<$BlogRSDUrl$>

Sunday, April 30, 2006

மனிதர்கள் ஜாக்கிரதை - தாவரங்கள்

பூச்சிகளைத் தின்னும் - அசைவம் சாப்பிடும் தாவரங்களைப் பற்றி ஒரு கட்டுரையை வலைப்பதிவில் படித்தேன். நண்பர் பாரதி நார்த்தமலைக்காட்டில் அந்த வகைத்தாவரங்களைப் பார்த்ததைப்பற்றிப் பின்னூட்டியிருந்தார். "இயற்கையை நேசி" (அட.. பெயர் நல்லா இருக்கே..!) அந்தப் பதிவை எழுதியிருந்தார். அந்த வகைத் தாவரங்களை நம்மூரில் நான் பார்த்ததில்லை. மனிதர்கள் அருகில் வந்தால் வேகமாகத் தன்னை ஆட்டி சலசலக்கும் நம்மூர் செடிகள் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. நேரில் நான் பார்த்ததில்லை. நண்பர்கள் யாராவது அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?.

சிலவருடங்களுக்கு முன்னால் இந்த வகைத்தாவரங்கள் பற்றி எனது இந்த வலைப்பதிவில் எழுதியிருந்தேன். அப்போது நமது தமிழ்மணம், தேன்கூடு போன்ற வலைப்பதிவுத் திரட்டிகள் இல்லை. காசி, வெங்கட் மற்றும் நான் போன்றோர் சிறிய மென்பொருள் ஒன்றை புதுஇடுகைகளைப் படிக்கப் பயன்படுத்த முயற்சி கொண்டிருந்தோம். அப்போது தமிழில் வலைப்பதிந்துகொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையே மிகக்குறைவுதான். ஐம்பதுபேரைவிட கொஞ்சம் அதிகமாய் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இன்று அது ஆயிரமாகியிருக்கிறது, இது பெரிய சாதனைதான். சரி.. சொல்ல வந்ததைச் சொல்லிவிடுகிறேன். கீழேயுள்ளது அன்று எழுதிய பதிவுதான்.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் ஒரு காட்டின் வழியே நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். திடீரென பக்கத்திலிருந்த மரத்தின் கிளைகள் உங்களை நோக்கி நீளுகிறது. நீங்கள் சுதாரித்து விலகுவதற்குள் உங்களின் ஒரு கையைச் சுற்றிப் பிடித்துக் கொள்கிறது. இன்னொரு கையால் அதை விடுவிக்க நினைக்கிறீர்கள். ஆனால் பலனில்லை. காலம் கடந்துவிட்டது. உங்களின் இன்னொரு கையையும், இடுப்பையும் சுற்றிவளைத்துவிடுகிறது. அதன் கிளைகள் உங்களை மொத்தமாக ஆக்கிரமித்துவிடுகிறது. நினைப்பதற்கே கொஞ்சம் அச்சமாக இல்லை..? இதுபோன்ற சம்பவங்களை நீங்கள் கதைகளில் படித்திருக்கலாம். உண்மையில் இதுபோன்ற நிகழ்ச்சி சாத்தியமா..? இதில் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது ..!

மாமிசத்தை உண்ணும் தாவரங்கள் நிறையவே இருக்கின்றன. மிகப் பிரபலமான உதாரணம் நெபந்தஸ் என்ற தாவரம். தாவரங்கள் என்பவை விலங்குகள் உண்பதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கின்றன என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோமே. எப்படி சில தாவரங்கள் நான்-வெஜிடேரியனாக மாறிவிடுகின்றன. சிங்கம் , புலி போல இத்தாவரங்கள் சுத்தமான அசைவப் பிரியர்களா இவை... ? இதற்குப் பதில் என்னவென்றால் இல்லை என்பதுதான். பிறகு ஏன் இவை மாமிசம் சாப்பிடுகின்றன..? நமக்குப் போரடித்தால் வாரத்தில் ஒரு தடவை ஞாயிற்றுக் கிழமை சிக்கன் 65 சாப்பிடுகிறோமே அது போலவா..?

பூச்சி இரையாகப் போகுது

உண்மையில் மற்ற தாவரங்களைப் போலவே இத்தாவரங்களுக்கும் பச்சையம் உண்டு. இவை வாழ நீர் , சூரிய ஒளி , காற்று அவசியம். ஆனால் இவை தவிர சில முக்கியத் தனிமங்களும் இவற்றுக்குத் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் அத்தனிமங்கள் இவை வளரும் நிலத்தில் இருப்பதில்லை. அல்லது மிகக்குறைந்த அளவில் இருக்கும். எனவே இந்த நைட்ரஜன் போன்ற தனிமங்களுக்காகத்தான் பூச்சி போன்ற சிறிய விலங்குகளைத் தின்றுவிடுகின்றன.

சமீபத்தில் நெதர்லாந்து போயிருந்தபோது இந்த நெபந்தஸ் தாவரம் ஒன்றைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சின்ன பூச்சட்டியில் முழுத்தாவரத்தையும் விற்பனைக்காகத் தொங்கவிட்டிருந்தார்கள். இத்தாவரம் பூச்சிகளைக் கவர அதற்கே உரிய ஒரு வாசனையைப் பரப்பும். இந்த வாசனையை நுகர்ந்து பூவுக்குள் பூச்சி நுழைந்தவுடன் தாவரம் தயாராக வைத்திருக்கும் மூடியைக்கொண்டு அப்பூவை மூடிவிடும். அப்புறமென்ன உள்ளே போன பூச்சியின் கதி அதோ கதிதான்.

ஆனால் நாம் பொங்கலுக்குக் கரும்பைக் கடித்து, அரைத்து தின்பதுபோல பூச்சியைத் தின்ன அத்தாவரத்துக்குப் பற்கள் இல்லை. ஆனால் மற்ற படி நாம் உணவைச் ஜீரணிப்பதுபோலத்தான் அதுவும் ஜீரணிக்கிறது. பூச்சியைப் பிடித்ததும் அந்தப் பூ ஒரு சின்ன வயிறு போலவே செயல்பட ஆரம்பிக்கிறது. மெதுவாக ஒரு திரவத்தைச் சுரக்கிறது. அந்தத் திரவம் பூச்சியின் முழு உடலையும் கரைத்த பின்னர் அதிலுள்ள , கனிமங்களை உறிஞ்சி எடுத்துக்கொள்கிறது. சரி, இது சின்னப் பூச்சிகளுடன் நிறுத்திக்கொள்கிறதா ? இல்லை, சிறிய தவளைகள், சில சமயம் எலிகள் கூட இத்தாவரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மனிதனைத் தின்னுமளவுக்கு தாவரங்கள் இல்லை என்பதே உண்மை. இவ்வகைத்தாவரங்கள் மனிதனைக்கூடத் தின்னும் என்ற வதந்தி பரவக் காரணம். பல மீட்டர் வரை வளரும் அமர்போபாலஸ் டைட்டானியம் போன்ற அசைவத்தாவரங்களாக இருக்கலாம். இவை வளர்ந்தவுடன் பூச்சிகளை ஈர்க்க நம்மால் சகிக்கமுடியாத துர்நாற்ற்த்தைப் பரப்பும், கிட்டத்தட்ட அந்த நாற்றம் ஒரு மனிதன் அந்த பூவுக்குள் இறந்து,அழுகிக்கிடப்பதைப் போல் இருக்குமாம். இது போல் நிறையத் தாவரங்கள் இருக்கின்றன. இதனால் இத்தகைய கட்டுக்கதைகள் பரவியிருக்கலாம்.

துர்நாற்றம் வீசும் பூச்சித்திண்ணித் தாவரம்


ஒருவர் சொன்னது போல, அசைவத்தாவரங்களால் மனிதனுக்கு ஆபத்து என்பதை விட மனிதனால் அசைவத்தாவரங்களுக்கு ஆபத்து என்பதே பொருத்தமாக இருக்கும். இவற்றின் பிரபலத்தன்மையே அவற்றுக்கு ஆபத்தாகிவிட்டது. இதைக் கண்டவுடன் வேரோடு பிடுங்கி , விற்றுவிடுகின்றனர். இதனால் இப்போது இத்தாவரங்கள் அருகி வருகின்றன.

ஆர்வமுடையவர்களுக்காக.
கூகிள் தேடல்
(10) Your Comments | | | |

Thursday, April 06, 2006

டோக்குலவ் தெரியுமா?

இது ஒரு சின்ன தீவுக்கூட்டம். நியூசிலாந்துக்குப் பக்கத்தில் இருக்கிறது. இதன் மொத்த மக்கள் தொகையே சுமார் ஆயிரம் பேர்தான். பிரிட்டிஷ் கையில் இருந்தது. இப்போது நியூசிலாந்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது. கிட்டத்தட்ட பத்துவருஷத்துக்கு முன்னால் அதிகாரப்பூர்வமாய் நியூசிலாந்தின் கையில் வந்துவிட்டாலும் தன்னாட்சி கொண்ட ஒரு பிரதேசமாய் இருந்துவருகிறது. முக்கியத் தொழில் தேங்காய், அஞ்சல்தலை சேகரிப்பு, மீன்பிடித்தல் போன்றவை. மொத்த நிலப்ப்பரப்பு பத்து சதுரகிலோமீட்டர்கள். கடல் எல்லை சுமார் நூறு கிலோமீட்டர்கள்.

இத்தனை நாடுகள் இருக்கும்போது ஏன் இதைப்பற்றிச் சொல்கிறேன் என்று நீங்கள் யாராவது நினைக்கலாம். காரணம் இதன் இணைய அடையாளம் .TK. இப்போது தெரிகிறதா? ஏன் சொல்கிறேனென்று?. இவர்கள் நாட்டின் அரசாங்கம் .tk என்று முடியும் டொமைன் பெயரை இலவசமாகத் தர ஸ்பான்ஸர் செய்கிறார்கள். உங்கள்பெயர்.tk இருக்கிறதா அல்லது யாராவது எடுத்துக்கொண்டு விட்டார்களா பார்த்து இன்னும் மிச்சமிருந்தால் உங்களுக்காய் பதிவு செய்துகொள்ளலாம். எனக்குத் தெரிந்து பலர் காசு கொடுத்துத்தான் இப்படி டொமைன் பெயரை வாங்கி வைத்திருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு 90 நாட்களிலும் குறைந்தது 25 தடவையாவது பதிவு செய்யப்பட்ட பெயர் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களின் அத்தளபெயர் பயன்படுத்தும் உரிமை ரத்தாகி அடுத்தவர் யாராவது விரும்பினால் அவருக்குக் கொடுக்கப்பட்டுவிடும், மீண்டும் நீங்களேகூட பதிவு செய்துகொள்ளலாம். இல்லையென்றால் இதே பெயரை காசு கொடுத்தும் வாங்கிக்கொள்ளலாம்.

ஏற்கனவே ஒரு தடவை சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். எனது டொமைன் பெயர் http://muthu.tk . இதே முத்து வலைப்பூவின் முகவரிதான் இது.
(5) Your Comments | | | |

கார்த்திக் - ஜெ நேரடி மோதல்

கார்த்திக் ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிப்பட்டியில் நிற்கப்போவதாய் அறிவித்துள்ளார். இதே செய்தி முன்பே வெளியானது, ஆனால் அவ்வாறு தான் நிற்கப்போவதில்லை, ஒரு அரசியல் தலைவரை எதிர்த்து இன்னொரு தலைவர் நிற்பது நாகரீகமில்லை என்று முன்பு மறுத்தார் கார்த்திக். இப்போது தான் ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவைத் தோற்கடிக்கப்போவதாய்க் கூறியுள்ளார். அவ்வாறு நிற்கும்பட்சத்தில் திமுக கூட்டணி மறைமுகமாய் கார்த்திக்குக்கு உதவக்கூடும். கார்த்திக்கை அதிமுகவினர் மிரட்டியதால் கடுப்பாகி இம்முடிவை அவர் எடுத்ததாய்க் கூறப்படுகிறது.
(10) Your Comments | | | |

ஒரு கழுதை, மனைவி, அரசியல்வாதி

நண்பர் சந்திரவதனா ஜெர்மன் இதழில் வந்த ஒரு செய்தியை மேற்கோள் காட்டி ஒரு பதிவு எழுதியிருந்தார். இன்று தினகரன் இ-பேப்பரில் அதே செய்தி வந்திருந்தது. பகிர்ந்துகொள்ளலாமே என்று நினைத்து அதை அப்படியே கொடுத்திருக்கிறேன்.
(2) Your Comments | | | |

Wednesday, April 05, 2006

பாக்யராஜ் திமுகவில் சேர்ந்தார்

எம்ஜிஆர் காலத்தில் அவரின் தீவிர ஆதரவாளராய் இருந்தவர் பாக்கியராஜ். அதிமுகவில் அதிக ஈடுபாடுகொண்டவராக அப்போது இருந்தார். எம்ஜிஆர் மறைந்த பிறகு தனியாகக் கட்சி தொடங்கினார். தமிழகத்தில் எம்ஜிஆரைத் தவிர தனிக்கட்சி தொடங்கிய அத்தனை நடிகர்களுக்கும் ஏற்பட்ட முடிவே அவருக்கும் ஏற்பட்டது. பின்னர் பாக்யா என்ற பத்திரிக்கையை மட்டும் நடத்திக்கொண்டிருந்தார்.

இன்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த அவர் தனது ஆதரவைத் தெரிவித்து திமுகவில் இணைந்திருக்கிறார். இன்னும் ஒரு மாதம் கழித்து எந்த நடிகராவது எந்தக் கட்சியிலாவது சேர்ந்தால் அது பெரிய விஷயமாகப்போகிறதா என்ன?. ஆனால் இப்போது எந்த நடிகர் எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் அது கவர்ச்சியான செய்திதான்.
(1) Your Comments | | | |

கூண்டோடு நீக்கம் - ஜெ அதிரடி

ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் எப்போதும் அதிரடியாகவே இருக்கும் என்பது அவரின் தனிச்சிறப்பு. பாண்டிச்சேரி உருளையன் பேட்டையில் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் நேரு. பின்னர் அவர் மாற்றப்பட்டு நடிகர் ஆனந்தராஜ் போட்டியிடுவதாய் அறிவிக்கப்பட்டது. இது அத்தொகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது. நேருவின் ஆதரவாளர்கள் ஆதரவாளர்கள் ஆனந்தராஜுக்கு எதிராய் கலாட்டாவில் ஈடுபட்டனர். இது வேறு கட்சியில் நடந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ தெரியாது, அதிமுகவில் நடந்தால் நடவடிக்கை எப்படி இருக்குமென்று பாருங்கள். இந்தக் கிளர்ச்சியில் ஈடுபட்ட அத்தனைபேரும் கூண்டோடு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் அத்தொகுதியின் செயலாளர்கள், துணைச்செயலாளர்கள் மட்டுமல்ல, முதலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரும் அடக்கம். சில நாட்களுக்கு முன்னால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், இன்று கட்சியில்கூட இல்லை. இது எப்படி இருக்கு..?(ரஜினி ஸ்டைலில் வாசிக்க).
(10) Your Comments | | | |

கடலை போடுதல் - சிறு குறிப்பு

உலகில் பலரும் பலவற்றைச் செய்தாலும், அனைவருக்கும் தாம் செய்பவற்றின் பெயர் தெரிவதில்லை. அந்த வகையில் இந்தக் "கடலை போடுதல்" அல்லது "வறுத்தல்" பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் இருந்துவந்தாலும் இந்தச் சொல்லாடல் மிகச் சமீபத்தில் உதித்ததாகவே இருக்குமென்று தோன்றுகிறது. அதிகபட்சம் 20 வருடம். அனுபவமானவர்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். "கடலை" -க்கு இணையான சொற்கள் ஏதாவது பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை, சங்க இலக்கியத்தில் இருக்கக்கூடும் என்று சந்தேகம்.

உண்மையிலேயே "கடலை" பற்றித் தெரியாத அப்பாவிகளுக்காக ஒரு சிறு அறிமுகம். இளைஞர்களும், இளைஞிகளும் தனக்குப் பிடித்த எதிர்பாலருடன் காரணம் எதுவும் இல்லாமல் பேசிக்கொண்டிருப்பதே கடலையெனப்படுவதாம்.

இதற்கான பெயர்க்காரணம். மெரீனா பீச்சிலோ அல்லது தெருக்களிலோ கடலை விற்பவர்களைப் பார்த்ததுண்டா?. வெறும் டப்பாக்களில் விற்பவர்களல்ல ஈண்டு குறிப்பது. சுடச்சுட மணலுடன் முழுநிலக்கடலையை வறுத்து தள்ளுவண்டியில் இண்ஸ்டண்ட் வியாபாரம் செய்வோர்களே இப்பெயருக்குக் காரணமானார்கள். இவர்கள் வறுக்கும் கடலைக்கும் மக்களின் "கடலைக்கும்" என்ன சம்பந்தம் என்று புரியவில்லையா?. இதோ விளக்கம். கடலை வறுப்பவர்கள் யாராவது பக்கத்தில் குறைந்த பட்சம் அரைகிலோ மீட்டர் சுற்றளவில் எங்காவது இருக்கிறார்களா என்பதை எளிதாய் உணரமுடியும். பல நேரங்களில் கடலை வறுக்கும் வாணலியில் வெறும் மணலைத்தவிர ஏதும் இராது, ஆனால் ஏதோ இருப்பதுபோல் சீரியஸாய் வறுத்துக்கொண்டே இருப்பார்கள். யாராவது மக்கள் அந்த வழியாப்போனால் அவர்களின் கவனத்தைக் கவர்வதற்காகத்தான் இந்த ஏற்பாடு. சும்மா வறுத்தால் பிறர் கவனத்தைக் கவருமளவுக்குச் சத்தம் கேட்காது எனவே வாணலியின் நாலாப்பக்கத்திலும் டிரம்ஸ் போல டங் டங் என்று அவ்வப்போது ஒலியும் எழுப்புவார்கள். ஆனால், வறுப்பதற்கு நிலக்கடலையே அதில் இராது. ஆனாலும் வறுப்பார்கள்.

இப்போது புரிந்திருக்குமே. பெயர்க்காரணம் மிகப் பொருத்தமானதுதான். ஆங்கிலத்தின் இதற்கு இணையான சொல்லாய் "sweet nothing" என்பதைச் சொல்லலாமா?. எதுவுமே இல்லை ஆனாலும் இனிமையாய் இருப்பதே கடலை.
(30) Your Comments | | | |

Sunday, April 02, 2006

சரத்குமார் திமுகவுக்கு எதிராகிறார் ??

ஒரு பக்கம் அதிமுக நட்சத்திரக்கூட்டத்தை ஒவ்வொன்றாய் அதிகரித்துக்கொண்டிருக்க திமுகவில் இருந்து நட்சத்திரங்கள் ஒவ்வொருவராய் குறைந்துகொண்டே இருப்பார்கள் போலிருக்கிறது. சினிமா நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு ஓட்டுக்களை அவர் சேர்ந்த கட்சிக்கு அதிகரிப்பார்கள் என்பதே கொஞ்சம் கேள்விதான். இதில் ரஜினி, விஜய்காந்த் போன்ற கொஞ்சம் மவுசுள்ள பார்ட்டிகள் தாம் சார்ந்த கட்சிக்கு ஓட்டுக்களை அதிகமாக்குவார்கள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். மற்றபடி செந்தில், குண்டு கல்யாணம், முரளி போன்ற நடிகர்களின் செல்வாக்கு, அவர்களின் தனிப்பட்ட ரசிகர் பட்டாளத்தின் செல்வாக்கு ஆகியவை முதலில் சொன்ன நடிகர்கள் அளவுக்கு இராது என்பது கண்கூடு.

சரத்குமார் ஒருவகையில் முதலில் சொன்ன வகையைச் சார்ந்தவர்தான். அவருக்கு என தென்மாவட்டங்களில் கொஞ்சம் ஓட்டு வங்கிகள் உண்டு. அதனால்தானோ என்னவோ திமுகவில் அவரால் எம்பி வரை ஆக முடிந்தது. தனது ரசிகர் செல்வாக்கைக் காட்டி மத்திய அமைச்சர் ஆகிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தவருக்கு அது முடியாமல் போனதில் கொஞ்சம் ஏமாற்றம். நாடார் சமூகத்தினருக்குத் திமுகவில் சரியான பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்று வெளிப்படையாய்ச் சொல்லிப் பார்த்தும் பலனில்லை. இந்தக் கோபத்தில் கடந்த தேர்தலில் முன்பு செய்ததுபோல் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய இயலாது என்று சொல்லியது திமுக தலைகளை கொஞ்சம் எரிச்சல்படுத்தியிருக்கலாம். தன்னை தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருப்பதாய்க் காரணம் காட்டி தனிக்கட்சி தொடங்கவோ அல்லது எதிரணிப்பக்கம் சாயவோகூட அவர் செய்யக்கூடும் போலத்தெரிகிறது. இனிமேல் கட்சி ஆரம்பித்து போட்டியிடுவது அவ்வள்வு எளிதல்ல, எனவே எதிரணிப்பக்கம் சாய்ந்தாலும் சாயக்கூடும். ஏற்கனவே கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் ஜெயித்தாலும் தனிப்பெரும்பான்மை அமைக்கத் தேவையான அளவைவிடக் குறைந்த அளவு தொகுதிகள் வந்துவிடுமோ என்று திமுக கவலை கொண்டிருக்க, அதற்குப் புதுப்புதுச் சோதனைகள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் திமுகவிற்கு இப்போதிருப்பதுபோல் அதிமுகவிற்குக் கவலைகள் குறைவு.

சமீபத்திய தகவல்களின்படி, சரத்குமார் உடனடியாக திமுகவிட்டு விலக வேண்டும் என்று ரசிகர்கள்(உண்மையாகவா?) அழுத்தம் கொடுக்கிறார்களாம். இன்னும் ஓரிரு நாட்களில் என்ன செய்யப் போகிறார் என்று தெரிந்துவிடும்போலத் தெரிகிறது. அவ்வாறு சரத் வெளியேறும்பட்சத்தில் தென்மாவட்டங்களில் திமுகவிற்கு அது கொஞ்சம் பின்னடைவாகவும், மதிமுக உள்ளிட்ட அதிமுக கூட்டணிக்கு சாதகமாகவும் அமையும்.
(7) Your Comments | | | |

சிம்ரன் பிரச்சாரம் அதிமுகவுக்கு

அதிமுகவுக்கு ஆதரவாக மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே கிளம்பியுள்ளது ஏற்கனவே நாம் அறிந்ததே. இப்போது புதிதாய் இருவர் அந்த ஜோதியில் ஐக்கியமாகியுள்ளனர். ஒருவர் தமிழ் சினிமாவின் முன்னாள் நம்பர் ஒன் சிம்ரன். மற்றொருவர் விந்தியா. இவர்களில் விந்தியா விஜயகாந்த் கட்சியில் சேர முயன்று முடியாமல் போனவர். எனவே அதிமுகவுக்கு வந்திருக்கிறார்.

அதிமுகவுக்கு ஆதரவாய் சிம்ரனின் தீவிரப் பிரச்சாரத்திலும் ஈடுபடுவார் என்று சொல்லப்படுகிறது. இதுவரை அதிமுகவில் சேர்ந்துள்ள நட்சத்திரங்கள் முரளி, விஜயகுமார், செந்தில், ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், குண்டு கல்யாணம் மற்றும் பலர். ஆக, ஒன்று மட்டும் உறுதி. திமுகவின் பிரச்சாரத்தைவிட அதிமுகவின் பிரச்சாரம் கவர்ச்சியாக, வண்ணமயமாக இருக்கப்போகிறது.
(16) Your Comments | | | |

Saturday, April 01, 2006

சிரிக்க மட்டும் - வீடியோ

ஜப்பானிய அழகு. இப்படி உலகில் ஏமாந்தவர்கள் எத்தனை பேரோ ?. நீங்களும் ஒருவராய் இருக்க வேண்டாம் என்று ஒரு எச்சரிக்கைக்காகத்தான் இது. :-).

(8) Your Comments | | | |

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com