<$BlogRSDUrl$>

Monday, May 23, 2005

நவீன பாமர ரசிகர்கள்

தமிழர்களுக்கு என்று சில சிறப்பம்சங்கள் உண்டு. இந்தச் சிறப்பம்சங்களைத் தமிழர் என்ற சிறிய வட்டத்தைத் தாண்டிப் பிற மொழி, நாடு, இனம் ஆகியவற்றுக்கும் நீட்டிப்பது சாத்தியமானதாயும் இருக்கலாம். புகழ்பெற்ற ஒருவர் என்ன சொன்னாலும் அதற்குத் தேவைக்கதிகமான முக்கியத்துவம் கொடுப்பது, அவருக்குச் சற்றும் சம்பந்தமில்லாத துறைகளிலும் அவரின் கருத்துக்களை எதிர்பார்ப்பது எனப் பட்டியல் பெரிதாய் நீளும்.

இந்த வகையில் திரைப்பட நடிகர்களை நிஜத்திலும் கதாநாயகர்களாய், சொர்க்கத்தில் இருந்து குதித்தவர்களாய்ப் பார்க்கும் பாமர ரசிகர்களின் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல. இந்த வகைப் பாமர ரசிகர்கள் படிப்பினால் மட்டுமே தீர்மானிக்கப்படுபவரல்லர் - கல்வியறிவு குறைந்த பாமர ரசிகர்களின் எண்ணிக்கையே மிக அதிகம் என்ற போதிலும். பட்டம் பல பெற்ற படிப்பாளிகளும் கூடச் சிலசமயம் இந்தவகை ரசிகர்களாய் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

திரை தவிர்த்த பல துறைகளிலும் இந்தப் பாமரரசிகர்களின் எண்ணிக்கை குறைந்ததில்லை. ஒருவகையில் திரைசார் பாமர ரசிகர்கள் எளிதாய்ப் புரிந்துகொள்ளப்படுபவர்கள். ஆனால் இதர சில துறைகளின் இப்படிப்பட்ட ரசிகத்தன்மைகள் புரிந்துகொள்ள மிகக் கடினமானவை. இந்த வகை ரசிகர்கள் சமுதாயத்தில் மிக மேல்தட்டில் இருப்பவர்கள். ஆன்மீகத்துறையில் பாமர ரசிகர்களாய் ஏமாறுபவர்களின் தகுதிகள் அதிரவைக்கும் அளவுக்கு உயரியவை. விஞ்ஞானி, பேராசிரியர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி என ஆரம்பித்துச் சிலசமயம் நாட்டின் மிக உயரிய பதவிவரை எதுவும் விடுபட்டவையாய் இருப்பதில்லை. சமயங்களில் இது கசப்பாய் இருந்தாலும் இதுதான் யதார்த்தமாய் இருக்கிறது.

ஒரு துறையில் புகழ்பெற்ற ஒருவர் அத்துறையின் ஒரு சிறுதுளி மட்டுமே என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து அவருக்கும், முழுமையான அத்துறைக்குமுள்ள மிகப்பெரிய வித்தியாசத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்த்திக் கடைசியில் அவர்தான் அந்தத் துறை என்பதுபோல் நம்பும் அளவுக்குப் போய்விடும் ரசிகனைப் பாமர ரசிகன் என்று மட்டுமே சொல்லுவது சரியானதா என்று தெரியவில்லை.

மேற்படியான கூத்துகள் நடப்பதில் இலக்கியம், எழுத்து போன்ற துறைகள் விதிவிலக்குகளாய் இருப்பதில்லை என்பது சமீபகாலமாய் மீண்டும் நிரூபணமாகிவருகிறது. வளரும் ஒருவரை வளர்த்தெடுக்கச் சொல்லப்படும் பாராட்டுக்களுக்கும், வளர்ந்த ஒருவரின் திறமையை அங்கீகரிக்கும் புகழுரைக்கும், வளர்ந்த ஒருவரின் கருத்தைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதற்குமான வேறுபாட்டைக் காட்டும் எல்லைக் கோடுகள் மிகமிக மெல்லியவை. அவை மிக மெல்லியவை என்பதாலேயே கவனத்துடன் கையாளப்பட வேண்டியவை.

ஒரு ரசிகன், வாசகன் தன்னுடைய படைப்புக்கு ரசிகன் என்பதால் அவன் படைப்பாளிக்கு எந்த விதத்திலும் குறைந்து போய்விடுவதில்லை என்ற குறைந்த பட்ச உண்மையைக் கூடப் படைப்பாளி மறந்திருந்தாலும் இந்தப் பாமர ரசிகர்கள் அதை உணரமாட்டார்கள்.

படைப்பாளியிடம் தரமான படைப்பை மட்டுமே எதிர்பார்ப்பதில் தவறே இல்லை. தரமான அவரின் படைப்பை அங்கீகரித்துப் பாராட்டுவதிலும் தவறே இல்லை; அது அவசியமான ஒன்று. ஆனால் படைப்பாளியிடம் எதை எதையோ எதிர்பார்த்துக் கடைசியில் அவையெல்லாம் நம்மிடமிடமிருக்கிறதுபோலும் என்று படைப்பாளியை நம்பவைக்குமளவுக்குத் தள்ளுவது படைப்பாளிக்கும், அத்துறைக்கும் ஆரோக்கியமான விதயமே இல்லை. இதனால் ரசிகனுக்கு நன்மையா, தீமையா என்பது வேறு விஷயம்.
| | |
Comments:
நல்ல அவசியமான பதிவு
 

முத்துத்தம்பி,

நீங்க எழுதுனது நூத்துக்கு நூறு!!!!

அதிலும் இந்த ஆன்மீகம், சினிமா ரெண்டும் இருக்கே,
எப்படித்தான் மெத்தப் படிச்சவங்களும் இதுலேபோய் விழறாங்கன்னே தெரியலை!
நல்ல பதிவு!!!
வாழ்த்துக்கள்!!!!
 

எல் எல் தாஸு , துளசியக்கா,
நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு.
 

எனக்கு சாயி பாபா நியாபகம் வருகிறது.
நம்ம ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள்
MLA, MP எல்லோரும் போகிறார்களே, அப்படி என்ன ஒரு மந்திர சக்தி.!

நாடு மாறணும். மாறும்.
புரட்சி வரும்.!!

எனக்கு இங்கு இது தான் முதல் முறை
உண்மையில் இது வரை என்னை கவர்ந்த
வளைப்பதிவுகளில், உங்களது தான் முதல்.
 

/// எனக்கு சாயி பாபா நியாபகம் வருகிறது.
நம்ம ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள்
MLA, MP எல்லோரும் போகிறார்களே, அப்படி என்ன ஒரு மந்திர சக்தி.!///

நாராயணன்,
சாயிபாபாவின் மந்திரவித்தைகளை அறிவியல்பூர்வமாய், ஆய்வுபூர்வமாய் இங்கு பார்க்கலாம் :-)).
http://www.exbaba.com/
இதைப் பார்த்தபின் பல விஷ்யங்கள் தெரியவந்தது எனக்கு.
 

நாராயணன் வெங்கிட்டு,
உங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
 

//வளரும் ஒருவரை வளர்த்தெடுக்கச் சொல்லப்படும் பாராட்டுக்களுக்கும், //

ஜெயமோகன்?

//வளர்ந்த ஒருவரின் திறமையை அங்கீகரிக்கும் புகழுரைக்கும், வளர்ந்த ஒருவரின் கருத்தைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதற்குமான //

ஜெயகாந்தன்?
 

குழலி,
அந்தக் கோடிட்ட இடத்தை எண்ணற்ற பெயர்களால் நிரப்பலாம்.

/வளரும் ஒருவரை வளர்த்தெடுக்கச் சொல்லப்படும் பாராட்டுக்களுக்கும், //

குழந்தை தப்பும் தவறுமாய் பேச ஆரம்பிக்கும்போது அதை இன்னும் பேச ஊக்குவிப்பதில்லையா?, வலைப்பதிவுகளில் முதன்முதலாய் தனது எழுத்துப் பயணத்தை ஆரம்பித்திருப்பவர் எப்படி எழுதினாலும் அதைப் பாராட்டுவதில்லையா, நல்ல கவிதையை, கதையை ஒருவர் எழுத ஆரம்பித்தால் அவரைப் பாராட்டுவதில்லையா?, இங்கு நான் எழுதும் சில பதிவுகளுக்குக்கூட, அதுஅவ்வளவு நல்லாயில்லையென்றாலும் நன்றாய் இருக்கிறது என்று நண்பர்கள் சொல்வதில்லையா இதுவெல்லாம் இந்த வகைக்குச் சில எடுத்துக்காட்டுகள்.

//வளர்ந்த ஒருவரின் திறமையை அங்கீகரிக்கும் புகழுரைக்கும், வளர்ந்த ஒருவரின் கருத்தைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதற்குமான //

இங்கே வளர்ந்த எழுத்தாளர்கள் யாரின் பேரையும் நிரப்பிக்கொள்ளலாம்.
ஜெயகாந்தன், சுஜாதா என்று ஆரம்பித்து அதுபோன்ற எல்லார் பெயரும் பொருந்தும். பாமர ரசிகர்கள் எல்லாருக்கும் இருக்கிறார்கள். ஒரு பெரிய விஷ்யம் என்னவென்றால் அது பாமரத்தனம் என்று தெரிந்தாலும் அதையும் பெருமையாக ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் :-).
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com