Friday, April 08, 2005
அறிவியலுக்கு அப்பால்
அறிவியலுக்கு இன்று நாம் வரையறுத்திருக்கும் எல்லை மிகக்குறுகியது. இன்றைய அறிவியல் கால்தடம் பதிக்காத புலங்களும், பரிமாணங்களும் ஏராளம். ஒரு வசதிக்காக அவற்றை அறிவியலுக்கு அப்பாற்பட்டவை ( அ.அ) என்று பெயர் வைத்துக்கொள்வோம். இங்கே அறிவியலுக்கும், அ.அ - வுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. அறிவியல் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும்,செயலையும் அதன் உள்ளர்த்தத்தையும் எளிதாய்த் தொட்டுணர்ந்திருக்கிறோம். அறிவியலில் ஒன்றை அமெரிக்காக்காரர் செய்தாலும் , ஆப்பிரிக்காக்காரர் செய்தாலும் எந்த வித்தியாசம் இராது, இருக்கக்கூடாது. இதுதான் அறிவியலின் மிகப்பெரிய பலம். எனவே அறிவியல் என்ற பெயரைச் சொல்லி யாரும் யாரையும் எமாற்றுவது எளிதல்ல. ஆனால் அ.அ அப்படியல்ல . இதுதான் அ.அ வின் பலம், பலவீனமும் கூட.
கொஞ்ச நாட்களுக்கு முன்னால் காண்டம் என்ற சோதிடக்கலை பற்றி எல்லாளன் எழுதியிருந்தார். அவை பற்றி நானும் கொஞ்சம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே, அவை எனக்கு அவ்வளவு வியப்பளிக்கவில்லை. ஏடு படித்தல், சுவடி படித்தல் என்று பல பெயர்கள் இதற்கு உண்டு. அன்று அந்த சோதிடர் முதன்முதலில் எல்லாளன் பயணம் செய்யப்போகும் விமானத்தின் எண்ணைச் சரியாகக் கூறியிருந்தால்கூட நான் வியப்படையமாட்டேன். அவ்வாறு சொல்வதும்கூடச் சாத்தியமானதாய் இருந்திருக்கலாம்.
extrasensory perception(ESP), ஆவியுடன் பேசுதல், தியானத்தால் கைவரப்பெரும் அரிய சக்திகள், சிலவகைச் சோதிடங்கள் இவையெல்லாம் அ.அ-களில் சில எடுத்துக்காட்டுகள். இவைகளை உணர்ந்தவர் அவற்றை அடுத்தவருக்கு விளக்குவது கடினம், அது உண்மையென்பதை அதை நேரிடையாய் உணர்ந்தோர் மட்டுமே அறிவர். அதை அடுத்தவர்களுக்குச் சொல்ல ஆரம்பித்து அவருக்கு பித்தலாட்டக்காரர் என்ற பெயரோ, பைத்தியக்காரன் என்ற பெயரோ கிடைத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அ.அ வினை புரிந்துகொள்வதற்குத் தேவையான அடிப்படை அறிவினை மற்றவர்களிடமிருந்து பெறுவது அல்லது அவ்வாறு பெற்றதை நம்புவது என்பது குதிரைக்கொம்பாகவே இருக்கிறது. அது நான் நேற்று ருசித்த சில உணவுப்பண்டங்களின் சுவை எப்படி இருந்தது என்று இன்று மற்றவருக்கு விளக்க முயற்சிப்பதுபோலவும், தான் உணர்ந்த ஒரு உணர்வை சொல்லால் அடுத்தவருக்கு விளக்கத் துடிப்பதுபோலவும் ஆகிவிடுகிறது. ஏற்கனவே எதிரில் நிற்பவர் அதனைப் பற்றிய அல்லது அதைப் புரிந்துகொள்ளும் குறைந்தபட்ச அத்துறைசார் அறிவு இல்லாதநிலையில் அதை அவர் புரிந்துகொள்வது/நம்புவது என்பது எவ்வளவு கடினம் என்பது சிந்தித்தால் தெரியும், இந்த அனுபவம் உள்ளவர்களுக்கும் இது நன்றாகப் புரியும்.
குறைந்தபட்ச துறைசார் அறிவு இல்லாமல் அறிவியல்சார் செயல்களையே விளக்குவது கடினம். இன்றைக்கு மரபியலின் தந்தை என்று போற்றப்படும் கிரிகோர் மென்டல், இறக்கும்வரை பைத்தியக்காரராகவும், விநோதமானவராகவும் கருத்தப்பட்டது இதனால்தான். தான் கண்டுபிடித்த தொலைக்காட்சி பற்றி விளக்கிய பெயர்டு என்ற விஞ்ஞானியை பைத்தியக்காரர் என்று கேலிசெய்ததும், கலிலீயோவைக் கல்லால் அடித்ததும்கூட இதனால்தான். நமது காசியின் தமிழ்மணம் திரட்டி பற்றி 200 வருடத்துக்கு முன்னர் ஒருவருக்கு முன்னரே தெரிகிறது என்று வைத்துக்கொள்வோம். அதை அவர் எப்படி சுற்றியிருப்பவருக்கு விளக்கியிருப்பார்?. அதைவிடுங்கள் இன்றைக்கு நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் பற்றி அன்றைக்கு ஒருவர் சுற்றியிருப்பவர்களுக்கு விளக்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள், கொஞ்ச நாளுக்கு முன்னர் அவ்வாறு எழுதியது சுவாரசியமாக இருந்ததாய் எனது நண்பர்கள் சிலர் சொன்னார்கள் :-).
ஆக, அறிவியல் சார்ந்தவைகளுக்கே இப்படியென்றால் அ.அ தொடர்பானவைகளின் கதி?. அ.அ சம்பந்தப்பட்டவைகளுக்குத் தீர்வுகள் என்னவாக இருக்கமுடியுமென்றால் தானே நேரிடையாக களத்தில் இறங்கி அனுபவம் பெறுதல், அல்லது நம்பிக்கைக்குரியவ்ர்களின் அனுபவத்தை அறிதல். இங்கே மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் நம்பிக்கைக்குரியவர்கள் நமக்குக் கிடைத்தல் அல்லது நமக்கு அந்த அ.அ சம்பந்தப்பட்ட சக்திகள் குறைவாக/இல்லாமல் இருத்தல். இதனாலேயே அ.அ என்ற பெயரைச் சொல்லி மிக எளிதாய்ப் பிறரை ஏமாற்றுவது இன்றுவரை நிகழ்கிறது. இன்னொரு அபாயம் என்னவென்றால் எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும் பலர் இதனால் மூடப்பழக்கவழக்கங்களில் சிக்குவது மிகச் சாத்தியமான ஒன்று.
Comments:
அறிவியல் அறிவானது அறிவியல் அல்லா அறிவைப்போல வயதாதனதல்லாததாலே
இந்த பிரச்சனை.
--------------
உங்களுடைய புதிய புகைப்படம் நன்றாக இருக்கு!
Post a Comment
இந்த பிரச்சனை.
--------------
உங்களுடைய புதிய புகைப்படம் நன்றாக இருக்கு!