வித்தைகளை" இன்றைய இளம் நடிகர்கள் திரையில் செய்யும்போது அதே அளவுக்கு ரசிக்கமுடியாமல், நகைச்சுவையைப் பார்த்ததுபோல் குபீர்ச்சிரிப்பு வருவது ஏனோ ?. பல முறை யோசித்தும் எனக்குப் புரியவில்லை. உங்கள் யாருக்காவது புரிந்தால் சொல்லுங்கள்.
| | |
Comments:
எல்லாமே பார்வையிலும் மனதிலுந்தான் இருக்கின்றது. ஒருவரைப் பிடிக்காவிட்டால் அவர் என்ன செய்தாலும் பூந்து பூந்து பார்த்துக் குறை பிடித்து அதைச் சுட்டிக்காட்டுவோம். பிடித்திருந்தால் குறைகளைப் பெரிது பண்ணாமல் நிறைகளை மட்டும் உயர்த்திப் பேசுவோம். தங்களுக்கு ரஜனியைப் பிடிக்கிறது. எனவே அவர் பறந்து பறந்து அடிப்பது பிடித்திருக்கின்றது. எனக்கு ரஜனியைப் பிடிப்பதில்லை. திரைப்படத்திற்குப் போகும் போதே தரமற்று விமர்சிக்கும் மனதுடன்தான் போகின்றேன்.

//"ரஜினி வித்தைகளை"\\ ரஜனி பறந்தால் எனக்கு சிரிப்பிலும் பார்க்க கோபமும் ஐயோ என்னடா இதுவென்றும் இருக்கின்றது. கமலை மிகவும் பிடிக்கும். (இருந்தும் ஏனோ மும்பை எக்ஸ்பிரசைப் புகழ மனம் வரவில்லை). அவரின் படங்களை நான் ரசித்துப் பார்ப்பேன். எல்லாமே மனதின் விளையாட்டுத்தான் போங்கள்.
ஆனால் நிச்சயமாக ஒருவருக்காவும் உயிரைக் கொடுக்கமாட்டேன். தாங்கள் எந்த ரகம். ரஜனிக்காக உயிரையே விடும் ரகமா? இல்லை வெறுமனே ரசிக்கும் ரகமா?
 

///ஆனால் நிச்சயமாக ஒருவருக்காவும் உயிரைக் கொடுக்கமாட்டேன். தாங்கள் எந்த ரகம். ரஜனிக்காக உயிரையே விடும் ரகமா? இல்லை வெறுமனே ரசிக்கும் ரகமா?///

கறுப்பி,

உயிரைக் கொடுக்கலாம் ஆனால் அது ஒரு உயிரைக் காப்பதுபோன்ற உன்னதமான நோக்கமாக இருந்தால் தவறில்லை.

திரைப்படத்தில் வரும் நிழல்களுக்காய் உழைப்பையும், உயிரையும் கொடுக்கும் விநோத மனிதர்கள் இருக்கிறார்கள்தான். நான் அந்த ரகம் நிச்சயமாய் இல்லை. தியேட்டரில் இரண்டரை மணி நேரம் படம் ஓடும்வரை ரசிப்பேன் அவ்வளவுதான். தியேட்டரை விட்டு வெளியே வந்தபின் அந்த நிழலுக்கும் நமக்கும் என்ன பெரிய தொடர்பு இருக்கிறது ?.
 

எனக்கும் ரஜினியைப் பிடிக்கும், அவர் செய்த 'எங்கேயோ கேட்ட குரல்', 'முள்ளும் மலரும்', 'ராகவேந்திரா' போன்ற படங்களில்.

யதார்த்தம் பிடிக்காது என்கிறீர், ஆனால் யதார்த்தத்திலும் ஒரு அழகுண்டு. உண்மையை விட அதிகமான ஆர்வத்தைத் துண்டக்கூடிய ஒரு பொய்மையை நான் கண்டதில்லை. போலியான ஒரு செய்தி / நிகழ்வு விரைவில் சலிப்பை ஏற்படுத்திவிடும். வெகு நேரம் நம் கவனத்தைக் கொண்டிருக்காது. வெற்றியடைந்த பல ஆங்கிலப் படங்களின் இறுதியில் 'Based on the true life story of .......' என்ற ரீதியில் வரும் அறிவிப்பைப் பார்த்திருப்பீர் என நினைக்கிறேன். அதுவே உண்மையின் வெற்றிக்கு ஒரு சான்று. அண்மையில் (சில ஆண்டுகளுக்கு முன்) வந்த உண்மைக் கதையான 'பாரதி'யைவிட என்னை வேறெந்த சமீபத்திய தமிழ் படமும் அவ்வளவாக ஈர்க்கவில்லை.

Not for mature audience என்று தலைப்பிட்டதால் ஏதோ என்னளவில் இருக்குமென்று வந்தேன்....... சிந்திக்க வைத்துவிட்டீரே? :)
 

////யதார்த்தம் பிடிக்காது என்கிறீர், ஆனால் யதார்த்தத்திலும் ஒரு அழகுண்டு. உண்மையை விட அதிகமான ஆர்வத்தைத் துண்டக்கூடிய ஒரு பொய்மையை நான் கண்டதில்லை. போலியான ஒரு செய்தி / நிகழ்வு விரைவில் சலிப்பை ஏற்படுத்திவிடும். வெகு நேரம் நம் கவனத்தைக் கொண்டிருக்காது. வெற்றியடைந்த பல ஆங்கிலப் படங்களின் இறுதியில் 'Based on the true life story of .......' என்ற ரீதியில் வரும் அறிவிப்பைப் பார்த்திருப்பீர் என நினைக்கிறேன். அதுவே உண்மையின் வெற்றிக்கு ஒரு சான்று. அண்மையில் (சில ஆண்டுகளுக்கு முன்) வந்த உண்மைக் கதையான 'பாரதி'யைவிட என்னை வேறெந்த சமீபத்திய தமிழ் படமும் அவ்வளவாக ஈர்க்கவில்லை.///

வாய்ஸாப்விங்,
என்னெனமோ பேசுறீங்க. ஒண்ணுமே புரியலை. நீங்க ஒரு Typical Mature Audience. உண்மையில் இங்க எழுதியிருப்பது குழந்தைங்க விஷயம். இதில் இந்த அளவுக்குச் சிந்திக்க எதுவும் இல்லை :-) :-).
 

//எல்லாம் சரிதான். ஆனால் எனக்குப் புரியாதது ஒன்றுதான். இதே போன்ற "ரஜினி வித்தைகளை" இன்றைய இளம் நடிகர்கள் திரையில் செய்யும்போது அதே அளவுக்கு ரசிக்கமுடியாமல், நகைச்சுவையைப் பார்த்ததுபோல் குபீர்ச்சிரிப்பு வருவது ஏனோ ?.//

முத்து,

நண்பர்கள் ஒன்றுசேர்ந்தால் சில அபூர்வமான வேளைகளில் பீர் என்று ஒரு பானத்தைக் குடிக்கிறேன். பல நாட்கள் டீ, காப்பி குடிக்கிறேன். அதென்னமோ பீர் குடித்தால் மட்டும் லேசாக மிதப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது, மற்றதெல்லாம் குடித்தால் ஒண்ணுமே ஆவதில்லை...எனக்கு விஸ்கி, பிராந்தி எல்லாம் பிடிப்பதில்லை, என் நண்பன் ஒருவனுக்கு பீரைவிட அவைதான் பிடிக்கின்றன.

ஒவ்வொருவருக்கு ஒன்றில் போதை. அவ்வளவுதான். சின்ன வயதிலேயே ரஜினிபடம் பார்த்து **தன்னையறியாமல்** ஒரு மயக்கம் வந்தவருக்கு அதில் மட்டுமே குறைகள் தெரியாது. மற்ற நடிகர்கள் செய்தால் குறையாகத் தெரியும். இப்படியேதான் போன தலைமுறை எம்ஜியார் ரசிகர்களும், அடுத்த தலைமுறை xyx ரசிகர்களும். இது சகஜம்.
 

Matured பார்வையாளர்களும்,இதுபோன்ற unmatured செயல்களில் ஈடுபடுகிறார்கள். வீட்டிற்குள் போதையில் ஆட்படுவது போன்ற தனிப்பட்ட செயல்களில் ஈடுபடும்போது அதன் தாக்கம் அவர்களை மட்டுமே பாதிக்கிறது. அதுவே தெருவிற்கு வந்துவிட்டால்,அது எல்லோரையும் பாதிக்கிறது. அப்போதும் அதை பார்க்கும் மற்ற போதையில் ஆட்படா matured பார்வையாளர்கள், 'சரி,இது போதையினால் ஆன விளைவுதான்' என ஒதுங்கி இருப்பார்கள்.
 

காசி,
நீங்க சொல்வது சரிதான், கொஞ்ச நாளுக்கு முன்னால் எம்ஜிஆர் படம் ஒன்றை பார்த்தேன், பார்க்கும்போது சில காட்சிகளில் எனக்குச் சிரிப்பாக வந்தது. ஆனால் எனக்குத் தெரிந்த சில எம்ஜிஆர் ரசிகர்களுக்கு அவையே மிக ரசிக்கும்படியாய் இருந்தது.
 

ஜீவா,
உங்கள் கருத்துக்கு நன்றிகள்.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com