<$BlogRSDUrl$>

Sunday, January 30, 2005

காதல் காதல்


மெகாசீரியல் பார்த்துக் கண்ணீர் விடுவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். பாசமலர் பார்த்து அழுதவர்களையும் பார்த்திருக்கிறேன். இதுபோல் நீங்கள் யாராவது சினிமா பார்த்துக் கண்ணீர்விட்டதுண்டா .. ? சமீபத்தில் வந்த காதல் படம் பலரைக் கண்ணீர்விட வைத்ததாய்க் கேள்வி. ஆனால் அதை முதலில் நான் நம்பவில்லை. மொழியே தெரியாத ஒருவர் அப்படத்தைப் பார்த்துக் குமுறி அழுதுவிட்டார். நண்பர் ஒரு மராத்தியர். அவருக்குத் தமிழ் தெரியாது. எங்களுடன் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது படத்தின் கிளைமாக்ஸைப் பார்த்துக் குமுறி அழுதுவிட்டார். எனது நண்பர்கள் சிலரும் அழுததாய்க் கேள்வி. அப்படி என்னதான் இருக்குதென்று நானும் பார்த்தேன், அந்தளவுக்கு குமுறி அழுமளவுக்கு எனக்கு அதில் ஏதுமிருப்பதாய்த் தெரியவில்லை.

"... நீ தளத்திலிருந்து விலகி இருக்கிறாய், ஒரே தளத்திலிருந்து பார்ப்பவர்களால்தான் அதைப் புரிந்துகொள்ளமுடியும்..." என்று என்னிடம் என்னென்னவோ புரியாத வார்த்தைகளில் பேசுகிறார்கள் :( . சரி இதை விடுங்கள்.

அந்த மொழி தெரியாத நண்பர் அப்படத்தைப் பார்த்தபின்னர் சில நாட்கள் கழித்து எங்களின் இன்னொரு நண்பருக்குக் கதையை அருமையாக விவரித்தார். கிளைமாக்ஸைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கும்போது குரலெல்லாம் தழுதழுக்கத் திரும்பவும் கண்கலங்கிவிட்டார். ஒண்ணுமே புரியலை..... உலகத்துல... !
(8) Your Comments | | | |

Saturday, January 29, 2005

மன்மதராசா..... மன்மதராசா...


இப்படி நடக்குமென்று எதிர்பார்க்கவில்லைதான். பக்கத்துவீட்டுக்காரர்கள் பாடுதான் பாவம். இதற்கு இப்படி ஒரு மவுசா என்று ஆச்சரியமாக இருக்கிறது. தெளிவாகவே சொல்கிறேன். எனது நண்பர் சுரேஷிடம் ஒரு ஜெர்மன் நண்பர் ஏதாவது தமிழ் பாட்டு கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். சுரேஷ் அவருக்குக் கொடுத்தது தனுஷ்-சாயாசிங் மன்மதராசா பாட்டு. மனிதர் பாட்டைக் கேட்டு ரொம்பவே இம்ப்ரெஸ் ஆகிவிட்டார். கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் தொடர்ந்து அப்பாடலே ஒடிக்கொண்டிருக்கிறதாம்.

"...இந்தியாவில் இப்படி சிறந்த(?) பாடல்கள் எல்லாம் வருகிறது என்று இப்போதுதான் தெரிந்துகொண்டேன்..., அந்தப் பாடலைக்கொடுத்ததற்கு மிக்க நன்றி.." என்று பார்க்கும்போதெல்லாம் சொல்கிறாராம். அந்தப் பாட்டை எழுதியதே சுரேஷ்தான் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ.

ஆனால் திரும்ப திரும்ப இப்பாடலையே அலறவிடுவதால் அவரின் பக்கத்துவீட்டுக்காரர்கள் கதறுவதுதான் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரர்களின் நன்மையைக் கருதி அடுத்த தடவை பழைய தமிழ்திரை மெல்லிசைப்பாடல்களைக் கொடுக்க

"...இந்தப் பாடல்கள் அந்த அருமையான மன்மதராசா மாதிரி வரலையே..." என்று கோபிக்கிறாராம்.

எப்படியோ கடல்தாண்டி, கண்டம்தாண்டி உள்ளத்தைக் கவரும் மன்மதராசா நீ வாழ்க... :)
(4) Your Comments | | | |

Thursday, January 27, 2005

சிந்திக்க ஒரு நிஜ உரையாடல்


".... ஹாய்.. எப்படி இருக்க..? "

"... நான் நல்லா இருக்கேன் சோனியா, நீ நல்லா இருக்கியா.. ? "

"... நானும் நல்லா இருக்கேன்.., எங்க போற உன்னோட அபார்ட்மெண்டுக்கா..? "

"...ஆமாம். அப்புறம், இப்பல்லாம் இங்க ஜெர்மனியில் படிக்க நம்ம பக்கத்தில் இருந்து நிறையப் பேரு வர்றாங்க இல்லையா ..? "

"... ஆமா, ஏகப்பட்ட பேர் நம்ம யுனிவர்சிட்டியிலேயே படிக்கிறாங்க, என்னை மாதிரி இந்தியால இருந்தே கிட்டத்தட்ட 50 பேர் இருக்காங்க..."

"... சரிதான், இந்தியால இருந்து ரொம்பப் பேர் வந்துருக்காங்க, நான், என்னோட பிரண்ட்ஸ் ரெண்டு மூணு பேர் அப்படின்னு பாகிஸ்தான்ல இருந்தும் கொஞ்சப் பேரை இப்பப் பார்க்க முடியுது... "

"... ஆமா, பங்களாதேஷ், சீனா, தைவான், நேபாளத்துல இருந்தும் ஸ்டுடண்ட்ஸ் படிக்கிறாங்க... "

"... இதைத்தவிர ஸ்ரீநகர்-காஷ்மீரில் இருந்தும் ஒரு பையன் இருக்கான்னு நினைக்கிறேன்.."

" !! ......................................... ?? !! "
(8) Your Comments | | | |

Saturday, January 22, 2005

புகழ்பெற்ற ஆயிரக்கணக்கான ஆங்கில நூல்கள் இலவசம்.


ஆங்கில இலக்கியம் படிப்பதில் ஆர்வமுடைய நண்பர்களுக்காக இத்தகவல். ஷேக்ஸ்பியரின் மெக்பத், எச்.ஜி.வெல்ஸின் - இன்விஸிபில் மேன் என ஆங்கில இலக்கிய நூல்கள் ஆயிரக்கணக்கானவற்றை நாம் இலவசமாக இறக்கிக் கொள்ளமுடியும். விர்ஜினியா பல்கலைக்கழகத்தின் மின்னிலக்க நூலகம் இவற்றை வழங்குகிறது. ஒரு ஆச்சரியமான விஷயம் என்ன வென்றால் பெரும்பாலான புத்தகங்களின் அளவு 300 KB ஐவிட குறைவுதான். ஆம்!. ஷேக்ஸ்பியரின் - ஜூலியஸ் சீஸர் முழு நாடகமும் 250 KB ஐவிட குறைவுதான்.

இங்கு அனைத்து மின்னூல்களும் மைக்ரோசாப்ட் ரீடர் கோப்பாக சேமிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பெயரைக்கொண்டோ அல்லது புத்தகத்தின் பெயரைக் கொண்டோ இந்த நூலகத்தில் தேடி நமக்குத் தேவையானவற்றைக் கண்டுபிடிக்கலாம். MS Reader இல்லையென்றால் மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து இலவசமாக இறக்கிக்கொள்ளலாம். இந்த மென்பொருள் நமக்காகப் புத்தகங்களை வாசிக்கவும் செய்யவும். அஷ்டாவதானி, தசாவதானிபோல ஒரு புத்தகத்தை வாசிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டு அதே நேரத்தில் இன்னொரு புத்தகத்தை நாமாக வாசிக்கவும்கூடச் செய்யலாம் ;~). புத்தகத்தின் வாசிப்பைக் கேட்க உங்கள் கணினியில் ஏதாவது ஒரு பேசுபொறி(Speech engine ) நிறுவப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அதையும் இணையத்திலிருந்து இறக்கி நிறுவிக்கொள்ளவும்.
(0) Your Comments | | | |

சாவித்துவாரம் - இப்படிக்கூட ஒரு வசதியா.. ?


எங்க ஊருல அடிக்கடி மக்கள் அறிவியல் வளர்ச்சியைப் பற்றிச் சொல்வது,

"....உலகத்தில் இப்படியெல்லாம் கண்டுபிடிச்சிட்டான், இன்னும் செத்தவங்களை மட்டும்தான் பிழைக்கவைக்க முடியலை. சீக்கிரம் அதுவும் வந்தாலும் வந்துடும்போல இருக்குது.. "

நேற்று இந்த நிரலியைப் பார்த்து இதுபோல் கொஞ்சம் ஆச்சரியம்தான். இந்த வசதி பல நாடுகள் பயன்படுத்திவருவது முன்பே தெரிந்ததுதான், என்றாலும் பொதுமக்களும் பயன்படுத்தும்படி வருமென்று நினைத்திருக்கவில்லை. உலகின் பல இடங்களை செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் நாமே பார்க்கும்படியானது இந்த நிரலி.

வசதியாக நாம் இடங்களைத் தேர்வுசெய்து ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் பெரிதாக்கிப் பார்க்கவும் இயலுகிறது. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் உங்கள் வீட்டின் மொட்டைமாடியையும், தோட்டத்தையும்கூடத் தெளிவாகப் பார்க்கமுடியும். சில இடங்களை ஆச்சரியப்படும் அளவில் மூன்று அங்குலம் வரை துல்லியமாகப் பார்க்கமுடியும் என்றால் நம்பமுடிகிறதா என்ன.. ? எனக்குச் சில விஷயங்கள் புரியவில்லை. இப்படி அனைத்தையும் பார்க்க முடிந்தால் பல நாடுகளின் முக்கியக் கேந்திரங்களையும், தளவாடங்களையும்கூடப் பார்க்கமுடியுமா என்ன.. ? அல்லது அவற்றை நீக்கியிருப்பார்களா தெரியவில்லை.

இந்த மென்பொருளைத் தருவது கூகிள். இந்த நிரலியின் பெயர் சாவித்துத்துவாரம். ஒரு வாரம் வரை பயன்படுத்திப் பார்க்க இலவசம், அதற்குமேல் வேண்டுமென்றால் காசுகொடுத்து வாங்கவேண்டுமாம். இந்தச் சாவித்துவாரத்தினைப் பயன்படுத்தியவர்கள் எப்படி இருக்கிறது என்று சொல்லவும்.
(3) Your Comments | | | |

Wednesday, January 19, 2005

பாத்திரத்தில் வார்த்தை வரும் ... ?


நகைச்சுவைக்காகச் சொல்லவில்லை. உண்மையிலேயே இப்படித்தான் நடக்கும்போல. முற்றும் வேறுபட்ட ஒரு மொழியின் ஒலிகள் அனைவருக்கும் கொஞ்சம் வினோதமாக இருக்கும் என்பது உண்மைதான். எனது சீனத்து நண்பர்கள், நண்பிகள் யாரும் இதைப் படிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் இதைச் சொல்கிறேன்.

".... சீனாக்காரங்க பல வார்த்தைகளை எப்படி உருவாக்கி இருப்பாங்கன்னா... பாத்திரத்தைத் தூக்கித் தரையில் வீசுவாங்க அந்த சத்தத்தை ரெண்டு வார்த்தையாக்கிடுவாங்க.." இது என் நண்பன் அடிக்கடி சொல்வது. "Empty vessels make noise " அது சரி. ஆனா காலிப்பாத்திரத்தில் வார்த்தை வருமா , இது உண்மையா என்ன..?. :)

எது எப்படியோ நாம பேசறதைப் பார்த்து நிறையப் பேர் இதே மாதிரிதான் நினைக்கிறாங்க. நண்பரும், இன்னொரு ஈழத்து நண்பரும் பேசிக்கொண்டிருந்ததை வெகு நேரம் கவனித்துக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு நபர் அருகில் வந்து,

"... ரெண்டு பேரும் என்ன பேசிக்கிறிங்க..? பேச்சில் ஒரு ஏற்ற இறக்கம் இல்லாமல் நேர்கோடு மாதிரி இருக்குதே... உண்மையிலேயே நீங்க ரெண்டு பேரும் பேசிக்கறது உங்களுக்குப் புரியுதா..? .." , இப்படிக் கேட்டுட்டுப் போனாராம்.

இதுகூடக் கொஞ்சம் பரவாயில்லை. எனது நண்பனும், நானும் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்த ஜெர்மானிய நண்பர்,

"... உங்க மொழி ஆங்கிலத்தோட டயலக்டா ? .." , என்று கேட்டு எங்கள் இருவரின் அழகுத் தமிழை ஆங்கிலத்தின் வட்டாரமொழியாக்கி விட்டார். :(

ஒரு ஈழத்து நண்பர் சொல்வார்,
".... நீங்கல்லாம் என்ன தமிழ் பேசுறீங்க..? எல்லாத்தையும் இங்க்லீசில் சொல்லிட்டு க்டைசியா ரெண்டு வார்த்தைத் தமிழைச் சேர்த்து தமிழில் பேசுறதாச் சொல்றீங்க... "
(2) Your Comments | | | |

Wednesday, January 12, 2005

உங்களின் தாய்மொழி - இந்தி


அருகிலுள்ள ரயில்நிலையத்துக்கு நடந்துகொண்டிருந்தேன். ரயில் நிலையம் பல்கலைகழகத்தில் இருந்து வெகுதொலைவில் இல்லை. நடந்தால் அதிகபட்சமாக 5 நிமிடம், ஜெர்மனியில் இந்தப் பாதாள ரயில் - கிட்டத்தட்ட நம்மூர் டவுன் பஸ்போலத்தான். நான் தங்கியிருக்கும் அபார்ட்மெண்டை அடைய பல்கலைக்கழகத்தில் இருந்து நடந்தால் 20 நிமிடத்துக்குமேல் ஆகாது. இதையே ரயிலிலென்றால் அதிகபட்சம் 3 நிமிடம். சிலநேரம் ரயில் வர 10 நிமிடம் ஆனாலும் நடக்கச் சோம்பல்பட்டு ரயிலுக்காய்க் காத்திருப்பதுண்டு. நடந்துகொண்டிருக்கும்போது பின்னாலிருந்து ஒரு சத்தம்.

".... ஹாய் .. முத்து.."

"... ஹலோ.. இலா.. ஹவ் ஆர் யு..? .. "

"...பைன்.. தும் .. கைஸே :::++++-+ßßß&&&&§&/%/!:....... "

"ம்.... யா ... ", ஒரு மாதிரியாய் விளக்கெண்ணெய் குடித்த முகத்துடன் நான்.

"... ----??ß&&&$$$§§§§´......... "

இதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று முடிவுகட்டி,

"... இலா, சாரி..ஐ டோண்ட் நோ ஹிண்டி தேட்மச்... "

"... ஓ,.. ஐ ஆம் சாரி.. இஃப் ஐ சீ சம் இண்டியன், ஐ ஸ்டார்ட்டு ஸ்பீக் இன் ஹிண்டி, அண்ட் ஐ ஆம் வெரி ப்ளூயண்ட் இன் ஹிண்டி... "

"...யா.., நேச்சுரலி. பிகாஸ் தட்ஸ் யுவர் மதர் டங்.."

"... வாட்..? தட்ஸ் யுவர் மதர்டங் டூ ... ", கொஞ்சம் சந்தேகத்துடன் என்னை நோக்கி, "....யு ஆர் ப்ரம் டமில்னாட் - இண்டியா ஒன்லி.. இஸ்ஸிண்ட்டிட்..? "

இதைச் சொல்லும்போது ரயில்நிலையம் வந்துவிட்டது. அங்கே இன்னும் சில நண்ப, நண்பிகள் நின்று கொண்டிருந்தனர். அனைவரையும் பார்த்து ஹாய் சொல்லி புன்னகைக்கும்போது ரயில் வந்துவிட்டது. ஏறி அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிட்டதால் மேற்கொண்டு விட்ட இடத்தில் பேச்சைத் தொடரமுடியவில்லை.

பேசியவர் உடன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யும் நண்பி. இதிலிருந்து நிறைய விஷயங்கள் தெரிகின்றன. இதனை ஒரு தனிமனிதரின் சொற்பிழையாகவோ அல்லது கருத்துப்பிழையாகவோ பார்க்கவில்லை. அம்மொழி பேசும் பலரின் ஆழ்மனவெளிப்பாடாகவே தோன்றுகிறது. அந்த ஆழ்மன நம்பிக்கையே பலவற்றுக்குக்காரணமாக இருக்கிறது. நிறையப் படித்த பலருக்கும் தாய்மொழி, அலுவலகப்பயன்பாட்டு மொழி, செம்மொழி, தேசியமொழி ஆகியவற்றுக்கான வித்தியாசம் தெரியாமல் இருப்பது சாத்தியம்தான் போலும்.
(3) Your Comments | | | |

Monday, January 10, 2005

நீங்களும் முயற்சிக்கப் போகிறீர்களா .. ?


வலைப்பூவை PDF கோப்பாக மாற்றி வைப்பது பயனுள்ளதாக இருக்குமென்று நான் நினைத்ததைப் போலவே நண்பர்களும் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். தங்கள் வலைப்பூவையும் இதுபோல் மாற்றிவைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு PDF ஆக மாற்றுவதற்கு நான் அதிக நேரம் செலவிடவில்லை. ஒரு வகையில் இது எளிதுதான். இதை உருவாக்கத் PDF டிஸ்டில்லர் இருந்தால்போதும். இதுபோல் கோப்பாக மாற்ற விரும்புபவர்கள் செய்யவேண்டியது.

1. தற்காலிகமாகச் சிறிது நேரத்துக்கு டெம்ப்ளேட் செட்டிங்கில் சிறு மாற்றம் செய்யவேண்டும், அதாவது அனைத்துப் பதிவுகளும் ஒரே சமயத்தில் தெரியும்படி மாற்றிக்கொள்ள வேண்டும். சாதாரணமாக ஐந்து அல்லது ஆறு பதிவுகள் மட்டுமே முதல் பக்கத்தில் தெரியும்.நீங்கள் blogger வலைப்பூ வைத்திருந்தால் settings--->foramtting ல் show ---- Days/posts on the main page என்பதில் தேவையாதை தெரிவுசெய்து, பின்னர் வலைப்பூ முழுவதையும் ஒருமுறை ரீபப்ளிஷ் செய்ய வேண்டும். இப்போது புதிதாக ஒரு ப்ரௌசரில் உங்கள் வலைப்பூவைப் பார்த்தால் அதில் இதுவரை எழுதிய அனைத்துப் பதிவுகளும் தெரியும். அதை அப்படியே HTML கோப்பாக சேமித்துக்கொள்ளலாம். நான் செய்தது, அப்பக்கத்தில் ரைட் கிளிக் செய்து View source என்பதைக் கிளிக் செய்தால் அப்பக்கத்தின் மூலம் நோட்பேடில் தெரியும். அதை சேமித்துப்பின்னர் .txt என்பதை .HTML என மாற்றிக்கொண்டேன்.

இங்கே முக்கியமாகக் கவனிக்கவேண்டியது என்னவென்றால் சாதாரணமாக நோட்பேடில் சேமிக்கமுயலும்போது ANSI என்கோடிங் default - ஆக தெரிவாகும் , அதை UTF-8 ஆக மாற்றியபின் சேமிக்கவேண்டும். இல்லையென்றால் HTML ஆகச் சேமித்த கோப்பில் தமிழ் எழுத்துரு சரியாகத் தெரியாது.

2. சேமித்த பக்கத்தை திரும்பவும் நோட்பேடில் திறந்து mainClm (சாதாரணமாக முதல் வரியில் இருந்து ஒரு பத்துவரிகளுக்குள் இருக்கும்) என்று ஆரம்பிக்கும் வரியில் width என்பதை 100% ஆக மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பதிவுகள் மட்டுமே தெரியும், வலைப்பூவில் இடப்பக்கத்தில் சாதாரணமாகக் கொடுத்திருக்கும் மற்ற இணைப்புகள், தொகுப்புகள் ஆகியவை தெரியாமல் பதிவுகள் மட்டுமே தெரியும். இது நான் மாற்றம் செய்தது.

3.உங்கள் கணினியில் PDF டிஸ்டில்லர் இருந்தால், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ப்ளௌசரில் தெரியும் பக்கத்தை file--->print என்பதைப் பயன்படுத்தி முழுவதையும் PDF ஆக மாற்றிக்கொள்ளலாம். நான் பயன்படுத்தியது PDF டிஸ்டில்லர் 5.0 . PDF ரைட்டர் மென்பொருளை நான் முயற்சித்துப் பார்க்கவில்லை. பக்கத்தின் background PDF கோப்பில் வரவேண்டாம் என்று நினைத்தால் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரில் internet options--->advanced என்பதில் print என்பதிலுள்ள டிக்கை நீக்கிக்கொள்ள வேண்டும்.

4. இப்போது PDF ஆகப் பிரிண்ட் செய்தால் நீங்கள் இதுவரை பதிந்த அனைத்துப் பதிவுகளும் மின்னூல்போன்ற வடிவத்தில் தயார். :)
(4) Your Comments | | | |

தமிழ் வலைப்பூக்களில் ஒரு புதிய முயற்சி


தமிழ் வலைப்பூக்களில் ஒரு புதிய முயற்சியாக பதிவுகளை PDF கோப்பாக(மின்னூல் ? ;) ! ) மாற்றிவைத்தால் அது வலையில் இருப்பதைவிட இன்னும் கொஞ்சம் பயனுடையதாகவும், எடுத்தாள எளிதாகவும் இருக்குமென்ற காரணத்தால் முதல் பதிவிலிருந்து சென்ற ஏப்ரல் வரையானவற்றை PDF கோப்பாக மாற்றி வைத்துள்ளேன். அப்படி இங்கு என்னதான் இருக்கிறது எனறு பார்க்க விரும்பும் நண்பர்கள் தாராளமாய் இலவசமாய் ( !) இறக்கிப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். பதிவுகளை மீண்டும் திருத்தாமல் அப்படியே PDF கோப்பாக மாற்றியபடியால் சில எழுத்துப் பிழைகள் எங்காவது இருக்கலாம். இது முற்றிலும் இலவசமாகவும், தனிப்பட்ட உபயோகத்துக்கும் மட்டுமே. :)


(2) Your Comments | | | |

Wednesday, January 05, 2005

திருச்செந்தூரும் புதிர்நிகழ்வும்


திருச்செந்தூரில் ஒரு புதிரான நிகழ்வு சென்ற சுனாமி நிகழ்வன்று நடந்துள்ளது. சில பத்திரிக்கைகளில்கூட வந்திருக்கிறது. இதுபோன்ற நிகழ்வு வேறெங்கும் நடந்துள்ளதா என்று தெரியவில்லை. திருச்செந்தூருக்கு அருகிலுள்ள கன்னியாகுமரிகூட சுனாமியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் திருச்செந்தூர் கடற்சீற்றத்தில் பாதிக்கப்படவில்லை. இயல்பாகவே கடலைகள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அருகில் வந்துசெல்லும். சுனாமி நாளில் கோவிலோ, திருச்செந்தூரோ பாதிக்கப்படாததுகூட ஆச்சரியமில்லை.தமிழகக்கரையோரங்களில் பிற இடங்களில் தண்ணீர் கடற்கரையைவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தபோது திருச்செந்தூரில் கோவிலுக்கருகில் இருந்த கடல்நீர் 700 மீட்டருக்குமேல் இயல்பைவிட பின்னே சென்றதுதான் ஆச்சரியம். தண்ணீர் உள்ளே சென்றதால் சாதாரணமாய் வெளியே தெரியாமல் கடலுக்குள் அமிழ்ந்திருக்கும் பாறைகள்கூட வெளியே தெரிய அதைப் பலர் புகைப்படமும், வீடியோவும்கூட எடுத்திருக்கின்றனர். அன்று மதியவேளையில் தண்ணீர் இயல்பான நிலைக்குத் திரும்பவும் வந்திருக்கிறது. படம்: தினத்தந்தி
(2) Your Comments | | | |

Tuesday, January 04, 2005

பூமி - நேற்று இன்று நாஆஆ....ளை


பல்லாயிரம் மக்களைப் பலிகொண்ட சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தின்விளைவாக பல சிறுதீவுகள் கொஞ்சதூரம் இடம் மாறிவிட்டனவாம். அந்தமான் தீவு 32 மீட்டர்வரை நகர்ந்துவிட்டதாய் அறியப்பட்டுள்ளது.நமக்கு இது ஆச்சரியமாய் இருந்தாலும் இயல்பில் இது ஒன்றும் மிகப் புதியதல்ல.

இமயமலை இன்று இருக்குமிடம் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கடலாய் இருந்தது.ஆப்பிரிக்காவும் அமெரிக்காவும் ஒன்றாக இணைந்திருந்த காலமும்கூட உண்டு. இவ்வாறு பெருநிலப்பரப்பு நகர்வதைக் "கண்ட நகர்வு" என்பர். இதுபோன்ற நகர்வுகள் இன்றுவரை நடந்துகொண்டுகொண்டுதான் இருக்கிறது.

இன்னும் சில கோடி ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியக் கண்டம் அருகிலுள்ள கண்டத்துடன் இணைந்துவிடுமாம்.ஆப்பிரிக்கக்கண்டம் இரண்டாகப் பிரியும் என்று நம்பப்படுகிறது.இன்று நண்பர் ஒருவர் ஆப்பிரிக்கக்கண்டம் பிளவுபடுவது சில பத்தாண்டுகளிலேயே தெரிய ஆரம்பிக்கும் என்கிறார். இங்கே நீங்கள் படங்களில் பார்ப்பது புவியின் நேற்று இன்று நாளை. படத்தைக் கொஞ்சம் பெரியதாய்ப் பார்க்க அதனைச் சொடுக்கவும்.
படங்கள்: spiegel.de
(7) Your Comments | | | |

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com