<$BlogRSDUrl$>

Sunday, March 20, 2005

மாயப்பெட்டி - நம்புங்கள் இது நிஜம்


.... மாயப்பெட்டியில் எழுதினால் அதை உலகிலுள்ள அனைவரும் படிக்க இயலும். அதேபோல் அப்பெட்டியில் உலகில் யார் எழுதியதையும் படிக்க இயலும். ஒருவர் அடுத்தவருக்குக் கடிதம் எழுதினால் அது சேர சில நொடிகளே ஆகும், அவர் எத்தனை ஆயிரம் மைல் தூரமிருந்தாலும், எதிர்வீட்டில் இருந்தாலும் ஒரே நேரம்தான் ஆகும். அந்த அற்புதப்பெட்டியின் உதவியால் எல்லாநாடுகளின் மக்களும் தத்தம் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வார்கள். வேலைவெட்டி இல்லாதவர்கள் ஊர்வம்பும் பேசிக்கொள்வார்கள்.

கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும்போது அவை பிடிக்காவிட்டால் நிறையக் கூத்துக்கள் நடக்கும். உணர்ச்சிவசப்படும் சிலர் படித்திருந்தாலும் கூச்சப்படாமல் அசிங்கமாகத் திட்டிக்கொள்வார்கள்.

ஒருவரின் உருவத்தைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல அழகாய் அப்பெட்டி கணநேரத்தில் வரையும். பிரபலமான பாடகர்களின் பாடலை நாம் நினைத்த நேரத்தில் அழகாகப் பாடும், எந்தச் சலிப்பும் இல்லாமல் திரும்பத் திரும்பக்கூடப் பாடும். ஆனால் பக்கத்துவீடுகளில் இருப்பவர்கள் சலிப்படைவார்கள், சில நேரம் கொதிப்படைவார்கள்.

நாடக நடிகர்கள் அந்த பெட்டியில் வந்து நடிப்பார்கள். பல சமயம் அது சின்னக்குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்றதாய் இராது. வயது வந்த காளையரும், கன்னியரும் திருட்டுத்தனமாய் அப்பெட்டியில் பலவற்றை ரசிப்பர். இன்னும் எத்தனையோ எத்தனையோ பயன்பாடுகள் மாயப்பெட்டியில் இருக்கும். அத்தனையும் சொல்ல எனக்குத் திறமையில்லை. அதைப் புரிந்தகொள்ள உங்களுக்கும் அறிவு போதாது.

எத்தனையோ பேரின் காதலுக்கு அது தூதுபோகும். சந்தர்ப்பம் வாய்த்தால் நைஸாக வேட்டும் வைக்கும்.

அந்தப் பெட்டியைச் சில நாள் பார்க்கவில்லையென்றால் சிலருக்குப் பைத்தியமே பிடித்துவிடும். எனக்கும்தான். சிலர் வேலைக்குச் செல்லும்போதுகூட அந்தப் பெட்டியை மடித்து கையுடன் எடுத்துச் செல்வார்கள்.

அந்தப் பெட்டி பயங்கரமான புத்திசாலியாக இருக்கும். ஆனால் மக்கள்தான் சரியான சோம்பேறிகளாகிவிடுவார்கள். ஒன்றில் இரண்டு போகுமா எனக்கேட்டால் அதைக்கூட அப்பெட்டியிடம்கேட்டுத்தான் சொல்வார்கள். சிரிக்காதீர்கள், இது சத்தியம்.

நமது இன்பத்தமிழிலேயே அந்த அற்புதப்பெட்டியில் கவிதை எழுதுவார்கள், சிலர் காவியங்கள்கூட எழுதுவார்கள். தனது கடிதத்தை எந்த நாட்டுக்கு அனுப்பினாலும் அதற்குச் செலவே ஆகாது. இதனால் பலர் ஹாஸ்யங்களையும், கன்னியரின் சித்திரங்களையும், நணபர்களின் ரஸமான கடிதங்களையும்-குப்பைகளையும் தெரிந்த நண்பர்கள் அனைவருக்கும் அனுப்புவதையே தன் வாழ்நாளின் கொள்கையாகக் கொண்டிருப்பார்கள்.

இன்னும் சிலர் அப்பெட்டியுடன் அரட்டையடிப்பதிலும், விளையாடுவதிலும் தன் வாழ்நாளின் முக்கால் பாகத்தைக் கழிப்பர்.

நமது திருக்குறள், சங்கநூல்கள் என ஆரம்பித்து எல்லாமும் அந்தப் பெட்டியில் இருக்கும். ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அந்தப் புத்தகங்களுயும்கூட உலகின் ஒரு மூலையில் இருந்து அடுத்த மூலைக்கு நொடியில் அனுப்ப இயலும். அனுப்பிய புத்தகம் வாங்கியவரிடம் இருக்கும், அதே நேரம் அப்படியே அனுப்பியவரிடமும் இருக்கும். ஆயிரம்முறை கொடுத்தாலும், கோடிமுறை கொடுத்தாலும் அந்தப் புத்தகம் திரும்பவும் அப்படியே இருக்கும்.

ஏன் என்னைப் பைத்தியக்காரனைப் போலப் பார்க்கிறீர்கள்?. நீங்கள் நம்பாவிட்டாலும் உங்கள் பேரனோ அல்லது பேரனின் பேரனோ மாயப்பெட்டியைப் பார்க்கத்தான் போகிறார்கள். இந்த ஒவ்வொரு எழுத்தையும் அவர்கள் ஒரேநேரத்தில் பலநாடுகளில் இருந்து படிக்கிறார்கள். ஆம். இந்த நொடியில் முடித்துவிட்டுப் புன்னகைக்கிறார்கள்.
| | |
Comments:
கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்,
எல்லாம் மாயம், நம்பாதீர்கள்.
 

அதாவது, "பாரு பாரு, நல்லாப் பாரு, பயாஸ்கோப்பு படத்தப் பாரு" என்கிறீர்கள் :) அருமை!
 

கம்ப்யூட்டரைப் பற்றி 200 வருடத்துக்கு முன்னால் ஒருத்தர் அவரைச் சுற்றியுள்ள மக்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

ஜீவா, வாய்ஸாஃப்விங்,
உங்கள் கருத்துக்கு நன்றிகள் :-) .
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com