<$BlogRSDUrl$>

Friday, April 29, 2005

தூத்துக்குடி - ஊருக்குள் கடல்நீர் புகுந்தது


நேற்று மாலை தூத்துக்குடியில் திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. கடலில் பெரிய அலைகள் தோன்றி கடலோரத்தில் உள்ள இனிகோ நகரில் கடல் நீர் புகுந்தது. நேற்றுமாலை நடந்த இந்தச் சம்பவத்தால் இனிகோ நகரில் கடலோரத்தில் இருந்த மீனவர்கள அவசர அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.

மேலதிக செய்திகளுக்கு

தட்ஸ்தமிழ்
(2) Your Comments | | | |

Tuesday, April 26, 2005

இந்து, முஸ்லீம், கிறித்தவன், கிணற்றுத் தவளை


ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ்சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழுபூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விடயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது. ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது.

"..நீ எங்கிருந்து வருகிறாய்?.."

"..கடலிலிருந்து.."

கடலா ? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா? என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை. நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்? என்று கேட்டது கடல் தவளை. கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ? என்று கேட்டது.

"..சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?.."

நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக,இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்! என்று கத்தியது கிணற்றுத் தவளை.

காலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இது தான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள்இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறித்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான்.

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் ஒருபகுதி.
(9) Your Comments | | | |

Monday, April 25, 2005

தமிழ்ப்பேரகராதிக்குச் சொற்களை அனுப்பலாமே


வட்டாரமொழிச் சொற்கள் மக்களின் மொழிப்பயன்பாட்டில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வட்டார வழக்கு சிதைவதற்கோ அல்லது பெரும்பான்மையான வட்டார வழக்கால் தனித்தனமைமிக்க சில வட்டார வழக்குச் சொற்கள் காணாமல் போவதற்கோ நிறையவே வாய்ப்புண்டு.

புதிதாக உருவாக்கப்பட்டுவரும் தமிழ்ப்பேரகராதியில் வட்டாரமொழிச் சொற்கள் சேர்க்கப்பட இருப்பது வரவேற்கத்தக்க விஷயம். இதற்காக யார் வேண்டுமானாலும் வட்டாரத் தமிழ்ச்சொற்கள் மற்றும் அனைத்துத் தமிழ்ச்சொற்களையும் இப்பணியில் ஈடுபட்டுவரும் ஆசிரியர் குழுவுக்கு அனுப்பலாம்.

ஈழத்தின் வட்டாரச் சொற்கள், மற்றும் தமிழகத்தில் குறைவாகப் புழங்கப்படும் - ஈழத்தில் மட்டுமே அதிகமாகப் பழக்கத்தில் இருக்கும் சொற்கள் பேரகராதியில் சேர்க்கப்பட்டால் தமிழுக்கு மிகப் பயனுடையதாய் இருக்கும். அதுபோல் தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் புழக்கத்தில் இருக்கும் தனிப்பட்ட வட்டாரவழக்குச் சொற்கள் சேர்க்கப்படுவதும் இன்றியமையாததொன்று.

சொற்களை ஆசிரியர்குழுவுக்கு மின்னஞ்சலிலோ அல்லது அஞ்சலிலோ அனுப்பலாம்.

தினமலரில் இதுபற்றி வந்திருக்கும் விளக்கமான செய்தி இங்கே.
(1) Your Comments | | | |

Sunday, April 24, 2005

ஓரினச் சேர்க்கையாளர்கள், புதிய போப், ஸ்பெயின்


ஐரோப்பிய நாடுகளிலேயே முதல் நாடாக ஸ்பெயின் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக அங்கீகரித்ததுடன் அவர்கள் குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ளவும் அனுமதித்துள்ளது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு எதிரானவர் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. செய்தி வெளியானவுடன் வாட்டிகனில் இருந்து கடும் கண்டனக் குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

வாடிகனில் உள்ள கார்டினல் மூலம் வெளியிடப்பட்ட செய்தியில், சட்டமாக்குவதால் மட்டும் தவறான ஒன்று சரியானதாய் ஆகிவிடாது. அரசாங்க அதிகாரிகள் இந்தச் சட்டத்தை ஆதரிப்பதைவிட வேலையை இழக்கத்தயாராக இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் விளக்கமான செய்திகளுக்கு.
(10) Your Comments | | | |

இன்டர்நெட்டில் சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ்


சமீபத்தில் வெளியான சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களின் திருட்டு வி.சி.டி.,க்களை போலீசார் ஆங்காங்கே பறிமுதல் செய்து வருகின்றனர். ஒரு பக்கம் திருட்டு வி.சி.டி.,பற்றி பரபரப்பு இருந்தாலும், மற்றொரு பக்கம் வேறொரு வகையில் இந்த திருட்டு விவகாரம் ஓசைப்படாமல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது தான் இன்டர்நெட்டில் புதுப்படங்களை போடுவது. உலகத்தில் எங்கோ ஒருநாட்டில் இருந்து கொண்டு, வெப்சைட்டிலோ, இமெயிலிலோ போட்டு விட்டால் போதும், உலகம் முழுக்க உள்ள யாரும் அதை அப்படியே "டவுண்லோடு' செய்து, கம்ப்யூட்டர் மூலம் பார்க்கலாம்.

அப்படித்தான் நடிகை த்ரிஷா "பாத்ரூம்' குளியல் என்ற போலியான இன்டர்நெட் படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அந்த மாதிரி, லேட்டஸ்ட் படங்கள் எல்லாம் இப்போது, இன்டர்நெட்டில் பல வெப்சைட்களிலும் வலம் வருவதாக தெரிகிறது.

மேலும் படிக்க... தினமலர்

உண்மையில் இந்த செய்தி சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த கதைதான். படம் போடும் அனைத்துத் தளங்களுக்கும் நல்ல இலவச விளம்பரம். சரி. எழுதியதுதான் எழுதினார்கள் அனைத்துத்தளங்களின் முகவரிகளையும் கொடுத்திருந்தால் மக்களுக்காவது இன்னும் கொஞ்சம் உபயோகமாக இருந்திருக்கும் :-).

அகலப்பாட்டை இணையவசதி இன்னும் இந்தியாவில் பரவலாகவில்லை, இன்னும் கொஞ்ச நாளில் சாதாரணமாகிவ்டும், அப்போது புதுப்படங்களின் கதிதான் பாவம்.
(0) Your Comments | | | |

5 வயதுச் சிறுமிக்கு போலீஸ் கைவிலங்கு


பள்ளியில் நோட்டீஸ் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கிழித்ததற்காகவும், பள்ள்யின் உதவி முதல்வரை தாக்கியதற்காகவும்(?) போலீஸ் ஒருவரைக் கைது செய்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் காவல்துறை கைதுசெய்தவரின் வயது ஐந்துதான். போலீஸ் அச்சிறுமியின் எதிர்ப்பையும் மீறி கையைப் பின்பக்கம் வைத்து விலங்கு மாட்டிய காட்சி பள்ளியின் வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது.

கொஞ்ச நேரத்தில் சிறுமி பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டாலும், அமெரிக்காவில் நடந்த பரபரப்பான இந்த நிகழ்ச்சி தொடர்பாய் சம்பந்தப்பட்ட காவல்துறையின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
(0) Your Comments | | | |

Friday, April 22, 2005

NOT for MATURE AUDIENCE


ரஜினியை விட ரஜினி படங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சந்திரமுகி படம் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன், பலரும் பலவிதமாய் எழுதியபின்னர் நாமும் வலைப்பூவர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சவேண்டாமென்று எண்ணத்தைத் தடுத்துவிட்டேன்.

பொதுவாகக் கனமான கதையம்சம் கொண்ட, இன்னும் குறிப்பாய்ச் சொன்னால் சோகமான கதையமைப்புக் கொண்ட படங்களை எனக்குப் பிடிப்பதே இல்லை. சின்ன வயதில் துலாபாரம் படம் பார்த்துவிட்டுச் சில வருடங்கள் தமிழ்படங்கள் பக்கம் தலைவைத்தும் படுக்காமல் இருந்தேன். எது தரமானது என்பதல்ல, எதை விரும்புகிறோம் என்பதுதான் பிரச்சனை. குழந்தைகளுக்கு சத்தான உணவைவிட இனிப்பு ரொம்பப் பிடிக்குமே அதுபோலத்தான். சத்தான உணவை மட்டுமே விரும்பும் அரிதான சமர்த்துக் குழந்தைகளும், வளர்ந்தவர்களும் என்றைக்கும் உண்டுதான்.

யதார்த்தத்தை நாம் ஏன் திரைப்படத்தில் தேடவேண்டும்?. அதுதான் எங்கும் எதிலும் இருக்கிறதே. டூயட் பாடுவதுகூடத்தான் நிஜவாழ்வில் நடப்பதில்லை (நம் யாராவது நண்பர்கள் முயன்றிருக்கிறீர்களா ? :-) ).

நமது மனம் பக்குவமடைந்த பின்னர்-குழந்தைத்தனத்தைத் தொலைத்ததனால் எவற்றையெல்லாம் இழந்திருக்கிறோம் என்று மீண்டும் அந்த நிலைக்குப் போனால்தான் தெளிவாய்ப் புரியும்.

ரஜினி படங்களில் எனக்குப் பிடித்த அம்சங்கள் பல. அந்த அம்சங்கள் அனைத்தும் யதார்த்தத்தை விட்டு மிக அதிகம் விலகி இருப்பவை. வில்லனின் அடியாட்களை பறந்து பறந்து அடிப்பது, கணட இடத்தில் தீக்குச்சியைக் கிழித்துப் பற்றவைப்பது, கத்தியைப் பூமராங் போல பறக்கவிடுவது ஆகியவை அவற்றில் சில. இதுபோன்றவற்றை ரஜினி செய்யும்போது சந்தோசமாக, சத்தமாகக் கைதட்டி ரசிப்பது உண்டு. இதில் சிந்திக்க எதுவும் இல்லை. மேஜிக் செய்பவர் வித்தை காட்டும்போது குழந்தைகள் கண்கள் விரிய சந்தோஷமாய் ஆரவாரிப்பதில்லையா என்ன.

அந்த வகையில் சந்திரமுகி படம் ஏமாற்றவில்லை. நேரம் போவதே தெரியாமல் இரண்டு மணி நேரத்துக்குமேல் இனிமையாகப் பொழுதைக்கழித்து வரலாம். ரொம்ப நாள் கழித்து ரஜினி படத்தைத் தியேட்டரில் பார்த்தேன். பலர் சொன்னதுபோல் முதல் காட்சியே அருமை. குழந்தை மனம் இருந்தால் கைதட்டி மகிழலாம்.

எல்லாம் சரிதான். ஆனால் எனக்குப் புரியாதது ஒன்றுதான். இதே போன்ற "ரஜினி வித்தைகளை" இன்றைய இளம் நடிகர்கள் திரையில் செய்யும்போது அதே அளவுக்கு ரசிக்கமுடியாமல், நகைச்சுவையைப் பார்த்ததுபோல் குபீர்ச்சிரிப்பு வருவது ஏனோ ?. பல முறை யோசித்தும் எனக்குப் புரியவில்லை. உங்கள் யாருக்காவது புரிந்தால் சொல்லுங்கள்.
(8) Your Comments | | | |

Thursday, April 14, 2005

no titleகிட்டத்தட்ட இரண்டு வாரமாக எனது அறையில் இணையத்தொடர்பில் பிரச்சனை. நேற்றுத்தான் மறுபடியும் சரியானது. வரும் ஞாயிற்றுக்கிழமை சந்திரமுகி பார்த்துவிட்டு "விமர்சனப் பதிவு" பதிய வேண்டும், ஆனால் அதற்குள் எத்தனை விமர்சனங்கள் வரும் என்று தெரியவில்லை.

ஆங்.. சொல்ல மறந்துவிட்டேன்..
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
(0) Your Comments | | | |

Friday, April 08, 2005

அறிவியலுக்கு அப்பால்


அறிவியலுக்கு இன்று நாம் வரையறுத்திருக்கும் எல்லை மிகக்குறுகியது. இன்றைய அறிவியல் கால்தடம் பதிக்காத புலங்களும், பரிமாணங்களும் ஏராளம். ஒரு வசதிக்காக அவற்றை அறிவியலுக்கு அப்பாற்பட்டவை ( அ.அ) என்று பெயர் வைத்துக்கொள்வோம். இங்கே அறிவியலுக்கும், அ.அ - வுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. அறிவியல் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும்,செயலையும் அதன் உள்ளர்த்தத்தையும் எளிதாய்த் தொட்டுணர்ந்திருக்கிறோம். அறிவியலில் ஒன்றை அமெரிக்காக்காரர் செய்தாலும் , ஆப்பிரிக்காக்காரர் செய்தாலும் எந்த வித்தியாசம் இராது, இருக்கக்கூடாது. இதுதான் அறிவியலின் மிகப்பெரிய பலம். எனவே அறிவியல் என்ற பெயரைச் சொல்லி யாரும் யாரையும் எமாற்றுவது எளிதல்ல. ஆனால் அ.அ அப்படியல்ல . இதுதான் அ.அ வின் பலம், பலவீனமும் கூட.

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் காண்டம் என்ற சோதிடக்கலை பற்றி எல்லாளன் எழுதியிருந்தார். அவை பற்றி நானும் கொஞ்சம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே, அவை எனக்கு அவ்வளவு வியப்பளிக்கவில்லை. ஏடு படித்தல், சுவடி படித்தல் என்று பல பெயர்கள் இதற்கு உண்டு. அன்று அந்த சோதிடர் முதன்முதலில் எல்லாளன் பயணம் செய்யப்போகும் விமானத்தின் எண்ணைச் சரியாகக் கூறியிருந்தால்கூட நான் வியப்படையமாட்டேன். அவ்வாறு சொல்வதும்கூடச் சாத்தியமானதாய் இருந்திருக்கலாம்.

extrasensory perception(ESP), ஆவியுடன் பேசுதல், தியானத்தால் கைவரப்பெரும் அரிய சக்திகள், சிலவகைச் சோதிடங்கள் இவையெல்லாம் அ.அ-களில் சில எடுத்துக்காட்டுகள். இவைகளை உணர்ந்தவர் அவற்றை அடுத்தவருக்கு விளக்குவது கடினம், அது உண்மையென்பதை அதை நேரிடையாய் உணர்ந்தோர் மட்டுமே அறிவர். அதை அடுத்தவர்களுக்குச் சொல்ல ஆரம்பித்து அவருக்கு பித்தலாட்டக்காரர் என்ற பெயரோ, பைத்தியக்காரன் என்ற பெயரோ கிடைத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அ.அ வினை புரிந்துகொள்வதற்குத் தேவையான அடிப்படை அறிவினை மற்றவர்களிடமிருந்து பெறுவது அல்லது அவ்வாறு பெற்றதை நம்புவது என்பது குதிரைக்கொம்பாகவே இருக்கிறது. அது நான் நேற்று ருசித்த சில உணவுப்பண்டங்களின் சுவை எப்படி இருந்தது என்று இன்று மற்றவருக்கு விளக்க முயற்சிப்பதுபோலவும், தான் உணர்ந்த ஒரு உணர்வை சொல்லால் அடுத்தவருக்கு விளக்கத் துடிப்பதுபோலவும் ஆகிவிடுகிறது. ஏற்கனவே எதிரில் நிற்பவர் அதனைப் பற்றிய அல்லது அதைப் புரிந்துகொள்ளும் குறைந்தபட்ச அத்துறைசார் அறிவு இல்லாதநிலையில் அதை அவர் புரிந்துகொள்வது/நம்புவது என்பது எவ்வளவு கடினம் என்பது சிந்தித்தால் தெரியும், இந்த அனுபவம் உள்ளவர்களுக்கும் இது நன்றாகப் புரியும்.

குறைந்தபட்ச துறைசார் அறிவு இல்லாமல் அறிவியல்சார் செயல்களையே விளக்குவது கடினம். இன்றைக்கு மரபியலின் தந்தை என்று போற்றப்படும் கிரிகோர் மென்டல், இறக்கும்வரை பைத்தியக்காரராகவும், விநோதமானவராகவும் கருத்தப்பட்டது இதனால்தான். தான் கண்டுபிடித்த தொலைக்காட்சி பற்றி விளக்கிய பெயர்டு என்ற விஞ்ஞானியை பைத்தியக்காரர் என்று கேலிசெய்ததும், கலிலீயோவைக் கல்லால் அடித்ததும்கூட இதனால்தான். நமது காசியின் தமிழ்மணம் திரட்டி பற்றி 200 வருடத்துக்கு முன்னர் ஒருவருக்கு முன்னரே தெரிகிறது என்று வைத்துக்கொள்வோம். அதை அவர் எப்படி சுற்றியிருப்பவருக்கு விளக்கியிருப்பார்?. அதைவிடுங்கள் இன்றைக்கு நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் பற்றி அன்றைக்கு ஒருவர் சுற்றியிருப்பவர்களுக்கு விளக்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள், கொஞ்ச நாளுக்கு முன்னர் அவ்வாறு எழுதியது சுவாரசியமாக இருந்ததாய் எனது நண்பர்கள் சிலர் சொன்னார்கள் :-).

ஆக, அறிவியல் சார்ந்தவைகளுக்கே இப்படியென்றால் அ.அ தொடர்பானவைகளின் கதி?. அ.அ சம்பந்தப்பட்டவைகளுக்குத் தீர்வுகள் என்னவாக இருக்கமுடியுமென்றால் தானே நேரிடையாக களத்தில் இறங்கி அனுபவம் பெறுதல், அல்லது நம்பிக்கைக்குரியவ்ர்களின் அனுபவத்தை அறிதல். இங்கே மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் நம்பிக்கைக்குரியவர்கள் நமக்குக் கிடைத்தல் அல்லது நமக்கு அந்த அ.அ சம்பந்தப்பட்ட சக்திகள் குறைவாக/இல்லாமல் இருத்தல். இதனாலேயே அ.அ என்ற பெயரைச் சொல்லி மிக எளிதாய்ப் பிறரை ஏமாற்றுவது இன்றுவரை நிகழ்கிறது. இன்னொரு அபாயம் என்னவென்றால் எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும் பலர் இதனால் மூடப்பழக்கவழக்கங்களில் சிக்குவது மிகச் சாத்தியமான ஒன்று.
(2) Your Comments | | | |

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com