Monday, January 19, 2004

மாமிசத் தாவரங்கள் மனிதனைக் கொன்று தின்னுமா ... ?

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் ஒரு காட்டின் வழியே நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். திடீரென பக்கத்திலிருந்த மரத்தின் கிளைகள் உங்களை நோக்கி நீளுகிறது. நீங்கள் சுதாரித்து விலகுவதற்குள் உங்களின் ஒரு கையைச் சுற்றிப் பிடித்துக் கொள்கிறது. இன்னொரு கையால் அதை விடுவிக்க நினைக்கிறீர்கள். ஆனால் பலனில்லை. காலம் கடந்துவிட்டது. உங்களின் இன்னொரு கையையும், இடுப்பையும் சுற்றிவளைத்துவிடுகிறது. அதன் கிளைகள் உங்களை மொத்தமாக ஆக்கிரமித்துவிடுகிறது. நினைப்பதற்கே கொஞ்சம் அச்சமாக இல்லை..? இதுபோன்ற சம்பவங்களை நீங்கள் கதைகளில் படித்திருக்கலாம். உண்மையில் இதுபோன்ற நிகழ்ச்சி சாத்தியமா..? இதில் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது ..!

மாமிசத்தை உண்ணும் தாவரங்கள் நிறையவே இருக்கின்றன. மிகப் பிரபலமான உதாரணம் நெபந்தஸ் என்ற தாவரம். தாவரங்கள் என்பவை விலங்குகள் உண்பதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கின்றன என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோமே. எப்படி சில தாவரங்கள் நான்-வெஜிடேரியனாக மாறிவிடுகின்றன. சிங்கம் , புலி போல இத்தாவரங்கள் சுத்தமான அசைவப் பிரியர்களா இவை... ? இதற்குப் பதில் என்னவென்றால் இல்லை என்பதுதான். பிறகு ஏன் இவை மாமிசம் சாப்பிடுகின்றன..? நமக்குப் போரடித்தால் வாரத்தில் ஒரு தடவை ஞாயிற்றுக் கிழமை சிக்கன் 65 சாப்பிடுகிறோமே அது போலவா..?

பூச்சி இரையாகப் போகுது

உண்மையில் மற்ற தாவரங்களைப் போலவே இத்தாவரங்களுக்கும் பச்சையம் உண்டு. இவை வாழ நீர் , சூரிய ஒளி , காற்று அவசியம். ஆனால் இவை தவிர சில முக்கியத் தனிமங்களும் இவற்றுக்குத் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் அத்தனிமங்கள் இவை வளரும் நிலத்தில் இருப்பதில்லை. அல்லது மிகக்குறைந்த அளவில் இருக்கும். எனவே இந்த நைட்ரஜன் போன்ற தனிமங்களுக்காகத்தான் பூச்சி போன்ற சிறிய விலங்குகளைத் தின்றுவிடுகின்றன.

சமீபத்தில் நெதர்லாந்து போயிருந்தபோது இந்த நெபந்தஸ் தாவரம் ஒன்றைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சின்ன பூச்சட்டியில் முழுத்தாவரத்தையும் விற்பனைக்காகத் தொங்கவிட்டிருந்தார்கள். இத்தாவரம் பூச்சிகளைக் கவர அதற்கே உரிய ஒரு வாசனையைப் பரப்பும். இந்த வாசனையை நுகர்ந்து பூவுக்குள் பூச்சி நுழைந்தவுடன் தாவரம் தயாராக வைத்திருக்கும் மூடியைக்கொண்டு அப்பூவை மூடிவிடும். அப்புறமென்ன உள்ளே போன பூச்சியின் கதி அதோ கதிதான்.

ஆனால் நாம் பொங்கலுக்குக் கரும்பைக் கடித்து, அரைத்து தின்பதுபோல பூச்சியைத் தின்ன அத்தாவரத்துக்குப் பற்கள் இல்லை. ஆனால் மற்ற படி நாம் உணவைச் ஜீரணிப்பதுபோலத்தான் அதுவும் ஜீரணிக்கிறது. பூச்சியைப் பிடித்ததும் அந்தப் பூ ஒரு சின்ன வயிறு போலவே செயல்பட ஆரம்பிக்கிறது. மெதுவாக ஒரு திரவத்தைச் சுரக்கிறது. அந்தத் திரவம் பூச்சியின் முழு உடலையும் கரைத்த பின்னர் அதிலுள்ள , கனிமங்களை உறிஞ்சி எடுத்துக்கொள்கிறது. சரி, இது சின்னப் பூச்சிகளுடன் நிறுத்திக்கொள்கிறதா ? இல்லை, சிறிய தவளைகள், சில சமயம் எலிகள் கூட இத்தாவரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மனிதனைத் தின்னுமளவுக்கு தாவரங்கள் இல்லை என்பதே உண்மை. இவ்வகைத்தாவரங்கள் மனிதனைக்கூடத் தின்னும் என்ற வதந்தி பரவக் காரணம். பல மீட்டர் வரை வளரும் அமர்போபாலஸ் டைட்டானியம் போன்ற அசைவத்தாவரங்களாக இருக்கலாம். இவை வளர்ந்தவுடன் பூச்சிகளை ஈர்க்க நம்மால் சகிக்கமுடியாத துர்நாற்ற்த்தைப் பரப்பும், கிட்டத்தட்ட அந்த நாற்றம் ஒரு மனிதன் அந்த பூவுக்குள் இறந்து,அழுகிக்கிடப்பதைப் போல் இருக்குமாம். இது போல் நிறையத் தாவரங்கள் இருக்கின்றன. இதனால் இத்தகைய கட்டுக்கதைகள் பரவியிருக்கலாம்.

துர்நாற்றம் வீசும் பூச்சித்திண்ணித் தாவரம்


உண்மையில் ஒருவர் சொன்னது போல, அசைவத்தாவரங்களால் மனிதனுக்கு ஆபத்து என்பதை விட மனிதனால் அசைவத்தாவரங்களுக்கு ஆபத்து என்பதே பொருத்தமாக இருக்கும். இவற்றின் பிரபலத்தன்மையே அவற்றுக்கு ஆபத்தாகிவிட்டது. இதைக் கண்டவுடன் வேரோடு பிடுங்கி , விற்றுவிடுகின்றனர். இதனால் இப்போது இத்தாவரங்கள் அருகி வருகின்றன.
(0) Your Comments | | | |

Thursday, January 15, 2004

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ... !

(0) Your Comments | | | |

Wednesday, January 14, 2004

டச்சுக்காரர்கள் .... நெதர்லாந்து ...ஆம்ஸ்டர்டாம் ...


ஜெர்மனியில் நான் இருக்குமிடத்தில் இருந்து ஆம்ஸ்டர்டாம் மிகவும் பக்கம்.. 4 மணி நேரம் பஸ்ஸில் பயணம் செய்தால் ஆம்ஸ்டர்டாமை அடைந்துவிடலாம் ... இன்னும் ஒரு பெரிய வசதி என்னவென்றால் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உள்ளவர்கள் யூனியனில் உள்ள பிற ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும்போது விசா எதுவும் தனியாக எடுக்கத் தேவையில்லை ...

Click to enlarge


நம்மூரிலும் இதுபோல் வந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது .. இந்த முறை சார்க் மாநாட்டில் இநதிய நிதியமைச்சர் சார்க் நாடுகள் அனைத்துக்கும் பொதுவான நாணயமுறையைக் கொண்டுவருவது பற்றிப் பேசியிருக்கிறார் ..பாகிஸ்தான் இதை ஆதரிக்குமென்று தோன்றவில்லை .. வளைகுடா நாடு ஒன்றின் நிருபர் சார்க் நாடு அனைத்துக்கும் ஒரே நாணய முறை கொண்டுவந்தால் இந்தியாதான் அதிகமாய் ஆதிக்கம் செலுத்தும் .. எனவே இதை சரிக்கட்ட சீனாவையும் , ஈரானையும் சேர்க்கவேண்டும் என்று கூறியவுடன் கடுப்பான யஷ்வந்த் சின்கா சிரித்துக்கொண்டே சொன்னாராம்.. " ... ம்... செய்யலாம்.. கூடவே அமெரிக்காவையும் சேர்த்துக்கொள்ளலாம் .. அதுதான் சூப்பர் பவராயிற்றே ... "

சரி .. நம்முடைய கதைக்கு வருவோம் ... என்ன பேசிக்கொண்டிருந்தோம் ...? .. ஐரோப்பிய நாடுகளுக்குள் பயணம் தனியாக விசா தேவையில்லை ... ஒரு சுவையான நிகழ்ச்சி .. இங்கே இருக்கும் என்னுடைய மகாராஷ்டிர நண்பர் ஒருவர் சென்றமுறை நெதர்லாந்து சென்றபோது பாஸ்போர்ட்டையே மறந்து எடுத்துக்கொள்ளாமல் சென்று நெதர்லாந்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்துவிட்டார்.. என்ன நகைச்சுவை என்றால் அவர் திரும்பவும் ஜெர்மனிக்குத் திரும்பிய பிறகுதான் அவருக்கு பாஸ்போர்ட் நினைவே வந்திருக்கிறது ... உலகம் நிறையத்தான் மாறி வருகிறது ... சீக்கிரம் கணியன் பூங்குன்றனாரின் " யாதும் ஊரே யாவரும் கேளிர்... " கூற்று உண்மையாகிவிடும் என்றே தோன்றுகிறது ..

Click to enlarge


சரி.. நம் பயணத்தைத் தொடர்வோம் .. அன்று சனிக்கிழமை .. காலை 6 மணிக்கு பஸ்ஸில் கிளம்பினோம் .. கிளம்பியபோது மகாராஷ்டிர நண்பரின் நினைவு வரவே என்னுடைய பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டுவிட்டேனா என்று ஒருமுறை சரிபார்த்துக்கொண்டேன் ....


நான்கு மணி நேரத்தில் நெதர்லாந்தை அடைந்துவிட்டோம் .. அதற்கு முன்னரே ஆங்கேங்கே தெரிந்த சில ஆங்கிலப் பெயர்ப்பலகைகள் ஜெர்மனியை விட்டு வெளியே இருக்கிறோம் என்பதைக் காட்டிவிட்டது ... ஜெர்மனியில்தான் பொதுவாக ஆங்கிலப்பலகைகளையே காணமுடியாதே ... பார்க்குமிடமெல்லாம் எங்கும் ஜெர்மன் ... எதிலும் ஜெர்மன்தான் ... ! .. புகைப்படம் எடுக்க நான் காமெராவைக் கொண்டுவரவில்லை .. உடன்வந்த என்னுடைய நண்பர் சுரேஷ் தன்னுடைய டிஜிட்டல் கேமாரவைக் கொண்டுவந்திருந்தார் .. இங்கு திரும்பிய பின்னர் மறக்காமல் அவரிடமிருந்து அனைத்துப் புகைப் படங்களையும் என்னுடைய கணினியில் ஒரு காப்பி எடுத்துக்கொண்டுவிட்டேன் ..... இங்கே காண்பவை எல்லாம் அந்தப் புகைப்படங்கள்தாம்

(0) Your Comments | | | |

Monday, January 12, 2004

டச்சுக்காரர்கள் .... ஆம்ஸ்டர்டாம்...

நேற்று நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் போயிருந்தோம் நண்பர்களுடன் .
சுவாரசியமாக இருந்தது. அதைப் பற்றி நிறைய எழுதவேண்டும் என்று நினைக்கிறேன் .. சமயம் வாய்க்கவில்லை .. எப்படியும் இந்த வாரம் எழுதி அனைவரையும் ஒரு வழி பண்ணிவிடவேண்டியதுதான் ...
(0) Your Comments | | | |

Tuesday, January 06, 2004

பெரும் அறிவியலாளர் ஆட்டோவான் கிரிக்

இரு வாரங்களுக்கு முன்னர் ஜெர்மனியின் கிழக்குப் பகுதியிலுள்ள மெக்டபர்க் என்ற நகருக்குச் சென்றிருந்தேன் ... அங்குள்ள நண்பர்களுடன் ஊரைச் சுற்றினோம் ... கடைசியாக ஒரு சிலையைக் காட்டினர் நண்பர்கள் ...





அந்தச் சிலையின் கீழே பக்கவாட்டுப்பகுதியில் பல குதிரைகள் இரு அரைக்கோள வடிமுள்ள கிண்ணங்களை பிரிக்க இழுப்பதைப் போல் செதுக்கப்பட்டிருந்தது .. அதை எங்கோ பார்த்த ஞாபகமாய் இருக்க அச்சிலை யாருடையது என்று கேட்டேன் ... அவர் சொன்ன தகவல்கள் சுவாரசியமாக இருந்தது ... நாங்கள் பார்த்த சிலை ஆட்டோ வான் கிரிக் என்ற அறிவியலாளரின் சிலை ... அவர் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் ... உண்மையில் அவர் ஒரு பொறியியலாளர்.. அதுவும் ராணுவத்துக்கு தேவையான கருவிகளைச் செய்வதற்காகப் பணி புரிந்தவர் ...







அவர் சொல்ல ஆரம்பித்தவுடன் எனக்கு முழுவதும் நினைவுக்கு வந்ததுவிட்டது .. பள்ளி அறிவியல் புத்தகத்தில் படித்திருக்கிறேன் ... அவரின் திறமையால்,உழைப்பால் பதினாறாம் நூற்றாண்டில் பல கருவிகளைக் கண்டறிந்தவர்..... பின்னர் அவரின் கடைசிக் காலத்தில் மெக்டொபர்க் நகரின் மேயராகவே ஆகிவிட்டார் ..


முதன் முதலில் வளி மண்டலத்தின் அழுத்தத்தின் திறன் எவ்வளவு அதிகமானது என்பதைப் பெருந்திரளாய்க் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் கண்கூடாகச் செய்துகாட்டினார் ....

அவர் செய்தது இதுதான்...இரு அரைக்கோள வடிவக் கிண்ணங்களை ஒன்றுடன் ஒன்று பொருத்திப் பின்னர் அந்தக் கிண்ணங்களுக்கு இடையேயுள்ள காற்றை வெளியேற்றினார் ... இப்போது அந்தக் கிண்ணங்களுக்கு இடையில் இருப்பது வெற்றிடம் ... அந்த வெற்றிடத்தை நிரப்ப சுற்றியுள்ள காற்று அந்தக் கோளங்களை அனைத்துப் புறங்களிலிருந்தும் அழுத்தும் .... அந்த அழுத்தத்தின் காரணமாய் அதை பிரிப்பது அவ்வளவு எளிதான வேலையில்லை ... பல குதிரைகளை இரண்டு புறமும் கட்டி இழுக்க முயற்சித்தும் அக்கோளங்களைப் பிரிக்க முடியவில்லை ... அதன் பின்னர்தான் அனைவருக்கும் வளிமண்டலத்தில் அழுத்தம் எத்தனை சக்தி வாய்ந்தது என்று தெரிந்தது ...







நண்பர்களிடம் சொன்னேன் ... ஒரு காலத்தில் இதைப் பள்ளி அறிவியல் புத்தகத்தில் படித்தபோது அந்த இடத்தை நேரடியாகப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை . அதற்கு சிரித்துக்கொண்டே அந்த நண்பர் சொன்னார்.. நீங்களாவது அந்த இடத்தைத்தான் பார்க்கிறீர்கள்.. நான் விரையில் இந்தச் சிலைக்குக் கீழேயே பட்டம் வாங்கப் போகிறேன், இதை நான் என்று எதிர்பார்த்தேன் என்றார் .. கொஞ்சம் விசாரித்தபோதுதான் தெரிந்தது ...

இன்றும் அவரின் நினைவைப் போற்றும் விதமாய் பல செயல்கள் அங்கு நடைபெற்று வருகின்றன .. உதாரணமாக ... ஒவ்வொரு வருடமும் மெக்டொபர்க் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முடித்து பி.ஹெச்.டி பட்டம் பெருபவர்கள் அனைவரும் அந்த மெக்டொபர்க் நகரின் வீதி வழியாக அலங்கார வண்டியில் கொண்டு வரப்பட்டு மேலே நாம் காணும் அவரின் சிலையில் முன்னால்தான் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது .
(0) Your Comments | | | |

Tuesday, December 23, 2003

ஏஞ்சல் பயர் வலைப்பூ வசதி ...

இன்னைக்கு ரொம்ப நேரம் feed back ஸ்கிரிப்ட் சேர்க்கவும் , தானியங்கி எழுத்துருவைச் சோதனை செய்து பார்க்கவுமே செலவாயிடுச்சு.... சின்ன வேலைதான் இது ஆனாலும் முதல் முதலில் செய்வதால் மிக அதிக நேரமாகிறது ...

ஏற்கனவே சில நாட்களுக்கு முன் மீனாக்ஸ் எப்படி feed back படிவத்தை டெம்ப்ளேட்டில் இணைப்பது என்று மின்னஞ்சலில் எனக்குச் சொல்லியிருந்தார் ... முயன்று பார்த்தேன் .. ஒரு வழியாக இணைத்துவிட்டேன் ... இன்று நான் இவ்வளவு நேரம் டெம்ப்ளேட்டுடன் சண்டை போட்டதற்காகவாவது யாராவது ஒரு வரி கமெண்ட் எழுதினால் தேவலை ... :)


யாராவது ஏஞ்சல் பயர் வலைப்பூவைச் சோதனை செய்து பார்த்தார்களா என்று தெரியவில்லை ... நேற்று நான் சோதனை செய்து பார்த்தேன் .. அங்கு யுனிக்கோடு தமிழ் நன்றாக வருகிறது .. அத்துடன் feedback மற்றும் feed back to back என்று நிறைய வசதி இருக்கிறது ... புரொகிராமிங் , HTML கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள் கூட மிக எளிதாய் அங்கு அவரவர் விருப்பப்ப்டி உருவாக்கிக்கொள்ளலாம் .. அவ்வளவு எளிதாய் இருக்கிறது .. அதை நான் முதலில் பார்த்திருந்தால் அங்கேயே ஆரம்பித்திருப்பேன் ...
(0) Your Comments | | | |

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com