<$BlogRSDUrl$>

Tuesday, May 23, 2006

ஹைடெக் எலக்ட்ரானிக் வழிபாடு

உலகமே எலக்ட்ரானிக் யுகத்தில் இருக்கிறது. சாமி கும்பிடுவதை மட்டும் ஏன் இன்னும் பாரம்பரிய முறையிலேயே நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்ற சிந்தனைதான் இந்த பிளாஷ் உதவியுடன் பிள்ளையார் வழிபாடு. இதை உருவாக்கிய புண்ணியவான் யாரோ தெரியவில்லை, ஆனால் ஒரு வடநாட்டவராகத்தான் இருக்க வேண்டும். புராக்ராம் பிழைச்செய்தி காட்டாமல் நன்றாக ஓடப்பிரார்த்தனை செய்வது முதல் பலவற்றுக்கு இதை உபயோகித்திருக்கலாம்.

நம்ம ஊர் ஸ்டைலில் தேங்காய் உடைத்து விநாயகர் கும்பிடக்கூட பிளாஷ் கிடைப்பதாய்க் கேள்விப்பட்டேன், ஆனால் எனக்கு அது இதுவரை சிக்கவில்லை. அதை வைத்திருக்கும் மக்கள் யாராவது எனக்கு ஒரு பார்சல் அனுப்பினால் நன்றாய் இருக்கும்.
(11) Your Comments | | | |

நான் ஒரு அரக்கன், தேவனும்கூட

வாழ்க்கையில் பலருக்கும் பல முக்கியம். சிலருக்கு சில முக்கியம். இன்னும் சிலருக்கு சில மட்டுமே வாழ்க்கை. இந்த சில, பல விஷயங்கள் வாழ்வில் சாதனைகளைத் தொடங்கிவைக்கின்றன. தவிரவும், எண்ணற்ற தொல்லைகளையும், துயரங்களையும்கூட அளிக்கவே செய்கின்றன.

இவைகளில் மிகவும் முக்கியமானது 'நான்' என்ற எண்ணம். இது பெரும்பாலும் ஒரு மனிதனின் பலம், சில வேளைகளில் பலவீனமும் கூட. ஒரு வண்டி ஓடத்தேவையான எரிபொருளாக பெரும்பான்மையான நேரங்களில் 'நான்' இருந்தாலும் வாழ்க்கையென்ற வண்டியில் பிரச்சனை வருவதும் இதனால்தான்.

ஈகோ பார்க்காமல் வாழ்க்கையில்லை. ஆனால், எல்லாரிடமும் ஈகோ பார்த்தால் வாழ்க்கையே இல்லை.

வாழ்வைச் சந்தோஷமாக அனுபவிப்பவர்கள், சிலரிடம் 'நான்' என்ற அகங்காரத்தைக் காட்டுவதில்லை. குறைந்த பட்சம் மூவரிடம் அதைக் காட்டாதோருக்கு வாழ்வில் ரசிக்க, அள்ள அள்ளக் குறையாது எத்தனையோ காத்திருக்கிறது. அந்த மூவர் பெற்றோர், துணை, குழந்தைகள்.

உங்கள் பெற்றோரிடமும், உங்கள் துணையிடமும், உங்கள் குழந்தைகளிடமும்கூட உங்கள் அகங்காரத்துக்குத் தீனி தேட ஆரம்பித்தால் வாழ்க்கையில் பெரிதாகச் சறுக்குகிறீர்கள் என்றே பொருள். இதை அறிந்தோ, அறியாமலோ பல பெண்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள், சில ஆண்களும் உணர்ந்தே இருக்கிறார்கள். குடும்பவாழ்வு சின்னாபின்னமாய்ச் சிதைந்துபோன பலர் இதை அறியாதவர்களாகவும், புரியாதவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் மகிழ்ச்சியின் பேரழிவுக்கும் இதுவே ஆணிவேறாக இருக்கிறது.

இந்த மூவரிடமும் நெருங்கும்போது உங்கள் தன்மானத்தைக் கொஞ்சம் கழற்றித் தூரவைத்துவிடுங்கள். பெரும்பாலான குடும்பங்களில் இந்த அதீதத் தன்மானமே புயலை வீசச்செய்கிறது. அது புயலாக இருந்தால்கூடப் பரவாயில்லை, கொஞ்சம் சேதத்தோடு அமைதியாகிவிடும். பல நேரங்களில் அழியாத நெருப்பையே பற்ற வைக்கிறது. அது நீங்கள் வாழும்வரை, உடலில் கடைசிச் செல் சாம்பலாகும்வரை அணைவதேயில்லை. தன்னைப் பாதி கருக்கிய நிலையில்கூட பலரால் அதன் தன்மையை உணரமுடியாது போய்விடுகிறது என்பது எவ்வளவு பெரிய சோகம்?. அது உங்கள் வாழ்வை மட்டுமல்ல, உங்களைச் சார்ந்தோரின் வாழ்வையும் சேர்த்தே கருகச் செய்கிறது.

உங்கள் துணையிடம் பெண்ணியச் சிந்தனைகளையும், பிடித்தமான ஆணாதிக்கக் கருத்தியல்வாதங்களையும் அருகில்கூடக் கொண்டு செல்லாதீர்கள். அங்கே அது ஒரு எளிதில் பற்றும் தன்மைகொண்ட கொடிய தொற்றுநோய்.

தன்னிடம் சாக்லேட் கேட்டு அடம்பிடிக்கும் மகனிடமும் ஆணாதிக்கத்தைத் தேடும் பெண்கள் இல்லையென்று நினையாதீர்கள். தனது மகனிடமும், மகளிடமும், துணையிடமும் தன்மானம் பார்க்கும் ஆண்களும் உண்டு என்று தெரியாமல் இருந்தாலும் பரவாயில்லை. இவர்கள் வாழ்வின் இன்பங்கள் பலவற்றைத் தொலைத்துவிட்டவர்கள், இவர்களைத் திருத்துவது எளிதா இல்லையா என்பது பற்றித் தெரியாமல் இருக்கலாம். ஆனால், மறந்தும் அவர்களில் ஒருவராய் நீங்கள் இருந்துவிடாதீர்கள்.
(8) Your Comments | | | |

Tuesday, May 16, 2006

வெடிகுண்டு - மகளிர் விடுதியில்

பக்கத்து விடுதியான மகளிர்விடுதியில், ஆடவர் சிலர் அணுகுண்டு வைத்தனர். அதிர்ச்சியாக இருக்கிறதா?. முழுவதும் தெரிந்தால் அதிர்ச்சியடையமாட்டீர்கள், ஒருவேளை நீங்கள் அவனை பாராட்டக்கூடும்.

மாலை நேரம். விடுதியில் தேநீர் குடித்துவிட்டு, உலகப் பிரச்சனைகளைத் தீர்ப்பது எப்படி என்று வழக்கம்போல மாணவர்கள் வம்பளந்துகொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பையன் மட்டும் எதையோ கையில் மறைத்துக்கொண்டு அவன் அறைக்கு கொண்டுசென்று கொண்டிருந்தான். அதை அவ்வளவாய் யாரும் கண்டுகொள்ளவில்லை. அன்று இரவு உணவை முடித்துவிட்டு, டிவி பார்த்துவிட்டு அந்தத் தொலைக்காட்சி அறையிலேயே விவாதங்கள், கேலிகிண்டல்கள் என்று தொடர்ந்தது. நேரம் ஆனதும் எல்லாரும் இடத்தைக் காலி செய்துவிட்டு அவரரவர் அறைக்குப் போய்விட்டார்கள்.

நள்ளிரவு. சரியாகப் பன்னிரண்டு மணிக்கு வெளியே சத்தம் கேட்டது. ஏதோ வெடித்தது போல இருந்தது. சத்தம் அருகிலுள்ள மகளிர்விடுதிப் பக்கத்தில் இருந்து வந்தது. அதைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் தூங்கிவிட்டேன்.

அடுத்த நாள் காலையில் உளவுத்துறை அறிக்கையைப் பார்த்தபின்தான் தெரிந்தது. சரியாக, இரவு 12 மணிக்கு மகளிர் விடுதியின் முன்னால் பட்டாசுகள் வெடித்திருக்கின்றன. சுவாரசியம் என்னவென்றால், அன்று மகளிர் விடுதியில் உள்ள ஒருவருக்குப் பிறந்தநாள். பொதுவாக, இரவு 12 மணிக்கு மகளிர் விடுதியை விட்டு யாரும் வெளியே வருவதில்லை. அப்படியானால், பட்டாசு வெடித்தது யார் என யாருக்கும் தெரியவில்லை. மெதுவாக, ஆடவர் விடுதியில் விசாரித்ததில் கொஞ்சம் விஷயம் கிடைத்தது. சரிதான். ஏன்கூடாது?. தலைவர்கள், நடிகர்கள் பிறந்த நாளை மட்டும் கொண்டாடும்போது, வேண்டியவர் பிறந்த நாளை அவன் கொண்டாடியதில் என்ன தவறு இருக்கிறது. புரியவில்லையா?. அன்று பிறந்த நாள் கொண்டாடியவருக்குப் பிடித்தமான தோழன் ஒருவர், சகாக்கள் சிலருடன் போய் மகளிர் விடுதிக்கு முன்பு சரியாக 12 மணிக்கு அணுகுண்டு பட்டாசு வெடித்து தன் அன்பைக் காட்டியிருக்கிறார்.

நீங்க யாராவது இதுபோல் ஏதும் செய்ததுண்டா?. :-)
(7) Your Comments | | | |

Monday, May 15, 2006

மகளிர், ஆடவர் விடுதிகள்

எங்களின் பல்கலைக்கழக மகளிர், ஆடவர் விடுதிக்கும், அங்கிருப்போருக்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும் பல வேறுபாடுகளும் இருந்தன என்பது கண்கூடு. இங்க நம்ம விடுதியில் 'தம்' ரொம்ப சாதாரண விஷயம், அப்பப்ப பீர் அடிக்கும் பசங்களும் கணிசமான அளவிலேயே இருந்தார்கள். இப்படியான பசங்களைப் பார்த்து பொண்ணுங்க யாரும் பெரிதாய்ப் பயப்படமாட்டாங்க, இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்.

ஆண்கள் விடுதியில் இருந்த சுதந்திரம் அங்கே பெண்களுக்கு இல்லை என்பது (பசங்களுக்குக்) கொஞ்சம் வருத்தமான விசயம்தான், அதேஅளவுக்கு அங்கிருந்த மகளிரும் வருத்தப்பட்டிருக்கக்கூடும் என்றே நினைக்கிறேன். இங்கே ஆண்கள் விடுதியில் பெரிதாய் எந்தக் கட்டுப்பாடும் இல்லை, எப்பவும் வரலாம் போகலாம், யாரும் வரலாம் போகலாம். ஆனால், பெண்கள் 8 மணிக்குள் அவர்கள் விடுதிக்கு வந்தாக வேண்டும், தாமதமானால் காரணம் சொல்ல வேண்டும்.

எங்கள் விடுதிக்குள், அறைகளுக்கும்கூடத் தோழியர் வரலாம்(எல்லாம் சமத்துவம், சுதந்திரம் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கைதான் காரணம், வேறென்ன?) . ஆனால், பெண்கள் விடுதிக்குள் செல்ல மட்டும் எங்களுக்கு அனுமதி இல்லை(இந்த உலகத்தில் என்ன ஒரு பாரபட்சம் பாருங்கள்). இருந்தாலும் இதையல்லாம் பொறுத்துக்கொண்டுத்தான் எம்மக்கள் அடிக்கடி அங்கு சென்று வெளியில் இருந்தபடியே வெளியே வரச்சொல்லி நோட்ஸ், புத்தகங்கள் இன்ன பிறவற்றை வாங்கிக்கொண்டு வருவார்கள். அவ்வாறு வாங்கித் திரும்பும் முன்னர், சைக்கிள்கள் வரிசை வரிசையாய் நிற்கும் அந்த விடுதியின் வாசலுக்கு அருகில் நின்றுகொண்டு உலகின் மிகமுக்கியமான பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து பலசமயம் மணிக்கணக்கில் இருபாலரும் விவாதிப்பது என்பது வழமையான விஷயம்.

உரையாடல் நடந்துகொண்டிக்கும்போது அந்த வழியாய் எம்மக்கள் யாராவது கடந்து சென்றால் பல சுவாரசியச் சம்பவங்களைக் காணமுடியும். அன்று நான் பார்த்த ஒன்றைச் சொல்கிறேன். எனது நண்பர்களும், சில தோழியரும் அங்கே நின்றுகொண்டிருந்தபோது, அந்தச் சாலையின் வழியாய் சைக்கிளில் ஒரு பையன் வந்தார். அந்தப் பக்கம் யாரோ வருவதைக் கவனித்த தோழியர் அவர்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர். அவர்கள் சிரிக்கும் காரணம் கேட்டேன். '.. கொஞ்சம் பொறு, உனக்கே புரியும்..' என்று கோரஸாகப் பதில் வந்தது. சைக்கிளில் போனவர் சரியாய் எங்களைக் கடக்கும்போது ஹேண்ட் பாரில் இருந்து இருகைகளையும் எடுத்து ரஜினி ஸ்டைலில் தலையைக் கோதிவிட்டுக்கொண்டே ஓரக்கண்னால் பார்த்தபடி ஸ்டைலாய்க் கடந்துசென்றார். அதே சமயம் மெல்லிய குரலில் அம்மணிகளிடமிருந்து பல கமெண்டுகள் பறந்தன.

'.. டேய்.. டேய்.. போடா.. உன்னை மாதிரி பந்தா காட்டுறவன் எத்தனை பேரை நாங்க தினம் தினம் பார்க்கிறோம்..' என்பது நான் கேட்ட, இப்போது வரை நன்றாய் எனக்கு நினைவிருக்கும் கமெண்டுகளில் ஒன்று. சைக்கிளில் போன அப்பாவிப் பையனுக்கு
இதில் எதுவும் கேட்டிருக்க வாய்ப்பே இல்லை. அன்று எனக்குப் பலவிஷயங்கள் புரிந்தன. அன்றிலிருந்து கூட்டமாய் நிற்கும் அம்மணியரை கடந்துசெல்லும்போது என் நண்பர்கள் சிலர் ஓரக்கண்ணால் திரும்பிப் பார்க்கக்கூடத் தயங்க ஆரம்பித்தார்கள். அதற்கு முன்னால்கூட நான் அப்படித்தானுங்க, அதனால் என்னிடத்தில் பெரிதாய் எந்த மாற்றமும் இல்லை :-)
(7) Your Comments | | | |

Saturday, May 13, 2006

லேடீஸ் ஹாஸ்டல் Vs ஆடவர் விடுதி

மகளிர் விடுதிச் சம்பங்கள் பெரும்பாலும் ஆடவர் விடுதியில் தலைப்புச் செய்தியாக இருக்கும். அதேபோல் ஆடவர் விடுதிச் சம்பங்கள் மகளிர் விடுதியிலும் முக்கியத் தலைப்புச் செய்தியே. அப்போது எனக்குக் கிடைத்துகொண்டிருந்த தகவல்களின்படி மகளிர் விடுதியிலுள்ளோர் ஆடவர் விடுதி மக்களிடமிருந்து அவ்வளவு பெரிதாய் வேறுபட்டவர்களே அல்லர். ஆனால், சில விஷயங்களில் சதவீதத்தில் பெரிய வேறுபாடு இருந்தது உண்மை. மகளிர் விடுதியில் நடக்கும் பெரிய சம்பவங்களை அறிந்துகொள்ளவெனத் தனியாக மினிஉளவுத்துறையே எனக்கு அவ்விடுதியில் அப்போது இருந்தது. என்ன நடந்தாலும் ஏஜண்டுகள் மூலம் உடனடியாய் வந்து சேர்ந்துவிடும் :-).

பல்கலைக்கழகத்தில் ஆண்கள் விடுதியும், பெண்கள் விடுதியும் கூப்பிடு தூரத்தில்தான் அருகருகே இருந்தன. அவ்வப்போது நோட்ஸ், புத்தகம் போன்றவைகளைப் பரிமாறிக்கொள்ள அங்கே செல்லவேண்டியிருந்ததால், விடுதிகள் அருகிலேயே இருந்தது வசதியாக இருக்கிறது என மக்கள் அடிக்கடி அபிப்பிராயப்படுவார்கள், நிஜமா அதுக்காகத்தாங்க.

எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து 3 வருடங்களைத் தவிர்த்து நான் படித்தது அத்தனையும் கோ-எஜுகேசன் தான். இதனாலேயே சின்ன வயதிலிருந்தே நான் பெரிதாய்ப் பாலின வேறுபாடு பார்த்ததே இல்லை. எனக்குச் சகவயதுடைய பையனும், பெண்ணும் 'கிட்டத்தட்ட' எனக்கு ஒன்றேதான். பசங்களிடம் பேசும் அத்தனையையும், பெரிதாய் எந்த வித்தியாசமும் இல்லாமல் அப்படியே தோழிகளிடமும் பேசுவது வழக்கம். தோழிகளும் கிட்டத்தட்ட அப்படியே. ஆனால், மற்ற பசங்களிடம் இதேபோல் பேசுவது இல்லை என்ற உண்மையே எனக்குக் கொஞ்சம் லேட்டாய்த்தான் தெரியவந்தது, இந்த உண்மை எனக்குத் தெரியவரும்போது சகதோழர்கள் பலர் எனக்குச் சகவிரோதிகளாய் மாறியிருந்தார்கள் :-).

இருவிடுதிகளிலும் நடப்பவற்றைப் பலவிஷயங்களில் ஒப்பிட முடியும். கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு சகட்டு மேனிக்குத் திட்டிக்கொண்டு திரியும் பசங்கள் போலவே, அங்கே நைட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு ரவுடித்தனம் செய்யும் அம்மணிகள் அங்கும் உண்டு. தம், பீர் என வெளுத்து வாங்கும் அரிதான அம்மணிகள்கூட உண்டென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்(ஏன் கூடாது?, சமத்துவம் வெறும் பேச்சில் மட்டும் இருந்தால் போதுமா?). அந்த மாதிரி ஆண்களுக்கிணையான அம்மணிகளுக்கு லேடீஸ் ஹாஸ்டலில் 'தாதா' அளவுக்கு மவுசு உண்டாம், நிறைய பொண்ணுங்க 'தாதா'க்களுடன் பேசவே பயப்படுவாங்களாம். நம் ஏஜண்டுகள் இந்த மாதிரித் தகவலைச் சொல்லும்போது கவனமாகக் காதில் வாங்கிக்கொள்வது வழக்கம், யாரெல்லாம் அப்படின்னு தெரிஞ்சா கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கலாமேன்னுதான், இது தெரியாமல் வீணாச் சிக்கலில் மாட்டிக்கக்கூடாது பாருங்க.
(அடுத்த பகுதி விரைவில்)
(8) Your Comments | | | |

Thursday, May 11, 2006

சட்டமன்ற இறுதி முடிவுகள்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்-2006 ல் கட்சிகள் பெற்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை பின்வருமாறு. முடிவு அறிவிக்கப்பட்டவை-234/234.

திமுக கூட்டணி - 163
*************
திமுக - 95
காங் - 35
பாமக - 18
கம்யூ(மா)- 9
கம்யூ - 6
*************

அதிமுக கூட்டணி - 69
*************
அதிமுக - 61
மதிமுக - 6
வி.சி - 2
*************

தேமுதிக - 1
இதர - 1

எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் திமுக கூட்டணி ஆட்சியமைக்க இருக்கிறது.
(13) Your Comments | | | |

கூட்டணி ஆட்சி தமிழகத்தில் வருது ??

தமிழக அரசியலைப் பொறுத்தவரை வெற்றி பெறப்போகும் கட்சிக்குத் தேவை இரு மிக முக்கியமான அம்சங்கள். அவை இரண்டும் இரு கண்கள் என்றே கூறலாம். இதில் முதலிடம் வகிப்பது, தோல்வி அடையப்போகும் கட்சிக்கெதிரான எதிர்ப்பலை. இங்கே ஒரு மேல்நாட்டு அறிஞரின் பொன்மொழி நினைவுக்கு வருகிறது. இதைச் சொன்னவரின் பெயர் நினைவில் இல்லை, ஆனால் அவர் சொன்னது இதுதான். "..ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற அக்கட்சிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவைக்காட்டிலும் எதிர்க்கட்சியின்மீது மக்கள் கொண்டிருக்கும் கோபமே முக்கியக் காரணமாய் இருக்கும்... ". இது பிற நாட்டுக்கோ, மாநிலத்துக்கோ எந்த அளவுக்குப் பொருந்தும் என்பது தெரியவில்லை என்றாலும் இது தமிழகத்துக்கு மிகப் பொருந்தும்.

மனிதர்களின் உளவியலே வழக்கம்போல இங்கே தீர்மானிக்கிறது. எப்போதுமே ஒருவனின் அறிவினைத் தட்டிவிடுவதைக்காட்டிலும், அறிவுக்கண்ணைத் திறந்து அவனைச் செயல்பட வைப்பதைக் காட்டிலும், அவனின் உணர்ச்சிகளைத் தட்டிவிட்டு தமக்குச் சாதகமாய்ச் செயல்படவைப்பது மிக எளிது. இதில் பல அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்கள். இதனாலேயே எதிரணியின் மீதான கோபம், எதிர்ப்பலை வெற்றிபெறப்போகும் கட்சிக்கு மிகப்பெரிய பலமாய் அமைந்துவிடுகிறது.

இரண்டாவதாய், தமிழக அரசியலில் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பது வலிமையான கூட்டணிகள். இதற்காய், கடந்த காலங்களில் நடந்த பல நிகழ்வுகளை, வெற்றி தோல்விகளை எடுத்துக்காட்டுகளாய்ச் சுட்ட முடியும். ஆனால், இந்தக் கூட்டணிகள் எதிரணியின் மீது தீவிர எதிர்ப்பலை இல்லாத நிலையிலேயே முக்கியத்துவம் பெறுகின்றன. தீவிர எதிர்ப்பலையுள்ள கட்சியின் கூட்டணி வலிமையாய் இருந்தாலும் அது தோல்வியடையப் போவது உறுதி. ஏற்கனவே சொன்னபடி, தேர்தலைப் பொருத்தவரை மக்களின் அறிவைவிட, சிந்தனையைவிட அவர்களின் உணர்ச்சிகளே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றன.

தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஏதாவது ஒரு கட்சியே தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி புரிந்துவருவது நடந்துவருகிறது. அது இந்தத் தேர்தலிலும் தொடருமா என்பது கேள்விக்குறியே. தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான அஸ்திவாரம் இத்தேர்தலில் திமுக கட்சியால் அமைக்கப்பட்டுவிட்டது போன்றே தோன்றுகிறது. இந்தக் கருத்துக்கு வலிமை சேர்ப்பதாகக் கருதுவது கீழ்க்காணும் சில அம்சங்களை.

1. கடந்த அதிமுக அரசின் மீது இருந்ததைப்போல், தமிழக மக்களுக்குப் பெரிய அளவில் எதிர்ப்பலை இருப்பதாய்த் தோன்றவில்லை. ஜெயலலிதாவின் பல அதிதீவிர நடவடிக்கைகளைத் தலைமை கொண்டிருக்க வேண்டிய, இதுவரை இருந்த எந்த ஆட்சியாளர்களுக்கும் இல்லாத துணிச்சலான குணாதிசயமாக தமிழக மக்கள் பலர் எண்ணத் தொடங்கிவிட்டனர் என்பது கண்கூடு.

2. எந்தக் கட்சியின்மீதும் தீவிர எதிர்ப்பலை இல்லாத நிலையில் முக்கியத்துவம் பெறப்போவது வலிமையான கூட்டணிகள். திமுக நல்ல கூட்டணி அமைத்திருந்தாலும், அதிமுகவின் கூட்டணி ஒன்றும் மோசமில்லை. திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு சரியான போட்டி இத்தேர்தலில் இருக்கப்போவது உறுதி. ஒருவேளை கடும்போட்டியில் அதிமுகவைவிட திமுக சில தொகுதிகள் அதிகம் வென்றாலும் தனியாக ஆட்சியைமைக்குமளவுக்கு அதிக இடங்களைப் பிடிக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. திமுக ஒதுக்கியிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையைப் பார்த்தாலே தெரியும்.

இவையெல்லாம் பல தசாம்சங்களாய் அரசியல் விளையாட்டில் கைதேர்ந்த கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் தெரியாமலிருக்க நியாயமில்லை. தமது கட்சி தற்போது கொண்டிருப்பது வெறும் தேர்தல் கூட்டணி மட்டும்தான் என்று வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டிருக்கும் வைகோவின் நிலை கூட்டணி ஆட்சி என்று வரும்போது மிகவும் முக்கியத்துவம் பெறும். தனியாக ஆட்சியமைக்க முடியாமல் ஒருவேளை இக்கட்டான நிலை ஏற்பட்டால், வைகோவின் உதவிகூட திமுகவுக்குத் தேவைப்படலாம். இதைக் கருணாநிதி நன்றாக உணர்ந்துள்ளதாலேயே, எதிரணிக்குச் சென்றுவிட்ட வைகோவைக் கடுமையாக விமர்சித்து இதுவரை ஒருவார்த்தைகூடச் சொல்லாமல் தவிர்த்துவருகிறார்.

எது எப்படியோ, இதுவரை இல்லாத ஒரு சுவாரசிய திருப்பம் தமிழக அரசியலில் மே 11 க்குப் பிறகு ஏற்படப்போவது உறுதி. வைகோ, ஸ்டாலின், விஜயகாந்த் ஆகியோரின் அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதற்கான விடை அன்றே தோராயமாய்க் கிடைத்துவிடும்.
(இப்பதிவு சரியாக இரு மாதங்களுக்கு முன்னால் எழுதப்பட்டது)
(9) Your Comments | | | |

கருணாநிதி, ஜெயலலிதா,விஜய்காந்த் முன்னிலை

திமுக கூட்டணி - 160
அதிமுக கூட்டணி - 72
ஏனையோர் - 2

கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், விஜய்காந்த், துரைமுருகன், வளர்மதி உட்பட பலர் முன்னிலையில் இருக்கிறார்கள்.

ஜெயலலிதா, ஸ்டாலின், பன்னீர்செல்வம், விஜய்காந்த் உட்பட பலர் வெற்றி பெற்றுவிட்டனர்.
(51) Your Comments | | | |

முன்னிலை நிலவரம்

தற்போது திமுக 64 தொகுதிகளிலும், அதிமுக 13 தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பதாய் எமது இந்திய நிருபர் ஜெயக்குமார் தெரிவிக்கிறார். கடைசியாகக் கிடைத்த தகவலின்படி ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவும், சேப்பாக்கத்தில் கருணாநிதியும் வாக்குகளில் முன்னிலையில் இருக்கிறார்கள்.
(0) Your Comments | | | |

வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது

நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது. இன்னும் மூன்றே மணி நேரத்தில் அனைத்து முடிவுகளும் தெரிந்துவிடும். வெற்றி பெறப்போவது திமுகவா அல்லது அதிமுகவா ? கூட்டணி ஆட்சி தமிழகத்தில் முதன்முறையாக அமையுமா?, அல்லது வழக்கம்போல ஒரே கட்சி தனிப்பெரும்பான்மை பெறுமா?, விஜய்காந்த் அரசியல் செல்வாக்கு எந்த அளவுக்கு இருக்கப்போகிறது? போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரிய இன்னும் மூன்றே மணி நேரங்கள். தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் எனத் தெரிய வேண்டுமா? இன்னும் 3 மணி நேரங்கள்.
(1) Your Comments | | | |

Wednesday, May 10, 2006

செம்பைத் தங்கமாக்க முடியுமா?

ரசவாதம் ஒரு கவர்ச்சியான விஷயம். பிற உலோகங்களைத் தங்கமாக்குதல் மனிதனுக்கு ஒரு கனவு. நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் அந்தக் காலத்தில் ரசவாத முயற்சிகள் மிகப் பிரபலம். ஜெர்மனியில் சொல்வார்கள், ரசவாத முயற்சிகளில் பிறந்ததுதான் வேதியியல் என்ற துறை என்று. சித்த வைத்தியம் படித்தவர்களுக்குத் தெரியும், இரசவாத வேதை என்பது சித்திய வைத்தியத்தில் மிக இயல்பான ஒன்று. இதுவரை அதனைச்செய்து வெற்றி பெற்றவர்கள யாராவது உண்டா என்று தெரியவில்லை. ஆனால், இன்னும் பலர் இது சாத்தியம் என்றே நினைக்கிறார்கள்.

வெறுமனே சில மூலிகைகளையும், சில வேதிப்பொருட்களையும் சேர்த்து ஒரு உலோகத்தை உருக்கி எடுத்து அதை தங்கமாக மாற்றுதல் என்பது வேதியியல்படி கனவில்கூட நடவாத காரியம். ஒரு உலோகம் இன்னொன்றாக மாறும்போது எஞ்சியுள்ள மிகக்கொஞ்ச நிறை சக்தியாக மாறும் என்று அறிவியலில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி பார்த்தால், செம்பு தங்கமாகும்போது பெரிய அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் நிகழ்வு ஏற்பட வேண்டும்.

என் தந்தைக்கு சித்த வைத்தியத்தில் ஈடுபாடும், பரிச்சமும் உண்டென்பதால் இந்த ரசவாதம் பற்றி அவ்வப்போது பேசுவதுண்டு. நான் ஒரு முறை சொன்னேன். "..நீங்களை செம்பையோ அல்லது இரும்பையோ சித்த முறைகளின்படி தங்கமாக்க வேண்டியதில்லை, கொஞ்சம் தங்கத்தை இரும்பாகவோ, செம்பாகவோ மாற்றிக் காட்டினால்கூட உங்களுக்கு நோபல் பரிசு நிச்சயம்". இது உண்மைதான். ஆனால், இது சாத்தியமா?. இன்றைய அறிவியல் இது நடவாத ஒன்று என்றே மிகத்திடமாக நம்புகிறது.

நண்பர்களே, உங்கள் தனிப்பட்ட கருத்து மற்றும் இது சம்பந்தமான நம்பிக்கைகள், கேள்விப்பட்டவைகள் ஆகியவை ஏதாவது இருந்தால் அறிய ஆசைப்படுகிறேன்.
(8) Your Comments | | | |

முயற்சியின் விலை - 1 லட்ச ரூபாய்

சில நாட்களுக்கு முன்னால் ஜெர்மனியிலுள்ள முனிச் நகர நீதிமன்றம் ஒருவருக்கு அபராதம் 2,100 யூரோ விதித்தது. இதில் என்ன பெரிய விஷேசம் என்கிறீர்களா?. அபராதம் கட்டிய மனிதர் ரயிலைச் சேதப்படுத்தியதுடன், அந்த ரயில் ஓட்டுனரின் மனநிலை பாதிக்கும்விதத்தில் நடந்துகொண்டார் என்பதுதான் குற்றச்சாட்டு, ஆனால் பாவம், அந்த மனிதரின் நோக்கம் இரண்டுமே அல்ல, அவர் ஒன்றை செய்யப்போய் அது முடியாததால்தான் அபராதம் கட்டியிருக்கிறார். அவர் செய்ய முயன்றிருந்தது முடிந்திருந்தால் அவரிடம் உலகின் எந்தக் கோர்ட்டும் அபராதம் கேட்டிருக்கவே முடியாது. அப்படி என்னதான் செய்தார் என்கிறீர்களா?. தற்கொலைதான். ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றவர் கணநேரம் தப்பியதால் டிரைவர் இருக்கும் அறையில் சன்னல் வழியாய்ப் பாய்ந்துவிட்டார், தலையில் மட்டும் சின்ன காயம், வேறெங்கும் காயமில்லை. இதைப் பார்த்ததால் சில வாரங்களுக்கு என்னால் வேலையே செய்ய முடியவில்லை என டிரைவர் சொல்ல, விஷயம் கோர்ட்டுக்குப்போய் தற்கொலைக்கு முயன்றவர் அபராதம் கட்ட வேண்டியதாகிவிட்டது.

அதுவாவது பரவாயில்லை. முதுகலைப் பொறியியல் படிக்கும் ஒரு இந்திய மாணவர் - ஆந்திராக்காரர், நான் இருக்கும் இடத்தில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். சின்னப் பையன்தான், வயது கிட்டத்தட்ட 25 தான் இருக்கும். ரயில் வந்துகொண்டிருக்கும்போது ஓடிப்போய் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார், தலையும் உடலும் துண்டாகிவிட்டது. காதல் தோல்வி என்கிறார்கள். உலகத்தில் வேறு பொண்ணா கிடைக்காது?. ஹ்ம்.. என்னத்த சொல்ல?.
(0) Your Comments | | | |

மணிக்கணக்கும் நாள் கணக்கும்

வாக்கு எண்ணிக்கை என்பதே ஒரு காலத்தில்(?) பெரிய விஷயம். நாள்கணக்கில் எண்ணிக்கொண்டே இருப்பார்கள். ஒருவர் வாக்கு வித்தியாசத்தில் முன்னேறிக்கொண்டே வருவதும் இன்னொருவர் எண்ணிக்கையில் பின்னால் போவதும், பின்னர் அவரே முந்துவதும் என ஒரே களேபரமாய் இருக்கும். சில சமயம் ஒரு ஓட்டு, இரு ஓட்டு என வித்தியாசத்தில் வந்து நின்றால் திரும்ப எண்ணுவது என ஒரே த்ரிலிங்காக இருக்கும். இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் கூட அவ்வளவு த்ரிங்காய் இராது. இந்த மின்னணு ஓட்டு இயந்திரம் வந்தாலும் வந்தது இந்த த்ரில்லே இல்லாமல் ஆக்கிவிட்டது. கிட்டத்தட்ட லாட்டரி விழுந்திருக்கா இல்லையா என்று பார்ப்பதுபோல ஆகிவிட்டது என்று சில நண்பர்கள் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். இந்தச் சட்டமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மூன்றே மணிநேரத்தில் முடிந்துவிடுமாம். ஒரு தமிழ் சினிமா பார்க்கும் நேரம்தான்.

இது இப்படி என்றால், தில்லுமுல்லு செய்பவர்களுக்கு வேறு மாதிரியான கவலை. ஓட்டுப் பெட்டியை மாற்றுவது, நினைத்த மாதிரி கள்ள ஓட்டுப் போடுவது இதெல்லாம் முடியாமல் போய்விட்டதே என்று அவர்களுக்கும் வருத்தம். சில நாட்களுக்கு முன்னால் எனது நண்பர் அவரது திறமையைப் பற்றிச் சொன்னார். ஓட்டு எண்ணும்போது ஓட்டுக் குத்தும் முத்திரையுடன் போய் எதிர்க்கட்சி ஆளுக்கான ஓட்டில் இன்னொரு முத்திரை குத்தி அதைச் செல்லாமல் ஆக்குவது. இதைச் செய்யத் தனித்திறமையும் ஒரு கும்பலும் அவசியமாம். கும்பலில் பாதிப்பேர் ஏதாவது களேபரத்தை உண்டாக்கி மற்றவரின் கவனத்தைச் சிதறடிக்கும்போது மீதிப்பாதிக் கும்பல் எதிரியின் ஓட்டுக்களில் கொஞ்சத்தைச் செல்லாமல் ஆக்கிவிடுமாம். கொஞ்சம் விபரமாய்க் கேட்டபின் சொல்கிறார், பஞ்சாயத்துத் தேர்தலில் அவருக்கே நேரடி அனுபவம் உண்டாம், கவனத்தைத் திருப்பும் கும்பலில் இருந்தாரோ, செல்லாமல் குத்தும் கும்பலில் இருந்தாரோ தெரியலை. ஆனால், சிக்கிவிட்டால் முதுகில் டின் கட்டிவிடுவார்கள் என்பது உறுதி என்பதால் கும்பலுடன்போய் எச்சரிக்கையாய்ச் செய்வதே உசிதம் என்று இன்னும் பல "மெகா பிளான்" அந்த நண்பர் சொல்கிறார். இந்த மாதிரி வாய்ப்பெல்லாம் இல்லாமலே போய்விட்டது என்று கடைசியில் வருத்தப்பட்டார். (சொந்த அனுபவங்களை நண்பர் ஒருவர் சொன்னார் என்று சொல்வது சகஜம்தான்னு யாருப்பா அங்க குரல் கொடுக்கிறது ??, பிச்சுப் போடுவேன்.. சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு.)
(9) Your Comments | | | |

வாக்கு எண்ணிக்கை நிலவரம் - சுடச்சுட

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தல்-2006 ன் முடிவுகள் சுடச்சுட அறிவிக்கப்படும். மற்ற இணையத்தளங்கள், செய்தித் தாள்கள், வானொலிச் செய்திகள், தொலைக்காட்சிச் செய்திகள் ஆகியவை மூலமும் நிரவரம் அறியப்பட்டு இங்கு அளிக்கப்பட உள்ளது.

நமது இந்தியத் தேர்தல் ஆணையமும் உடனுக்குடன் நிலவரங்களை இணையம் மூலம் அளிக்க உள்ளது. அந்த இணையத்தளம் யுனிக்கோடு தமிழில் இருக்கிறது என்பது ஒரு விஷேசம்.
(8) Your Comments | | | |

Sunday, May 07, 2006

சோதிடம் என்னும் அற்புதக்கலை-2

சோதிடம் என்பது முழுவதும் புரட்டு, பிற்போக்கானது என்று கூறுவது மிக எளிதானது. இதைக் கூற எவருக்கும் முழு உரிமை உண்டு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் இதைக் கூறுவதற்கு முன்னர் அவருக்குச் சோதிடத்தின் அடிப்படைகள் , தன்மைகள், ஆகியவற்றைப் பற்றி அறிவுப் பூர்வமான பரிச்சயம் இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தைப் பற்றிய முடிவையும் எடுப்பதற்கு முன்னால் எந்தப் பக்கமும் சாயாத தராசு முள்ளின் நடுநிலைத் தன்மை அவ்விஷயத்தைப் பற்றி மனதுக்கு இருக்கவேண்டும். அதன் தன்மைகள், அதைப் பற்றிய உங்களின் சொந்த அனுபவங்கள், அந்தச் சொந்த அனுபவங்களின் உண்மையான பின்புலம், இவற்றுடன் எதையும் ஆய்வு நோக்கில் சீர்தூக்கிப் பார்க்கும் தன்மை இவையனைத்தும் இருப்பின் ஒருவர் சோதிடம் என்பது முற்றிலும் மூடநம்பிக்கை, ஏமாற்றுப் புரட்டு என்று கூறவே மாட்டார்.

சோதிடம் புரட்டு என்ற முடிவை ஒருவர் தன்னுடைய முன்முடிவின் காரணமாகவோ, மெரினா பீச்சில் கையில் குச்சியுடன் குறி பார்க்கும் பெண்ணிடம் ஒரு தடவை பேசியதை வைத்தோ, தெருவில் போகும் கிளிஜோசியக்காரரிடம் சிறு வயதில் சோதிடம் பார்த்ததை வைத்தோ, தொலைக்காட்சியில் இப்போது அடிக்கடி வரும் பெயர் ராசி, அதிர்ஷ்டக்கல் என விதவிதப் பெயர்களில் அடுக்கடுக்காய் வரும் நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்த்தோ, சுயலாபத்துக்காய்ப் பித்தலாட்டம் செய்யும் ஏமாற்றுப் பேர்வழிகளைப் பார்த்தோ ஒருவர் எடுப்பாரானால் அது எத்தகைய தவறான முடிவு என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை.

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

என்று வள்ளுவர் சொன்ன சொல் இங்கே நினைவு கூறத்தக்கது. அதற்காய் சோதிடம் என்பது ஒரு முழுமையான இயல், அனைத்தும் சரியே என்று சொல்ல வரவில்லை. முழுமையான துறை என்பதாய் உலகில் இதுவரை எதுவும் இல்லை. இன்றைய அறிவியலை எடுத்துக் கொண்டால் அதன் வளர்ச்சி தொடர்ந்ததாய், நீண்ட நெடுங்காலமாய் இருந்து வந்திருக்கிறது, அறிவியலை இன்னும் ஆயிரக்கணக்காணோர் வளர்த்துவருகிறார்கள். ஆனால் இன்றைய அறிவியலில் வளர்ச்சி, அதற்காய் செய்யப்படும் முயற்சிகளின் அளவு ஆகியவற்றை சோதிடத்துடன் ஒப்பிட்டால் சோதிடம் என்பது சில நிமிடங்களுக்கு முன்னர் பிறந்த குழந்தை. அதன் வளர்ச்சி என்பது சொல்லிக்கொடும்படியாய் எதுவுமே இல்லை. சோதிடத்தை அனைவரும் பயன்படுத்த மட்டுமே விரும்புகிறார்கள், சோதிடத்தின் வரம்புகள், அதன் குறைகள் ஆகியவற்றை மறைக்க விரும்புவோர், குறையை மட்டுமே காட்டிக் கேலி செய்து இந்தச் சமூகத்தைத் திருத்தமுயல்வதாய் நினைத்துக்கொள்வோர், அதைத் தங்கள் சொந்த லாபத்துக்காய்ப் பயன்படுத்த விரும்புவோர் இப்படியாய் இவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் சோதிடத்தை வளர்க்க, அதன் எல்லைகளை நீட்டிக்க ஆய்வுப் பூர்வமாய்ச் சிந்திப்பவர்களின் எண்ணிக்கை பல நூற்றாண்டுகளாய் மிகக் கொஞ்சமாகவே இருந்திருக்கிறது.

இந்த நிலையில், சோதிடத்தைப் பல்கலைக்கழகப் பாடங்களில் ஒன்றாக பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகரித்தது சரியே எனச் சில நாட்களுக்கு முன்னால் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது சோதிடத்தைப் பற்றி ஆய்வுப் பூர்மாய்ச் சிந்திப்பவர்கள் இன்றும் கொஞ்சப் பேர் இருக்கவே செய்கிறார்கள் என்ற நம்பிக்கையை மனதில் எழுப்புகிறது.
(இப்பதிவு இரு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த வலைப்பதிவில் எழுதப்பட்டது)
(8) Your Comments | | | |

சோதிடமென்னும் அற்புதக்கலை

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

சமயங்களையும், முன்னோர்கள் கண்டுரைத்த அரிய, பயனுள்ள நெறிகளையும் எந்த தயக்கமும் இன்றி மூடநம்பிக்கைகள், பிற்போக்கானவை என்று கூறுபவர் சிலர், அதன் மூலம் தாங்கள் பகுத்தறிவுவாதிகள், முற்போக்கானவர்கள் என்று மாயப்பெருமை கொண்டு தங்களைத்தாமே ஏமாற்றிக் கொள்பவர்கள் சிலர். இவர்களைக்கண்டு இந்த மாயக்கவர்ச்சியால் மயங்கி நிற்பவர் பலர். ஆனால் இவ்வுலகில் இதுவொன்றும் புதிதல்ல!.

இருளும்-பகலும், உண்மையும்-பொய்மையும், வெற்றியும்-தோல்வியும், தீயோரும்-நல்லோரும், மேடும்-பள்ளமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒரு உண்மையை நம்புவோரும்-நம்பாதோரும் கூட அவ்வாறே. இவை இன்று நேற்றல்ல, பல கோடி ஆண்டுகளாக இருந்து வருபவை, இன்னும் தொடர்ந்து இருக்கும். சோதிடத்தை நம்பாதவர்களின் கருத்துக்கு எதிர்வாதம் செய்வதோ அல்லது சோதிடத்தை நியாயப்படுத்துவதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல.

தேவைகள் கண்டுபிடிப்புக்களின் தாய் என்பர்.மனிதனுக்கு அவன் தோன்றியதிலிருந்து இன்றுவரை எத்தனையோ தேவைகள், அதனால் உருவானதே இத்தனைக் கண்டுபிடிப்புக்கள், கலைகள். மனிதனின் எதிர்காலத்தை அறிய வேண்டுமென்ற ஆவலால் உருவானதே இந்த சோதிடமென்ற ஒரு அற்புதக்கலை. ஆம் இது உண்மையென்பதை , அதன் அடிப்படையை உணர்ந்தோர் அறிவர். இக்கட்டுரையில் சோதிடம் என்று குறிப்பிடுவது மனிதன் பிறந்தவுடன் அவன் பிறக்கும்போது இருக்கும் கிரகங்களின் நிலையைக் கொண்டு கணிக்கப்படும் சோதிட சாத்திரத்தைப்பற்றியதை மட்டுமே.

தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு மனிதனுக்கும் தன் எதிர்காலம் பற்றி முன்பே அறிந்துகொள்ள ஆசையும்,ஆர்வமும் உண்டு. இதனடிப்படையில் உருவானதே சோதிடம். ஒருவனின் ஜாதகம் எவ்வாறு எழுதப்படுகிறது என்றும், கோள்களின் நிலை எவ்வாறு கணிக்கப்பட்டது என்றும் அறிந்தவர்கள் வியப்புக் கொள்வது நியாயமானதே. ஏனென்றால் இவையெல்லாம் உருவாக்கப்பட்டது கணினி யுகமான இக்காலத்தில் அல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது. இன்று பழைய பஞ்சாங்கம் என்று கேலியாகச் சொல்லப்படும் அவைகள் இன்றும் கூட சூரிய, சந்திர கிரகணங்கள் முதல் கோள்களில் நிலையைத் துல்லியமாய்ச் சொல்கிறதே , எப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இக்கணிக்கும் கலையை உருவாக்கினார்கள் என்று அதைக் கேலிபேசுவோர் சிந்திப்பதில்லை. வெறும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால்தான் கோள்களின் இயக்கம் பற்றிய முறையான அறிவியல் விதிகள் வந்தன, ஆனால் இது உருவாவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அந்த இயக்கங்களைத் துல்லியமாய்க் கணித்தே சோதிடத்துக்கான பழைய, புதிய பஞ்சாங்கள் உருவாக்கப்பட்டன/படுகின்றன. இன்னொன்றை முதலிலேயே கூறிக்கொள்ள விழைகிறேன், நான் முறையாய்ச் சோதிடம் கற்றவன் அல்லன். உண்மையில் எனக்கும் சோதிடத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை; சோதிடம் என்றால் என்னவென்றும் அது எவ்வாறு கணிக்கப்படுகிறது என்று அறிவியல் பூர்வமாய்ச் சில புத்தகங்களைப் படித்ததைத் தவிர. (இது இருவருடங்களுக்கு முன் எழுதப்பட்டது)
(3) Your Comments | | | |

Saturday, May 06, 2006

முத்துவும் நாய்களும்

எனக்குப் பக்கத்துவீட்டில் ஒரு நாய் இருந்தது. அதை எப்போதாவது கல்லால் அடித்திருக்கிறேனா இல்லையா என்பது சரியாக நினைவில்லை. ரொம்ப சின்ன வயதில் இருந்தே ஜீவகாருண்யம் மீது எனக்கு நம்பிக்கை உண்டு, அதனால் அதைக் கல்லால் அடித்திருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன். நான் மட்டுமல்ல, அந்த நாயும்கூட ஜீவகாருண்யத்தின் மீது நம்பிக்கைகொண்ட சாதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். அந்த நாய் திருடர்களிடம்கூட அதே கருணையைக் காட்டியது என்பதுதான் இங்கே விஷேசம். இன்னா செய்தாரை... என்ற குறள்தான் அந்த நாயின் போக்குக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். இதுவே, எனக்கு அந்தத் திருக்குறள் படித்தபின்தான் புரிந்தது. அந்தக் குறளுக்கு வாழும் இலக்கணமாக இருந்த நாய் நிச்சயம் மதிப்புக்குரியதுதான்.

எனக்கு ஏழெட்டு வயதிருக்கும்போது என் தாத்தா வீட்டில் ஒரு நாய் இருந்தது. அது மகா புத்திசாலி நாய். ஒருமுறை முன்னால் சென்றுகொண்டிருந்த பாம்பை மிதியாமல் இருக்க ஓடிச் சென்று குரைத்து எச்சரிக்கை செய்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். முதலில் குறிப்பிட்ட பக்கத்துவீட்டு நாயிடமிருந்து இந்த நாய் மிகவும் வேறுபட்டதுதான். வாய்ச்சண்டைக்கு வந்த ஒருவரைக் குறிப்பால் உணர்ந்து கடித்துக் குதறியிருக்கிறது. ஊரில் புதிதாக ஏதாவது ஒரு நாய் வந்து விட்டால் போதும், முதலில் வூடு கட்டும் நாய் இதுவாகத்தான் இருக்கும். ஊரில் உள்ள மற்ற நாய்களையெல்லாம் உசுப்பேத்தி அந்த நாயுடன் மோத வைத்துவிட்டு சத்தமே போடாமல் மெதுவாய்ப் பின்வாங்கி நல்ல பிள்ளையாய் வீட்டுக்கு வந்துவிடும். மற்ற நாய்கள் அப்பாவித்தனமாய் சண்டைக்குபோய் ரத்தக்காயத்துடன் வீட்டுக்கு வந்து வீட்டில் திட்டு வாங்கிக்கொண்டிருக்குங்கள் பாவம். அந்த நாயின் பிரதாபங்கள் இன்னும் பல இருக்கின்றன, எனக்கு நிறையவே மறந்துவிட்டது. இவ்வளவு புத்திசாலியான நாய் கடைசியில் வெறிபிடித்து இறந்துவிட்டது.

இதுபோக, தெருவில் அவ்வப்போது மிரட்டிப்பார்க்கும் ஒரு சில நாய்களும் இருந்தன. அவை அவ்வளவு சுவாரசியமானவைகள் அல்ல. எங்கள் வீட்டிலும் ஒரு நாய் வளர்க்க வேண்டும் என்று எல்லாரையும்போல ஆறேழு வயதில் நான் ஆசைப்பட்டதுண்டு. ஒரு முறை நானும் என் தம்பிகளும் சேர்ந்து எங்க அம்மாவிடம் நாய் வேண்டும் என அடம்பிடித்ததுக்குக் கிடைத்த பதில், "...வீட்டில் ஏற்கனவே மூணு நாய் இருக்கு.. இதில் இன்னொன்னு தேவையா..?..". அந்தப் பதில் எங்களைக் கொஞ்சம் யோசிக்க வைத்ததோ என்னவோ மீண்டும் நாய் வேண்டும் என்று கேட்ட நினைவே இல்லை. அப்ப ஏற்கனவே உங்க வீட்டில் மூன்று நாய்கள் இருந்தனவா என்று கேட்க நினைக்கிறீர்கள். அதான் இல்லை, அன்று நானும் என்னுடைய இரு தம்பிகளும்தான் இருந்தோம்.

ஆக, நாய்களுடன் எனக்கான பரிச்சயம் மிகவும் குறைவுதான். பினாத்தல் சுரேஷின் பதிவும், அதற்கு வந்த உஷாவின் பின்னூட்டமும் இந்த நாய்ப் பிளாஷ்பேக்குக்கு என்னை இட்டுச் சென்றது.
(9) Your Comments | | | |

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com