<$BlogRSDUrl$>

Saturday, January 22, 2005

சாவித்துவாரம் - இப்படிக்கூட ஒரு வசதியா.. ?


எங்க ஊருல அடிக்கடி மக்கள் அறிவியல் வளர்ச்சியைப் பற்றிச் சொல்வது,

"....உலகத்தில் இப்படியெல்லாம் கண்டுபிடிச்சிட்டான், இன்னும் செத்தவங்களை மட்டும்தான் பிழைக்கவைக்க முடியலை. சீக்கிரம் அதுவும் வந்தாலும் வந்துடும்போல இருக்குது.. "

நேற்று இந்த நிரலியைப் பார்த்து இதுபோல் கொஞ்சம் ஆச்சரியம்தான். இந்த வசதி பல நாடுகள் பயன்படுத்திவருவது முன்பே தெரிந்ததுதான், என்றாலும் பொதுமக்களும் பயன்படுத்தும்படி வருமென்று நினைத்திருக்கவில்லை. உலகின் பல இடங்களை செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் நாமே பார்க்கும்படியானது இந்த நிரலி.

வசதியாக நாம் இடங்களைத் தேர்வுசெய்து ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் பெரிதாக்கிப் பார்க்கவும் இயலுகிறது. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் உங்கள் வீட்டின் மொட்டைமாடியையும், தோட்டத்தையும்கூடத் தெளிவாகப் பார்க்கமுடியும். சில இடங்களை ஆச்சரியப்படும் அளவில் மூன்று அங்குலம் வரை துல்லியமாகப் பார்க்கமுடியும் என்றால் நம்பமுடிகிறதா என்ன.. ? எனக்குச் சில விஷயங்கள் புரியவில்லை. இப்படி அனைத்தையும் பார்க்க முடிந்தால் பல நாடுகளின் முக்கியக் கேந்திரங்களையும், தளவாடங்களையும்கூடப் பார்க்கமுடியுமா என்ன.. ? அல்லது அவற்றை நீக்கியிருப்பார்களா தெரியவில்லை.

இந்த மென்பொருளைத் தருவது கூகிள். இந்த நிரலியின் பெயர் சாவித்துத்துவாரம். ஒரு வாரம் வரை பயன்படுத்திப் பார்க்க இலவசம், அதற்குமேல் வேண்டுமென்றால் காசுகொடுத்து வாங்கவேண்டுமாம். இந்தச் சாவித்துவாரத்தினைப் பயன்படுத்தியவர்கள் எப்படி இருக்கிறது என்று சொல்லவும்.
| | |
Comments:
முத்து கொஞ்ச நாட்களுக்கு முன் முயற்சி செய்தேன்.
வளர்ந்த நாடுகளுக்கு மட்டும்தான் என்பது போல் ஒரு செய்தி இருந்தது. இந்தியாவெல்லாம் மெதுவாகத்தான் சேர்ப்போம் என்கிறார்கள் :(
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com