<$BlogRSDUrl$>

Wednesday, May 10, 2006

மணிக்கணக்கும் நாள் கணக்கும்

வாக்கு எண்ணிக்கை என்பதே ஒரு காலத்தில்(?) பெரிய விஷயம். நாள்கணக்கில் எண்ணிக்கொண்டே இருப்பார்கள். ஒருவர் வாக்கு வித்தியாசத்தில் முன்னேறிக்கொண்டே வருவதும் இன்னொருவர் எண்ணிக்கையில் பின்னால் போவதும், பின்னர் அவரே முந்துவதும் என ஒரே களேபரமாய் இருக்கும். சில சமயம் ஒரு ஓட்டு, இரு ஓட்டு என வித்தியாசத்தில் வந்து நின்றால் திரும்ப எண்ணுவது என ஒரே த்ரிலிங்காக இருக்கும். இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் கூட அவ்வளவு த்ரிங்காய் இராது. இந்த மின்னணு ஓட்டு இயந்திரம் வந்தாலும் வந்தது இந்த த்ரில்லே இல்லாமல் ஆக்கிவிட்டது. கிட்டத்தட்ட லாட்டரி விழுந்திருக்கா இல்லையா என்று பார்ப்பதுபோல ஆகிவிட்டது என்று சில நண்பர்கள் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். இந்தச் சட்டமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மூன்றே மணிநேரத்தில் முடிந்துவிடுமாம். ஒரு தமிழ் சினிமா பார்க்கும் நேரம்தான்.

இது இப்படி என்றால், தில்லுமுல்லு செய்பவர்களுக்கு வேறு மாதிரியான கவலை. ஓட்டுப் பெட்டியை மாற்றுவது, நினைத்த மாதிரி கள்ள ஓட்டுப் போடுவது இதெல்லாம் முடியாமல் போய்விட்டதே என்று அவர்களுக்கும் வருத்தம். சில நாட்களுக்கு முன்னால் எனது நண்பர் அவரது திறமையைப் பற்றிச் சொன்னார். ஓட்டு எண்ணும்போது ஓட்டுக் குத்தும் முத்திரையுடன் போய் எதிர்க்கட்சி ஆளுக்கான ஓட்டில் இன்னொரு முத்திரை குத்தி அதைச் செல்லாமல் ஆக்குவது. இதைச் செய்யத் தனித்திறமையும் ஒரு கும்பலும் அவசியமாம். கும்பலில் பாதிப்பேர் ஏதாவது களேபரத்தை உண்டாக்கி மற்றவரின் கவனத்தைச் சிதறடிக்கும்போது மீதிப்பாதிக் கும்பல் எதிரியின் ஓட்டுக்களில் கொஞ்சத்தைச் செல்லாமல் ஆக்கிவிடுமாம். கொஞ்சம் விபரமாய்க் கேட்டபின் சொல்கிறார், பஞ்சாயத்துத் தேர்தலில் அவருக்கே நேரடி அனுபவம் உண்டாம், கவனத்தைத் திருப்பும் கும்பலில் இருந்தாரோ, செல்லாமல் குத்தும் கும்பலில் இருந்தாரோ தெரியலை. ஆனால், சிக்கிவிட்டால் முதுகில் டின் கட்டிவிடுவார்கள் என்பது உறுதி என்பதால் கும்பலுடன்போய் எச்சரிக்கையாய்ச் செய்வதே உசிதம் என்று இன்னும் பல "மெகா பிளான்" அந்த நண்பர் சொல்கிறார். இந்த மாதிரி வாய்ப்பெல்லாம் இல்லாமலே போய்விட்டது என்று கடைசியில் வருத்தப்பட்டார். (சொந்த அனுபவங்களை நண்பர் ஒருவர் சொன்னார் என்று சொல்வது சகஜம்தான்னு யாருப்பா அங்க குரல் கொடுக்கிறது ??, பிச்சுப் போடுவேன்.. சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு.)
| | |
Comments:
ஆம். அந்த காலத்தைய ஓட்டு எண்ணிக்கையின் சுவாரஸ்யமே தனி.

ஒரு முறை வேலூரில், ஓட்டு எண்ணிக்கைக்குச் சென்றிருந்தேன். திமுக சார்பில் நிற்பது, வேலூர் வேழம் வி.எம். தேவராஜ் அவர்கள். மற்ற எல்லா இடத்திலும் திமுக பின் தங்கல். இங்கும் ஆரம்பக் கட்டங்களில் இவர் பின் தங்கிக்கொண்டிருக்கிறார். ஆனால், ஆளோ கவலையில்லாமல் அரைத் தூக்கத்தில் இருக்கிறார்.

எழுப்பி விஷயத்தைச் சொன்னால், 10 வது ரவுண்ட் வந்து விட்டதாயெனக் கேட்டார். இல்லை ஐந்தாவதுதான் போய்க் கொண்டிருக்கிறது என்றவுடன் மறுபடியும் தூங்கப் போய்விட்டார். பத்தாவது ரவுண்டுக்கு முன் கிட்டத் தட்ட பத்தாயிரம் வாக்கு பின் தங்கியிருந்தார்.

பத்தாவது ரவுண்ட் ஆரம்பித்தது. அண்ணனும் எழுந்து உட்கார்ந்தார். எனக்கு ஆச்சர்யம் தாளவில்லை. அந்த ரவுண்ட் முடிந்ததும் வாக்குகள் கிட்டத் தட்ட சரிசமமாயின. அடுத்தடுத்து, அவரின் வாக்கு எண்ணிக்கை உயர்ந்தது. கடைசியில் பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அப்பாவும், மாமாவும் அப்புறம் விஷயத்தைச் சொன்னார்கள். அப்பொழுதெல்லாம் ஏரியா ஏரியாவாகத்தான் எண்ணுவார்கள். பத்தாவது ரவுண்ட் ஏரியா, 11, 12 முழுக்க குறிப்பிட்ட இரு சமுதாயத்தினர் வாழும் பகுதி. அங்கிருந்து விழுவது அனைத்தும் வேழத்துக்கே என்ற திடமான நம்பிக்கையால்தான் அவர் அதற்கு முந்தைய ரவுண்டுகளைப் பற்றிக் கவலைப் படவில்லையென...

ம், நாளைக்கென்னடாவென்றால், எட்டு மணிக்கு ஆரம்பமாம், 11 மணிக்கு யார் முன்னிலையாம், 12 மணிக்கு ஆட்சி அமைப்பது யாராம்....
 

// சொந்த அனுபவங்களை நண்பர் ஒருவர் சொன்னார் என்று சொல்வது சகஜம்தான்னு யாருப்பா அங்க குரல் கொடுக்கிறது ??, பிச்சுப் போடுவேன்.. சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு.//

:) :)
ஜெர்மனில எப்படி? இதே கதை தானா?
 

கிருஷ்ணா,
மறுமொழிக்கு நன்றி. ஏகப்பட்ட தடவை ஓட்டு எண்ணப் போயிருக்கீங்க போல இருக்கு :-). நான் பஞ்சாயத்துத் தேர்தல்களில் இதே போன்ற ஏரியா ஓட்டுக்கள் தீர்மானிக்கும் தன்மையை ஓட்டு எண்ணும்போது பார்த்திருக்கிறேன்.
 

//ஜெர்மனில எப்படி? இதே கதை தானா?//

பொன்ஸ்,
ஜெர்மனி மக்கள் "..ஒரு நண்பர் சொன்னார்.." அப்படின்னு ஆரம்பிக்க மாட்டாங்க. "..someone said... " அப்படிம்பாங்க. உடனே நாம புரிஞ்சுக்கனும். :-)).
 

//கிருஷ்ணா,
மறுமொழிக்கு நன்றி. ஏகப்பட்ட தடவை ஓட்டு எண்ணப் போயிருக்கீங்க போல இருக்கு :-). //

அது ஒண்ணுமில்லங்க, வேலூரில் என் தாத்தா வீட்டருகில் அந்த ஓட்டெண்ணிக்கை நடந்தது. அப்புறம், அண்ணா பல்கலை வந்தாச்சு. அங்கதான, எப்பவும் அது நடக்கும். ஒவ்வொரு முறையும் ஏதாவது சுவாரஸ்யமாய் நடக்கும்...
 

நம்ம மணியும் சத்யராஜும் (அமைதிப்படை படம்) அடிச்ச லூட்டி ஞாபகத்திற்கு வரலியா முத்து? அது இன்னும் சுவாரசியமாச்சே? அந்த மாதிரி நடக்க இனி வாய்ப்பே இல்லை என்ற வருத்தம் எனக்கு! ||:-o)
 

துபாய்வாசி,
நீங்கள் சொன்ன பிறகுதான் நினைவுக்கு வருகிறது. அது சரியான காமெடிதான் இல்லையா :-). முழுதும் காமெடி என்றும் சொல்வதற்கில்லை, நொடியில் மனிதர்கள் எப்படி மாறுவார்கள் என்பதற்கு அது ஒரு கற்பனை உதாரணம்தான்.
 

நல்ல பதிவு!!

நல்ல சுவரசியமாக இருந்தது!!

நன்றி!!
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com