<$BlogRSDUrl$>

Thursday, May 11, 2006

கூட்டணி ஆட்சி தமிழகத்தில் வருது ??

தமிழக அரசியலைப் பொறுத்தவரை வெற்றி பெறப்போகும் கட்சிக்குத் தேவை இரு மிக முக்கியமான அம்சங்கள். அவை இரண்டும் இரு கண்கள் என்றே கூறலாம். இதில் முதலிடம் வகிப்பது, தோல்வி அடையப்போகும் கட்சிக்கெதிரான எதிர்ப்பலை. இங்கே ஒரு மேல்நாட்டு அறிஞரின் பொன்மொழி நினைவுக்கு வருகிறது. இதைச் சொன்னவரின் பெயர் நினைவில் இல்லை, ஆனால் அவர் சொன்னது இதுதான். "..ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற அக்கட்சிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவைக்காட்டிலும் எதிர்க்கட்சியின்மீது மக்கள் கொண்டிருக்கும் கோபமே முக்கியக் காரணமாய் இருக்கும்... ". இது பிற நாட்டுக்கோ, மாநிலத்துக்கோ எந்த அளவுக்குப் பொருந்தும் என்பது தெரியவில்லை என்றாலும் இது தமிழகத்துக்கு மிகப் பொருந்தும்.

மனிதர்களின் உளவியலே வழக்கம்போல இங்கே தீர்மானிக்கிறது. எப்போதுமே ஒருவனின் அறிவினைத் தட்டிவிடுவதைக்காட்டிலும், அறிவுக்கண்ணைத் திறந்து அவனைச் செயல்பட வைப்பதைக் காட்டிலும், அவனின் உணர்ச்சிகளைத் தட்டிவிட்டு தமக்குச் சாதகமாய்ச் செயல்படவைப்பது மிக எளிது. இதில் பல அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்கள். இதனாலேயே எதிரணியின் மீதான கோபம், எதிர்ப்பலை வெற்றிபெறப்போகும் கட்சிக்கு மிகப்பெரிய பலமாய் அமைந்துவிடுகிறது.

இரண்டாவதாய், தமிழக அரசியலில் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பது வலிமையான கூட்டணிகள். இதற்காய், கடந்த காலங்களில் நடந்த பல நிகழ்வுகளை, வெற்றி தோல்விகளை எடுத்துக்காட்டுகளாய்ச் சுட்ட முடியும். ஆனால், இந்தக் கூட்டணிகள் எதிரணியின் மீது தீவிர எதிர்ப்பலை இல்லாத நிலையிலேயே முக்கியத்துவம் பெறுகின்றன. தீவிர எதிர்ப்பலையுள்ள கட்சியின் கூட்டணி வலிமையாய் இருந்தாலும் அது தோல்வியடையப் போவது உறுதி. ஏற்கனவே சொன்னபடி, தேர்தலைப் பொருத்தவரை மக்களின் அறிவைவிட, சிந்தனையைவிட அவர்களின் உணர்ச்சிகளே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றன.

தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஏதாவது ஒரு கட்சியே தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி புரிந்துவருவது நடந்துவருகிறது. அது இந்தத் தேர்தலிலும் தொடருமா என்பது கேள்விக்குறியே. தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான அஸ்திவாரம் இத்தேர்தலில் திமுக கட்சியால் அமைக்கப்பட்டுவிட்டது போன்றே தோன்றுகிறது. இந்தக் கருத்துக்கு வலிமை சேர்ப்பதாகக் கருதுவது கீழ்க்காணும் சில அம்சங்களை.

1. கடந்த அதிமுக அரசின் மீது இருந்ததைப்போல், தமிழக மக்களுக்குப் பெரிய அளவில் எதிர்ப்பலை இருப்பதாய்த் தோன்றவில்லை. ஜெயலலிதாவின் பல அதிதீவிர நடவடிக்கைகளைத் தலைமை கொண்டிருக்க வேண்டிய, இதுவரை இருந்த எந்த ஆட்சியாளர்களுக்கும் இல்லாத துணிச்சலான குணாதிசயமாக தமிழக மக்கள் பலர் எண்ணத் தொடங்கிவிட்டனர் என்பது கண்கூடு.

2. எந்தக் கட்சியின்மீதும் தீவிர எதிர்ப்பலை இல்லாத நிலையில் முக்கியத்துவம் பெறப்போவது வலிமையான கூட்டணிகள். திமுக நல்ல கூட்டணி அமைத்திருந்தாலும், அதிமுகவின் கூட்டணி ஒன்றும் மோசமில்லை. திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு சரியான போட்டி இத்தேர்தலில் இருக்கப்போவது உறுதி. ஒருவேளை கடும்போட்டியில் அதிமுகவைவிட திமுக சில தொகுதிகள் அதிகம் வென்றாலும் தனியாக ஆட்சியைமைக்குமளவுக்கு அதிக இடங்களைப் பிடிக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. திமுக ஒதுக்கியிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையைப் பார்த்தாலே தெரியும்.

இவையெல்லாம் பல தசாம்சங்களாய் அரசியல் விளையாட்டில் கைதேர்ந்த கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் தெரியாமலிருக்க நியாயமில்லை. தமது கட்சி தற்போது கொண்டிருப்பது வெறும் தேர்தல் கூட்டணி மட்டும்தான் என்று வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டிருக்கும் வைகோவின் நிலை கூட்டணி ஆட்சி என்று வரும்போது மிகவும் முக்கியத்துவம் பெறும். தனியாக ஆட்சியமைக்க முடியாமல் ஒருவேளை இக்கட்டான நிலை ஏற்பட்டால், வைகோவின் உதவிகூட திமுகவுக்குத் தேவைப்படலாம். இதைக் கருணாநிதி நன்றாக உணர்ந்துள்ளதாலேயே, எதிரணிக்குச் சென்றுவிட்ட வைகோவைக் கடுமையாக விமர்சித்து இதுவரை ஒருவார்த்தைகூடச் சொல்லாமல் தவிர்த்துவருகிறார்.

எது எப்படியோ, இதுவரை இல்லாத ஒரு சுவாரசிய திருப்பம் தமிழக அரசியலில் மே 11 க்குப் பிறகு ஏற்படப்போவது உறுதி. வைகோ, ஸ்டாலின், விஜயகாந்த் ஆகியோரின் அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதற்கான விடை அன்றே தோராயமாய்க் கிடைத்துவிடும்.
(இப்பதிவு சரியாக இரு மாதங்களுக்கு முன்னால் எழுதப்பட்டது)
| | |
Comments:
கம்ப்யூட்டர் VS கலர் டிவி.

இதுலே டிவி ஜெயிச்சிருக்கு.
 

துளசியக்கா,
சொன்ன மாதிரியே கலர் டிவியுடன் கேபிள் கனெக்சனும் சேர்த்துக்கிடைக்குமா என்று பார்ப்போம் :-D.
 

நான் மட்டும் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் கலர் டிவி, கம்ப்யூட்டரோடு கரண்டும் பிரி என்று சொல்லி இருப்பேன், 234 தொகுதியும் நமக்கு தான் கிடச்சிருக்கும்.
 

y ask current bill also
 

நிரந்தர முதல்வர் பரஞ்சோதி வாழ்க.. வாழ்க. :-D
 

கோபிநாத்,
அடுத்த தேர்தலில் கரண்டும் இலவசம்தானாம். :-)
 

Why not everything will be free if people like me and you are paying taxes..... Real rich fellows and politicians never pay tax..... Everything comes on our head only.....
 

Enna muthu....Unga pirantha naal (11th may) andru tamilnadu kootani aatchikku pokuthu..... Eppadi irukkum endru parpom...
 

ஜெய்,
பார்க்கலாம்.. தேர்தல் வாக்குறுதிகள் எந்த அளவுக்கு உண்மையாகும் என்று தெரியவில்லை.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com