<$BlogRSDUrl$>

Monday, January 09, 2006

இந்தியாவில் ராபின் ஹுட் ??

நண்பர் ஒருவர் இத்தாலியில் படிக்கிறார், அவர் நம்ம ஊர்க்காரர்தான். அவரிடம் கதை கேட்டபின் ஐரோப்பாவில் ஒரு பிடித்த இடமாய் இத்தாலி எனக்கு மாறிவிட்டது. சில மாதங்களுக்கு முன்னால் வெனிஸ் போயிருந்ததால் ஒரு முறை நேரடியாய்ப் பார்த்தும் வந்தேன். வெளிநாட்டுக்காரர்கள், வெள்ளைக்காரர்கள் என்றால் மிகவும் வித்தியாசமாய் நடந்துகொள்வர் என்று யாராவது எண்ணினால் இத்தாலி போய் வாருங்கள். எண்ணத்தை மாற்றிக்கொள்வீர்கள்.

கிட்டத்தட்ட இத்தாலி ஒரு மினி இந்தியா, மக்களின் நடவடிக்கைகளில். மக்கள் மிகவும் கனிவாக, உதவும் குணத்துடன் நடந்துகொள்வதாய்ப் பலமுறை நண்பர் சொல்லியிருக்கிறார். இந்தியாவில் எல்லாரும் இப்படியா இருக்கிறார்கள் என்று யாரும் தயவு செய்து கேட்கவேண்டாம் :-). ஒருமுறை அங்கு டெலிபோன் பூத் எங்கு இருக்கிறது என்று கேட்ட அந்த நண்பருக்கு 10 நிமிஷம் கூடவே வந்து டெலிபோன் பூத்தைக் காட்டி, தனது டெலிபோன் கார்டைக்கூட கொடுக்க முன்வந்த இத்தாலியர் ஒரு சின்ன உதாரணம். இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் பெரிய வித்தியாசமாய் மக்களின் நிறத்தைச் சொல்லலாம், அடுத்தத்து பெரும்பாலும் ஆங்கிலம் யாரும் பேசமாட்டார்கள். எந்த ஒரு டிகிரி முடித்தாலும் அவருக்குப் பேர் அங்கே "டாக்டர்", அதுவும் ரொம்பப் பெருமையான விஷயம். அதற்காய் ஊசி போட்டு மருந்து மாத்திரை கொடுக்கும் டாக்டராக முடியாது, அது ஒரு பெயர் அவ்வளவுதான். பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசுபவர்களுக்குக் கிடைக்கும் பதில், "...சாரி.. ஐ ... நோ.. இங்கிலிஸ்". இந்த நோ know இல்லை, இந்த no.

20 வருடம், 30 வருடத்துக்கு முன்னால் இத்தாலி ரொம்பவும் கட்டுப்பெட்டியான நாடு. இங்கே டிஸ்கோத்தே கிளப்கள்கூட ஒரு 15 வருடங்களுக்கு முன்னால்தான் வந்ததாம். ஆணும், பெண்ணும் சகஜமாய்ப் பழகுவதுகூட ஒரு விதக் கட்டுப்பாடுடன்தான் இருந்திருக்கிறது, சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை. இத்தாலியில் ஒரு அரசாங்க அலுவலகத்துக்குப் போய்வந்தால் நம்மூர் கவர்மெண்ட் ஆபீஸ் எவ்வளவு சிறப்பாக நடக்கிறது என்று புரிந்துகொள்வீர்கள். நம்மூர் பஸ், ரயில் ஓரளவுக்காவது குறித்த நேரத்துக்கு வருகிறது என்பதையும் இத்தாலியில் பயணம் செய்தால் உணர்வீர்கள். ரோட்டில் எச்சில் துப்புவதிலிருந்து, அசுத்தம் செய்வது வரை நம்மூருக்கும் இத்தாலிக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை.

இந்தியா இத்தாலியில் ரொம்பப் பிரபலம். சந்தன வீரப்பன் இறந்தது "... இந்திய ராபின் ஹுட் இறந்தார்.." என்று சில பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக வந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் பல பதிவுகள் போடவேண்டி வரும். அதனால் மீண்டும் அவற்றை ஒருநாள் எழுதுகிறேன்.
| | |
Comments:
இத்தாலி எனக்கும் பிடித்த நாடுதான் முத்து. அங்கு சென்றிருந்த பொழுது இந்தியாவின் சாயல் கொஞ்சம் தெரிந்தது. என்னிடமும் அங்குள்ளவர்கள் நல்லபடியாகவே நடந்து கொண்டார்கள்.

மேலும் அங்குதான் தேங்காய்ப் பத்தைகளை வீதிக்கு வீதி விற்பார்கள். வாங்கிக் கடித்துக் கொண்டே நடக்கலாம்.
 

//"...சாரி.. ஐ ... நோ.. இங்கிலிஸ்". இந்த நோ know இல்லை, இந்த no.//

இதற்கு அடுத்த பதிவு (காமெடியா? கடினமா?), இப்போதுதான் சரியாக புரிகிறது :).
 

ராகவன்,
உங்கள் மறுமொழிக்கு நன்றி. நீங்கள் உலகம் சுற்றும் வாலிபர் போலத் தெரிகிறதே :-).
 

கலை,
மறுமொழிக்கு நன்றி.
 

இத்தாலியும் இந்தியாவும் சம்பந்திகள் ஆயிற்றே. நம்ம அங்கே இருந்துல்ல பொண்ணு எடுத்து இருக்கோம். மேலும் பிரோ கொத்துச் சாவியை வெளிநாட்டு மருமககிட்டல்ல கொடுத்துருக்கோம்.
ஒண்ணுக்குள்ள ஒண்ணுப்பா நாம
 

வணக்கம் முத்து,

பார்த்து பேசி பல மாதங்கள் ஆகுது.

இத்தாலி எனக்கும் பிடித்த கம்பெனி.

நான் முதன் முதலில் வேலை செய்தது இத்தாலி கம்பெனி தான், அருமையான மனிதர்கள், ஆனாலும் மாபியா கேங் என்று தான் அழைக்கப்படுவார்கள்.
 

கல்வெட்டு,
நீங்க சொல்றது உண்மைதான் :-). இருந்தாலும் இந்தியாவுக்கு இது ஒண்ணும் புதுசில்லை. ஆயிரக்கணக்கான வருஷமா பெரிய பொக்கிஷச்சாவி அடுத்த நாட்டுக்காரர்களிடம்தானே இருக்கிறது?.
 

வணக்கம். வாங்க பரஞ்சோதி. நல்லா இருக்கீங்களா?. பார்த்துப் பேசி ரொம்ப நாளாகுது.

இத்தாலியில் மாபியா ரொம்ப பிரபலம். நம்ம மும்மையில் தாதாக்கள் மாதிரி.
 

கல்வெட்டு,
உங்கள் அவதாரில் இருக்கும் உங்கள் குட்டித்தேவதை மிக அழகு.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com