<$BlogRSDUrl$>

Saturday, May 06, 2006

முத்துவும் நாய்களும்

எனக்குப் பக்கத்துவீட்டில் ஒரு நாய் இருந்தது. அதை எப்போதாவது கல்லால் அடித்திருக்கிறேனா இல்லையா என்பது சரியாக நினைவில்லை. ரொம்ப சின்ன வயதில் இருந்தே ஜீவகாருண்யம் மீது எனக்கு நம்பிக்கை உண்டு, அதனால் அதைக் கல்லால் அடித்திருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன். நான் மட்டுமல்ல, அந்த நாயும்கூட ஜீவகாருண்யத்தின் மீது நம்பிக்கைகொண்ட சாதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். அந்த நாய் திருடர்களிடம்கூட அதே கருணையைக் காட்டியது என்பதுதான் இங்கே விஷேசம். இன்னா செய்தாரை... என்ற குறள்தான் அந்த நாயின் போக்குக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். இதுவே, எனக்கு அந்தத் திருக்குறள் படித்தபின்தான் புரிந்தது. அந்தக் குறளுக்கு வாழும் இலக்கணமாக இருந்த நாய் நிச்சயம் மதிப்புக்குரியதுதான்.

எனக்கு ஏழெட்டு வயதிருக்கும்போது என் தாத்தா வீட்டில் ஒரு நாய் இருந்தது. அது மகா புத்திசாலி நாய். ஒருமுறை முன்னால் சென்றுகொண்டிருந்த பாம்பை மிதியாமல் இருக்க ஓடிச் சென்று குரைத்து எச்சரிக்கை செய்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். முதலில் குறிப்பிட்ட பக்கத்துவீட்டு நாயிடமிருந்து இந்த நாய் மிகவும் வேறுபட்டதுதான். வாய்ச்சண்டைக்கு வந்த ஒருவரைக் குறிப்பால் உணர்ந்து கடித்துக் குதறியிருக்கிறது. ஊரில் புதிதாக ஏதாவது ஒரு நாய் வந்து விட்டால் போதும், முதலில் வூடு கட்டும் நாய் இதுவாகத்தான் இருக்கும். ஊரில் உள்ள மற்ற நாய்களையெல்லாம் உசுப்பேத்தி அந்த நாயுடன் மோத வைத்துவிட்டு சத்தமே போடாமல் மெதுவாய்ப் பின்வாங்கி நல்ல பிள்ளையாய் வீட்டுக்கு வந்துவிடும். மற்ற நாய்கள் அப்பாவித்தனமாய் சண்டைக்குபோய் ரத்தக்காயத்துடன் வீட்டுக்கு வந்து வீட்டில் திட்டு வாங்கிக்கொண்டிருக்குங்கள் பாவம். அந்த நாயின் பிரதாபங்கள் இன்னும் பல இருக்கின்றன, எனக்கு நிறையவே மறந்துவிட்டது. இவ்வளவு புத்திசாலியான நாய் கடைசியில் வெறிபிடித்து இறந்துவிட்டது.

இதுபோக, தெருவில் அவ்வப்போது மிரட்டிப்பார்க்கும் ஒரு சில நாய்களும் இருந்தன. அவை அவ்வளவு சுவாரசியமானவைகள் அல்ல. எங்கள் வீட்டிலும் ஒரு நாய் வளர்க்க வேண்டும் என்று எல்லாரையும்போல ஆறேழு வயதில் நான் ஆசைப்பட்டதுண்டு. ஒரு முறை நானும் என் தம்பிகளும் சேர்ந்து எங்க அம்மாவிடம் நாய் வேண்டும் என அடம்பிடித்ததுக்குக் கிடைத்த பதில், "...வீட்டில் ஏற்கனவே மூணு நாய் இருக்கு.. இதில் இன்னொன்னு தேவையா..?..". அந்தப் பதில் எங்களைக் கொஞ்சம் யோசிக்க வைத்ததோ என்னவோ மீண்டும் நாய் வேண்டும் என்று கேட்ட நினைவே இல்லை. அப்ப ஏற்கனவே உங்க வீட்டில் மூன்று நாய்கள் இருந்தனவா என்று கேட்க நினைக்கிறீர்கள். அதான் இல்லை, அன்று நானும் என்னுடைய இரு தம்பிகளும்தான் இருந்தோம்.

ஆக, நாய்களுடன் எனக்கான பரிச்சயம் மிகவும் குறைவுதான். பினாத்தல் சுரேஷின் பதிவும், அதற்கு வந்த உஷாவின் பின்னூட்டமும் இந்த நாய்ப் பிளாஷ்பேக்குக்கு என்னை இட்டுச் சென்றது.
| | |
Comments:
//ஊரில் உள்ள மற்ற நாய்களையெல்லாம் உசுப்பேத்தி அந்த நாயுடன் மோத வைத்துவிட்டு சத்தமே போடாமல் மெதுவாய்ப் பின்வாங்கி நல்ல பிள்ளையாய் வீட்டுக்கு வந்துவிடும்.//

அரசியல் வாதி வீட்டு நாய் போல இருக்கு :)
 

பொன்ஸ்,
போன பிறவியில் அதுவே அரசியல்வாதியாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எனக்கு அடிக்கடி வருவதுண்டு.:-).
 

அ. முத்து, எல்லாருக்கும் சின்ன வயதில் நாய் வளர்ப்பு ஒரு லட்சியமாய் இருந்திருக்கு இல்லையா?

பரவாயில்லையே, என் எழுத்து இவ்வளவு "ஊக்குவிக்கிறதா"
 

உஷா,
பார்த்தீங்களா. நீங்க கேட்ட ஒரு வரிக் கேள்வி ஒரு பதிவாகவே ஆயிட்டுது.

அப்புறம், அ. முத்து அப்படின்னா என்னன்னு தெரியலையே.
 

அ முத்து = ஆர்டினரி முத்து??
 

பிழைத் திருத்தம்

ஆ. முத்து :-)
 

ஜெர்மன் முத்து,
உண்மையிலேயே நாய் வளர்ப்பதும் அதைப்பிரிவதும் மிகவும் கஷ்டமான ஒன்று. குழந்தை மாதிரித் தான் இருக்கும். சற்று நேரம் நாம் இல்லாவிட்டால் அழும் பாருங்கள், குழந்தை கெட்டது. பின் நம்மை ரொம்ப நேரம் கழித்துப்பார்த்தாலும் அதன் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்தும் தெரியுமா?பிரிவின் கொடுமையை உணர்ந்த காரணத்தாலேயே எங்கள் செல்லம் எங்களை விட்டுப் பிரிந்தபின் மற்றொரு நாயைத் தேடவில்லை. மேலும் நா;ய்களுக்கு ஒரு எஜமான் தான். ஆனால் நாம்? ஒன்று இறந்தால் மற்றது என்று மனதை மாற்றிக் கொள்கிறோம்.
 

//அ முத்து = ஆர்டினரி முத்து?? //

//பிழைத் திருத்தம்
ஆ. முத்து :-)//

பொன்ஸ், உஷா,
ஆர்டினரி முத்து என்று கேட்டவுடன் எனக்கு பல விஷ்யங்கள் சட்டென நினைவுக்கு வருவது ஸ்பெஷல் டீ, சலவைக்குப்போடும் துணி, ஸ்பெஷல் தோசை. ஆக இந்த முத்துவோட ரேஞ்ச் எங்கேயோ போயிடுச்சு. அப்ப தமிழினி முத்து த.முத்துவா? :-))).
 

கீதா,
உண்மைதான். வீட்டுவிலங்குகளை வளர்ப்பது குழந்தைகள் வளர்ப்பதைப் போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. இதனாலேயே பூனை, நாய் வளர்க்க நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com