<$BlogRSDUrl$>

Sunday, May 07, 2006

சோதிடமென்னும் அற்புதக்கலை

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

சமயங்களையும், முன்னோர்கள் கண்டுரைத்த அரிய, பயனுள்ள நெறிகளையும் எந்த தயக்கமும் இன்றி மூடநம்பிக்கைகள், பிற்போக்கானவை என்று கூறுபவர் சிலர், அதன் மூலம் தாங்கள் பகுத்தறிவுவாதிகள், முற்போக்கானவர்கள் என்று மாயப்பெருமை கொண்டு தங்களைத்தாமே ஏமாற்றிக் கொள்பவர்கள் சிலர். இவர்களைக்கண்டு இந்த மாயக்கவர்ச்சியால் மயங்கி நிற்பவர் பலர். ஆனால் இவ்வுலகில் இதுவொன்றும் புதிதல்ல!.

இருளும்-பகலும், உண்மையும்-பொய்மையும், வெற்றியும்-தோல்வியும், தீயோரும்-நல்லோரும், மேடும்-பள்ளமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒரு உண்மையை நம்புவோரும்-நம்பாதோரும் கூட அவ்வாறே. இவை இன்று நேற்றல்ல, பல கோடி ஆண்டுகளாக இருந்து வருபவை, இன்னும் தொடர்ந்து இருக்கும். சோதிடத்தை நம்பாதவர்களின் கருத்துக்கு எதிர்வாதம் செய்வதோ அல்லது சோதிடத்தை நியாயப்படுத்துவதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல.

தேவைகள் கண்டுபிடிப்புக்களின் தாய் என்பர்.மனிதனுக்கு அவன் தோன்றியதிலிருந்து இன்றுவரை எத்தனையோ தேவைகள், அதனால் உருவானதே இத்தனைக் கண்டுபிடிப்புக்கள், கலைகள். மனிதனின் எதிர்காலத்தை அறிய வேண்டுமென்ற ஆவலால் உருவானதே இந்த சோதிடமென்ற ஒரு அற்புதக்கலை. ஆம் இது உண்மையென்பதை , அதன் அடிப்படையை உணர்ந்தோர் அறிவர். இக்கட்டுரையில் சோதிடம் என்று குறிப்பிடுவது மனிதன் பிறந்தவுடன் அவன் பிறக்கும்போது இருக்கும் கிரகங்களின் நிலையைக் கொண்டு கணிக்கப்படும் சோதிட சாத்திரத்தைப்பற்றியதை மட்டுமே.

தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு மனிதனுக்கும் தன் எதிர்காலம் பற்றி முன்பே அறிந்துகொள்ள ஆசையும்,ஆர்வமும் உண்டு. இதனடிப்படையில் உருவானதே சோதிடம். ஒருவனின் ஜாதகம் எவ்வாறு எழுதப்படுகிறது என்றும், கோள்களின் நிலை எவ்வாறு கணிக்கப்பட்டது என்றும் அறிந்தவர்கள் வியப்புக் கொள்வது நியாயமானதே. ஏனென்றால் இவையெல்லாம் உருவாக்கப்பட்டது கணினி யுகமான இக்காலத்தில் அல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது. இன்று பழைய பஞ்சாங்கம் என்று கேலியாகச் சொல்லப்படும் அவைகள் இன்றும் கூட சூரிய, சந்திர கிரகணங்கள் முதல் கோள்களில் நிலையைத் துல்லியமாய்ச் சொல்கிறதே , எப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இக்கணிக்கும் கலையை உருவாக்கினார்கள் என்று அதைக் கேலிபேசுவோர் சிந்திப்பதில்லை. வெறும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால்தான் கோள்களின் இயக்கம் பற்றிய முறையான அறிவியல் விதிகள் வந்தன, ஆனால் இது உருவாவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அந்த இயக்கங்களைத் துல்லியமாய்க் கணித்தே சோதிடத்துக்கான பழைய, புதிய பஞ்சாங்கள் உருவாக்கப்பட்டன/படுகின்றன. இன்னொன்றை முதலிலேயே கூறிக்கொள்ள விழைகிறேன், நான் முறையாய்ச் சோதிடம் கற்றவன் அல்லன். உண்மையில் எனக்கும் சோதிடத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை; சோதிடம் என்றால் என்னவென்றும் அது எவ்வாறு கணிக்கப்படுகிறது என்று அறிவியல் பூர்வமாய்ச் சில புத்தகங்களைப் படித்ததைத் தவிர. (இது இருவருடங்களுக்கு முன் எழுதப்பட்டது)
| | |
Comments:
இருவருடங்களுக்கு முன் எழுதப்பட்டப் பதிவே இன்று கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலாய் அமைகிறதே. வியப்பு. நல்ல பதிவு முத்து.
 

மறுமொழிக்கு நன்றி குமரன்.
 

முத்து,

அருமையான கட்டுரை.

இன்று சோதிடம் பொய் என சொல்பவர்களில் பெரும்பான்மையானோர் அதன் அடிப்படையை அறியாதோர்/அறிய விரும்பாதோர்.

அறிவியலிலும் நிரூபிக்க முடியாதவற்றை கொள்கைகளாக சொல்கிறார்கள் என்பது இவர்கள் அறியாததா என்ன?

உதாரணமாக, அணுக் கொள்கைகளில் J.J தாம்சன்,நீல்ஸ் போர் ஆகியோர் சொன்னதை முன்பு உண்மை என்றவர்கள், இன்று ஜான் டால்டன் சொன்னதை உண்மை என்பார்கள்.

அதெப்படிங்க மூனுமே உண்மையாயிடுமா?

அறியாமையினாலேயே ஒரு விஷயம் தவறுன்னு சொல்லீட முடியுங்களா?

சோதிடத்தை பற்றி அறியாதோர் சோதிடத்தின் அடிப்படைகளை அறிய தனிப் பதிவுத் தொடராக பதியுங்களேன்.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com