Friday, February 25, 2005
உங்களுக்கு யாப்பான் நாடு தெரியுமா ?
ஒவ்வொரு நாடும் இன்னொரு பெயரால் அழைக்கப்படுவது என்பது சகஜமானது. இந்தியா-பாரதம், இலங்கை-சிலோன், பர்மா-மியான்மர் இதுபோல் இன்னும் பல உண்டு. சில பெயர்கள் ஆங்கிலத்தில் வேறு மாதிரியாகவும் தங்களின் சொந்த மொழியில் வேறு மாதிரியாகவும் அழைக்கப்படும்.
எனது நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்கு வந்தார். திருச்சி விமான நிலையத்திலிருந்து அவர் கிளம்பியபோது அவர் பாஸ்போர்ட்டைச் சோதித்த விமான நிலைய அதிகாரி அவரை மேலும் கீழுமாகப் பார்த்திருக்கிறார். பாஸ்போர்ட்டைத் திரும்பித் திரும்பிப் பார்த்திருக்கிறார். இவருக்கு ஏனென்று புரியவில்லை. பாஸ்போர்ட்டைச் சோதித்தபின்னர் ஜெர்மனி விசா எங்கே என்று கேட்டாராம். காரணம் என்னவென்றால் ஜெர்மனி என்பது ஆங்கிலப் பெயர். ஜெர்மனில் ஜெர்மன் நாட்டை டாயிட்ஷ்லண்ட் என்றுதான் கூறுவார்கள். விசாவிலும் டாயிட்ஷ்லண்ட் என்றுதான் இருக்கும். நண்பர் பாஸ்போர்ட்டில் ஜெர்மன் விசா இருந்த பக்கத்தைக் காட்டி, இதை எல்லாம் விளக்கிய பின்னர் அரை மனத்துடன் அதிகாரி விமானத்துக்குள் அனுமதித்தாராம்.
நம் தமிழ் மொழிபோலவே ஜெர்மனுக்கும் சில விஷேசங்கள் உண்டு. அதில் முக்கியமானது ஜெர்மனில் சில ஒலிகள் கிடையாது. J என்ற ஒலி ஜெர்மனில் இல்லை. சிலபல நகைச்சுவைச் சம்பவங்கள் இதை மையமாகக்கொண்டு நடப்பதுண்டு. ஜெர்மனில் "Ja" என்பதன் உச்சரிப்பை "Ya" என்பதுபோல உச்சரிப்பர். இதனால் Japan-ஆனது யாப்பான் என்று வாசிக்கப்படும். மேலும் "va" என்பது "fa" போல் வாசிக்கப்படும். எனவே பெங்களூர் நண்பர் Jeyaprakash - யெயபிரகாஷ் எனக் கொஞ்சகாலம் இங்குள்ள அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார். இன்னொரு நண்பர் Vijayasarathy - பியயசராதி எனப் பெயர் மாற்றமாகிவிட்டார் :~).
Comments:
Post a Comment