<$BlogRSDUrl$>

Tuesday, February 21, 2006

எடைக்கு எடை தங்கம்

நண்பரிடமிருந்து யாகூ மெசேஞ்சரில் ஒரு செய்தி வந்தது.
"...பிரேக்கிங் நியூஸ்... அசின் வீட்டில் சி.பி.ஐ சோதனை..... பாத் ரூமில் 20 லட்சம் பணம்... ஸ்டோர் ரூமில் 50 கிலோ தங்கம்..... பெட் ரூமில் முழுவதும் எனது போட்டோ... சில்லி கேர்ள் ... கிரேசி அபட் மீ....".

நான் முதல் இரு வரியைப் படித்துவிட்டு செய்தி உண்மையோ என்று நினைத்துவிட்டேன். 50 கிலோ தங்கமா ஒருத்தர் வச்சிருப்பாங்க என்று ஒரே ஆச்சரியம். அப்புறம் திரும்பவும் படித்தபோதுதான் நண்பரின் குறும்பு புரிந்தது. இருந்தாலும் நண்பருக்கு ஆசை அதிகம்தான் :-).
(4) Your Comments | | | |

Thursday, February 16, 2006

உலகம் தோன்றி இதுவரை....

மனிதன் தோன்றி 6,000 வருடங்கள் ஆகின்றன. நான் சொல்லவில்லை, கொஞ்ச நாட்களுக்கு முன்னால் என்னுடன் வாதிட்ட கிருத்துவ போதகர் சொன்னார். அவ்வப்போது சிலர் இதுபோல் வீடுதேடிவந்து போதனை செய்வதுண்டு. அன்று வந்தவர் தமிழர். அவருடன் பேசியது சுவாரசியமாகவே இருந்தது. போதனை செய்ய வந்து இப்படி வாதம் செய்ய வேண்டியதாகிவிட்டதே என்று அவர் வருத்தப்பட்டாரோ என்னவோ தெரியவில்லை, அதன் பின்னர் அவரை மீண்டும் பார்க்கவே இல்லை. ஆதாம் ஏவாளில் இருந்து இன்றைய மனிதர்கள்வரை கணக்கிட்டால் கடவுள் மனிதனைப் படைத்து ஆறாயிரம் ஆண்டுகள் ஆகின்றன என்று உறுதியாகச் சொன்னார். மொஹஞ்சதாரோ, ஹராப்பா நாகரிகத்தின் காலமே 5,000 ஆயிரம் வருடத்துக்கு மேல் ஆகிவிட்டதே என்று கேட்டேன். அதற்கும் ஆயிரம் வருடத்துக்கு முன்னால்தான் இறைவன் மனிதனைப் படைத்தார் என்றார். இது கொஞ்சமும் ஏற்கும்படி இல்லையென்று சொன்னேன். இப்படியே விவாதம் ஒருமணி நேரத்துக்கு மேல் தொடர்ந்தது. அது சரியோ, தவறோ ஒரு புறமிருக்கட்டும். புராதன இந்தியக் காலண்டரைக் கொஞ்சம் பார்க்கலாம்.

60 தற்பரை - 1 விநாடி
60 விநாடி - 1 நாடி
60 நாடி - 1 நாள்
29-32 நாள் - 1 மாதம்
12 மாதம் - 1 வருடம் (365 நாள், 15 நாடி, 31 விநாடி, 15 தற்பரை)
யுகம்-
கிருதயுகம் 4 X 4,32,000 = 17,28,000
திரேதாயுகம் 3 X 4,32,000 = 12,96,000
துவாபரயுகம் 2 X 4,32,000 = 8,64,000
கலியுகம் 1 X 4,32,000 = 4,32,000

யுகங்களில் கலியுகம் குறைந்த வருடங்களைக் கொண்டது. இப்போது நாம் கலியுகத்தில் இருக்கிறோம். கலியுகம் பிறந்தது பெப்ரவரி 18, 3102 BCE ல், ஆக இந்த 2006 ஆம் வருடம் கலியுகத்தில் 5106 ஆம் வருடம் ஆகின்றது. கலியுகம் முடிய இன்னும் சுமார் 4,30,000 வருடம் இருக்கின்றது. கலியுகம் முடிந்ததும் மீண்டும் கிருதயுகம் ஆரம்பிக்கும், அடுத்து திரேதாயுகம், துவாபரயுகம், மீண்டும் கலியுகம் இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும்.

நான்கு யுகமும் சேர்ந்தால் ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம் = 4.32 மில்லியன் வருடங்கள்.
71 மகாயுகம் = 1 மன்வந்திரம்
14 மன்வந்திரம் = 1 கற்பம் (994 மகாயுகம்)
2 கற்பம் = பிரம்மாவின் 1 நாள்
இப்படியே பிரம்மாவுக்கு 100 வயது ஆனால் அவரின் ஆயுள் முடிந்து அடுத்த பிரம்மா ஆட்சிக்கு வருவார்.

ஆக, இதன்படி உலகம் தோன்றி எத்தனை வருடம் ஆனதோ?, இப்போது இருக்கும் பிரம்மா எத்தனையாவது பிரம்மாவோ தெரியவில்லை. எனக்கு இப்போது கொஞ்சம் தலைசுற்றுகிறது.
(12) Your Comments | | | |

Monday, February 13, 2006

நம் சிந்தனை எந்த மொழி?

வாழ்வில் நாம் பல மொழிகளைக் கற்க வாய்ப்புக் கிடைக்கலாம். பல மொழிகளை சரளமாகப் பேசலாம். ஆனால் நமக்கு அவசரத்தில் சரளமாக வருவது முதலில் கற்ற தாய்மொழியே. டோண்டு இன்று இதுபற்றி ஒரு பதிவு இட்டுள்ளார். வலி, வேதனை, பயம் ஆகியவை திடீரென வரும்போது வாயில் வருவது தாய்மொழியாகத்தான் இருக்கும். இதனால் நாம் சிந்திப்பதே தாய்மொழியில்தான் என்று கருதுபவர்கள் பலருண்டு. உண்மையில் சிந்தனைக்கு மொழி இல்லை என்றே கூறலாம். மொழிகளைக் கடந்த நிலையிலேதான் சிந்தனை பிறக்கிறது. அதைச் சேமிக்கவோ, அடுத்தவருக்குச் சொல்லவோ நமக்கு மொழி என்ற கருவி முக்கியத் தேவை. இதனாலேயே உண்மையில் நாம் எண்ண நினைக்கிறோம் என்பதை அப்படியே நம்மால் பிறருக்கு வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலுவதில்லை. தாய்மொழியில் தோராயமாய் வெளிப்படுத்தலாம், ஆனால் பிறமொழியில் இன்னும் மோசம்.

ஒரு அறிவியல் ஆய்வுக்கட்டுரை சில வருடங்களுக்கு முன்னால் வெளியானது. அதன் முக்கியக் கருத்து "...மொழி நாம் எண்ண நினைக்கிறோம் என்பதை அடுத்தவருக்கு முழுவதுமாகச் சொல்ல உதவுவதில்லை...". சில அறிவியல் சோதனைகள்கூட இது தொடர்பாய் நடந்துவருகின்றன. ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்குத் தகவலைக் கடத்துவதுபோல மனிதர்கள் மொழியின் உதவியில்லாமல் தங்கள் எண்ணங்களைத் துளியும் பிசகாமல் துல்லியமாய் அடுத்தவருக்குத் தெரிவிக்க முடியும் என்பதற்குச் சாத்தியங்கள் உள்ளதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன (சிந்தனை---->சிந்தனை).

உங்களைப் போலவே சிந்திக்கும் ஒருவர் உங்களுக்கு நண்பராக இருந்தால் அவரின் ஒரு சொல்கூட அவர் உங்களிடம் என்ன சொல்ல வருகிறார் என்பதைத் தெளிவாக உணர்த்தும். நம்மிடையே எத்தனை பேருக்கு அந்த மாதிரியான அனுபவம் உண்டு என்று தெரியவில்லை. காதலர்கள் கண்களால் பேசிக்கொள்வதையும் இங்கே கருத்தில் கொள்ளலாம். இவைகள் கிட்டத்தட்ட மொழிகளில்லா சிந்தனை---->சிந்தனை உயர்பரிமாற்றத்துக்கு அருகில் உள்ளவை.

சிந்தனை என்பது சொற்களில்லாப் பரப்பிலேயே ஆரம்பிக்கிறது. அப்பரப்பிலிருந்து நேரிடையாய் எளிதாய் வரும் சொற்கள் தாய்மொழிச் சொற்களாகவே இருக்கும் (சிந்தனை---->தாய்மொழி). ஒருவர் தாய்மொழியைத் தவிர மற்ற மொழியிலும் சரளமான பயன்பாட்டுத் திறனை உடையவர் என்றால் தனது சிந்தனையை நேரடியாய் அந்த மொழியிலும் தெரிவிக்க இயலும் (சிந்தனை---->பிறமொழி). அவ்வாறு இல்லாதபோது தாய்மொழி மற்ற மொழிகளுக்கு இடைமுகமாய் ஊன்றுகோல் போல நம்மையறியாமல் நின்று உதவும். சாதாரணமாய் நடப்பதற்கும் ஊன்றுகோலூன்றி நடப்பதற்கும் உள்ள வித்தியாசம் நாம் அறிந்ததுதானே?. நம்மிடையே பலர் தாய்மொழியிலுள்ள சரளம் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் வராமைக்குக் காரணம் இதுவேதான். மொழிகளற்ற சிந்தனையிலே இருந்து ஆங்கிலம் நேரடியாய் வரவேண்டும், சிந்தனை---->தாய்மொழி--->பிறமொழி என்று நம்மையறியாமல் கணநேரப் பரிமாற்றம் வரும்போது சரளம் என்றுமே ஒரு குறைதான்.

இதனாலேயே ஜெர்மன் உள்ளிட்ட எந்தப் பிறமொழியையும் கற்பிக்கும் "திறமையான" ஆசிரியர்கள் அதைப் பிறமொழிகளின் உதவியில்லாமல், இடைமுகமில்லாமல் நேரடியாய் அதேமொழியில் கற்பிக்கிறார்கள்.
(10) Your Comments | | | |

Tuesday, February 07, 2006

பாட்டிலைத் திறப்பது எப்படி?

ஒரு ஒளித்துண்டில் ஒரு பிரகஸ்பதி "ஒரு விஷயத்தை" செயல்முறை விளக்கத்தோடு தமிழில் சொல்லித் தருகிறார். கூகிள் வீடியோவில் தமிழ் என்று தேடியபோது உடனே கிடைத்தது இது. அனுபவமில்லாத நண்பர்களுக்கு உதவட்டுமே என்று ஒளித்துண்டாய்ப் போட்டு வைத்திருக்கிறார் போலும் :-). என்னவோ ஏதோ என்று குழம்பிவிடாதீர்கள், ஒரு பாட்டிலை எப்படித் திறப்பது என்றுதான் செய்து காட்டுகிறார்.
(7) Your Comments | | | |

Monday, February 06, 2006

வழுக்கிப் பழகு

அது உற்சாகமான அனுபவம்தான, என்னைச் சுற்றி வேகமாய் 'விர்விர்' எனப்போய்க்கொண்டிருந்த வாண்டுகளுக்கு என்னைப் பார்ப்பதே உற்சாகமாய் இருந்தது. முதன்முதலில் நான் நடக்க ஆரம்பித்தபோதுகூட இப்படித்தான் கஷ்டப்பட்டிருப்பேன் என்று நினைக்கிறேன். கொஞ்ச தூரம் அழகாய் நகர்ந்து சந்தோஷப்படும் முன்னர் 'டமார்' என்று கீழே விழுந்துகொண்டே இருந்தேன். 4 வயது, 5 வயது வாண்டுகள் மட்டும் எப்படி வேகமாய்ப் போகிறார்களோ?. "மூத்த வலைப்பதிவாளர்" அஞ்சலிகூட அவருடைய அனுபவம் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார். ஒருவேளை அவரும் முதன் முதலில் இதுபோல் கீழேவிழுந்து பழகியவராகத்தான் இருப்பாரோ என்னவோ?. ஒரே ஆறுதல் என்னை விட பெரிய ஆட்கள் பலரும் என்னைப் போல் கீழே விழுந்துகொண்டிருந்தார்கள். சென்ற சனிக்கிழமை மாலை நாங்கள் சறுக்கிய தளம் இதுதான்.
என்னுடன் வந்த எனது நண்பருக்கும் இதுதான் முதல் தடவை. பல தடவை கீழே விழுந்து இதற்கு மேல் கீழே விழ உடம்பில் தெம்பில்லை என்று அந்த ஐஸ் ஸ்கேட்டிங் தளத்தைவிட்டு வெளியே வந்துவிட்டார். அவர் பின்னால் நானும் வந்துவிட்டேன்.
(3) Your Comments | | | |

Friday, February 03, 2006

ராம் - பாகிஸ்தானிலிருந்து

கொஞ்ச நாட்களாய் அவரை எனக்குத் தெரியும். இங்கேதான் படிக்கிறார். அவ்வப்போது ராம் சொல்வார், '..நான் ஒரு பாகிஸ்தானி, அதன் பின்னர்தான் நான் இந்து..'.

* முசாரப் செய்தவை அத்தனையும் சரியாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இதுவரை இருந்த ஆட்சியாளர்களுக்கு இவர் எவ்வளவோ பரவாயில்லை. சிறுபான்மையினரான இந்துக்கள், கிருத்துவர்கள் போன்றவர்களைப் பற்றிக் கொஞ்சமாவது சிந்திப்பவர் முசாரப்.

* படிக்காத முஸ்லீம் பாகிஸ்தானிகள் பலரும் சிறுபான்மையினரைப் பொருத்தவரை எங்கள் நாட்டில் ஆபத்தானவர்கள், குறிப்பாய்க் கலவர நாட்களில்.

* இந்தியாவில் மதம் சம்பந்தப்பட்ட அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் அது பாகிஸ்தானில் சிறுபான்மை இந்துக்கள் மீது கடுமையாக எதிரொலிக்கும். நாங்கள் எந்த வகையிலும் அதனோடு சம்பந்தப்படாதவர்கள் என்பது பல மூடர்களுக்குப் புரிவதே இல்லை. பாபர் மசூதி விவகாரம் கிளம்பியபோது எங்களுக்கு மறக்கமுடியாத பல கொடுமைகளைச் செய்தார்கள்.

* குஜராத் கலவரம் இந்தியாவில் நடந்தபோது நாங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தோம். ஆனால் கடவுள் புண்ணியத்தில் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் முசாரப்பின் நடவடிக்கைகள்தாம்.

* 1950-களில் 20 சதவீதம் பேர் இந்துக்கள். இப்போது 4 சதவீதம் பேர்தான் எங்கள் நாட்டில் இந்துக்கள். அதுவும் சிறுபான்மையினர் எவ்வளவு என்பதைக் கணக்கெடுப்பதில் அரசாங்கம் போதிய நியாய உணர்வுடன் செயல்படுவதில்லை.

* பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிக்காலத்தை முழுவதும் நிறைவு செய்த பிரதமர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடித்தான் பார்க்க வேண்டும். இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்கள் அனைவருமே தங்களைப் பற்றித்தான் சிந்தித்தார்களே தவிர நாட்டை ஒருவரும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆளாளுக்கு முடிந்தவரை சுருட்டத்தான் செய்தார்கள். நவாஸ் செரீப் உட்பட. புதிதாய் ஒருவரைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்து அவர் கையில் நாட்டைக் கொடுப்பதைவிட முசாரப்பே இருந்து விட்டுப் போகட்டும் என்று மக்கள் பலரும் நினைக்கிறார்கள்.

* ஒரு நாடு பணக்கார நாடோ, ஏழை நாடோ அது உலக அளவில் கொஞ்சம் மதிப்புடன் இருக்க வேண்டும். பாகிஸ்தானில் இருந்து வருகிறேன் என்று எந்த நாட்டில் போய் சொன்னாலும் சந்தேகக் கண்ணுடனேயே பார்க்கிறார்கள். அப்பாவிக் குடிமக்களாகிய எங்களின் இந்தப் பரிதாபநிலை இதுபோன்ற அனுபவம் இல்லாமல் இருக்கும் இந்தியரான உங்களுக்குப் புரியாது.

* எங்கள் நாட்டின் நிலை ஒன்றும் உற்சாகமளிப்பதாகவே இல்லை. கடவுள்தான் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். இந்தியா போல் எங்கள் நாடும் இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்.
(10) Your Comments | | | |

காமசூத்ரா - எச்சரிக்கை

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் இவைகள் பெருகிக்கொண்டே வருகின்றன, இவைகளால் பெரிய லாபம் என்று யாருக்கும் இல்லை - தடுப்புமருந்து விற்கும் மென்பொருள் நிறுவனங்களைத் தவிர. கணினி வைரஸ்கள் பற்றித்தான் சொல்கிறேன். இந்தத் தொல்லை கொடுக்கும் வைரஸ் பட்டியலில் லேட்டஸ்டாக வந்திருப்பது நம்ம காமசூத்ரா வைரஸ். இது டைம்பாம் வைரஸ் வகையைச் சார்ந்தது. ஒவ்வொரு மாதமும் 3 ஆம் தேதி மீண்டும் மீண்டும் கம்ப்யூட்டரைப் பதம் பார்க்கும்விதத்தில் இந்த வைரஸ் எழுதப்பட்டுள்ளது. இன்றைக்கு 3 ஆம் தேதி. திரும்பவும் எத்தனை கம்ப்யூட்டர்கள் உலகம் முழுவதும் பாதிக்கப்படப்போகின்றனவோ தெரியவில்லை. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்னால் இதே பெயரில் சில வைரஸ்கள் வந்தன. அவை 'W32/Mapson@MM', மற்றும் 'W32/Oror.ad@MM' வகையைச் சேர்ந்தவை, அவ்வளவு ஆபத்தில்லாதவை. இப்போது வந்திருப்பது 'Worm.Win32.VB.bi', மற்றும் 'W32/MyWife.d@MM!M24' போன்ற வகையானவை.

உங்களுக்குப் பாலியல் சம்பந்தப்பட்ட நிழற்படம், ஒளித்துண்டு மின்னஞ்சலில் வந்தால் எச்சரிக்கையாக இருக்கவும். சில சமயம் உங்கள் நண்பர்களின் பெயரிலேயே கூட வரக்கூடும். வைரஸ் மின்னஞ்சல் தலைப்புகளில் சில, 'The best video clip ever,' 'school girl fantasies gone bad,' 'a great video,' 'Kama Sutra pics,' 'Arab sex DSC-00465.jpg'. அனைத்து வைரஸும் மின்னஞ்சல் அட்டாச்மெண்டாகவே வரும். அதை இறக்கி இயக்குபவர்களுக்கு மட்டும்தான் பாதிப்பு. பெரும்பாலான கோப்புவகைகளைக் ( எ-கா. வேர்ட், எக்ஸல், அடோபி பிடிஎஃப்,.... ) கணியிலிருந்து அழிக்கும்படி இந்த வைரஸ் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கோப்பை அழித்துவிட்டு அதற்குப்பதிலாய் ஒரு கிலோபைட்டுக்கும் மிகக் குறைவான கோப்பாய் மாற்றி வைத்துவிடும். அதைத் திறந்து பார்த்தால் சின்னதாய் ஒரு எரர் மெசேஜ் மட்டுமே வந்து நிற்கும். இந்த வைரஸ் மிகப்பழைய உத்தியைக் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் இந்த வாரத்தில் மட்டும் இதுவரை பல லட்சம் கணினிகளைப் பதம் பார்த்துவிட்டது. எனவே எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.
(1) Your Comments | | | |

Wednesday, February 01, 2006

ஆச்சரியம் + அதிர்ச்சி = கியூபா

கியூபா நாட்டு நண்ப, நண்பிகள் சிலரை எனக்குத் தெரியும். உடன் பயில்வோர் அவர்கள். அவர்கள் சொன்னவை மிகவும் ஆச்சரியமூட்டுபவையாகவும், அதிர்ச்சியளிப்பவையாகவும் இருந்தன, அவைகளைக் கேட்டால் உங்களுக்கும் அப்படியிருந்தால் அதில் பெரிய ஆச்சரியமில்லை.

* நாட்டைவிட்டு கியூபாக் குடிமக்கள் வெளியேறுவது என்பது அவ்வளவு எளிதான விதயம் அல்ல. மேற்படிப்புக்காக வெளிநாடு செல்வதும் இதில் அடக்கம். கியூபக் குடிமக்கள் தாங்கள் செல்லும் நாட்டின் விசா வாங்குவதைவிட வெளியேற கியூபாவின் அனுமதி கிடைப்பதுதான் மிகக் கடினம். அதுவும் அமெரிக்காவுக்கு என்றால் மூச்... 99.99 சதவீதம் உறுதியாய்ச் சொல்லிவிடலாம் அனுமதி கிடையவே கிடையாது. வெளிநாட்டுக்குச் சென்றவர்கள் ஒரு வருடத்துக்கு ஒருமுறை மீண்டும் கியூபாவுக்கு வந்து தங்களின் அனுமதியை மீண்டும் புதிப்பிக்க வேண்டும், தவறினால் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

* வெளிநாட்டுக்குப் போய் வருபவர்கள் மின்சாரத்தால் இயங்கும் எப்பொருளையும் உள்ளே கொண்டுவரக்கூடாது. பிரெட் டோஸ்டர் உட்பட. இது மின்சாரத்தைச் சேமிக்கச் சிக்கன நடவடிக்கையாம்.

* கம்யூனிஸ்ட் கட்சியில் செல்வாக்கு இருந்தால் அரசாங்க வேலை கிடைப்பது மிக எளிது. பேராசிரியர் வேலை உட்பட. அவர் துறையில் மிகுந்த அறிவுடையவராய் இருக்கவேண்டுமென்பதில்லை.

* கட்சியில் செல்வாக்குடையவரை எதிர்த்தால் அமெரிக்க உளவாளி எனக் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் தள்ளப்படுவார்கள்.

* கடல்வழியாய் சிலபத்து மைல்கள் கடந்துவந்து அருகிலுள்ள அமெரிக்கக் கடற்கரையைத் தொட்ட மறுவினாடியே அவர்கள் விரும்பினால் அமெரிக்கக் குடிமகனாய் அங்கீகரிக்கப்படுவார்கள். ஆனால் இடையில் அமெரிக்கக் கடற்படை பிடித்தால் மீண்டும் கியூபாவுக்கே திரும்பியனுப்பப்படுவார்கள். இடையில் கியூபக்கடற்படை பிடித்தால் சொர்க்கமோ, நரகமோ உடனே கிடைக்கும். அவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம். அதிர்ஷ்டவசமாய் கரையைத் தொட்ட அடுத்த வினாடியே அமெரிக்கக் குடிமகனான யோகக்காரர்களும் உண்டு.

* கியூபாவின் அங்காடிகளில் அமெரிக்கக் கரன்ஸிகள் தாராளமாய் அங்கீகரிக்கப்பட்ட, புழங்கும் ஒன்று, இன்னும் சொல்லப்போனால் அதற்குத் தனி மதிப்பு உண்டு. அரசாங்கம் அதை எதிர்த்தாலும் அங்காடிகள் அதன் மதிப்பே தனி.
(8) Your Comments | | | |

சாட் ரூமில் ஆன்லைன் சோதிடர்

அப்படி எதிர்பார்க்கவில்லைதான். அன்று சாட் ரூமில் பொழுதுபோக்காய்ச் சுற்றிக் கதைத்துக்கொண்டிருந்தேன். தமிழ்நாடு சாட் ரூம் அது. சோதிடம் பார்க்க விரும்புபவர்கள் தனிச்செய்தி அனுப்பவும் என்று பொதுரூமில் ஒரு விளம்பரம் வந்தது. சரி.. என்னதான் நடக்குமென்று பார்ப்போமே என்று அந்த ஐடிக்கு ஒரு PM அனுப்பினேன். யாஹூ வாய்ஸ் சாட் சரியாக அவருக்கு வேலை செய்யாததால் ஸ்கைப்பிக்கு வரச்சொன்னார். என்னுடைய ஸ்கைப்பி ஐடி ஞாபகம் இருந்தாலும், கடவுச்சொல்லை மறந்துவிட்டிருந்தேன். பிறகு அவரே எனக்கு ஒரு ஸ்கைப்பி ஐடி உருவாக்கித் தந்தார். ஸ்கைப்பியில் சோதிடரும் நானும் பேசத் துவங்கினோம். பிறந்த நேரம் துல்லியமாய்த் தெரியுமா?.. என்று கேட்டார் சோதிடர். தோராயமாய்ச் சொன்னேன். ஆனால் என்னுடைய ராசிக்கட்டத்தில் எந்தக் கிரகம் எங்கிருக்கும் என்பது எனக்குத் தெரியுமாகையால் சொன்னேன். அதை வைத்து சரியாய்ச் ஜாதகத்தைக் கணித்தார். எல்லாத்தும் இப்போ மென்பொருள் வந்துவிட்டது. இல்லையென்றால் நான் பிறந்த வருடத்துப் பஞ்சாங்கம் இல்லாமல் அவரால் ஒன்றும் செய்ய இயலாது. இப்போது கிடைக்கும் இலவச மென்பொருட்களே கிட்டத்தட்ட 10,000 வருடத்துப் பஞ்சாங்கத்துடன் வருகின்றன. எனது ஜாதகத்தை வைத்து நிறையப் பலன்கள் சொன்னார். கிட்டத்தட்ட எல்லாமே சரியாக இருந்தன. எனக்கும் கொஞ்சம் ஜாதகத்தில், அடிப்படையில் பரிச்சயம் உண்டு. அவர் ஏதாவது ஒரு பலன் சொன்னால் அதை எப்படிச் சொன்னீர்கள் என்று மறக்காமல் கேட்டேன், அவரும் சளைக்காமல் காரணம் சொன்னார். ஜாதகத்தை வைத்துச் சொல்லும்போது இது ஒரு வசதி. தாம் நினைத்தையெல்லாம் சோதிடர் சொல்ல முடியாது. ஏன் அப்படிச் சொன்னார் என்று நீங்கள் கேட்கலாம், உங்களுக்கும் கொஞ்சம் அடிப்படை தெரிந்திருந்தால். ஒரு ஆன்லைன் சோதிடக்கம்பெனி ஆரம்பித்திருப்பதாயும், அது சோதனை ஓட்டத்தில் இருப்பதாயும் சொன்னார். அது வெற்றிகரமாய் இருந்தால் விரையில் கட்டணமாய் மாற்றலாம் என்று எண்ணியிருப்பதாகச் சொன்னார். கடைசியாய்த் திருமணம் பற்றியும் ஒன்று சொல்லியிருக்கிறார், பார்க்கலாம் அது எவ்வளவு தூரம் பலிக்குமென :-).
(21) Your Comments | | | |

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com